Serial Stories நீ தந்த மாங்கல்யம்

நீ தந்த மாங்கல்யம்-10

( 10 )

அரைகுறை உறக்கம்தான் முகிலினிக்கு .ஊவா முள் ஒன்று உள்ளத்தில் உறுத்திக்கொண்டிருக்கையில் உள்ளார்ந்த உறக்கம் வருவதேது .
சிறு புரளலிலேயே விழிப்பு வந்து விட்டது முகிலினிக்கு .மணி மூன்று காட்டியது .

அருகில் அம்மாவை காணவில்லை .பாத்ரூமிற்குள் இருப்பார்களாயிருக்கும் என எண்ணியபடி , கலைந்து விட்ட உறக்கத்த
ை நொந்தபடி கண்களை உருட்டியபடி படுத்திருந்தாள் .

நாற்பதாவது நாள் சாமி கும்பிட்டு முடித்தவுடன் உறவினர்கள் அனைவரும் துண்டை உதறி தோளில் போட்டு என்பார்களே …அது போல் கலைந்து விட்டார்கள் .

வினோத் வீட்டினரை பெண் பார்க்க வரும் நாளை சொல்லிவிடுமாறு அழுத்தி சொல்லிவிட்டு மகனையும், மருமகளையும் அழைத்துக்கொண்டு சென்றுவிட்டாள் வனக்கொடி .அப்படியே விரைவில் செய்யுமாறு , முகிலினியின் தாய் வழி சொந்தமும் , தந்தை வழி சொந்தமும்  அறிவுறுத்தி விட்டு சென்றுவிட்டனர் .

வயது வந்த பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைப்பதென்பது எளிதான காரியம் அல்லவே …என்னதான் திருமணத்திற்கான நகை , பணமெல்லாம் தயாராக இருந்தாலும் பொருத்தமான வரன் தேடுவதென்பது  பெரிய பொறுப்பல்லவா ?

அந்த பொறுப்பை தலையிலேற்ற எந்த சொந்தமும் தயாரில்லை .எனவே அப்பொறுப்பை தானே முன் வந்து ஏற்ற வனக்கொடி அவர்கள் அனைவரின் கண்களுக்கும் தேவதையாக தெரிந்ததில் வியப்பில்லை .

மேலும் ஆண் வாரிசற்ற குடும்பங்களில் குடும்ப தலைவருக்கு பிறகு மூத்த மருமகன் தானே பொறுப்புகளை ஏற்க வேண்டும் .அதனை முழு மனதுடன் செய்ய வந்த கதிரவனை அனைவருக்கும் பிடித்து போனது .

இந்த இடத்தில்தான் முகிலினிக்கு இடித்தது .கதிரவனோ அவன் அன்னை வனக்கொடியோ இவ்வளவு பரந்த மனது படைத்தவர்கள் இல்லையே .

முன்பொருநாள் சரஸ்வதி கீழே விழுந்து கைகள் மிக மெல்லிய ப்ராக்சர் ஆகி வலியில் முகம் சுளித்தபடி அமர்ந்திருந்தாள் .முகிலினி அப்பாவிற்கு போன் போட்டு , அவர் உடனே வருகிறேன் என கூறி போனை வைத்தார் .

கவலையோடு அம்மாவின் கையை வருடியபடி அமர்ந்திருந்த முகிலினியின் முன் கிளம்பி விட்ட தோரணையில் வந்து நின்றனர் அக்காவும் , அவள் கணவனும் .திகைத்து நோக்கினாள் முகிலினி .

” அப்பாதான் வர்றேன்னு சொல்லிட்டாரே .இப்போ வந்திடுவார் .வரவும் அம்மாவை ஆஸ்பிடல் கூட்டி போங்க .நாங்க கிளம்புறோம் .லேட்டா போனா அத்தை திட்டுவாங்க ” என்றாள் முகிலினி .தொடர்ந்து எந்த உறுத்தலுமின்றி  கிளம்பி போய்விட்டனர் .

அன்றெல்லாம் அக்காவின் சுயநலத்தை  அம்மாவிடம் அப்பாவிடமும் புலம்பி தள்ளி விட்டாள் முகிலினி .”, விடும்மா அவள் நிலைமை அப்படி ” என அவளை சமாதானப்படுத்தினார் தமிழ்செல்வன் .




இதுபோன்ற சிறு சிறு சம்பவங்கள் எத்தனையோ ..நடந்திருக்கின்றன தமிழினி குடும்பத்தினரின் சுயநலத்தை நிரூபிக்க .அப்படிப்பட்டவர்கள் இன்று தாங்களே முன்வந்து திருமணம் நடத்த முயல்கிறார்கள் என்றால் முகிலினியால் நம்ப முடியவில்லை .

” ஆதாயம் இல்லாமல் அழகர் ஆற்றில் இறங்குவாரா ? ” எனும் பழமொழி நினைவு வந்தது முகிலினிக்கு .வனக்கொடியின் ஆதாயம் என்னவென்றுதான் அவளுக்கு தெரியவில்லை .

ஏதோ இந்த திருமணத்திற்கு  சம்மதித்தால்தான் கதிரவனையும் , தமிழினியையும் இங்கே தங்க வைக்க முடியும் என்பதான மறைமுக உணர்த்தல்  வேறு . இந்த விதமான  பார்வையுடன் வனக்கொடி அவளை நோக்கியபடி நின்ற போது , போங்களேன் …நானும் அம்மாவும் தனியாகவே வாழ்ந்து விட்டு போகிறோம் எனும் பார்வையை அவளுக்கு அளித்தபடி திரும்பிக்கொண்டாள் முகிலினி .

காலணியை காலுக்குள் நுழைத்ததிலேயே வனக்கொடியின் கோபம் தெரிந்தது .அகல அகல எட்டுக்களில் தன் வேகத்தை காட்டியபடி வெளியேறினாள். தலையை பின்பற்றின வால்கள் .

முகிலினி பயந்தது போல் சரஸ்வதி திருமண பேச்சை மகளிடம் எடுக்கவில்லை .அப்பாவின் படத்தை வெறித்தபடி அமர்ந்து விட்டாள் அவள் .

இப்போது முகிலினியின் தேவை யதுநந்தனின் இருப்பிட விபரம் .வீட்டை தலைகீழாக புரட்டி பார்த்து விட்டாள் .யதுந்நதன் சம்பந்தப்பட்ட சிறு விபரம் கூட எங்கேயும் அகப்படவில்லை .

மந்திரக்கோலை சுழற்றியதும் எழும் புகையில் மறைவது  போல் இப்படி ஒருவனால் மறைய முடியுமா ?  என ஆச்சரியமாக இருந்தது முகிலினிக்கு .ஒரு வேளை கல்லூரியில் தனது விலாசம் கொடுத்திருப்பானோ ? .

நாளையே கல்லூரிக்கு சென்று விசாரிக்க வேண்டும் என எண்ணிக்கொண்டாள் .அம்மாவிற்கு துணைக்கு சுமதி அக்காவை கொஞ்ச நேரம் இருக்க சொல்ல வேண்டியதுதான் .இனி தூங்கலாம் என எண்ணி கண்களை மூடிக்கொண்டாள் முகிலினி .

குக்கர் சத்தம் காதில் வந்து அறைந்தது .திடுக்கிட்டாள் முகிலினி .திரும்பி பார்த்தாள் .அம்மா …பாத்ரூமிற்குள் இருப்பதாக நினைத்தாளே …மணியை பார்த்தாள் மூன்று முப்பது .

அடக்கடவுளே இந்த நேரத்தில் என்ன செய்கிறார்கள் அம்மா ? வேகமாக உள்ளே சென்று பார்த்தாள் .

இரண்டு அடுப்பும் எரிந்து கொண்டிருக்க ஒன்றில் குக்கர் சத்தமிட்டு கொண்டிருந்தது .மற்றொன்றில் ஏதோ வதங்கிக்கொண்டிருந்தது .பீன்ஸ் பொடியாக நறுக்கி வைக்கப்பட்டிருக்க , கீரையை ஆய்ந்து கொண்டிருந்தாள் சரஸ்வதி .

” அம்மா …”, அதிர்ச்சியுடன் குரல் கொடுத்தாள் முகிலினி .

” வாம்மா ..எழுந்தாச்சா ? பல்லை தேய்த்துக்கொள் .காபி தர்றேன் .தமிழ் குளிக்க போனாள் .கதவை தட்டி சீக்கிரம் வர சொல் .என்னதான் செய்வாளோ ? ஒவ்வொரு விரலா சோப் போடுவா . பாத்ரூமுக்குள் போனால் வர மாட்டா ….”,  பேசியபடியே செல்லும் தாயை சிறு அச்சத்துடன் பார்த்தாள் முகிலினி .

” உனக்கு கலக்குறதோடு உங்க அப்பாவுக்கும் காபி கலந்திடுறேன் .எனக்கு கையோடு வேலை முடியும் .நீ போய் அப்பாவை எழுப்பி விடு .”

ஸ்தம்பித்து நின்றாள் முகிலினி .

” உங்க அப்பா இறந்ததை உங்கள் அம்மாவின் உள்ளம் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை .கணவரும் குழந்தைகளுமாக வாழ்ந்த பழைய பரபரப்பான வாழ்நாள் அவர்கள் உள்ளத்தில் ஆழ வேரூன்றியுள்ளது .எனவே எளிதாக தனக்கு பிடித்த கடந்த காலத்திற்குள் அவர்கள் நுழைந்து விட்டார்கள் .நிகழ்காலத்தை மறக்க முனைகிறார்கள் “

டாக்டர் பொறுமையாக முகிலினிக்கு விளக்கினார் .

” இல்லை டாக்டர் திடீர் திடீரென்றுதான் அம்மா இப்படி நடந்துக்கிறாங்க .இன்று காலை அத்தனையும் சமைத்து வைத்துவிட்டு சாப்பிட வாங்க …சாப்பிட வாங்கன்னு கூப்பிட்டுட்டே படுக்கையில் போய் படுத்துட்டாங்க .
தூங்கி எழுந்ததும் ” பாப்பா இப்படி அப்பா நம்மளை விட்டுட்டு போயிட்டாரேன்னு அழுறாங்க டாக்டர் ” தவிப்புடன் விவரித்தாள் முகிலினி .

” ஆமம்மா நிகழ்கால அதிர்ச்சிக்கும் , கடந்தகால ஆனந்தத்திற்கும் இடையே ஊஞ்சலாடிக்கொண்டிருக்கிறது அவர்கள் மனம் .இந்த நிலைமை நீடித்தால் அவர்கள் மனநிலை பாதிக்க படக்கூடிய அபாய நிலை இருக்கிறது ” என்றார் டாக்டர் .

” ஐயோ …அப்படி நடக்காமல் இருப்பதற்கு என்ன செய்யவேண்டும் டாக்டர் ? ” பதறியபடி கேட்டாள் முகிலினி .

” நிகழ்காலத்தை அவர்களுக்கு உணர்த்திக்கொண்டே இருங்கள் .முக்கியமாக அவர்களை தனியே விடாதீர்கள் .பழைய வாழ்க்கையை அவர்களை நினைக்க விடாதீர்கள் .அவர்கள் உங்களுக்கு மிக முக்கியம் என்பதனை ஒவ்வொரு கணமும் உணர்த்திக்கொண்டே இருங்க ” விளக்கினார் டாக்டர் .

டாக்டர் சொன்னபடி செய்வதாக கூறிவிட்டு அம்மாவை அழைத்து வந்தாள் முகிலினி .ஆனால் என்ன செய்ய போகிறாள் என்றுதான் தெரியவில்லை .

அம்மாவை சாப்பிட வைத்து மருந்து கொடுத்து தூங்க வைத்தாள் .செய்வதறியாது உட்கார்ந்திருந்தாள் .யாருமற்ற அனாதை போல் ஒரு எண்ணம் தோன்ற அழுகை வந்தது .
யதுநந்தனின் ஆறுதல் மிக அவசியமாக தோன்றியது .ஆனால் அவன்தான் ஆளரவமின்றி மறைந்து போனானே .

இல்லை இப்படியே விடப்போவதில்லை .இதற்கு ஒரு நல்ல முடிவு காணவேண்டும் .கண்ணீரை துடைத்துக்கொண்டு தமிழினி நம்பரை அழுத்தினாள் .

தூங்கும் அன்னையின் தலையை வருடியபடி அருகில் அமர்ந்திருந்தாள் தமிழினி.முகிலினி சொன்ன விசயத்தின் வீரியம் அவள் இமைகளை நனைத்திருந்தது .

” நாம் யாருக்கு என்ன பாவம் செய்தோம் முகி ? ஏன் நமக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்கிறது ? அப்பா போனதையே இன்னும் ஜீரணிக்க முடியவில்லை .இப்போது அம்மா வேறு இப்படி என்றால் தாங்க முடியவில்லைடி ” கண்கள் கலங்கின தமிழினிக்கு .




முகிலினி சொன்ன செய்தியில்  முதலில்  அதிர்ந்து , பின்பு ஏதோ  யோசனையில் இருந்தாள் வனக்கொடி .கதிரவனுக்கு அலுவலக வேலை இருப்பதாக கூறிவிட்டு மாமியாரும் , மருமகளுமாக வந்திருந்தனர் .

” தமிழ் …அப்புக்குட்டிக்கு ஸ்கூல் விடுகிற நேரமாயிடுச்சு .நீ போய் அவனை கூட்டிக்கொண்டு வா .இங்கேயே வந்திடு .நான் கதிரையும் இங்கேயே வர சொல்லிடுறேன் .இன்று எல்லோருமாக உட்கார்ந்து பேசிடலாம் ” என்றாள் வனக்கொடி .

தமிழினி முகிலினியின் வண்டியை எடுத்துக்கொண்டு அபர்ணாவை அழைத்து வர போய்விட்டாள் .இனிதான் பிரச்சினை வரப்போவதாக தோன்றியது முகிலினிக்கு .படபடக்கும் இதயத்தை வெளியே காட்டாமல் வனக்கொடியை ஏறிட்டாள் அவள் .

” இங்கே பாரும்மா ..உங்க அம்மா நிலைமையை பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கு .இப்படி ஒரு நிலைமை அவுங்க நல்ல மனசுக்கு வந்திருக்க கூடாது .என்ன செய்ய ? விதிவசம் …வந்திடுச்சு .அதுக்காக நீ கவலைப்படாதே .இந்த மாதிரி நிலைமைலதானே கை கொடுக்க உறவுகள் இருக்கிறோம் .”

வனக்கொடியின் பேச்சில் ஏதோ ஒன்று ஒளிந்திருப்பதாக தோன்றியது முகிலினிக்கு .எனவே பதிலேதும் சொல்லாமல் தலையை மட்டும் அசைத்து வைத்தாள் .

” நான் நாளையிலிருந்தே என் மருமகனையும் , மருமகளையும் இங்கேயே தங்க அனுப்பி விடுகிறேன் .அவர்கள் உன் அம்மாவை பக்கத்திலிருந்து நன்றாக பார்த்துக்கொள்வார்கள்.”

என் மகன் ….என் மருமகள்….உன் அம்மா …அழுத்தத்துடன் சொல்லப்பட்ட வார்த்தைகள் .
பத்து பவுன் செயினை உங்கள் மகன் என் அக்காவின் கழுத்தில் போட்டு விட்டதால் எங்கள் பெண் , உங்கள் மருமகளாகவும் , எங்கள் அம்மா ….என் அம்மாவாகவும் மாறி விட்டார்களா ?…கசப்புடன் நினைத்துக்கொண்டாள் முகிலினி .

” சொந்தத்திற்குள் இந்த மாதிரி உதவி கூட செய்யவில்லையென்றால் எப்படிம்மா ? ஆனால் என்நிலைமையையும் நீ கொஞ்சம் புரிந்து கொள்ள வேண்டும் .எனக்கு இரண்டு பசங்க .கதிர்தான் மூத்தவன் .சின்னவனுக்கு இப்போதுதான் கல்யாணம் பண்ணினேன்…என் இரண்டாவது மருமகளும் பெரிய இடம்தான் .நூற்றியிருபது பவுன் போட்டு வந்தாளாக்கும் “தான் சொல்வதை முகிலினி கவனிக்கிறாளா என அறிய  சிறிது நிறுத்தினாள் வனக்கொடி .

இதெல்லாம் முகிலினிக்கும் தெரியுமே .இரண்டாவது மகனுக்கு முகிலினியை மணம் முடிக்க தமிழினியை அப்பாவிடம் மாறி மாறி தூது விட்டு பார்த்தார்கள் .ஒரே வீட்டில் இரண்டு பெண்களையும் கொடுத்தால் சரி வராது என அப்பா ஒரேடியாக மறுத்து விட்டார் .

கண்ணியிலிருந்து தப்பிய மானாக தன்னை உணர்ந்தாள் அன்று .ஏனெனில் தமிழினி போல் ஒரு கீ கொடுத்து நடக்கும் எந்திர வாழ்வை முகிலினியால் கற்பனை செய்ய முடியவில்லை .

ஆனமட்டும் முயன்று பார்த்து  விட்டு சென்ற வருடம் தனது இரண்டாவது மகனுக்கு மணமுடித்து விட்டாள் வனக்கொடி .இப்போது எதற்கு அந்த பேச்சு …புரியவில்லை முகிலினிக்கு .

” நான் அன்னைக்கு சொன்ன மாதிரி செஞ்சிருந்தா ..இப்போ இந்த பிரச்சினை வந்திருக்காது .அண்ணன் தம்பிக்குள்ள பிரச்சினை வராமல் போயிருக்கும் .நம்ம வீடுதானேன்னு அண்ணனும் தம்பியுமா இங்கேயே கிடந்திருப்பாங்க ” …தாங்கள் அப்போது செய்யாமல் விட்டு விட்ட ஒரு நிகழ்வுக்கு இப்போது வருந்த வேண்டுமென வனக்கொடி விரும்புவது முகிலினிக்கு நன்கு தெரிந்தது .

எரிச்சல் மேலிட ” இப்போது என்ன செய்ய வேண்டும் ? அதை மட்டும் சொல்லுங்க அத்தை ” என்றாள் .

” என்னம்மா நீ படிச்ச புள்ளை .இவ்வளவு தெளிவாக சொல்கிறேன். புரியலையா ? பெரியவன் மாமியார் வீட்டோட போய் தங்க போகிறேன்னு சொன்னால் சின்னவன்  அதை ஒத்துக்கிடுவானா ? சண்டைக்கில்ல  வருவான்  .இல்லை நானும் போகிறேன்னு அவனும் மாமியார் வீட்டுக்கு கிளம்பி போய்விட்டான்னு வை .நான் என்ன செய்வேன் சொல்லு ” இல்லாத கண்ணீரை துடைத்துக்கொண்டாள் வனக்கொடி .

திகைத்தாள் முகிலினி .வாஸ்தவம்தானே .இவர்கள் சொல்வது போல் நடக்கும் சாத்தியம் உண்டுதானே .ஆனால் அதற்கு என்ன செய்வது …

” அப்போ நீங்க அக்காவையும், மச்சானையும் அனுப்ப மாட்டீங்களா ? ” ஐயோ அப்படியென்றால் நான் மட்டுமாக எப்படி அம்மாவை சமாளிக்க மனதினுள் கலங்கியபடி வனக்கொடியை ஏறிட்டாள் .

ஒரு பெரிய வாதத்திற்கு தயாராவது போல் தொண்டையை கனைத்த வனக்கொடி “, அப்படியில்லைம்மா .சின்னவனை எதையாவது சொல்லி அடக்கிடலாம்னு வை .இப்போ உதாரணமாக டேய் அவுங்க வீட்டு சொத்து பூராவும் அந்த அம்மாவுக்கு பிறகு உங்க அண்ணனுக்குதானே
ன்னு சொன்னேன்னு வை …” அழுத்தமாக தனது எண்ணத்தை வைத்துவிட்டு அதற்கான முகிலினியின் பிரதிபலிப்பை ஓரக்கண்ணில் கவனித்தபடி தன் பேச்சினை நிறுத்தினாள் .

இப்போது முகிலினிக்கு எல்லாம் புரிந்துவிட்டது.ஆக பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது .எல்லாம் பணம்தான் .அவளது அன்னையை விட முக்கியமா அவளுக்கு இந்த பணம் .

” அத்தை அம்மாவை விட எனக்கு பணம் முக்கியமில்லை .உங்கள் பிரச்சினையையும் நான் புரிந்து கொண்டேன் .எங்கள் சொத்தில் என் பங்கினையும் நான் அக்காவிற்கே தர தயாராக இருக்கிறேன் .” மனப்பூர்வமாக சொன்னாள் முகிலினி .

மிக திருப்தி நிலவியது வனக்கொடி முகத்தில் .” அட தங்கமே உன்னை தெரியாதா எனக்கு …நான் உன்னை பற்றியே பேசவில்லை கண்ணு …” குழைந்தாள் .

” பிறகு ….? ” கேள்வியாக நோக்கினாள் முகிலினி .

“, இது நீ மட்டும் சம்பந்தப்பட்டதில்லையே கண்ணு .நாளைக்கு உனக்கு வரப்போகிறவனும் சம்பந்தப்பட்டதில்லையா ” அத்தையம்மா இப்போதுதான் விசயத்திற்குள் வருகிறாளென தோன்றியது முகிலினிக்கு .

” அதெப்படி அத்தை இப்போதே சொல்லமுடியும் …? “யோசனையுடன் கேட்டாள் முகிலினி .

” அதுதான் என் தங்கை பையன் வினோத்தை கல்யாணம் பண்ண சொன்னேன் ” ஒரு வழியாக விசயத்தை போட்டு உடைத்தாள் வனக்கொடி .

அப்படியே அவளையே பார்த்தபடி இருந்தாள் முகிலினி .




” அவன் அமெரிக்காவில் வேலை பார்க்கிறான் .கல்யாணம் முடிந்ததும் உன்னையும் அங்கேயே கூட்டிட்டு போயிடுவான் .அவன் குடும்பமெல்லாம் டில்லியில் இருக்கிறாங்க .அவுங்ககிட்ட நிறைய பணம் இருக்கு .இங்கேயிருந்து ஒண்ணும் எதிர்பார்க்க மாட்டாங்க .பையன் ரொம்ப நல்ல பையன் .நீ சரின்னு சொன்னா அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணத்தை முடிச்சிடலாம் .ஏனென்றால் வினோத்திற்கு லீவ் இன்னும் ஒரு மாதம்தான் இருக்கிறது ….”,

கடகடவென தானாகவே திட்டங்களை தீட்ட தொடங்கினாள் வனக்கொடி .ஒருவித வெறுமையோடு அதனை கேட்டுக்கொண்டிருந்தாள் முகிலினி .

அவளிடமிருந்து சத்தம் வராமல் போகவே தனது அளப்புகளை நிறுத்தி விட்டு பார்த்தாள் வனக்கொடி .முகிலினியின் நிலையை பார்த்து சிறிது சந்தேகம் வந்து தனது குரலில் கொஞ்சம் கடுமையேற்றி ” முகிலினி ….” என அழைத்தாள் .

” இந்த திருமணத்திற்கு நான் சம்மதிக்கா விட்டால் அக்காவையும் , மச்சானையும் இங்கே அனுப்ப மாட்டீர்களா ? ” நேரிடையாகவே கேட்டாள் வனக்கொடி .

” அதை என் வாயாலேயே நான் சொல்ல வேண்டுமென்று எதிர்பார்க்கிறாயா ? ” வனக்கொடியும் அதிரடியாக நேரிடையாகவே கேட்டாள் .

மெல்ல எழுந்து கொண்டாள் முகிலினி .உள்ளே அம்மாவின் அறைக்கு திரும்பினாள் .

” என்ன பதிலே சொல்லாமல் போகிறாய் ? ” விடாமல் விரட்டினாள் வனக்கொடி .

” அம்மாவை அருகேயிருந்து கவனிக்க எங்களுக்கு வேறு ஏதாவது வழி இருக்கிறதா ? ” நின்று கேட்டாள் முகிலினி .

” இல்லை …நிச்சயமாக …கண்டிப்பாக இல்லை “திருப்தியோடு கூறினாள் வனக்கொடி .

அம்மாவின் அறை வாசலில் நின்று திரும்பி பார்த்தவள் ” பின்னே என்ன ? எனக்கு சம்மதம்தான் ” சலனமற்று ஒரு யோகினி போல் கூறிவிட்டு உள்ளே சென்று அம்மாவின் காலடியில் அமர்ந்தாள் முகிலினி .




What’s your Reaction?
+1
20
+1
14
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!