Serial Stories

ஊரெங்கும் பூ வாசனை-4

(4)

அதிர்ச்சியாய் இறங்கிய உணர்வுகளை அலட்சியப்படுத்த முனைந்தான் சுப்பைய்யா. அவனுடைய பேச்சுக்கு அவள் வெட்கப்படும்போதெல்லாம்  அந்த அழகை ரசித்த அவனால் இப்பொழுது அவளின் வெட்க அழகை ரசிக்க முடியவில்லை. வெம்மை பரவியது நெஞ்சுக்குள். அவளுடைய வெட்கம் கூட தனக்கானதாக இருக்க வேண்டும் என்ற தவிப்பு அவனுக்குள்.

“பொண்ணு பார்க்க வர்றாங்களா? யாரு?”

“சீமையிலேர்ந்தா என்னை பொண்ணு பார்க்க வருவாக? நான் என்ன அம்புட்டு ஆஸ்திகாரியா? ஆஸ்தி இல்லாதவளை அத்தைக்காரி கட்டிக்கிட்டாத்தான் உண்டு. என் அத்தைக்காரிதான் அவ மவனோட பொண்ணுக் கேட்டு வரா.”

“சரிதான். எப்ப வர்றாக?”

“இந்நேரம் பஸ்ஸ_ ஏறியிருப்பாக. வுந்து சேர பத்துமணியாகும். கடைசி பஸ்ஸ_க்கு வருவாக. ரா சாப்பாட்டுக்கு வருவாக. அதான் அப்பாரு மீனை வாங்கி கொடுத்துட்டுப் போனாரு. கோலா மீனுன்னா…கூடப் பொறந்தவளுக்கு உசிருன்னு வாங்கியாந்தாரு. பொறந்தவளுக்கு போட வெறும் முள்ளுதான் இருக்கும் போல இந்த நாயி பூனைக்கு மத்தியல.”




“ம்…ராத்திரி பத்துமணிக்கு பொண்ணு பார்க்க யாராவது வருவாங்களா?” அவர்கள் வராமலேயே வழியில் பேருந்து ப்ரேக் டவுன் ஆகிவிடாதா என்ற ஏக்கம் இருந்தது சுப்பைய்யாவின் முகத்தில்.

“உங்களை மாதிரி வசதி படைச்சவுக ஒரு எடத்துக்கு சல்லுன்னு போயி எறங்கிடுவீக. ஆனா…ஏழை பாழைக அப்படியா? வாக்காய் வரப்பை பார்த்துட்டு, ஆடு மாட்டை மேய்ச்சிப்பிட்டு, கோழி வாத்தை கூண்டுல அடைச்சிட்டு குளிச்சி முழுவி கிளம்பவே எருமாட்டு கொம்புல விளக்கு ஏத்தி வைக்கிற நேரமாயிடும். அண்டை அசலாயிருந்தா வந்து பார்த்துட்டு போயிடுவாக. அத்தக்காரி…பொறந்த வூட்டுக்கு பொண்ணு கேட்டு வர்றா. பார்த்துட்டு பசக்குன்னு கௌம்ப முடியுமா? வாரம் பத்து நாளு இருந்து வகைக் கொன்னா ஆக்கித் தின்னுப்புட்டுத்தான் கௌம்பி போவா.”

“அது சரி. சரியான சாப்பாட்டு ராமன் குடும்பமா இருக்கும் போலிருக்கு..ராத்திரி பத்து மணிக்கு பொண்ணு பார்க்க வர்றதுக்கு எதுக்கு நீ முழுநாளும் லீவுப் போட்டுக்கிட்டு வூட்டுக் குள்ள இருக்கே. வெயில்ல நின்னா கருத்துப் போயிட்டா பொண்ணு புடிக்கலைன்னு சொல்லிடுவாங்கன்னு பயமா…?”

“ஆமா…வர்றவுக…அப்படியே எலுமிச்சங்க கலரு. இவுக என்னை பார்த்து கருப்புன்னு சொல்ல? அக்கினி தேவனை ஆத்துல எறக்கி குளுப்பாட்டின மாதிரி இருப்பாக என் அத்தை மவன்” சொல்லிவிட்டு கலகலவென்று சிரித்தாள் மஞ்சளழகி.

அந்த சிரிப்பு அவனை அப்படியே ஒலி புகையாய் சூழந்துக் கொண்டதைப் போலிருந்தது.

“உன் மாமனை நீ வர்ணிச்சது போதும். ஒரு நாள் முழுக்க நீ ஏன் லீவு போட்டே அதை சொல்லு”

“அட…என்னது இது ? அதிகாரி கணக்கா அதட்டுறீங்க? பத்து மணிக்கு பொண்ண பார்க்க அவுக வந்தாலும் வீட்டை அப்படி அப்படியே போட்டு

வைக்க முடியுமா? வந்துப் பார்த்துட்டு என் அத்தைக்காரி…என்னா இப்படி வூட்டை வச்சிருக்கா. இவ வந்து அங்க என்னா லட்சணத்துல குடும்பம் நடத்துவான்னு காரித்துப்பிட்டா வருமா? அதான்…காலையிலேரந்து வூட்டை கூட்டிப் பெருக்கி சாணிப் போட:டு மொழுவி…சொவத்துக்கெல்லாம் வெள்ள அடிச்சு…மாவு அரைச்சு கோலம் இழுத்து…அப்பா…எம்மாம் வேலை?”

வேலை செய்தபோது ஏற்பட்ட வலிக்கு இப்பொழுது இடுப்பை நெறித்தாள்.

சுப்பைய்யாவுக்குள் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.

அவனுடைய பார்வை அந்த குடிசையை ஏளனமாகப் பார்த்தது. ஏதோ மாட மாளிகையை அழகுப்படுத்தியதைப் போல் அவள் பேசுவதும் இடுப்பை நெளித்து தான் வேலை செய்த அசதியை வெளிக்காட்டுவதும் அவனுக்குள் சிரிப்பைத்தான் வரவழைத்தது.

அவனுடைய பார்வையையும், அதன் பொருளையும் அவனுக்குள் ஓடும் எண்ணங்களின் ஏளனங்களையும் புரிந்துக் கொண்ட மஞ்சளழகி…நொடியில் முகம் சிவந்தாள்.

“என்னாய்யா… குடிசையை அப்படிப் பார்க்கறே? ஆத்தா மீனாட்சி ஆயிரங்கால் மண்டபத்துல இருந்தாலும் மவன் கணபதிக்கு ஆத்தங்கரை ஆலமரத்தடிதான்யா கதி.  ஊருக்கு பெரியவுக நீங்க மாடி வூட்ல இருக்கற மவுசு எங்க குச்சியைப் பார்த்தா எளக்காரமாத்தான்யா இருக்கும்.”

“அட…சும்மா பார்த்தாக் கூட உனக்கு பொசுக்கு பொசக்குன்னு எப்படி கோவம் வருது? உன் பங்களாவுக்கு வெள்ளையடிச்சு மொழுகினது மட்டுமா செய்தே? வேற என்ன செய்தே?”

“ம்;;….பத்து நாளு தங்கிப் போக வர்றவகளுக்கு வாய்க்கு அப்ப அப்ப கடிச்சிக்க தோணாதா? அதான்…அதிரசமும், கெட்டி உருண்டையும் செஞ்சேன்.”

“அப்படியா? அதான்…மீன் நாத்தத்தையும் மீறி பாகு காய்ச்சின வாசம் வீசுது.”




“இருக்கியா…நீ போறியா?”

“ஏன்…?”

“இருந்தா…ரெண்டு கெட்டி உருண்டைக் கொடுக்கலாம்னுதான்”

“கொண்டாயேன்”

“அப்படி உட்காருய்யா. கை பூரா ஒரே மீனு நாத்தம். அதோட பானையில கையை விட்டா கெட்டி உருண்டையெல்லாம் மீன் உருண்டையா போயிடும்” என கலகலவென சிரித்தபடி உள்ளே சென்று மீன் சட்டியை வைத்துவிட்டு வெளியே வந்தவள் தன்னையே ரசிக்கும் சுப்பையாவின் பார்வையை அறியாமல் பின் பக்க தடுப்பிற்கு சென்று கையை சோப்பு போட்டு நன்றாக கழுவினாலும் வரும்போது கையை முகர்ந்துப் பார்த்துக் கொண்டே வந்தாள்.

“எவ்வளவு சோப்பு போட்டாலும் மீன் நாத்தம் போவ மாட்டேங்குது. ச்சை…!” என முணுமுணுத்தாள்.

‘மீனும் பொண்ணும் ஒண்ணு மஞ்சளு. ஓட்டிக்கிட்டா வாசம் போகாது. நீ என் மனசுல ஒட்டிக்கிட்ட மாதிரி’ என தனக்குள் சொல்லிக் கொண்டான்.

குடிசைக்குள் நுழைந்த சில நிமிடங்களில் ஒரு தட்டில் அதிரசமும், கெட்டி உருண்டையையும் கொண்டு வந்து  அங்கிருந்த கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருந்த சுப்பையாவின் அருகில் வைத்தாள்.

கெட்டி உருண்டையில் ஒன்றை எடுத்துக் கடித்த மறு நிமிடம் பெரிதாக சிரித்தான்.

தண்ணீர் கொண்டு வர மறுபடியும் குடிசைக்குள் நுழைய முற்பட்ட மஞ்சளழகி தலையை மட்டும் திருப்பி “என்னய்யா சிரிப்பு?” என்றாள்.

“உன் நிலமையை நினைச்சாத்தான் ரொம்ப பாவமா இருக்கு?”

“என்ன…என்ன பாவத்தைக் கண்டுட்டே இப்ப?’ என குடிசைக்குள் போகாமல் திரும்பி வந்து அவனிடம் இடுப்பில் கையை வைத்துக் கொண்டு முறைத்து நின்றாள்.

“காலம் பூரா…நீ கெழவனோட குடும்பம் நடத்தப் போறியேன்னு நினைச்சா ரொம்ப பாவமா இருக்கு”

“என்னது கெழவனோட குடும்பம் நடத்தப் போறேனா? யோவ்…என் அத்தை மவனை நீ பார்த்திருக்கியா? ஆளு…மதுரை வீரன் கணக்கா இருப்பாரு? கெழவனாம்மில்ல கெழவன்”

“பல்லுஇல்லைன்னா….பயில்வானாயிருந்தா மட்டும் என்னாகப் போகுது? நீ செஞ்சிருக்கற இந்த கெட்டி உருண்டையை அவனுக்கு கொடுத்துடாதே. பாவம் பல்லெல்லாம் போயிடும். அப்பறம் நீ காலம் பூரா பொக்கை கிழவனோடதான் காலம் கழிக்கனும்”அவன் மறுபடியும் பெரிதாக சிரிக்கவும் நிலவு பளிச்சென தென்னங்கீற்றுக்கிடையில் வரவும் சரியாக இருந்தது,

“சரக்கென அவன் கையிலிருந்த கெட்டி உருண்டையைப் பிடுங்கி தட்டில் போட்டவள்…

“உனக்கு இதையெல்லாம் சாப்பிட சொல்லி கொடுத்தேன் பாரு. என்னை சொல்லனும். எந்திரிய்யா முதல்ல. கௌம்பு…” விரட்டினாள்.

“அட…கட்டிக்கப் போறவனைப் பத்தி சொன்னா என்னா கோவம் வருது. கண்ணகி கூட கோவலனை கல்யாணம் பண்ணிக்கிட்ட பின்னாடிதான் மதுரையை எரிச்சா. இவ என்னடான்னா கல்யாணம் ஆவறதுக்குள்ளயே எரிச்சுபுடுவ போலிருக்கு.”

“ஆமாய்யா…இன்னும் சித்த நாழி நீ இங்க இருந்தா செவன் நெத்திக் கண்ணை தொறந்து எரிச்ச மாதிரி உன்னை எரிச்சுப்புடுவேன். அப்பறம் நீ சாம்பலாத்தான் போவே.”

ஒன்றை ஒன்று வெட்டிக் கொள்ளும் எதிரிகளின் பட்டாக்கத்தியாய் மின்னும் அவளுடைய கண்ணொளியில் நிலவொளி மங்கியது.

“இப்ப மட்டும் என்ன நான்…சாம்பலாத்தான் இருக்கேன். உன் ரெண்டு கண்ணோட சக்தியே என்னை சுட்டெரிக்கும் போது வேண்டாம் தாயே உன்னோட மூணாவது கண்ணையும் திறந்திடாதே.”

“சரி…முதல்ல கிளம்பு.

“சரி கிளம்பறேன். அந்த ரெண்டு கெட்டி உருண்டையையும் கொடேன்.”

“அதான் கடிக்க முடியலைன்னு சொன்னேயில்ல? அப்பறம் எதுக்காம்?”

“ம்…இருட்டி வேற போயிடுச்சா. பேச்சாயி கோவில் வழியா போவனும். அங்க நிறைய நாய்ங்க கெடக்கு. கொலைச்சுக்கிட்டு கடிக்க வரும் .இந்த கெட்டி உருண்டை கையில இருந்தா…அந்நேரத்துக்கு கல்லை தேடவேணாம் பாரு…அதான்”

“கொழுப்புய்யா உனக்கு? கீழே விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டலை. ருசியாயிருக்குன்னா…கம்முன்னு தின்னுப்புட்டு போவலாமில்ல. இப்படியா பேசுவே?”

“கோவிச்சுக்காத புள்ள. சும்மாதான் சொன்னேன். நீ செஞ்சா ருசியா இல்லாமப் போவுமா? குடு புள்ள…அப்படியே தின்னுக்கிட்டே போறேன்.”

“தர்றேன். ஆனா ஒரு கண்டிசன்”

“என்ன கண்டிசன் சொல்லு..?”

“என் அத்தை மவன் ஊருக்குள்ள பத்து நாளு தங்கும். அங்க இங்க கடைத்தெருவுல நீ பார்த்தியன்னா என்னைப்பத்தி சொல்லனும்”

“என்னா சொல்லனும்? கெட்டி உருண்டை நல்லா சுடுவா, கமர்க்கட்டு நல்லா சுடுவான்னா…”

“போய்யா…உனக்கு எப்பவும் கிண்டல்தான். மஞ்சளு நல்ல பொண்ணு. அடக்கமான பொண்ணு. பண்பான பொண்ணு…அப்படின்னு..”

“அடக்கமான பொண்ணு, பண்பான பொண்ணுன்னு சொல்லனும் அப்படித்தானே? எந்த அடக்கத்தை சொல்ல? முந்தா நாளு…நெஞ்சு வரைக்கும் தூக்கிக் கட்டுன பாவாடை அவுந்துடும்னு கூட பயம் இல்லாம ஆலம் விழுதைப் புடுச்சுக்கிட்டு ஆம்பளைப் பயலுவளுக்கு சரிசமமா ஆத்துல குதிச்சியே அந்த அடக்கத்தையா?”

“யோவ்…”




“போன வாரம் என் வூட்டு மாந்தோப்புல பூந்து மரத்துமேல கொரங்கு மாதிரி ஏறி மாங்காயை திருடித்தின்னியே அந்த பண்பையா? இது ரெண்டு சொன்னா போதுமா? இல்ல…இன்னும் இந்த ஒரு வருசம் பூரா என்னன்ன நடந்ததுன்னு யோசிச்சு சொல்லனுமா?”

“யோவ்… நீ நல்லாயிருப்பியா? நான் நட்ட நாத்து விளைஞ்சி நின்னதைத்தானே நீ அறுத்துட்டுப் போயி ஆக்கித்தின்னே…அந்த நன்றிக் கூட இல்லாம இப்படி பேசறியேய்யா…”

“அடிப்பாவி..நான் வந்தப்ப என்னமோ நீங்க ஊத்தற கஞ்சியைத்தானே குடிக்கிறோம்னு பத்து தலைமுறையா நன்றி உடையவ மாதிரி பேசினே…இப்ப என்னமோ நீ நட்ட நாத்தை அறுவடை செஞ்சிதான் நான் வயிறு வளர்க்கறேன்னு சொல்றே,,..”

“பின்னே என்னய்யா? நீ இப்படி பேசினா எப்படி? பொண்ணு பார்க்க வர்ற என் அத்தை மவன்கிட்ட என்னைப் பத்தி பெருமையா பேசுன்னா தாறுமாறா சொல்லுவேன்னு சொல்றே? அஞ்சாறு பவுனுப் போட்டு அதுக்கேத்தமாதிரி சீரு செஞ்சு கட்டிக் கொடுக்க என் அப்பன் என்ன காசை மூட்டை கட்டியா வச்சிருக்கு? என்னை மாதிரி அஞ்சு காசு இல்லாதவளுக்கெல்லாம் அத்தை மவனும் மாமன் மவனும் மனசு வச்சாத்தான் தாலி ஏறும். அவன் வேணாம்னு சொல்லிட்டா என்னை யாருய்யா கட்டுவா?” அவள் லேசாக கண்கள் கலங்கிவிட அவளை நேருக்கு நேர் பார்த்தவன்,

“ஏன்…நான் கட்டிக்கிறேன்” என்றான்.




What’s your Reaction?
+1
18
+1
9
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!