gowri panchangam Sprituality

சிவத்தொண்டர்கள்-57 (முருக நாயனார் )

சோழநாட்டிலே திருப்புகலூரில் அந்தணர் மரபில் தோன்றியவர் முருக நாயனார். ஞானவரம்பின் தலை நின்ற இப்பெருந்தகையார், இறைவன் திருவடிக்கீழ் ஊனமின்றி நிறைஅன்பால் உருகும் மனத்தார். நாள்தோறும் விடியற்காலையில் எழுந்து நீரில் மூழ்கிக் கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ எனப்படும் நால்வகைப் பூக்களில் உரிய பூக்களைக் கொய்து திருப்பூங்கூடைகளிற் கொணர்ந்து தனியிடத்திலிருந்து கோவை, இண்டை, தாமம், மாலை, கண்ணி, பிணையல், தொடையல் எனப் பலவகைப்பட்ட திருமாலைகளாகத் தொடுப்பார்.

தமிழ்த்துளி Tamil Drops: முருக நாயனார் புராணம்




ஆறுகாலப் பூசைக்கும் அவ்வக் காலப்பூசைக்கேற்பத் தொடுத்த அவற்றை திருப்புகலூரில் உள்ள வர்த்தமானீச்சரத் திருக்கோயிலில் உள்ள சிவபெருமானுக்குச் சாத்தி அர்ச்சனை செய்தும், திருவைந்தெழுத்து ஓதியும் வழிபடத் திருஞானசம்பந்தப் பிள்ளையார் எழுந்தருளிய போது பிள்ளையாரை எதிர்கொண்டழைத்து வந்தார். சிலநாட்கள் பிள்ளையாருடன் கூடிச் சென்று வர்த்தமானீசுவரப் பெருமானை நாளும் வழிபடும் பாக்கியம் பெற்றார்.

திருநாவுக்கரசு சுவாமிகள் புகலூருக்கு வந்த போழுது பிள்ளையாருடன் சென்று அவரை வரவெதிர்கொள்ளும் புண்ணியம் பெற்றார். அவர்தம் திருமடத்திலே ஆளுடைய அரசும் ஆளுடைய பிள்ளையாரும் சில நாள் உறைந்தனர்.

அந்நாளில் நீலநக்கர், சிறுத்தொண்டர் ஆகிய பெருமக்களும் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களோடெல்லாம் அளவளாவி மகிழ்ந்திருந்தார்.

திருஞானசம்பந்தப் பிள்ளையாருக்கு நண்பராம் பெருமைபெற்ற முருகநாயனார், திருநல்லூரிப் பெருமணத்தில் நிகழ்ந்த திருமணவிழாவிற் கலந்துகொண்டு தங்கள் பெருமானடி நீழலில் தலையாம் நிலைமை சார்வுற்றார்.




சிவபெருமானிடம் அளவற்ற பக்தி கொண்ட முருகநாயனார் திருப்புகலூர் வர்த்தமானீச்சரத் திருக்கோயிலுக்கு வரும் சிவனடியார்கள் வந்து தங்குவதற்குத் திருமடம் ஒன்றை திருப்புகலூரில் கட்டினார். (திருப்புகலூரில் வர்த்தமானேசுவரருக்கு எதிரே முருக நாயனாரின் சிலை ஒன்று இன்றும் உள்ளது. அவ்வூரில் உள்ள கல்வெட்டில் முருக நாயனார் கட்டிய திருமடத்தைக் குறிப்பிடும் வகையில் நம்பி முருகன் திருமடம் என்ற குறிப்பு காணப்படுகிறது) முருகநாயனார் கட்டிய திருமடத்திற்கு திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சிறுத்தொண்ட நாயனார், திருநீலநக்க நாயனார் ஆகிய நாயன்மார்களும் வந்து தங்கியிருந்து திருபுகலூர் சிவனாரை வழிபட்டுச் சென்றுள்ளனர்.

அனைவருடனும் அளவளாவி இறைபக்தியில் ஈடுபட்டதால் அவர்கள் முருகநாயனாரின் அன்பிற்கினிய நண்பர்களாகவும் மாறினர்.

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் சிலநாட்கள் இங்கு வந்து தங்கியிருந்த போது தினமும் வர்த்தமானீச்சரத் திருக்கோயிலுக்கு திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரை அழைத்துச் செல்லும் பாக்கியம் பெற்றார். இதனால் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் முருகநாயனாரின் சிவபக்தியைக் கண்டு அவர் மேல் மிகுந்த அன்பு கொண்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!