Serial Stories

எனை ஆளும் நிரந்தரா-5

5

“மானசி எனக்கு இந்த மேத்ஸ் சுத்தமா புரியல.நீ இன்னைக்கு க்ளாஸ்ல போர்டுல சூப்பரா போட்டு காண்பித்தாயே! சாயந்தரமா உங்க வீட்டுக்கு ஹோம் ஒர்க் பண்ண வரட்டுமா?எனக்கு சொல்லித் தருகிறாயா?” உடன் படிக்கும் முருகானந்தம் அவள் அருகே சைக்கிளை மிதித்தபடி மெல்ல வந்து கேட்க, மனசுக்குள் ஒருவகை கூச்சம் உண்டானது மானசிக்கு.இதென்ன இப்படி தெருவில் வந்து பேசுகிறான்?

அவள் வயதுக்கு வந்த உடனேயே சகுந்தலா அவளை எச்சரித்தது ஆண் பிள்ளைகளிடம் அனாவசியமாக பேசக்கூடாது என்றுதான். இவனானால் இப்படி ரோட்டின் மேலேயே எல்லோரும் பார்க்கும் இடத்தில்… கூச்சத்துடன் தனது சைக்கிளை அழுத்தி மிதித்து அவனை கடந்தாள்.

 படபடவென்று பின்னால் சத்தம் கேட்டது. பள்ளி விட்டு வீடு சென்று கொண்டிருந்த அனைவரும் திரும்பி பார்க்க பெரிய வகுப்பு பையன்கள் சைக்கிள் மிதித்து வந்து கொண்டிருந்தனர். அவர்களில் சிவ நடராஜனும் இருந்தான். அவன் மிக வேகமாக சைக்கிளை மிதித்து மானசியை தாண்டும் போது கொஞ்சம் யோசித்து நின்று “மானு உன் பேக்கை கொடு” என்று அவளுடைய தோளில் போட்டிருந்த ஸ்கூல் பேக்கை கிட்டத்தட்ட பிடுங்கி தனது சட்டைக்குள் வைத்திருந்த ஒரு நோட்டை அவள் பேக்கிற்குள் திணித்து விட்டு வேகமாக முன்னால் போய்விட்டான்.

என்ன இது? மானசி பதறி நிற்கும்போதே நான்கைந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று அவளைக் கடந்து ஏதேதோ சத்தமிட்டபடி போனது. பயத்தில் உடல் நடுங்க சைக்கிளை மிதித்து ஒரு சந்துக்குள் மறைந்து நின்று எட்டிப் பார்த்தபோது, அவர்கள் அனைவரும் சிவ நடராஜனை சுற்றி வளைத்து நின்றிருந்தது தெரிந்தது.

இரண்டு பேர் அவனது ஸ்கூல் பேக்கை பிடுங்கி ரோட்டில் தலைகீழாக கவிழ்த்து எதையோ தேட அவன் தலையாட்டி மறுத்துக் கொண்டிருந்தான்.

என் பேக்கிற்குள் ஒளித்து வைத்தானே அந்த நோட்டைத்தான் தேடுகிறார்களோ? நினைத்த மறுநிமிடமே ஏனோ அந்த நோட்டை அவர்களுக்கு தரக்கூடாது என தோன்றிவிட வேகமாக வேறு வழியில் சைக்கிளை மிதித்துக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்து விட்டாள் மானசி.

“முளைச்சி மூணு இலை விட்றதுக்குள்ள பொம்பள சோக்கு கேட்குதாக்கும்? டேய் வெற்றி அந்த நடராஜன் கூட சேராதடா, மோசமான பையன்” வீட்டில் மணிவண்ணன் மகனை கண்டிக்க சகுந்தலை முகம் சுருங்க அவர்களை கடந்து போனாள்.

சிவ நடராஜன் மானசியிடம் பத்திரப்படுத்திய நோட்டு பாறாங்கல்லாய் மாறி கனத்தது. ஒரு வாரம் வரை அதனை தொடுவதற்கே பயந்து கொண்டிருந்தாள்.

காதம்பரி வீட்டு ஆட்கள் சிவ நடராஜனை அடித்து விட்டதாக ஊருக்குள் பேச்சு, அந்த நோட்டை வைத்திருக்கும் தனக்கும் இதே கதி தானோ மனதிற்குள் நடுங்கினாள். இவ்வளவு பிரச்சனை தரும் பொருளை என்னைப் பற்றிய கவலையின்றி என் பேக்குக்குள் திணித்து விட்டானே, என்ற மனக்கிலேசமும் அவளுள் நைத்தபடி இருந்தது.

“விஷயம் கமிஷனர் வரை போயிடுச்சு. கமிஷனர் ஆபீஸ்ல ரெண்டு குடும்பத்தையும் பஞ்சாயத்து பேச வரச் சொல்லி இருக்காங்களாம்” மணிவண்ணன் யாரிடமோ சொல்வது போல் சகுந்தலாவிற்கும் ரோஜாமணிக்கும் தகவல் சொல்லி சென்றார்.

“ஒரு போனாவது செய்து விசாரியங்களேன் அம்மா” என்றாள் சகுந்தலா.

ரோஜாமணி போன் செய்து ” இந்த ராஜாப்பயல் ஏன் இப்படி செய்கிறான் ?” என்று பேசிக் கொண்டிருந்ததை கேட்ட மானசி எப்படியும் போகட்டும் என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.




“தொழில் செய்து பணத்தை அள்ளி என்ன பிரயோஜனம்? பிள்ளைகளை ஒழுங்காக வளர்க்க தெரியவில்லையே” பெருமித்த்துடன் தன் பிள்ளைகளை பார்த்துக் கொண்டார் மணிவண்ணன்.தனது தொழில் எதிரி வீட்டில் ஒரு தடுமாற்றம் என்பதில் பரம திருப்தி அவருக்கு.

“அநேகமாக அவன் படிப்பு சோளி முடிந்ததுன்னு நினைக்கிறேன்” தாடையை தடவியபடி ஆரூடம் சொன்ன கணவனை வெறித்தாள் சகுத்தலா.

“வாழ வேண்டிய பையன்.ஏன் இப்படி பேசுகிறீர்கள்?”

“புள்ளைய ஒழுக்கமா வளக்கனும்டி.முத்து மாதிரி நான் பிள்ளை வளர்த்திருக்கிறேன் பார்த்தாயா?”

அன்று இப்படி பெருமை பேசிய அவர் மகன்தான்,இன்று பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் முடித்துக் கொண்டான்,அதுவும் அந்த எதிரி குடும்பத்து பெண்ணையே என்பதைத்தான் அவரால் இன்னமும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இனி சிவ நடராஜன் பள்ளிக்கு வரமாட்டான் என்று நினைத்ததற்கு மாறாக அடுத்த வாரமே தலை நிமிர்ந்தபடி பள்ளிக்குள் வந்தான். வெற்றி அவனைப் பார்த்ததும் முகத்தை திருப்பிக் கொள்ள அண்ணனை பின்பற்றினாள் மானசி.

பொதுவாக பள்ளியில் வெற்றியுடன் சகஜமாக பேசும் சிவ நடராஜன் அண்ணனுடன் இருக்கும் நேரங்களில் அவளுடனும் பேசவே முனைவான். மானசிக்கோ நெடுநெடுவென்று உயர்ந்து வளர்ந்த தோற்றத்துடன் எந்நேரமும் சுற்றிலும் ஒரு கும்பல் சேர்த்துக் கொண்டு அட்டகாசமான ஆட்டம் சிரிப்புகளுடன் இருக்கும் அவனை பார்த்தாலே ஒரு பயம் வரும்.

ஆளை விடுடா என்பது போலொரு பய பார்வையுடன் அவனை தவிர்த்து விடுவாள்.

“வெற்றி ,மானு நில்லுங்க”பின்னால் சைக்கிள் மிதித்து வந்த சிவ நடராஜனின் குரலுக்கு தங்கையிடம் “நீ முன்னால் போ, நான் அவனிடம் பேசிவிட்டு வருகிறேன்”

வெற்றிவேலன் சொல்ல தெருப் பக்கம் சைக்கிளை திருப்பி பறந்து விட்டாள் மானசி.

“அந்த சிவா அண்ணனும் காதம்பரி அக்காவும் லவ் பண்ணாங்களா அண்ணா? போலீஸ் ஸ்டேஷனில் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களா?” கேட்ட தங்கையை ஆச்சரியமாக பார்த்த வெற்றிவேலன் வலிக்காமல் தலையில் கொட்டினான்.

“ஏய் இதெல்லாம் பெரியவங்க விஷயம். நீ சின்ன பொண்ணு இப்படி எல்லாம் கேட்கக் கூடாது? மூச்…” அண்ணனின் எச்சரிக்கையை மானசி மீறவில்லை.

பிறகு பள்ளி படிப்பு முடிந்ததும் சிவ நடராஜன் கல்லூரி படிப்பிற்காக டெல்லி செல்ல வெற்றிவேலன் பெங்களூர் சென்றான்.

“அந்த சிவா போன பிறகு நம்ம பள்ளிக்கூடமே அமைதியாகிடுச்சு” என்பது போன்ற பேச்சுக்களை அடிக்கடி தனது பள்ளி ஆசிரியர்களுக்கு இடையே கேட்பாள் மானசி.

அன்று சிவ நடராஜன் கொடுத்த நோட்டு இவளிடமே தங்கிப் போயிருக்க அதை பற்றி யாருக்குமே தெரிந்திருக்கவில்லை. வருட முடிவில் புத்தகங்களை ஒதுக்கும் போது ஏதோ ஒரு குறுகுறுப்புடன் அந்த நோட்டை எடுத்து திறந்து பார்த்தால் அது பன்னிரெண்டாம் வகுப்பு தமிழ் செய்யுள் நோட்டு. காதம்பரியினுடையது.

பக்கம் பக்கமாக திருப்பி அதனை ஆராய ,ஓர் இடத்தில் இடையில் ஒட்டப்பட்டிருந்த ஒரு பேப்பரில் என் ஆசை கண்ணனே! என ஆரம்பித்து காதல் ரசம் சொட்ட சொட்ட ஒரு கடிதம். நேற்று தியேட்டரில் நீ கொடுத்த முத்தம் என்று ஏதேதோ இளமை வேகத்தில் பினாத்தியிருந்தது அந்த கடிதத்தில்.

சீச்சி என அருவருப்புடன் அந்த நோட்டை மூடி பழைய பொருட்கள் போட்டு வைக்கும் பரண் மேல் எறிந்து விட்டாள் மானசி.

இப்போது அவளுக்கு சிவ நடராஜன் மேல் பயத்தோடு வெறுப்பும் வந்து விட்டிருந்தது.

“இப்படி உங்களுடைய பேத்தியை அந்த ரவுடியிடம் போய் பேச அனுப்புவீர்களா பாட்டி?”

 பாட்டியின் முகத்தில் ஆச்சரியம். “ரவுடியா? யாரை சொல்கிறாய் ராஜாவையா?”

 ஆமாம் பெரிய ராஜா மனதிற்குள் சலித்துக் கொண்டவள் “எப்போது பார்த்தாலும் ஏதாவது பிரச்சனையில் மாட்டிக் கொண்டு போலீஸ் கேஸ் என்று அலைந்து கொண்டிருப்பவருக்கு ரவுடி என்று பெயர் வைக்காமல் வேறு என்ன சொல்வதாம்?”

” ஊர் பெரிய மனிதன் என்று கூட சொல்லலாமே!ரவுடிக்கும்,ஊர் பெரிய மனிதனுக்கும் நூலளவு வித்தியாசம்தான் மானு.ரவுடி தனக்காக ஜெயிலுக்கு போவான்,பெரிய மனிதன் அடுத்தவருக்காக போவான்.அதனால்தான் அவன் பெரிய மனிதன்”  பாட்டி கண்களை சிமிட்டினார்.




 மானசிக்கு வயது வித்தியாசம் பார்க்காமல் பாட்டியின் தலையில் கொட்ட வேண்டும் போல் இருந்தது.

” எதையாவது உளராமல் சும்மா இருங்க பாட்டி.இது போல் ஒரு பெரிய மனிதனிடம் நேரில் பேச என்னால் முடியாது”

” சரி இருந்து கொள், எனக்கொன்றும் கவலை கிடையாது” பாப்கார்ன் பாக்கெட்டை பிரித்து வைத்துக் கொண்டு டிவி பார்க்க ஆரம்பித்தார் பாட்டி.

இப்படி உடனே சரியென்று விட்டால் எப்படி? மானசி  நகங்களை கடித்து துப்பினாள். “அவன்…” என ஆரம்பித்து பாட்டியின் முறைப்பை கவனித்து “அந்த ர்ர்ராஜா… எனக்கு அவரிடம் நேரில் போய் பேச பிடிக்கவில்லை பாட்டி”முகம் சுளித்தாள்.

 “சரிதான் கொட்டப்பாக்கம் வகையறா லேசுப்பட்டவர்களா என்ன? அவர்கள் பிடித்த பிடியிலிருந்து யாரும் இறங்கி வர மாட்டீர்கள். அண்ணனின் வாழ்க்கை இப்படியே போகட்டும்”

” பாட்டி கொஞ்சமாவது பொறுப்போடு பேசுகிறீர்களா?”

” என்னை என்னடி செய்யச் சொல்கிறாய்? உன் அம்மா வலுக்கட்டாயமாக எனக்கு துணை வேண்டும் என்று என்னை இங்கே இழுத்துக் கொண்டு வந்து இங்கே அமுக்கி விட்டாள். நானே என் பிறந்த வீட்டு உறவுகள் பக்கமே போக முடியாத துயரத்தில் இருக்கிறேன். நொய் நொய்ங்காமல் அந்த பக்கம் போ.இந்த நாடகம் முக்கியமான கட்டத்தில் இருக்கிறது”

மானசி பட்டென்று பாட்டி அறைக்கதவை அடித்துப் பூட்டி தன் கோபத்தை காட்டிவிட்டு வெளியேறினாள். அவனை நேரில் சந்திப்பதா? அவள் மனதிற்குள் நெறு நெறுவென கடற்கரை மணலின்  நச்சரிப்பாய் முன்பு அவனை எதிர் கொண்ட தருணங்கள்.

“ஹேய் மானசி நீயா? என்ன இவ்வளவு வளர்ந்து விட்டாய்? ஆளே மாறிவிட்டாயே?” கேட்ட குரலுக்கு திரும்பியவள், திருவிழாவிற்காக பட்டு பாவாடை தாவணி அணிந்து தாழம்பூ ஜடை பின்னி போட்டு,உடல் முழுவதும் நகைகள் மின்ன பெரிய மனுசி தோரணையில் நின்றிருந்தாள்.

பிரமிப்பும், ஆச்சரியமும் கூடவே ஏதோ ஒரு உணர்வுமாக அவள் முன் நின்றிருந்தான்

சிவ நடராஜன். அரும்பு மீசை போய் கற்றையான அடர்ந்த மீசையுடன் இன்னமும் அதிகம் வளர்ந்து விட்ட உயரமும் அதற்கேற்ற அகலமும் சேர்ந்து ஆகிருதியாய் நின்றவன் இப்போதும் அவளுக்குள் ஒரு பயத்தையே விதைத்தான்.




What’s your Reaction?
+1
35
+1
22
+1
2
+1
1
+1
3
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!