Serial Stories தேவதை வம்சம் நீயோ

தேவதை வம்சம் நீயோ-6

6

விஷ் என்று எழுந்த குக்கரின் தலையில் கையில் இருந்த கரண்டியால் ஒரு போடு போட்டாள் அஞ்சனா. சத்தம் அடங்கி அமைதியானது அது. இதுபோல் இந்த ஆண்கள் எல்லோரின் தலையிலும் கொட்டி அடக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அப்போது அவள் மனம் எல்லா ஆண்களையும் வெறுத்தது.

“அஞ்சனா எனக்கு இன்னைக்கு ஒரு ஆபரேஷன் இருக்குது. காலைல 8 மணிக்கு போகணும். அதனால ஸ்மிருதிக்கு சாப்பாடு கொடுத்து ஸ்கூலுக்கு அவளை கிளப்பி விட்டுடு” உள்ளே வந்து தகவல் சொல்லிவிட்டு அதற்கான அவளது பதிலை கூட கேட்காமல் போய்விட்டாள் சுலேகா.

அஞ்சனாவிற்கு இப்போது அந்த குக்கரின் தலை கொட்டலை பெண்களுக்கும் சேர்த்து செய்ய வேண்டும் போலிருந்தது. ஆண்கள் பெண்கள் என எல்லோருமே இங்கே சுயநலவாதிகள்.யாருக்கும் அடுத்தவரை பற்றிய கவலை கிடையாது. தங்களுக்கு உரியது கிடைக்க வேண்டும்,நடக்க வேண்டும். பொறுமியவளின் மனதிற்குள் முந்தைய இரவு துவண்டு கிடந்தவளை வலிய இழுத்து அணைத்த கணவனின் நினைவு.

” சாயந்தரம் அம்மா வீட்டுக்கு போயிட்டு வருகிறேன் அத்தை” சுகுணாவிடம் அனுமதி கேட்டபோது அவள் கண்களை சுருக்கி கொண்டு பார்த்தாள். “இப்போது தானே போய்விட்டு வந்தாய்?”

“மூன்று வாரம் ஆகிவிட்டது அத்தை” பொறுமையை இழுத்து பிடித்துக் கொண்டு சொன்னாள்.

சுகுணா முகத்தை ஒரு மாதிரி சுளித்தபடி “சரி சரி” என்றாள்.

மதிய சமையலை முடித்துவிட்டு கிளம்பும்போது கணவனிடம் சொல்ல வேண்டுமா யோசித்தாள். பிறகு போன் போட்டால் எடுக்கப் போவதில்லை ,எடுத்தாலும் என் பேச்சை காதில் கேட்க போவதில்லை… உதட்டை சுழித்துக் கொண்டவள் கிளம்பி விட்டாள்.

கால் டாக்ஸிக்காக காத்திருந்தபோது போனில் கனகா அழைத்தாள். “அஞ்சனா எங்க சீனியர் இன்னைக்கு ஒரு பெரிய கேசை ஜெயிச்சிருக்காரு. அவருக்கு நம்ம வீட்ல ஒரு சின்ன விருந்து கொடுக்கலாமென்று நினைக்கிறோம். டின்னர் ஏற்பாடு பண்ணிடுறியா?”

கோபமோ வருத்தமோ இனங்கான முடியாமல் மேலெழுந்த உணர்வை அடக்கியவள், “இல்லை அக்கா நான் அம்மா வீட்டிற்கு போகிறேன். இங்கே நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்” சொல்லிவிட்டு அவள் பதிலைக் கேட்காமலேயே போனை கட் செய்தாள். வந்து நின்ற டாக்ஸியில் ஏறிக் கொண்டாள்.

“பாப்பா” மரகதவல்லி ஆவலுடன் மகளை அணைத்துக் கொண்டாள். “என்னடா திடீர்னு நீ மட்டும் வந்து நிற்கிறாய்?”

“ஏன்மா உங்களிடம் போனில் பர்மிஷன் கேட்டு விட்டு தான் வரணுமா?”

“கழுதை அதில்லடி, ஒரு வார்த்தை போனில் சொல்லலையேன்னு கேட்டேன் உள்ளே வா”

“என்ன சமையல்மா?”

“என்னடா சாப்பிடாமலேயேவா வந்தாய்?”

“உங்க கையில் சாப்பிடணும்னு தோணுச்சும்மா.அதான் சமைச்சு வச்சுட்டு சாப்பிடாம வந்துட்டேன்”

“அச்சோ வெறும் பருப்பும் கத்திரிக்காயும்தான் வைத்திருக்கிறேன். நீ வருவதாக சொல்லி இருந்தால் வேறு ஏதாவது நன்றாக செய்திருப்பேனே”

“பரவாயில்லையம்மா அந்த பருப்பும் கத்திரிக்காயும் கேட்கும் போதே எச்சில் ஊறுது. வாங்க சாப்பாடு குடுங்க”




தட்டில் தாய் பரிமாற சுட சுட சாப்பாட்டை அள்ளி சாப்பிட்டவளுக்கு கண்கள் கலங்கியது. மூன்று மாதங்கள் ஆகிவிட்டது இப்படி உண்டு.

தாயின் மடியில் தலை வைத்து சோபாவில் படுத்துக்கொண்டாள். “பாப்பா என்னடா?” சுந்தரவல்லியின் குரலில் மெல்லிய கவலை கோடிட்டு இருந்தது.ஞ

“ஒன்றுமில்லைம்மா”வரும் கண்ணீரை காட்டாமல் இருப்பதற்காக அம்மா

மடியில் புதைந்து கொண்டாள். ” அங்கே கொஞ்சம் வேலைகள் அதிகம்”

” ஓ அவ்வளவுதானா நான் வேறு ஏதோ நினைத்து பயந்துவிட்டேன். கூட்டு குடும்பத்தில் வேலைகள் இருக்கத்தான் செய்யும். வீட்டில் இருக்கும் பெண்கள் வேலைக்கு பயப்படலாமாடா?” அம்மாவின் பேச்சு அஞ்சனாவினுள் இன்னமும் பாரத்தை கூட்டியது.

வீட்டில் இருக்கும் பெண் என்றால் 24 மணி நேரமும் வேலை செய்து கொண்டே இருக்க கடமைப்பட்டவளா? அம்மாவிற்கு இந்த சமையல் படிப்பை எடுத்து படித்ததில் தன் மேல் அதிர்ச்சி உண்டென்று தெரியும். அதனை இன்று நேரடியாக அனுபவிக்கிறாள்.

அதுவே உண்மை போல் சிறிது நேரத்தில் மதிய உணவுண்ண வந்த தந்தையிடம் அம்மா மென் குரலில் பேசிக் கொண்டிருந்ததை கேட்டாள். “இன்ஜினியரிங் படிக்கச் சொன்னால் மாட்டேன் என்று விட்டாள். இந்த சமைக்கிற படிப்பை பிடித்திருக்கிறது என்று தானாகவே எடுத்து படித்தாள். இப்போது சமைக்க பிடிக்கவில்லை என்றால் எப்படி? அவள் வீட்டில் சமையல் தவிர எல்லா வீட்டு வேலைக்கும் ஆட்கள் வைத்திருக்கிறார்கள். மற்ற இரண்டு பெண்களும் வக்கீல் டாக்டர் என்று வேலை பார்ப்பவர்கள்.இவள் தானே வீட்டுப் பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்? சோம்பினால் முடியுமா?”

அஞ்சனா விரத்தியான சிரிப்பொன்றை சிரித்துக் கொண்டாள். ஒரு வகையில் அம்மா சொல்வதும் சரிதானோ? ஆனால் அத்தனை பேர் வேலைகளையும் சேர்த்து பார்ப்பதற்கு அவளுக்கு தேவை கணவனின் ஆதரவு. அதுவே இல்லை எனும் போது… ஏனோ அந்த நேரத்தில் தாய் தகப்பனிடம் கணவனை பற்றி குறை சொல்ல அவளுக்கு மனம் வரவில்லை.

தங்கமான பையன் என்ற பெயரை பெற்றவர்களிடம் பெற்றிருப்பவனின் மதிப்பை இறக்க விரும்பவில்லை. தொண்டைக்குள் தைத்திருந்த நெருஞ்சி முள்ளை விழுங்க முயற்சித்தாள்.

“நன்றாக தூங்கி ரெஸ்ட் எடு பாப்பா.  மாலை உன்னை கூட்டி போய் உங்கள் வீட்டில் விடுகிறேன்” கண்டிப்பு இழையோட பேசிய அப்பாவிற்கு தலையசைத்தாள்.

இனி உன் இடம் அங்கே தான் என்று பிறந்த வீட்டில் வலியுறுத்தப்பட்ட பிறகு கணவனிடம் ஒரு வார்த்தை சொல்லாமல் வந்ததற்காக  கவலைப்பட ஆரம்பித்தாள். சும்மாவே மூஞ்சியை முசுடு போல் வைத்திருப்பான்…இப்போது என்ன சொல்வானோ? அவளது கவலை தேவையற்றது என்பது போல் அடுத்த பத்தாவது நிமிடமே வந்து நின்றான் சத்யநாதன்.

வாசலில் பைக்கை நிறுத்தியவனை ஜன்னல் வழியாக பார்த்துவிட்டு ஒரு மாதிரி “ஙே”என  இவள் விழித்துக் கொண்டிருக்க, கதவை திறந்த கற்பகவல்லி “வாங்க மாப்பிள்ளை”  பவ்யமாக வரவேற்றாள்.

“குடிக்க கொஞ்சம் தண்ணீர் கொடுங்க அத்தை” உரிமையாய் கேட்டபடி வந்தவன் இவள் அருகிலேயே சோபாவில் அமர்ந்தான்.




கற்பகவல்லி உள்ளே போகவும் “அண்ணி டின்னர் இருக்குதுன்னு சொன்னாங்களாமே? பிறகும் ஏன் கிளம்பி வந்தாய்?” கோபமாக கேட்டான்.

அதற்காகத்தான் வந்தாயா? அஞ்சனா அவனை வெறுப்பாய் பார்த்திருந்தாள்.

“இன்னைக்கு நைட்டு வீட்டிற்கு கெஸ்ட் வராங்க அத்தை. டின்னர் ரெடி பண்ணனும்…” தண்ணீருடன் வந்த கற்பகவல்லியிடம் அவன் சொல்லி முடிக்கும் முன்பே அவள் இடையிட்டாள்.

” இப்பவே கூப்பிட்டு போங்க தம்பி. இதெல்லாம் அஞ்சுவுக்கு சாதாரணம். பன் புரோட்டாவும், பனீர் குருமாவும் செய் அஞ்சு. வர்றவங்க கேட்டு வாங்கி சாப்பிடணும்”

அஞ்சனா அம்மா பேசிக் கொண்டிருக்கும்போதே எழுந்து விட்டாள் “போகலாம்”.




What’s your Reaction?
+1
41
+1
36
+1
4
+1
1
+1
2
+1
0
+1
10
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!