Serial Stories எனை ஆளும் நிரந்தரா

எனை ஆளும் நிரந்தரா-7

7

“எவ்வளவு தைரியம் இருந்தால் எனக்கு மெசேஜ் அனுப்புவீர்கள்? அப்படி நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு வந்தே தீர வேண்டும் என்று எனக்கு என்ன தலையெழுத்து?” மானசி சிவ நடராஜனிடம் குதித்துக் கொண்டிருந்தது பிற்பகல் மூன்று முப்பது மணி அளவில்,அவனது ரைஸ்மில்லில்.

“நான் ஏன் உங்களை சந்திக்க வேண்டும்? எனக்கு எந்த தேவையும் இல்லை” அவனுக்கு பதில் செய்தி அனுப்பிய போதே தடக் தடகென்ற தவிப்புதான்.

 சரிதான் என்று விட்டானானால்… அவளுக்கு அவனை சந்தித்தாக வேண்டிய கட்டாயமும் இருக்கிறதே!

” ஒரு சிறு விபரம். உனக்கு பிடிக்கவில்லை என்றால் விலகிக் கொள்ளலாம்” கொஞ்சம் பணிவான பதில் செய்தியில் ஓரளவு திருப்தி பட்டு எங்கே வரவேண்டும் என விவரம் கேட்டாள்.

 அதிகாலை என்றால் ஆயில் மில்லாம். முன்மதியம் என்றால் மில்லட்ஸ் ப்ராடக்ட்ஸிற்காம், பின் மதியம் ரைஸ் மில், மாலை பேக்கேஜிங் குடோன், இரவு நகருக்குள் இருக்கும் ஆபீஸ் ரூம் என அவன் தனது அன்றாட அட்டவணைகளை பகிர, பெரிய தொழிலதிபர்னு பெருமை பீத்திக்க நினைக்கிறான் என்றெண்ணியவளுக்கு பள்ளியில் ரவுடிப்பயல் என்ற பெயர் வாங்கியவன் இன்று ஊருக்குள் பெரிய தொழிலதிபன் என்ற எள்ளலில் உதடு பிதுங்கிற்று.

வீட்டில் அனைவரும் உறங்கும் இந்த பின் மதிய வேளையை தேர்ந்தெடுத்து அவனுடைய ரைஸ் மில்லுக்கு வந்தபோது கோதுமை, அரிசி தவிர ராகி, சாமை போன்ற சிறு தானியங்களும் அரைக்கப்பட்டு மாவாக  பாக்கெட் போடப்படுவதை பார்த்தவளுக்கு அந்த பெரிய பெரிய இயந்திரங்களுக்கும் வேலை நடக்கும் வேகத்திற்கும் பிரமிப்புதான்.

 இது போல் ஒரு தொழிலை நாமும் ஆரம்பித்தால் எப்படி இருக்கும்! என்ற எண்ணம் ஓடும் போதே,” என்ன இதே போல் பிசினஸை நாமும் ஆரம்பித்தால் என்னன்னு தோணுதா?” கேட்டபடி வந்தான் சிவ நடராஜன்.

திருதிருத்தவளை பார்த்தவன் பொங்கிய சிரிப்பை உதடுகளுக்குள் அடக்கிக் கொண்டு “உட்கார்” என்று எதிர் நாற்காலியை காட்டிவிட்டு முதலாளிக்கான ரோலிங் சேரில் கம்பீரமாக அமர்ந்தான். இதோ இந்த ஆபீஸ் செட்டப்களின் நடுவே இது போல் ஒரு உரிமையாளன் நாற்காலியில் அமர்ந்திருப்பவன் மிக கண்ணியவானாக எல்லோர் கண்களுக்கும் படுவான். ஆனால்  மானசிக்கோ காதல் கடிதத்தை நோட்டுக்குள் மறைத்து அடுத்தொரு பெண்ணின் பேக்கிற்குள் பதுக்கிய விடலை ராஜனாகவே இப்போதும் நினைவில் தங்கி இருந்தானவன்.

” ரொம்பவும் மூளைக்கு வேலை கொடுக்காதே, தொழில் குடும்பத்திலேயே பிறந்து வளர்ந்த ஆணோ பெண்ணோ யாருக்கும் ஒரு நல்ல தொழிலை கண் முன் பார்க்கும் போது இதையே நாமும் செய்தால் என்ன என்ற எண்ணம் வருவது இயற்கைதான்” என்றான்.




 இவனென்ன இவனுடைய இந்த தொழிலில் மயங்கிப் போய் கிடக்கிறேன் என்று நினைத்தானோ?  அவள் என்னை ஏன் நீ பார்க்க வேண்டும் என்று அவனுடன் சண்டையிட தயாரானாள்.

“ஓ உனக்கு என்னை பார்க்கும் எண்ணம் இல்லையா மானு?”புருவம் உயர்த்தி அவன் கேட்க மானசியின் இதயம் முரசறைய துவங்கியது.

“நிச்சயமாக இல்லவே இல்லையா?” அவன் மேலும் அழுத்த “என்னை இங்கே வர சொன்னது நீங்கள்தான்” சட்டென எழுந்து ஓடிவிட துடித்த கால்களை அதட்டி அடக்கினாள்.

” என்னைப் பற்றி ஊருக்குள் ஆங்காங்கே விசாரிப்பதை அறிந்தேன். நம் மானுதானே என்ன விஷயம் என்று கேட்கலாம்னுதான் மெசேஜ் அனுப்பினேன். பாரேன் உன் போன் நம்பர் கூட என்னிடம் கிடையாது. அதனால் தான் இன்ஸ்டாவில்  அனுப்ப வேண்டியதாகி விட்டது” உலக மகா சோகம் காட்டினான்.

 இவனிடம் போன் நம்பரை கொடுத்துவிட்டு இவன் பின்னால் சுற்றிக் கொண்டிருப்பேன் என்று நினைத்தான் போல மனதிற்குள் எகிறியவள் “கண்டவர்களுக்கும் என் நம்பர் கொடுக்க மாட்டேன்” என்றாள் கறாராக.

“கண்ணால் கண்டவர்களுக்கெல்லாம் போன் நம்பர்  தரச் சொல்வேனா மானு?” குழைந்தான்.

“இங்கே பாருங்கள் நீங்கள் இப்படியே தான் பேசப் போகிறீர்கள் என்றால் நான் போகிறேன்” எழுந்து செல்வது போல் ஒரு அசைவை உடலில் கொண்டு வந்தாள்.

அவன் கைகளை கட்டிக் கொண்டு இவள் புறப்பாட்டை எதிர் பார்த்திருக்க,பற்களை கடித்தபடி சேரில் அழுந்திக் கொண்டு”அழைத்த விசயத்தை சொல்லுங்கள்” என்றாள்.

“நான் எந்நேரம் எங்கே இருப்பேன் என்று ஆங்காங்கே விசாரித்தாய் போல, என் காதிற்கு செய்தி வந்தது. என்னிடம் ஏதோ தனியாக பேச நினைக்கிறாய் என்றுதான்…” முடிக்கும் முன் அவன் மீசை லேசாக துடிக்க உள்ளார்ந்த அவன் சிரிப்பை உணர்ந்தவளுள் மெலிதாய் அவமானம். இந்த அளவிற்கா இவனை விசாரித்துக் கொண்டிருந்தேன்?

“நான் போகிறேன் போங்க” கதவிற்கு பின்னால் தான் ஒளிவேன்,கண்டுபிடிங்க என்று அன்னையிடம் தெரியப்படுத்திவிட்டு  ஓடும் குழந்தையாக முதுகு காட்டினாள்.

“உன் அண்ணனை  பற்றி பேச வேண்டாமா?”  திக்கென ஒரு விழிப்பு மானசியினுள். படக்கென மீண்டும் அமர்ந்து கொண்டவள் “உங்கள் அக்காவை பற்றியும் தான் பேச வேண்டும்” என்று திருப்பிக் கொடுத்தாள்.

 புருவம் உயர்த்தி உதடுகள் பிதுக்கினான்.”அடேயப்பா நம் மானுவுக்கு பதிலுக்கு பதில் திருப்ப தெரிகிறதே”

 அதென்ன வார்த்தைக்கு வார்த்தை நம் மானு. எரிந்து விழுந்தாள். “முழுப் பெயர் சொல்லிக் கூப்பிடுங்கள்”

“சரிங்க மானசி மேடம்” அனாவசிய பணிவு காட்டி “இப்போது ஓகேவா?” கண்ணோரங்கள் சுருங்க பளிச்சென சிரித்தான்.

 சிரித்து தொலையாதேடா அவன் முகத்தில் இருந்து பார்வையை தூரத்தில் கத்திக் கொண்டிருந்த மெஷின்களுக்கு திருப்பிக் கொண்டாள்.இப்படித்தான் அவனது வீடியோக்களிலெல்லாம் சிரித்து வைக்கிறான்.அதை பார்க்கவே கையில் போனோடு கும்பலாக சுத்துகிறாள்கள்.

“அண்ணனின் விஷயமாகத்தான் உங்களுடன் பேச எண்ணினேன்”

” இல்லாமல் என்னுடன் காதல் பேச நீ தேடி திரிகிறாய் என்று நானும் தவறாக நினைக்கவில்லை”

 காதுகளை தேய்த்து விட்டுக் கொண்டாள். இப்போது இவன் என்ன சொன்னான் காதலா? சந்தேகத்துடன் அவனைப் பார்க்க இதழ்களை இறுக்க மூடிக்கொண்டு அவளை குறுகுறுவென பார்த்திருந்தான்.

 அழுந்த இறுகியிருந்த அவன் உதடுகளை முறைத்து விட்டு

“உங்கள் அக்காவுடன் நீங்கள் பேச வேண்டும்” என்றாள்.

“என்ன பேச வேண்டும்?” கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தான். அவனது  அந்த இலகுபாவனை ஆத்திரமூட்டியது.




” எத்தனை நாட்களுக்குத்தான் பிறந்த வீட்டிலேயே உட்கார்ந்து கழுத்தறுக்கப் போகிறாய்? காலாகாலத்தில் உன் இடம் பார்த்து போகவில்லையா என்று கேளுங்களேன்” என்றாள் ஒரு வகை குரூரத்தோடு.

சை  உயரே தூக்கிய இரு கைகளால் டப்பென என்று மேஜையில் தட்டினான் “கொஞ்சமாவது படித்தவள் போல் மெச்சூரிட்டியுடன் பேசு.திருமணம் முடித்துக் கொடுத்தவுடன் ஒரு பெண்ணை பிறந்த வீட்டை விட்டு விரட்டி விட வேண்டும் என்று யார் சொன்னது? எங்கள் அப்பாவிற்கு நானும் என் அக்காவும் இரண்டு பிள்ளைகள். சொத்தில் எங்கள் இருவருக்குமே சரி பாதி பங்கு உண்டு. என்னை போலவே அக்காவும் தொழிலை கவனித்து வருகிறாள். அவளிடத்தில் அவள் உரிமையோடு உட்கார்ந்திருக்கிறாள். எனக்கு உரிமையான இடம் என்று அவளது புருஷன் வீட்டை அவள்தான் மனதிற்குள் நினைக்க வேண்டுமே தவிர நான் சொல்ல முடியாது”

 இவ்வளவு நேரமாக இருந்த விளையாட்டுத்தனம் முற்றும் மறைந்து போய் அவனது வழக்கமான கடமுட குரலில்

சிவ நடராஜன் பேச மானசி தன் தவறுணர்ந்து நாக்கை கடித்துக் கொண்டாள். “சாரி”உடனே உணர்ந்து மன்னிப்பும் கேட்டுக் கொண்டாள்.

 சட்டென மிருதுவானது அவன் முகம் “சரி விடு, இன்னமும் சிறு பெண் தான் நீ” சட்டென இடுப்பில் தூக்கி வைத்துக் கொள்ளும் முகபாவத்திற்கு அவன் மாற மானசிக்கு மூச்சு திணறியது.

“உங்கள் அக்காவிடம் வெற்றி அண்ணனின் நல்ல விஷயங்களை பேசலாமே?”

” அப்படி எந்த நல்ல விஷயத்தைம்மா நான் பேச?” கேலி வழிந்தோடிய அவன் குரலில் நொந்தாள்.

” உங்களுடன் பேசுவதில் எதுவும் பயன் இருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை.கிளம்பலாமென நினைக்கிறேன்”

“உட்கார் மானசி,பொறுமையே கிடையாதா உனக்கு? பேச ஆரம்பித்து விட்டோமென்றால் எல்லாவற்றையும் தான் பேச வேண்டும். மணம் முடித்து உங்கள் வீட்டிற்கு வாழ வந்த பெண்ணை முறையாக நடத்தி இருந்தால் அவள் ஏன் திரும்ப எங்கள் வீட்டிற்கு வந்திருக்க போகிறாள்?”

 மானசி இந்த கடினமான கேள்வியை கஷ்டப்பட்டு ஜீரணித்தாள்.” நான் அப்போது சென்னையில் கடைசி வருட படிப்பில் இருந்தேன். இங்கே நடந்தது எனக்கு அவ்வளவாக தெரியாது” சால்ஜாப்பு சொல்லி முடித்த பிறகே ஐயோ எவ்வளவு பலவீனமான வாதாடல் என்று அவள் மனதிற்கே பட்டது.

“உனக்கு ஏன்மா தெரிய வேண்டும்? உன் அண்ணனுக்கு அல்லவா தெரிய வேண்டும்? அவன்தானே இதற்கான பொறுப்பேற்க வேண்டியவன்”

 “அண்ணன் தான் இப்பொழுது ரொம்பவே இறங்கி வந்து விட்டதாக சொல்கிறார். காலில் விழுந்து மன்னிப்பு கேட்க கூட தயார் என்று சொல்லிவிட்டாராமே” அண்ணனின் பேச்சை சொல்லும்போதே சிறு அவமானத்தில் அவள் மனம் நனைந்தது.

” கணவன் மனைவிக்குள் காலில் விழுவதெல்லாம் பெரிய விஷயம் கிடையாது மானும்மா. அவர்களுக்குள் என்ன செய்தாலும் அதில் ஒரு புரிதல் வேண்டும்”

“ஏன் உங்கள் அக்காவிற்கும் அந்த புரிதல் தேவை தானே?”

சிவ நடராஜன் இரு கைகளையும் உயர்த்தினான். “நமக்குள் சண்டை வேண்டாம் மானு. பிரச்சனையை நிதானமாக பேசி தீர்க்க வேண்டியது உன் அண்ணனும் என் அக்காவும். அவர்களை நாம் கொஞ்சம் தனியாக பேச விட்டோமானால் சரி வரும் என்று நினைக்கிறேன்”

” அப்படி பேசத்தான் அண்ணா பலமுறை அழைத்து விட்டாராம்

 ஆனால் உங்கள் அக்கா பேசுவதற்கு கூட தயாராக இல்லையாம்”

“யாராவது ஒருவர் கொஞ்சம் இறங்கித் தான் செல்ல வேண்டும். உன் அண்ணன் மீது உங்கள் வீட்டில் அம்மா அப்பாவை மையப்படுத்தி அக்கா பெரிய குற்றச்சாட்டினை வைப்பதால், உன் அண்ணனே இறங்கிப் போய் விடுவதே சரிவரும் என்று நான் நினைக்கிறேன்”

“என் அப்பா அம்மா மீது என்ன குற்றச்சாட்டு வைக்கிறார்கள்? நான் கேட்கிறேன் உங்கள் அம்மா அப்பா, நீங்கள் இதுபோல் உங்களை விட இரண்டு வயது மூத்த பெண்ணை திருமணம் முடித்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தால்,  சந்தோஷத்தோடு ஆரத்தி எடுத்து வரவேற்பார்களா? அதுவும் அந்த பெண் அவர்கள் எதிரி குடும்பத்து பெண்ணாக இருக்கும் போது…?”

 மானசி படபடவென பேச சிவ நடராஜனின் கண்கள் கோபத்தில் சிவந்தது.இரண்டு கைகளாலும் தலையைத் தாங்கி கவிழ்ந்து கொண்டவன் “மானசி இங்கிருந்து போய் விடு” பற்களை  நறநறக்கும் ஓசை கேட்க மானசி வேகமாக எழுந்து வெளியே வந்து விட்டாள்.

முட்டாள் அண்ணன்… பல தடவை போல் இப்பொழுதும் அண்ணனை திட்டினாள். அதெப்படி அவனைவிட வயதில் இரண்டு வயது மூத்த பெண்ணிடம் இவனால் மனதை விட முடிந்தது?

 பெங்களூருக்கு படிக்கச் சென்ற வெற்றிவேலன் அங்கே அவன் சேர்ந்த யுனிவர்சிட்டியில் படித்துக் கொண்டிருந்த சிவஜோதி,ஒரே ஊர்க்காரன் என்ற பாசத்தோடு படிப்பு மற்றும் பல விஷயங்களில் அவனுக்கு உதவ, நட்பில் ஆரம்பித்து காதலில் முடிந்தது அவர்கள் பழக்கம்.

 இரு குடும்பத்தினரின் ஒப்புதலும் கிடைக்காது என்று தெரிந்து படிப்பு முடிந்ததும் இருவரும் அங்கேயே மணம் முடித்துக் கொண்டுதான் ஊருக்கே திரும்பி வந்தனர்.

இந்த சம்பவங்கள் எல்லாம் மானசிக்கு போன் மூலமாக தெரிய வந்ததுதான். செமஸ்டர் பரிட்சையில் இருந்த அவள் அவசரமாக பரிட்சை முடித்துவிட்டு திரும்பி வந்தபோது வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் ஆளுக்கு ஒரு சுவற்றை தேர்ந்தெடுத்துக் கொண்டு அதனுடன் மட்டுமே பேசிக் கொண்டிருந்தனர்.




 அண்ணனை விட  இரண்டு வயது மூத்த அண்ணி என்ற விஷயத்தை மானசியாலேயே ஒப்புக்கொள்ள முடியாத போது மணிவண்ணன் சகுந்தலா நிலையை சொல்லவே வேண்டாம். நான்கே நாட்கள் வீட்டில் இருந்தவள் மீண்டும் ஹாஸ்டலுக்கு திரும்பி விட்டாள்.

 பிறகு அடுத்த செமஸ்டர் விடுமுறைக்கு வீட்டிற்கு வந்தபோது சிவஜோதி அங்கே இல்லை. கோபித்துக் கொண்டு போய் விட்டதாக அவளுக்கு தெரிவிக்கப்பட்டது.

இயல்புக்கு மாறான ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுத்த தவறு சிவஜோதி வெற்றிவேலனுடையது. இதில் என் மீது இவன் எரிந்து விழுவானேன்! மானசியின் இதயம் சிவ நடராஜனிடம் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது.




What’s your Reaction?
+1
45
+1
15
+1
1
+1
0
+1
2
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!