Serial Stories

ஊரெங்கும் பூ வாசனை-3

(3)

ஜானகி அதிர்ச்சியாய் அதை கையிலெடுத்துப் பார்த்தாள்.

பளபளக்கும் மாத்திரையின் கவர். அதைப் பார்த்தவுடனேயே தெரிந்தது. அவளுக்கு பழக்கப்பட்ட மாத்திரை.

துணுக்குற்றவள் அதை திருப்பி அதன் பெயரைப் படித்தாள்.

சந்தேகமே இல்லை. அது அவள் உபயோகிக்கும் மாத்திரை.

தூக்க மாத்திரை!

வயதான காரணத்தால் சில சமயங்களில் அவளுக்கு இரவில் நெடுநேரம் வரை உறக்கம் வருவதில்லை. அந்த மாதிரி சமயங்களில் போட்டுக் கொள்ள சொல்லி மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரை.

அவள் கடைசியாக உபயோகித்த பின் இரண்டு மாத்திரைகள் மட்டுமே எஞ்சியிருந்தது.

இப்பொழுது அந்த முழு ஸ்ட்ரிப்புமே காலியாக இருந்தது.

அப்படியானால் இதில் இருந்த இரண்டு மாத்திரைகளையும் மௌரியன் சாப்பிட்டிருக்கிறானா?

பெரும் அதிர்ச்சி நெஞ்சைத் தாக்கியது. அதனால்தான் இப்படி கிடந்து தூங்கினா? உடம்பு லேசாக நடுங்கியது.

எப்படி…எப்படி இது இவன் கையில் கிடைத்தது,

அது ஒன்றும் அத்தனை ஆச்சரியம் அல்லவே.கூடத்தில் தொலைக் காட்சி இருக்கும் இடத்திற்கு பக்கத்தில் இருக்கும் அலமாரியில்தான் அவளுடைய சர்க்கரை மாத்திரைகள் ஒரு டப்பாவில் இருக்கும். அதில்தான் இந்த மாத்திரையும் இருந்தது.




அதுதானா? இல்லை அதே மாத்திரையை இவன் கடையில் வாங்கினானா?

மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இந்த மாத்திரையை தர மாட்டார்களே.

உறுதிப் படுத்திக் கொள்ள அவசரமாக அந்த அறையை விட்டு வெளியே வந்தாள்.கீழே வந்தவள் தன் மாத்திரை டப்பா இருக்கும் ஷெல்ஃபை நோக்கி சென்றாள்.

அவசரமாக அந்த டப்பாவை எடுத்து திறந்தாள். அதில் அவளுக்கான சர்க்கரை மாத்திரைகள், கொலஸ்ட்ரால் மாத்திரைகள் எல்லாம் அப்படியே இருந்தன.

ஆனால்….

அந்த தூக்க மாத்திரையை காணவில்லை.

அப்படியானால்…அப்படியானால்… என் மருந்து டப்பாவிலிருந்து தூக்க மாத்திரையை எடுத்து சாப்பிட்டிருக்கிறான்.

ஏன்? ஏன்…தூக்க மாத்திரை சாப்பிட வேண்டும்?

படுக்கைக்கு போனதுமே அடுத்த நிமிடமே உறங்கிவிடும் அவன் ஏன் தூக்க மாத்திரை சாப்பிட வேண்டும்?

என்னிடம் எதுவும் சொல்லாமல் என் மருந்து டப்பாவிலிருந்து மாத்திரையை எடுத்து…

ஏன்…?

நேற்று இரவு நடந்ததை நினைத்துப் பார்த்தாள்.

இரவு இவளும் நமச்சிவாயமும் சாப்பிட்டுவிட்டு சற்று நேரம் தொலைக்காட்சிப் பார்த்துவிட்டு உறங்க வந்தபோது மணி பதினொன்று.

இன்னும் மௌரியன் வரவில்லை.

கல்லூரியில் ஆண்டு விழா என்று காலையில் கூறிவிட்டு விழாவில் தன் டான்ஸ் ப்ரோக்ராம் இருப்பதாகவும், வர லேட்டாகும் எனக்காக காத்திருக்க வேண்டாம்,சாப்பிட்டுவிட்டுப் படுத்துக்கங்க என்று கூறிவிட்டு சென்றான்.

பத்து நாட்களாகவே மாடியில் தன் அறையில் வெகுநேரம் வரை டான்ஸ் ஆடி பயிற்சி செய்துக் கொண்டிருப்பான்.

இசையின் அதிர்வு கீழ் பகுதியை வந்தடைந்து அவளை தலை கிறுகிறுக்க வைக்கும். மேலே சென்று கத்திவிட்டு வருவாள்.

ஆனால் கத்தியதற்கு எந்த பலனும் இருக்காது.

‘என்னைக்குத்தான் இந்த ஆண்டு விழா வருமோ? இவன் ஆடி முடிப்பானோ?’ என திட்டிவிட்டு வருவாள்.

காலையில் அவன் போகும் போது கூட பெஸ்ட் ஆஃப் லக் என்று வாழ்த்திவிட்டு…

“அப்பாடா இன்னைக்கு நைட்லேர்ந்து நிம்மதியா தூங்கலாம்” என சொல்லி சிரித்தாள்.

அதனால் அவனுக்காக காத்திருக்காமல் கணவனும் மனைவியும் சாப்பிட்டுவிட்டுப் போய் படுத்துவிட்டனர்.

அவன் எத்தனை மணிக்கு வந்தான் என்றுக் கூட அவளுக்குத் தெரியாது.

அவனிடமும் ஒரு சாவி இருக்கிறது. அதை உபயோகித்து அவன் வந்திருப்பான். வந்தவன் நேராக சென்று அசதியில் படுக்கையில் விழுந்து உறங்கியிருப்பான் என அவள் நினைத்தாள்.

ஆனால்….அவன் உறங்கவில்லை. உறக்கம் வரவில்லை. ஏன்?

சிலசமயம் சனிக்கிழமைகளில் அவன் இப்படித்தான் உறக்கம் வரவில்லை என்றால்  இரவு முழுவதும் ஏதாவது படித்துக் கொண்டோ கம்யூட்டரில் ஏதாவது செய்துக் கொண்டோ விடிய விடிய உட்கார்ந்திருப்பான். மறுநாள் ஞாயிற்றுக் கிழமைதானே…என மறுநாள் பூராவும் கிடந்து உறங்குவான்.

அப்படி தூக்கம் வராவிட்டால் படித்துக் கொண்டும் கம்யூட்டரில் வேலை செய்துக் கொண்டும் இருக்கலாமே.

தூக்க மாத்திரை போட்டு தூங்க வேண்டிய அவசியம் என்ன? அதுவும் இரண்டு மாத்திரை.

அதில் இரண்டு மாத்திரை மட்டும் இருந்ததால் இரண்டு மாத்திரை போட்டுக் கொண்டானா?

ஒரு வேலை மூன்று நான்கு ஐந்து….முழு ஸ்ட்ரிப்பும் இருந்திருந்தால்… அத்தனையையும் சாப்பிட்டிருப்பானா? கடவுளே….

நினைக்கும்போதே ஈரக்குலையில் ஈட்டி சொருகியதைப் போலிருந்தது.

அப்படியே அங்கிருந்த சோபாவில்  அமர்ந்துவிட்டாள்.?

தூக்கம் வராத அளவிற்கு அவனுக்கு என்னாச்சு?

அப்படியே தூக்கம் வரவில்லை என்றாலும் தூக்கமாத்திரை சாப்பிடும் பழக்கம் எப்படி மனதில் தோன்றியது.

ஏன்…?

நிறைய மாத்திரைகள் இருந்து எல்லாவற்றையும் சாப்பிட்டிருந்தால் இந்நேரம் அவன் கதி என்ன?

இதையெல்லாம் யோசிக்க முடியாத அளவிற்கு அவனுக்கு என்ன பிரச்சனை?

ஏதேதோ யோசித்துக் கொண்டே அப்படியே அமரந்திருந்ததால் நேரம் போனதே தெரியவில்லை.

திடீரென சுயநினைவு வந்தபோதுதான் தோன்றியது தான் அப்படி அங்கே அமர்ந்து அரை மணி நேரம் ஆகியிருக்கிறது.

‘குளித்துவிட்டு கீழே சாப்பிட வா’ என்று மௌரியனை சொல்லிவிட்டு வந்தது ஞாபகம் வர அரைமணி நேரம் ஆகியும் அவன் வராததால் பக்கென இருந்தது.

தூக்க கலக்கத்தில் பாத்ரூமில் விழுந்து கிழுந்து வைத்திருக்கிறானா?

உடலெங்கும் மின்சார ஒயரின் அதிர்வு.

எழுந்து மாடிப்படிகளில் கிட்டத்தட்ட ஓடினாள்.

மாடிக்கு மௌரியன் அறைக்குள் நுழைந்தவள் அதிர்ந்தாள்.




What’s your Reaction?
+1
15
+1
9
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!