Serial Stories தேவதை வம்சம் நீயோ

தேவதை வம்சம் நீயோ-7

7

மளிகை சாமான் செல்ஃபில் துவரம் பருப்பு டப்பாவிற்கு பின்னால் பல்லி ஒன்றை பார்த்துவிட்ட அஞ்சனா  எல்லா டப்பாக்களையும் வெளியில் எடுத்து வைத்து அடுப்பு துணியை எடுத்து விசிறி பல்லியை வெளியேற்ற முனைந்தாள். அது அவளுக்கு போக்கு காட்டி மேலும் அந்த அலமாரிக்குள்ளேயே சுற்றியது.

“இதென்ன எல்லாவற்றையும் இப்படி பரப்பி போட்டு வைத்திருக்கிறாய்?” சுகுணா உள்ளே வந்து எரிச்சலாக கேட்டாள்.

“உள்ளே ஒரு பல்லி அத்தை”

“பிள்ளைகள் ஸ்கூலில் இருந்து வருகிற நேரத்தில் டேபிளில் இப்படி டப்பாக்களை பரப்பி வைத்திருந்தால் அவர்கள் எப்படி சாப்பிட உட்காருவார்கள்?பல்லியை பிறகு பார்க்கலாம்.டிபன் வேலை முடிந்ததா?”

“கடலைப்பருப்பு போளியும், கார வடையும் அத்தை”

“தயாராக சூடாக வைத்துக்கொள். பிள்ளைகள் வந்ததும் கொடு. சிவக்குமார் கூட டிபனுக்கு வீட்டிற்கு வருவதாக சொன்னான். அவனுக்கும் சேர்த்து தயார் பண்ணு. முதலில் இந்த டேபிளை ஒதுக்கி விடு. பிறகு பின் பக்கத்தில் இருக்கும் வேப்ப மரத்தில் இருந்து ஒரு கொத்து வேப்பிலையை பறித்துக் கொண்டு வந்து அலமாரிக்குள் போட்டால் பல்லி வராது. இதையும் நான் தான் சொல்ல வேண்டுமா?” முணுமுணுத்தபடி போனாள்.

நொந்த மனதுடன் டப்பாக்களை மீண்டும் உள்ளே அடுக்கி விட்டு டேபிளை துடைத்து பளபளப்பாக்கி விட்டு,கொதிக்கும் எண்ணெயில் வடைகளை தட்டி போடலானாள் அஞ்சனா.

சமையல் தவிர எல்லா வேலைகளுக்கும் ஆட்கள் இருக்கின்றனராம். அது சரிதான்… ஆனால் இங்கே சமையலே ஒரு கல்யாண வீட்டிற்கு செய்வது போல் அல்லவா வேளா வேளைக்கு சுடச்சுட எல்லோருக்கும் வேண்டியிருக்கிறது. ஒரு ஆள் செய்கின்ற வேலையா இதெல்லாம்? ஒரு நாள் இங்கே வந்து சமைத்து பாருங்கள் அம்மா… மனதிற்குள் தாயுடன் வாதிட்டபடி பொன்னிறத்தில் பக்குவமாக வடைகளை எடுத்து அடுக்கினாள்.

பிள்ளைகள், சிவக்குமார் கலியபெருமாள், திடுமென வந்த கனகா எல்லோருக்கும் டிபன் பறிமாறி டேபிளை துடைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தபோது “அத்தை எனக்கு ஒரே ஒரு போளி” சாஹித்யாவின் குரல் கேட்க புன்னகையோடு திரும்பினாள்.

“சாஹித்யா என்னடா இந்த பக்கம்? இந்நேரம்?”

“அம்மாவிற்கு ஸ்பெஷல் கிளாசாம், அப்பாவிற்கு மீட்டிங், என்னை பாட்டி வீட்டிற்கு போ என்றுவிட்டனர். நான் இங்கே வந்து விட்டேன்” என்றவளுக்கு தட்டில் போளியும் வடையும் வைத்து நீட்டினாள்.

இரவு டின்னருக்கான பேக்கப்புகளை செய்து விட்டு பின்பக்கம் சென்று வேப்ப மரத்தை அண்ணாந்து பார்த்தாள். எப்படி பறிப்பது? யோசித்து நின்றவள் பந்தோடு அந்தப் பக்கம் ஓடி வந்த ஆதவ்வை அழைத்தாள்.

“சித்திக்கு இந்த மரத்து மேல ஏறி கொஞ்சம் இலை பறித்து தர்றியா கண்ணா?”

சிறுவன் உற்சாகமாக சரியென்க அவன் காலை மரத்தில் பதித்து தன் மேல் தாங்கி மேலே ஏற்றி விட்டாள். கிளை வரை ஏறி விட்டவன் கைநழுவ, முழு பாரத்துடன் அவள் மேலேயே சரிய, திடுமென வந்து விழுந்த பாரம் தாங்க முடியாமல் தடுமாறினாள்.

 போச்சு இவன் கீழே விழுந்து ஏதாவது காயம் பட்டால் பழி என் மீதுதான் வரும்…. நடுங்கி பின் சரியப் போனவளின் உடலை தாங்கியது வலிய கரம் ஒன்று.

“இது என்ன விளையாட்டு?”  அவளையும் ஆதவ்வையும் ஒருசேர கைகளால் தாங்கி நின்றான் சத்தியநாதன்.

சித்தப்பாவின் தாங்கல் கிடைத்ததும் ஆதவ் உற்சாகமாக கிளைமேல் ஏறலானான்.” இவன் கீழே விழுந்து அடிபட்டுக் கொண்டானென்றால் அவன் அப்பா அம்மாவிற்கு நீதான் பதில் சொல்ல வேண்டும். யோசிக்க மாட்டாயா?” இவளை கடிந்தான்.

உன் அண்ணன் மகனுடன் மரம் ஏறி விளையாடும் ஆசை பார் எனக்கு… மனதில் நினைத்துக் கொண்டு அவன் பிடியிலிருந்து வெடுக்கென்று விலகி நின்றாள். சத்யநாதனின் முகம் சுருங்கியது.

“அளவு கடந்த காதலில் உன்னை இப்படி வெட்டவெளியில் கட்டிப்பிடித்தேன் என்று நினைத்தாயா?” சீறினான்.

“அளவைக் கடக்கும் எதுவும் எனக்குத் தேவையில்லை. இடைவெளி விட்டு தள்ளி நின்றால் சந்தோஷப்படுவேன்” அதிக இடைவெளியை உண்டு பண்ணிக்கொண்டு ஆதவ் பறித்து நீட்டிய இலைக்கொத்தை வாங்கிக் கொண்டாள்.

“ஏய் திமிராடி?” கோபத்துடன் அவள் கையை பற்ற “கையை விடுங்கள். நான் இந்த வீட்டு பெண்ணில்லை உற்சாகமாக ஊஞ்சலாடிக் கொண்டு உட்கார்ந்திருக்க, தலைக்கு மேல் வேலை கிடக்கிறது”கையை உருவிக்கொண்டு போனவளை முறைத்தபடி நின்றான் சத்யநாதன்.

ஒரு வாரத்திற்கு முன்பு அவள் அம்மா வீட்டில் இருந்து இவளை அழைத்து வந்ததிலிருந்து இப்படித்தான் இருக்கிறாள்.




கனகா வேறு எதற்கோ என்பது போல் இவனுக்கு போன் செய்து நாசூக்காக அன்றைய டின்னர் பற்றி சொல்லிவிட்டு,அஞ்சனா அவள் சொன்ன பிறகும் அம்மா வீட்டிற்கு கிளம்பி போனதையும் சொல்லி வைத்தாள்.

தன்னிடம் சொல்லாமல் கிளம்பி போனாள் என்ற கோபத்தோடு உடனே போய் அஞ்சனாவை அழைத்து வந்தவன் “வேலைகளுக்கு பயந்து அம்மா மடியில் படுத்துக்கொள்வதை விட்டுவிடு” என்று காய்ந்தான்.

பைக் சத்தத்தை மீறி கத்திக்கொண்டு வந்தவனின் தோள்களை பின்னிருந்து தட்டியவள் “ஒரு நிமிடம் வண்டியை நிப்பாட்டுங்கள்” என்றாள்.

கீழே இறங்கி அவன் முகத்தை உற்று பார்த்தாள். “உங்கள் குடும்பத்திற்கு சமைத்து போட எந்த வகையில் கடமைப்பட்டிருக்கிறேன் நான்?”

இந்த நேரடி கேள்வியில் திகைத்தான் சத்யநாதன். அவள் குற்றச்சாட்டுக்கு தலைகுனிய அவனது ஆண் திமிர் ஒத்துக் கொள்ளவில்லை. “பிறகெதற்கு உன்னை திருமணம் செய்து கொண்டேன் என்கிறாய்?” அவனது கனல் பார்வையும் கேள்வியும் அஞ்சனாவின் மனதை மரித்துப் போக வைத்தது.

“போகலாம்”என பைக்கில் ஏறிக்கொண்டவள் அன்றைய இரவு சமையலை மிக அருமையாக எல்லோரும் வியந்து பாராட்டும்படி செய்து முடித்தாள்.

“ரொம்ப முக்கியமான கிளையன்ட்மா இவர்.இவரையே சமையலில் அசத்தி விட்டாய். இனி இவருடைய கேஸ்கள் எல்லாவற்றையும் எனக்கே தருவதாக சொல்லிவிட்டு போயிருக்கிறார்” சுரேந்தர் பரவசத்தோடு சொல்ல, “ஒரு பன் பரோட்டா செய்யும் வேலையை பார்த்தாயா சுகுணா?” கலியபெருமாள் சொல்லிவிட்டு அட்டகாசமாக சிரித்தார்.

உணர்வு துடைத்த முகத்துடன் தலையசைத்து விட்டு மாடி ஏறினாள். “ஒரு க்ளையன்டை பிடித்து அவரிடம் கேஸ் வாங்குவதற்குள் நாங்கள் ஆண்கள் என்ன பாடு படுகிறோம்? நீங்களானால் வீட்டிற்குள் இருந்து கொண்டே இரண்டு ஸ்பூன் கடுகும் நான்கு ஸ்பூன் வெந்தயமும் போட்டு ஈசியாக மனிதர்கள் வசப்படுத்தி விடுகிறீர்கள். என்னடா சுரேந்தர் இனி இந்த சமையலை நாமும் படித்துக் கொள்ளலாமா?” கலியபெருமாள் கேட்க எல்லோரும் சிரித்தனர்.

மனம் கொதிக்க அறைக்குள் நுழைந்தவளை இறுக அணைத்து கொண்டான் சத்யநாதன்.

“அப்பாவிடம் பாராட்டு வாங்குவது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?  இன்று உன்னை பாராட்டியதில் எனக்கு ரொம்ப சந்தோசம்”

அவன் பேசி முடிக்கும் வரை அமைதியாக அவன் அணைப்பை சகித்துக் கொண்டிருந்தவள் “போதும் கையை எடுங்கள்” என்றாள் அழுத்தமான குரலில்.

அவளை விட்டு விலகி நின்றவனின் முகத்தில் இருள் அப்பி கிடந்தது.

“சமையல்காரி வேலையை சரியாக செய்து விட்டேன். என்னால் அந்த ஒரு வேலை மட்டும்தான் செய்ய முடியும். இந்த வேலை செய்ய முடியாது” ஒற்றை விரலால் கட்டிலை சுட்டி காட்டி விட்டு தலையணையை எடுத்து போட்டு தரையில் படுத்துக்கொண்டாள்.

“அஞ்சனா” தயக்கமாக அழைத்த சத்யநாதனுக்கு முதுகு காட்டி போர்வையை முகம் வரை இழுத்து விட்டுக் கொண்டாள்.




What’s your Reaction?
+1
55
+1
41
+1
5
+1
1
+1
2
+1
2
+1
4
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!