gowri panchangam Sprituality

சிவத்தொண்டர்கள்-54 (பெருமிழலைக்குறும்ப நாயனார்)

பெருமிழலைக் குறும்ப நாயனார் சுந்தரரை குருவாக ஏற்று மனம், மொழி, மெய்யால் வழிபட்டு சிவப்பேற்றினை அடைந்தவர்.அடியார் பக்தியின் மூலம் இறைவனை அடையலாம் என்பதற்கு அவர் ஓர் உதாரணம்.பெருமிழலைக் குறும்ப நாயனார் 63 நாயன்மார்கள் வரிசையில், இருபத்து இரண்டாவது நாயன்மாராக சுந்தரரால் போற்றப்படுகிறார்.




பெருமிழலைக் குறும்ப நாயனார் - சாய் சுந்தரம்

மிழலை நாட்டின் தலைநகர் பெருமிழலை. இங்கு குறும்பர் இனத்தில் அவதரித்தவர் பெருமிழலைக்குறும்பனார். சிறுவயது முதலே எம்பெருமானின் மீதுபக்தியும் அன்பும் கொண்டார். சிவன் பால் அன்பு கொண்ட சிவனடியார்களுக்கு திருத் தொண்டு புரிந்து அவர்கள் முன்பு எளியோராக வாழ்ந்து மகிழ்வு கொண்டார்.




பெருமிழலை குறும்பனாரின் திருத்தொண்டைக் கண்டு மகிழந்த சிவனடியார்கள் எப்போதும் அவர் இல்லத்தில் கூடினார்கள். இத்தொண்டருக்கு சுந்தர நாயனார் மீது மிகுந்த பக்தியும் அன்பும் இருந்தது. எம்பெருமானின் புகழைப் பற்றி உள்ளம் உருக பேசும்போதெல்லாம் சுந்தரமூர்த்தி நாயனாரைப் பற்றியும் பேசினார்.

சுந்தர நாயனாரை மனதில் பற்றிக்கொண்டு அவர் பால் மிகுந்த அன்பு கொண்டு வாழ்ந்த பெருமிழலைக் குறும்பனார் நாளடைவில் சுந்தர நாயனாரின் அன்புக்குரியவராக மாறினார். இறைவனின் அருளைப் பெற்ற சுந்தரமூர்த்தி நாயனாரை வணங்குவதன் மூலம் எம்பெருமானின் அருளையும் பெறலாம் என்று நம்பிக்கை கொண்டார். தூய்மையான இவரது பக்தியால் அஷ்டமாசித்திகளும் இவருக்கு கைகொடுத்தன.

சித்தத்தால் அனைத்தையும் அறியும் பேறை பெற்றார். சுந்தரமூர்த்தியாரை சித்தத்தால் கண்டு மகிழ்ந்து வாழ்ந்து வந்தார். தம்முடைய யோகசக்தியால் சுந்தரனார் கொடுங்கோளூரிலிருந்து வெள்ளையானை மீதமர்ந்து திருக்கயிலாயம் சென்று எம்பெருமானைச் சரணடைய போகிறார் என்பதை அறிந்துகொண்டார்.




தம்முடைய அன்புக்குரிய சிவபக்தர் கயிலாய மலைக்கு செல்லும் போது தாம் மட்டும் இந்த உலகில் என்ன செய்ய போகிறோம்..? அவரைப் பிரிந்து நம்மால் இங்கு இருக்க முடியுமா? கண்ணின் இமைபோல் வணங்கி வந்த அவரை பிரிவது எங்கனம் தம்மால் முடியும் என்று தனக்குள்ளே மருகினார்.

தமது அன்புக்குரிய சிவனடியாரின் பாதத்தைப் பின்பற்றி அவர் கயிலாயம் வருவதற்கு முன்னதாகவே தான் சென்றுவிட வேண்டும் என்று தன்னுடைய மனம், புத்தி, சித்தம், அகங்காரம் நான்கையும் ஒன்றுபடுத்தி தனது சிரசின் வழியாக தன் ஆன்மாவை வெளியேற்றினார். தமது சித்த முயற்சியால் சுந்தரர் கயிலாயம் செல்வதற்கு முன்னரே தம் உயிரை துறந்து கயிலையை அடைந்து எம்பெருமானின் திருவடிகளைப் பற்றினார்.

இவருக்கு ஆடிமாதம் சித்திரை நட்சத்திரத்தன்று குருபூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.





What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!