Serial Stories எனை ஆளும் நிரந்தரா

எனை ஆளும் நிரந்தரா-8

8

இன்று பேசலாமா? மீண்டும் சிவ நடராஜனிடமிருந்து மெசேஜ். முடியாது போடா என்று பதில் சொல்லும் ஆசைதான் மானசிக்கு. ஆனாலும் தேவதாஸென சுற்றிக் கொண்டிருக்கும்  அண்ணனின் வாழ்வை சரி செய்ய வேண்டுமே…

இப்போது அவர்கள் சந்தித்தது

சிவ நடராஜனின் கடலை மிட்டாய் கம்பெனியில். கம்பெனி வாசலில் கால் எடுத்து வைக்கும் போதே வெல்லப்பாகின் வாசம் நாசியை நிறைக்க இறுக்கமாய் இருந்த மானசியின் மனது சற்று இலகுவானது. உடனே அந்த இனிப்பில்  சிறு வில்லையை வாயில்  போடும் ஆவல் வந்தது.

 எப்படிப்பட்ட கஷ்டமான சூழலையும் சற்றே ஆசுவாசப்படுத்தும் சக்தி இனிப்பிற்கு உண்டு என்று பாட்டி ரோஜாமணி அடிக்கடி சொல்வதுண்டு. தொழிலிலோ வீட்டிலோ ஏதாவது பிரச்சனைகள் வந்து வீடு ஒரு மாதிரி அமைதியற்று இருக்கும் சூழலில் பாசிப்பருப்பை கடைந்து நாலு வெல்லக்கட்டி போட்டு ஒரு பாயாசம் வை என்பார் பாட்டி.

 இப்பொழுது பாயாசம் சாப்பிடும் நிலைமையிலா இருக்கிறோம் என எல்லோருக்கும் கோபம் வரும். ஆனால் வெதுவெதுப்பான சூட்டோடு பாயாசக் கிண்ணம் அவர்கள் முன் வரும்போது மற்ற அனைத்தும் மறந்து அதனை சுவைக்க மட்டுமே எண்ணம் வரும். அந்த இனிப்பு உண்ணலின் முடிவில் சற்றுமுன் அவர்கள் முன் இருந்த பிரச்சனை மறைந்துவிடும் அல்லது மாறிவிடும்.

“ஐயா பின்னாடி கீத்து கொட்டகைல இருக்கிறாரும்மா” தகவல் சொன்னார் ஒருவர். தலையசைத்து நடந்தவள் முதுகில் கேட்ட பேச்சுக் குரலுக்கு அதிர்ந்தாள்.

” அன்னைக்கு ரைஸ்மிலுக்கு வந்திருந்தாங்க,இப்போ இங்க ரெண்டு பேரும் உட்கார்ந்து  பேசுறாங்க, அப்படி என்னத்த தான் பேசுறாங்களோ?”

“ஏற்கெனவே ஒரு சோடி வெட்டிக்கிடுச்சு.இப்ப இதுங்க கை கோர்த்து திரியுது.இது எங்க போய் முடிய போகுதோ?”

இந்த குரல்கள் உண்டாக்கிய சினம் கண்களில் கொப்பளிக்க, கீற்றுக் கொட்டகையை அடைந்தபோது சிவ நடராஜன் அவளை திரும்பியும் பார்க்கவில்லை.




“ஒரு ஐந்து நிமிடம் வெயிட் பண்ணும்மா. இந்த பக்குவம் தவறிவிட்டால் எல்லாமே வீணாகிவிடும்” அவன் முன்னால் கற்சட்டியில் வைத்து மத்தினால் கடையப்பட்டுக் கொண்டிருந்த பதார்த்தத்திலிருந்து பார்வையை எடுக்காமல் பேசினான்.

மானசி ஒதுங்கி நின்று சூழலை கவனித்தாள். சர்க்கரை பாகுதான் கிளறப்பட்டுக் கொண்டிருந்தது.

“பொன்னம்மாக்கா பருப்பை போடுங்க” சிவ நடராஜன் சொல்ல, ஒரு பித்தளை உருளியில் நொறுக்கி வைத்திருந்த கடலைப்பருப்புகளை உள்ளே தட்டினாள் ஒரு பெண்.

” பேச்சிக்கா இப்போ நெய்யை ஊற்றுங்கள்”புது நெய் டின்  சீலுடைக்கப்பட்டு உள்ளே ஊற்றப்பட்டது. இரண்டு நிமிடங்களில் விரும்பத் தகுந்த மணம் அப்பகுதி முழுவதையும் நிறைத்தது.

 “போதும், பக்குவம் சரியா இருக்கும். தூக்கி தட்டி ஆற விடுங்க”

 இரண்டு பெண்களும் நெய் தடவி வைக்கப்பட்டிருந்த பித்தளை ட்ரெயில் கலவையை கொட்டி பரத்தினார்கள்.

“நாளை இதனை யு ட்யூபில் போட வேண்டும்” சொன்னபடி அவ்வளவு நேரமாக ஓரமாக இயங்கிக் கொண்டிருந்த கேமெராவை ஆப் செய்தான்.

ஆமாம்…அப்படி வீடியோ போட்டால் தானே ஊர் பெண்கள் முழுவதும் இவன் பின்னால் வருவார்கள்…வெறுப்பாய் நினைத்துக் கொண்டாள்.

” ஆறியதும் துண்டு போட்டு எடுத்துக் கொண்டு வாருங்கள் அக்கா” இவளுக்கு வருமாறு கையசைத்து விட்டு உள்ளே நடந்தான்.

” என்ன ஸ்வீட் அது?” நாவில் ஊறிய நீரை கட்டுப்படுத்திக் கொண்டு கேட்டாள்.

” ஒரு புதுவகை ஸ்வீட் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் சிறிது நேரத்தில் கொண்டு வருவார்கள்.உட்கார்” என்றவன் அவள் அமர்ந்ததும் “என்ன முடிவெடுத்தாய்?” எனக் கேட்க

” நான் என்ன முடிவு எடுப்பது? நீங்கள்தான் சொல்ல வேண்டும்”

“இங்கே பார் மானசி அவர்கள் இருவரும் மனமார விரும்பி மணம் முடித்துக் கொண்டுள்ளார்கள். இன்னமும் இந்த வயது வித்தியாசங்களை எல்லாம் பேசிக் கொண்டிருந்தால் அது நன்றாக இருக்காது”

“பேசுவதற்கே இடம் கொடுக்காத போது எதை பேச முடியும்?”

” நான் முன்பு பேசியதைத்தான் சொன்னேன். இதோ இப்போது கூட உன் வாயிலிருந்து அந்த வயது வித்தியாசம்தான் முதலில் வருகிறது. ஆக உங்கள் குடும்பத்தினரிடம் இன்னமும் அந்த நெருடல் இருந்து கொண்டேதான் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் என் அக்கா எப்படி மீண்டும் உங்கள் வீட்டிற்குள் வர முடியும்?”

“நீங்கள் சொல்வது போல் சட்டென்று ஒதுக்கக் கூடிய விஷயம் அல்ல இது.அதுவும்  பெரியவர்களுக்கு…”

“சரிதான் மானசி. ஆனால் காலத்திற்கு தக்கது போல் மாறிக்கொள்ள தானே வேண்டியிருக்கிறது பிள்ளைகள் ஒரு முடிவு எடுத்த பின்னால் பெற்றவர்கள் அதற்கு தழைந்து போவது தானே வழி? வேறென்ன செய்வது சொல்லு”




“பெரியவர்கள் தழைந்து போவது போலவே சிறியவர்களும் கொஞ்சம் விட்டுக் கொடுக்க வேண்டும்தானே?”

” யாரை விட்டுக் கொடுக்கச் சொல்கிறாய்?”

” உங்கள் அக்காவைதான்”

” அதாவது சிவஜோதியை உன் அம்மாவும் அப்பாவும் மருமகளாக வீட்டு படியேற்றியதே பெரிய விஷயம்.அதிலேயே அக்கா திருப்திப்பட்டு கொள்ள வேண்டும் என்று சொல்ல வருகிறாய்?” கண்களை இடுக்கியபடி சிவ நடராஜன் கேட்க மானசி மௌனமானாள்.

 இதுதான் இப்போது அவள் வீட்டில் அம்மா அப்பாவின் மன எண்ணம். எதிரி வீட்டு பெண், மகனை விட இரண்டு வயது மூத்தவள், ஏதோ ஒரு சூழ்நிலையில் வீட்டு மருமகள் ஆகி விட்டாள். மகனுக்காக அவளை ஏற்றுக் கொண்டுமாயிற்று. அத்தோடு அதற்கான நன்றி கடனை காட்டிக் கொண்டு வீட்டிற்குள் கிடக்க வேண்டும் என்று மணிவண்ணனும் சகுந்தலாவும் நினைத்தனர்.

 ஆனால் சிவஜோதியோ ஆளுமையான பெண். படிப்பும் பணமும் அழகும் ஒருங்கே அமையப்பெற்றவள். தலை நிமிர்ந்து என்னில் என்ன தவறு என நின்றாள். வெற்றிவேலனும் தாய் தந்தை பக்கமோ மனைவி பக்கமோ பேச முடியாமல் தவித்து நின்றான். கணவன் மனைவியின் பிரிவு எளிதாக நிகழ்ந்துவிட்டது.

“நீ படித்த இந்தக் காலத்து பெண். உங்கள் வீட்டினரின் எண்ணம் சரியா என்று நீயே சொல் மானசி”

” யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து தானே போக வேண்டும். அது வயதில் இளையவராக இருக்கும் உங்கள் அக்காவாக ஏன் இருக்கக் கூடாது என்பதுதான் என் கேள்வி”

” பெரியவர்கள் மூத்தவர்கள் சொல்வது சரி செய்வது நியாயம் போன்ற பிலாக்காணங்களை எல்லாம் இந்த காலத்து இளைஞர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. அக்கா எப்பொழுதும் சுயத்தை விரும்புபவள். நிச்சயம் உங்கள் எண்ணத்திற்கு ஒத்து வர மாட்டாள். நான் வேறொரு யோசனை சொல்கிறேன். ஆசை கொண்டு காதலித்து மணந்தவர்களிடையே ஒற்றுமை தானாக வந்துவிடும். பெரியவர்கள் கொஞ்சம் தலையிடாமல் ஒதுங்கிக் கொண்டார்களானால்….” மானசி ஒரு கையை உயர்த்தி அவன் பேச்சை நிறுத்தினாள்.

” என்ன சொல்ல வருகிறீர்கள்?”

” அதாவது கொஞ்ச நாட்கள் அவர்களை தனி குடித்தனம் வைக்கலாமென்று…”

 மானசி எழுந்து கொண்டாள்.” சாரி கணவன் மனைவியை மட்டுமல்ல, இரண்டு குடும்பங்களையும் தான் சேர்த்து வைக்க நான் எண்ணியது. இப்பொழுது நீங்கள் குடும்பத்தை பிரிக்க நினைக்கிறீர்கள். இதற்கு ஒரு நாளும் நான் சம்மதிக்க மாட்டேன் “

“அதென்ன எப்போதும் பாதியில் குடுகுடுவென்று போவது? இப்படி போய்க்கொண்டே இருந்தால் இந்த பிரச்சனைக்கு தீர்வுதான் என்ன?”

” அதுதான் தீர்வை நீங்கள் முன்பே எடுத்துக் கொண்டுதானே பேசவே வந்திருக்கிறீர்கள். தனிக்குடித்தனம் என்ற பேச்சிற்கே இடமில்லை. வேறு ஏதாவது பேசுங்கள்”

” பார் மானசி,நான் அக்காவிடமும் அப்பாவிடமும் இதை பற்றி நிறைய பேசி விட்டேன். உங்கள் குடும்பத்திற்குள்ளேயே வந்து வாழ்வது தன்னால் முடியாத காரியம் என்கிறாள் அக்கா. அப்பாவோ எந்த நம்பிக்கையில் என் எதிரி வீட்டிற்குள் என் பெண்ணை அனுப்புவேன் என்கிறார். இதற்கு முடிவு தான் என்ன? அல்லது நீ உன் தாய் தந்தையிடம் பேசி என் அப்பா அம்மாவை வந்து பார்க்கச் சொல். உங்கள் மகளை நாங்கள் சந்தோஷமாக வைத்துக் கொள்கிறோம் என்று கேட்கச் சொல்”

 சத்தம் வராமல் கைகளை மெலிதாக தட்டினாள் மானசி “ஆஹா கடைசியாக உங்கள் லட்சியத்திற்கு வந்து விட்டீர்கள். எப்படியோ என் அப்பா அம்மாவை உங்கள் வீட்டு படியேறி வந்து பேச வைக்க வேண்டும் என்பது தானே உங்கள் திட்டம்”

 சிவ நடராஜனின் கண்களில் பெரும் சலிப்பு தோன்றியது. “குதிரைக்கு கண்கள் கட்டியது போல் ஒரே போக்கில் போகாதே மானசி. எதிலும் நீக்குப் போக்கோடு யோசிக்க பழகு.  இந்த பிரச்சனைக்கு நீயேதான் ஒரு முடிவு சொல்லேன்”

“அப்பாவெல்லாம் உங்கள் வீடு தேடி வர மாட்டார். வேறு வழி சொல்லுங்கள்”

 “அந்த வழி தான் என்னவென்று நான் கேட்கிறேன்” மானசி பதில் பேசாமல் இருக்க,சிவ நடராஜன் அவளை பார்த்தபடியே அமர்ந்திருந்தான்.

முழுதாக ஐந்து நிமிடங்கள் இருவருக்கும் இடையே மௌனத்திலேயே கழிய “நான் இன்னொரு யோசனை சொல்கிறேன். இதற்காவது நீ ஒப்புக்கொள்கிறாயா என பார்க்கலாம்” பீடிகையுடன் ஆரம்பித்த சிவ நடராஜனின் குரலில் என்ன இருந்தது.

 ஏனோ மானசிக்கு மனம் படபடக்க தொடங்கியது தயக்கத்துடன் இமை உயர்த்தி எதிரே இருந்தவனை பார்க்க அவன் முகத்தில் ஏதோ உள்ளிருந்து ஒளி பாய்ந்தார் போல்  வெளிச்சம் போட்டிருந்தது. தலைக்கு மேல் புதிதாக எதுவும் லைட் எரிகிறதா அண்ணாந்து பார்த்துவிட்டு அவன் முகத்தை மீண்டும் பார்த்தாள்.

“நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா மானசி?”

காதிற்குள் கொய்ங் என ஒரு சப்தம் மட்டுமே கேட்க சுற்றிலும் இருள் சூழ்ந்து விட ஒரு ஒளிவட்டத்தின் உள்ளே தானும் அவனும் மட்டுமே அமர்ந்திருப்பதாக உணர்ந்தாள் மானசி.

அங்கிருந்து எதுவோ துரத்துவது போல் எழுந்து ஓட ஆரம்பித்தாள்.




What’s your Reaction?
+1
46
+1
18
+1
1
+1
5
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!