Serial Stories

ஊரெங்கும் பூ வாசனை-1

(1)

“ஜக்கி…டிஃபன் ரெடியா?” சட்டையை பேண்ட்டுக்குள் இறக்கி இன் செய்தவாறே குரல் கொடுத்தார் நமச்சிவாயம்.

உள்ளிருந்து எந்த பதிலும் வராமல் போகவே மறுபடியும் தன்னை ஒரு முறை கண்ணாடியில் சரி பார்த்துக் கொண்டவர் வெளியே வந்தார்.

சாப்பாட்டு மேசையில் மௌனமாக காலை சிற்றுண்டியை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் ஜானகி.

“ஏய்…ஜக்கி என்ன டிஃபன் ?” என்றபடியே இருக்கையை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தார் நமச்சிவாயம்.

அதற்கும் எந்த பதிலும் சொல்லாமல் மௌனமாக தட்டை எடுத்து வைத்தாள் ஜானகி.

இட்லிகளை பரிமாறி சாம்பாரை ஊற்றினாள்.

“என்ன நான் பாட்டுக்கு கேட்டுக்கிட்டிருக்கேன். நீ பாட்டுக்கு பதில் சொல்லாமல் இருக்கே? ஏதாவது மௌன விரதமா?” கேட்டவாறே இட்லியை சாம்பருடன் ருசிக்கத் தொடங்கினார்.

“உங்களை எத்தனை தடவை ஜக்கி ஜக்கின்னு கூப்பிடாதிங்கன்னு சொல்றேன்.” சீறினாள்.

“ஏன்…உன் ஜானகிங்கற பேரை சுருக்கி ஜக்கின்னு கூப்பிடறேன்.”

“ம்….ஏதோ சாமியாரை கூப்பிடற மாதிரியிருக்கு”

“அப்ப..ஜானுன்னு கூப்பிடறேன்.”

“நீங்க ஒழுங்கா என் பேரை சொல்லிக் கூப்பிட்டாலே போதும்”

“எத்தனைப் பொம்பளைங்களுக்கு புருஷன் தன்னை இப்படி ஆசையா செல்லமா கூப்பிடலையேன்னு கவலையாயிருக்குத் தெரியுமா? எத்தனை ஆம்பளை தன் பொண்டாட்டியை ஆசையா இப்படி கூப்பிடறான்? எதிர்வீட்டு சுந்தரத்தைப் பாரு…காலையிலலேர்ந்து ராத்திரி வரைக்கும் ‘ஏய்…ஏய்’னு ஏதோ மாட்டை விரட்ற மாதிரி கூப்பிடறான். பொண்டாட்டி பேரை ஆசையா வாய் நிறைய என்னைக்காவது கூப்பிட்டிருக்கானா? சில பேர் வாடி போடின்னு பொண்டாட்டியை என்னவோ அடிமை மாதிரி கூப்பிடுவானுங்க. ஆனா…நான் உன்னை இப்படியெல்லாம் செல்லமா கூப்பிட நீ கொடுத்து வச்சிருக்கனும் தெரியுமா?”

“ஆமா…ஆமா பொண்டாட்டியை கொஞ்சறதுல உங்களைத் தட்டிக்க ஆளே இல்லை. சீக்கிரமா சாப்பிட்டுட்டு ஆபிஸ_க்கு கிளம்பற வழியைப் பாருங்க.” என்றபடி சட்னியையும் அவர் பக்கம் நகர்த்தினாள்.

“ஆமா…எங்க உன் செல்ல புத்திரன் மௌரி?”

“கடவுளே…அழகான மௌரியன்ங்கற அவன் பெயரை என் இப்படி மௌரி சௌரின்னு சொல்றிங்க? நீங்க செல்லமா கூப்பிடறேன்னு எங்களை அசிங்கப்படுத்தறீங்க? நீங்க இப்படியே பண்ணிக்கிட்டிருந்தா அப்பறம் நான் உங்களை ஆசையா நமைச்சல்னு கூப்பிடுவேன்”

“என்னது நமைச்சலா?”

“ஆமா…நமச்சிவாயத்தை சுருக்கினா நமைச்சல்தானே”

“ஏன் சொரி சிரங்கு, படைன்னு கூப்பிடேன்,”

“அட இது கூட நல்லாத்தான் இருக்கு” என்று கலகலவென சிரித்தாள் ஜானகி.

“சரி…நான் இனிமே ஜக்கி ஜாக்கின்னெல்லாம் கூப்பிடலை. பதிலுக்கு நீ என் மானத்தை வாங்கிடாதே. சரி உன் பிள்ளை மௌரியன் எங்கே? எனக்கு முன்னாடி வந்து தட்டை எடுத்து வச்சி தாளம் போட்டுக்கிட்டிருப்பான். அதுக்குள்ள சாப்பிட்டுட்டு காலேஜூக்கு போய்ட்டானா?”

“இல்லை. அவன் இன்னைக்கு காலேஜூக்கு போகலை.”

“ஏன்…உடம்புக்கு ஏதாவது முடியலையா?”

“அவனுக்கென்ன? என் புள்ளை என்னை மாதிரி. திடகாத்ரமானவன். உங்களை மாதிரி நோஞ்சான் கெடையாது. உடம்பு சரியல்லாம போக. எக்ஸர்ஸைஸ் செய்து உடம்பை எப்படி டிரிம்மா வச்சிருக்கான்.”

“சரி சரி நீங்க கடோர்கஜன் பரம்பரைதான். ஒத்துக்கறேன் தாயே. அப்பறம் ஏன் காலேஜூக்கு போகலை? ஏதாவது லீவா?”

“அப்படித்தான் நினைக்கிறேன்”

“சரி லீவா இருந்தா என்ன? எப்பவும் என் கூட சேர்ந்துதானே சாப்பிடுவான். கூப்பிடு அவனை”

“நானும் எழுப்பி எழுப்பி பார்த்துட்டேன். எந்திரிக்க மாட்டேங்குறான். நல்லா தூங்கறான்”

“என்னது நல்லா தூங்கறானா? லீவாயிருந்தாக் கூட காலையிலேயே எழுந்து ஜாக்கிங் போறவனாச்சே…ஏன் இவ்வளவு நாழி தூங்கறான்? முதல்ல போய் அவனைத்தொட்டுப் பாரு. ஜூரம் கிரம் அடிக்கப் போகுது. சும்மா கடேர்கஜன் பரம்பரை…ஆஞ்சநேயர் பரம்பரைன்னுக்கிட்டு.”

“நேத்து அவனோட காலேஜ்ல ஆண்டு விழா போலிருக்கு. ரொம்ப லேட்டாத்தான் வீட்டுக்கு வந்தான். முதல் நாள் ஏதாவது விழான்னா மறுநாள் காலேஜ் லீவு விடறது வழக்கம்தானே”

“அப்படியா? அப்ப பங்ஷன்ல  டான்ஸ் ப்ரோக்ராம் இருந்திருக்கும். ஆடி களைச்சுப் போயிருப்பான். அதான் அடிச்சப் போட்ட மாதிரி தூங்கறான் போலிருக்கு”

“ஆமா…அதனாலதான் தூங்கறான். சரி ரொம்ப டயர்டாயிருப்பான்னுட்டுத்தான் நானும் ரெண்டு மூணுவாட்டி எழுப்பிப் பார்த்துட்டு வந்துட்டேன். அவனே எந்திரிச்சு வரட்டும்.” என்றாள்.

நமச்சிவாயம் சாப்பிட்டு முடித்து அலுவலகத்திற்கு கிளம்பி போனார். ஆனால் போகும்போது மறுபடியும்…




“அவன் பாட்டுக்கு தூங்கிட்டே இருக்கப் போறான். எழுப்பி டிபனைக் கொடு. சுப்பிட்டுட்டு அப்பறம் படுத்துத் தூங்கட்டும்” என்றார்.

“சரி…” என்றாள்.

“டான்ஸ் ப்ரோக்ராம் வீடியோவை என் மொபைலுக்கு அனுப்ப சொல்லு. பார்க்கறேன்.”

“ம்…ஆபிஸ்ல முதல்ல வேலையை ஒழுங்காப் பாருங்க. வீடியோ எங்கேயும் ஓடிடாது. வீட்டுக்கு வந்து பார்க்கலாம்” என்று கிண்டல் செய்தாள்.

“பின்ன ஆபிஸ்ல வேலைப் பார்க்காம நாங்க என்ன வீடியோவா பார்த்துக்கிட்டிருக்கோம்;?” கடுப்படித்துவிட்டு வாசலில் இறங்கினார்.

“யாரு கண்டா? இப்பவெல்லாம் யாரு ஒழுங்கா வேலைப் பாரக்கறா. முழு நேரமும் மொபைல்லதானே மூழ்கி கிடக்குறாங்க. அதிலும் உங்களை மாதிரி கிழங்கள்தான் வீடியோ பார்கறதா ஒரு சர்வே கணக்கு சொல்லுதாம்.”

நீ சொல்றதைப் பார்த்தா ஏதோ தப்பான வீடியோ பார்த்த சர்வே கணக்கு மாதிரி இருக்கு”

“ம்…வயசானாலே இப்படித்தான். புத்தி தப்புத் தப்பா யோசிக்கும்” முறைத்துவிட்டு உள்ளே வந்தாள்.

சிரித்தபடியே தன் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினார் நமச்சிவாயம்.

அவர் சாப்பிட்ட தட்டை எடுத்து சிங்கில் போட்டுவிட்டு தான் சாப்பிடலாம் என நினைத்தவளுக்கு மௌரியனை எழுப்பி சாப்பிட வைக்கலாம் என நினைத்தவளாய் மாடிக்கு வந்தாள்.

அவனுடைய அறைக்குள் நுழைந்தவள் தாறுமாறாக கால்களையும் கைகளையும் பரப்பிக் கொண்டு ராத்திரி ஆடிய டான்ஸ் பொசிஷன் ஒன்றிலேயே படுத்திருந்த மகனைப் பார்த்ததும் சிரிப்பு வந்தது.

“மௌரியா…ஏய்…மெளிரியா” என அவனை தொட்டு அசைத்தாள்.

“ம்…” என்ற முனகலோடு திரும்பித் திரும்பி புரண்டுக் கொண்டிருந்தானே தவிர எழவில்லை.

“யே;…எந்திரிடா. எந்திரிச்சு குளிச்சுட்டு டிபன் சாப்பிட்டுட்டு படுத்து தூங்கு.”

“ம்…ம்….” என்று முனகிக் கொண்டிருந்தானே தவிர எழவில்லை.

“என்ன இவன் இப்படி கும்பகர்ணனாட்டம் தூங்கறான்.” என எழுப்பி எழுப்பி பார்த்துவிட்டு அலுத்துப் போனவளாய் கீழே வந்தாள்.

‘இவனை எதிர்ப்பார்த்துக்கிட்டிருந்தா ஒரு வேளை ஆகாது’ என முணுமுணத்தவாறே சாப்பாட்டு மேசைக்கு வந்து உட்கார்ந்தாள்.

“எப்பவாவது எழுந்து சாப்பிடட்டும். இல்லாட்டி நேரடியா மதியான சாப்பாட்டுக்கு வரட்டும்” என நினைத்தவளாய் தட்டை எடுத்து வைத்துக் கொண்டு தன் சிற்றுண்டியை ருசிக்க ஆரம்பித்தாள்.

அடுத்தடுத்து வீட்டு வேலைகளில் இறங்கியவள் மகனை மறந்தே போனாள்.

குளித்து முடித்துவிட்டு மறுபடியும் மதிய சமையலுக்காக சமையலறைக்குள் நுழைந்தவளுக்ககு மறுபடியும் மகனின் ஞாபகம் வந்தது.




‘இன்றைக்கு வீட்டில் இருக்கிறான். அவனுக்கு பிடித்தமாதிரி சமைக்கலாம் என நினைத்தாள்.

ஃப்ரிஜைத் திறந்து இருந்த காய்கறிகளையெல்லாம் எடுத்து வெளியே வைத்தாள்.

மாங்காய், முருங்கைக்காய், கத்திரிக்காய் என காய்கறிகள் சிரித்து எங்களை சாம்பார் வையேன் என சிரித்தன.

மௌரியனுக்கு சாம்பாராய் ஊற்றி சாப்பிடுவதைவிட சாம்பார் சாதமாக செய்தால் மிகவும் பிடிக்கும். அதிலும் இரண்டு ஸ்பூன் நெய்யை ஊற்றிவிட்டால் போதும் ஆசைஆசையாக சாப்பிடுவான். தொட்டுக் கொள்ள பொரித்த அப்பளம் இருந்தால் போதும்.

சாம்பார் சாதம் செய்யத் தொடங்கினாள். அடுக்களை வேலையை முடித்துவிட:டு மீண்டும் மாடிக்கு வந்தாள்.

முன்பு தட்டி தட்டி எழுப்பியவள் இப்பொழுது பட் பட்டென அடித்து எழுப்பினாள்.

“மௌரியா…எந்திரி. இப்ப நீ எந்திரிக்கலை உன்னை என்ன பண்றேன் பார்.” என அவனை உலுக்கினாள்.

இந்த முறை அவன் கொஞ்சம் அசைந்துக் கொடுத்தான்.

“ஒரு நாள் காலேஜ் இல்லைன்னா இப்படியா தூங்குவ. போய்…போய் குளிச்சு ப்ரஷ்ஷா ஆகு. உனக்குப் பிடிச்ச சாம்பார் சாதம் பண்ணியிருக்கேன். குளிச்சுட்டு வந்து சாப்பிடு”  என அவனை இழுத்துக் கொண்டே அதே அறையில் இருந்த குளியலறையில் தள்ளி கதவை சாத்தினாள்.

“என்னம்மா…நீ போம்மா…” என அவன் உள்ளே முனகிக் கொண்டே தண்ணீரைத் திறந்து விடுவது தெரிந்தது,

“எப்படி வச்சிருக்கான் பாரு ரூமை? ப்ளாட்பாரத்துல படுத்துக்கிடக்கறவன் கூட அந்த இடத்தை சுத்தமா வச்சிருப்பான்.” என கலைந்துக் கிடந்த படுக்கை விரிப்பை எடுத்து உதறினாள்.

அப்பொழுது உதறலில் தூரப் போய் விழுந்த அதைப் பார்த்து துணுக்குற்றாள் ஜானகி.

எடுத்துப் பார்த்தவள் அதிர்ந்தாள்.




What’s your Reaction?
+1
21
+1
17
+1
1
+1
0
+1
1
+1
0
+1
6
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!