Serial Stories நீ தந்த மாங்கல்யம்

நீ தந்த மாங்கல்யம்-15

(15 )

சரம்சரமாக தொங்கிய மல்லிகை .படுக்கையில் விரிந்திருந்த பன்னீர் ரோஜா .இதயமாய் மாறியிருந்த சிவப்பு ரோஜாக்கள் .வாசலில் இருந்து படுக்கை வரை பாதை போட்டிருந்த மஞ்சள் ரோஜாக்கள் .தவிர அறைச்சுவர்களில் மாட்டப்பட்டிருந்த மன்மதன் , ரதியின் லீலை ஓவியங்கள் .

எங்கென்று கண்டுபிடிக்க முடியா இடத்திலிருந்து ஒளிவீசிக்கொண்டிருந்த விளக்குகள் .இதமான ஏ.ஸி குளிர் .அந்த தேவலோகத்தின் கிளை ஒன்று தங்களது அறையில் திடீரென உருவாகிவிட்டதோ என எண்ணினாள் முகிலினி .

கன்னங்கள் சிவக்க சௌம்யாவை திரும்பி பார்த்தாள் .கண் சிமிட்டினாள் அவள் .”இந்த அலங்காரங்களெல்லாம் முடியட்டுமென்றுதான் இவ்வளவு நேரமாக உன்னை இழுத்துக்கொண்டு திரிந்தேன் .எல்லாம் நானும் அம்மாவும் சேர்ந்து செய்த ஏற்பாடுகள்தான் .எப்படியிருக்கிறது ? ” என்றாள் .

சூப்பர் என கை ஜாடை காட்டினாள் முகிலினி .”அடுத்து உன் முறை ” என்று முகிலினியை இழுத்து கண்ணாடி முன் அமர வைத்தாள் .
அரைமணியில் கண்ணாடியில் தெரிந்தது தான்தானா ? என சந்தேகம் வந்தது முகிலினிக்கு .

சிற்பம் போன்ற தோற்றத்துடன் சௌம்யா  சேலையணிவித்து முடித்தவுடன் தனக்கு இவ்வளவு அழகான உடல் வடிவா என ஆச்சரியம் வந்தது அவளுக்கு .

” எவ்வளவு அழகாக அலங்காரம் பண்றீங்க ? சேலையை எப்படி இப்படி வடிவாக கட்ட முடிகிறது ? ” கண்ணாடியில் பக்கவாட்டில் திரும்பி தனது தோற்றத்தை பார்த்தபடி கேட்டாள் முகிலினி .

” நான் ப்யூட்டிசியன் கோர்ஸ் படித்திருக்கிறேன் முகிலினி .அப்புறம் எல்லோருக்கும் இதுபோல் அழகாக சேலை கட்டிவிட முடியாது .அதற்கான உடலமைப்பு வேண்டும் .உனக்கு நல்ல சேப் .அதனால் அழகாக இருக்கிறது ” என்றாள் .

” சௌமி எல்லாம் முடிந்ததா ? ” எனக்கேட்டபடி அங்கே வந்தாள் சந்திரவதனா .

” இன்னும் ஒரே ஒரு முக்கியமான வேலை இருக்கிறதம்மா ” என்றாள் சௌம்யா .

என்னவென்று கேட்ட தாய்க்கு பதிலாக ” நாமிருவரும் இங்கிருந்து வெளியேற வேண்டும் .அப்புறம் நம்ம நந்துவை அந்த காருண்யாவிடமிருந்து பிடுங்கி இங்கே முகிலினியிடம் கொண்டு வந்து தள்ள வேண்டும் ” என்றாள் .

அம்மாவும் , மகளும் சிரிக்கும்போது கூட சேர்ந்து கொண்டாலும் சௌம்யாவின் பேச்சில்  சுருக்கென்று நெஞ்சில் தைத்து போல் ஆனது முகிலினிக்கு .




அதென்ன காருண்யாவிடமிருந்து பிடுங்கி கொண்டு வந்து ….தலையை உலுக்கி கொண்டாள் .

அவள் கைகளை இறுக பற்றி குலுக்கி ” இனிய முதலிரவுக்கு வாழ்த்துக்கள் ” என கண் சிமிட்டினாள் சௌம்யா .

வெட்க புன்னகையுடன் சந்திரவதனாவின் பாதம் பணிந்தாள் முகிலினி .”, என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க பெரியம்மா ” என்றாள் .

அவள் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தவள் ” உன் வாழ்க்கையை நீதான் கைக்குள் பத்திரப்படுத்தி கொள்ள வேண்டும் ” என்றாள் .

இதென்ன ஆசீர்வாதம் .குழம்பியது முகிலினிக்கு .” பெரியம்மா பாட்டியிடம் ஆசீர்வாதம் வாங்க வேண்டுமே ” என்றாள் .

” அம்மா எட்டு மணிக்கெல்லாம் மாத்திரை போட்டுவிட்டு படுத்துவிடுவார்கள் முகிலினி .நாளை காலை அம்மாவை பார்த்துக்கொள்ளலாம் .இன்றைய  நல்ல நேரத்தை வீணாக்க வேண்டாம் ” என்றாள் சந்திரவதனா .மீண்டும் வாழ்த்தி விட்டு வெளியேறினார்கள் இருவரும் .

மணி பத்தாகிவிட்டது .இவ்வளவு நேரம் என்ன செய்கிறான் .? அதுவும் இன்று . . .சற்று விரைவாக வர வேண்டாமா ? அன்று காலையிலதான் கட்டுப்படுத்த முடியாதது போன்ற தாகத்துடன் அணைத்த கணவன் இப்போது அதற்கான சூழ்நிலையின் போது தள்ளி நிற்பது முகிலினியை வருத்தியது .

பேசாமல் திட்டினாலும் திட்டிக்கொள்ளட்டும் என ஆபீஸில் போய் பார்த்துவிடுவோமா? என எண்ணிக்கொண்டிருக்கையில் நீண்ட விசில் சத்தம் ஒன்று கேட்டது .
யாரென திரும்பிய போது , நீண்ட இரட்டை விசிலொன்று யதுநந்தனிடமிருந்து .கண்களை சிறிது கூட விலக்காமல் முகிலினியை விழுங்கியபடி அருகில் வந்தான் அவன் .

“, என்ன இது விடலைப்பையன் போல …” விசிலுக்காக ஆட்சேபம் சொன்னாள் முகிலினி .

” அறை அலங்காரத்தை பார்த்து லேசாக விசிலடித்து திரும்பினால் கோவில் சிலையொன்று உயிர் பெற்று வந்து என் அறையினுள் நிற்கிறது .செய்வதறியாது என் மகிழ்ச்சியை இப்படி வெளிப்படுத்த வேண்டியதாயிற்று .” இதழ்கள் இவ்வாறு கூறிக்கொண்டிருக்கையிலேயே கண்கள் தாகத்துடன் மனைவியை பருகிக்கொண்டிருந்தன .

பார்வையிலேயே பற்ற வைக்கிறாய்
நெருப்பில்லாமல் எரிகிறேன்.
அதென்னவோ
பனியாய் எரிகிறது தீ …
குளிர்கிறதா …?கொதிக்கிறதா …?
அறியா விடைக்கு
சந்திரனை துணைக்கழைக்க
அனலாய் பொழிகிறான் அவனும் ,
அனல் அமர்த்த துணை தேட …
நீ
உயிரை கரைத்து என்னுள் ஊற்ற
குளிர்ந்து மீண்டும் எரிகிறேன்
துளித்துளியாய்
அணுஅணுவாய் ….

யதுநந்தனின் உயிர் உறிஞ்சும் பார்வையில் இப்படி தவித்தாள் முகிலினி .இல்லை …முதலில் நிறைய பேச வேண்டும் ….அப்புறந்தான் ….அதற்குள் இப்படி உருகக்கூடாது .மிக சிரமப்பட்டு தன்னை மீட்டுக்கொண்டு நிமிர்ந்த போது யதுநந்தனின் மீசை வடிவை மிக அருகே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவ்வளவு அருகாமையில் வந்திருந்தான் அவன் .சுதாரித்து நிமிரும் முன் …தன் இதழ்களால் ….

மூச்சு வாங்க நின்றனர் இருவரும் .யதுநந்தன் மீண்டும் குனிந்தபோது  முகிலினிக்கு திடீரென  அன்றைய மாடிப்படி முத்தத்தை நினைவூட்டியது இந்த இதழணைப்பு .தொண்டையில் ஏதோ சிறிய கசப்பணர்வு .ஏனோ யதுநந்தனின் அன்றைய முதல் முரட்டு முத்தத்தை இப்போதும் முகிலினியால் நியாயப்படுத்த முடியவில்லை .எனவே முதலில்  வழங்கிய ஒத்துழைப்பை இப்போது தர முடியவில்லை .

மனைவியின் அந்த சிறிய விலகலையும் உணர்ந்தானோ …என்னவோ , மென்மையாக அவள் கழுத்தை வருடியபடி ” முகில் நான் போய் குளித்துவிட்டு வருகிறேன் .ம் ….” என்றுவிட்டு துண்டுடன் குளியலறைக்குள் நுழைந்தான் .

நெடுமூச்சு ஒன்றை விடுத்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள் முகிலினி .எத்தனையோ கேள்விகள் அவனிடம் கேட்க மனதிற்குள் வரிசையில் நின்றாலும் என்ன காரணத்தினால் ஒன்றுமில்லாதவர் போல் எங்கள் வீட்டில் வந்து தங்க வேண்டும் ? என்பது முதன்மை பெற வார்த்தைகளை கோர்த்து வரிசைப்படுத்திக்கொண்டு காத்திருந்தாள் .

ஆனால் குளித்து முடித்து சரியாக துடைக்காமல் உடல் முழுவதும் நீர்த்துளிகள் வைரமாக மின்ன நெற்றி வடிந்த நீரை அவள் தோள் புடவையில் தடவியபடி “சித்திரம் போல் எவ்வளவு அழகாக இருக்கிறாய் ? “என அவளை வருடியபடி கணவன கூறியபோது முகிலினியின் நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக்கொண்டது .

மழையில் நனைந்து நின்ற தேக்கு மரத்தினை நினைவூட்டினான் யதுநந்தன் .என்ன பெரிய விபரங்கள் ?எல்லாவற்றையும் பிறகு கேட்டுக்கொண்டால் போயிற்று …என்ற அவசர முடிவொன்றை எடுத்து விட்டு தேக்குடன் பின்னி பிணைந்தது பூங்கொடி .




அமிழ்தம் பொழியும் புத்தம் புது பூமி ஒன்றுக்குள் கணவனும் மனைவியும் நழுவிக்கொண்டிருந்த போது திடீரென மின்சாரம் தடைபட்டது .அறை முழுவதும் இருட்டும் , புழுக்கமும் பரவியது .

தொடர்ந்து தீனமான நாயின் குரல் கேட்க , முகிலினியை விலக்கிவிட்டு சட்டையை அணிந்து கொண்டு அவசரமாக வெளியேறினான் யதுநந்தன் .ஜெனரேட்டர் ஓடத்துவங்க ஒளிரத்தொடங்கின விளக்குகள் .

விளக்கு வெளிச்சத்தில் என்னவோ என்று பதறியபடி வெளியே வந்தாள்
முகிலினி .வீட்டிலிருக்கும் வேலையாட்கள் அனைவரும் ஆங்காங்கே கூடி நிற்க , பின்புற தோட்டத்தில் சிறு கும்பல் தெரிந்தது .

அவசர நடையுடன் அங்கே சென்று எட்டிப்பார்த்த முகிலினி அதிர்ந்தாள் .காவலுக்காக வீட்டை சுற்றி வலம் வந்து கொண்டிருந்த நாய்களில் இரண்டு கழுத்தறுபட்டு கீழே கிடந்தது .பசும்புற்கள் சிவப்பில் நனைந்து கொண்டிருந்தன .

அவ்வளவு ரத்தத்தை பார்த்ததும் தலை சுற்றி விட , தடுமாறியபடி அருகிலிருந்த யதுநந்தனின் கைகளை பற்றினாள் .யாரென திரும்பி பார்த்தவன் ” ஏய் …பார்த்து ….” என அவளை தாங்கியபடி , ” உன்னை யார் இங்கே வர சொன்னது ? ” என சீறினான் .

சுற்றி பார்த்து ” காருண்யா ….” என கத்தினான் .அந்தப்பக்கம் எங்கிருந்தோ ஓடி வந்த காருண்யாவின் கைகளில் டார்ச் லைட்டும் , துப்பாக்கியும் இருந்தன .அவளிடம் முகிலினியை கிட்டத்தட்ட தள்ளினான் .” பத்திரமாக உள்ளே கூட்டிப்போ “, என்றான் .

முகிலினியின் தோள்களை பாதுகாப்பாக சுற்றி வளைத்த காருண்யாவின் கடின கரங்கள் அவளை பத்திரமாக வீட்டினுள் அழைத்து சென்றது .

அப்படி என்ன எனக்கு உயிர் போகும் ஆபத்தா வரப்போகிறது ? தனக்குள் பொறுமியபடி அவளுடன் நடந்தாள் முகிலினி .அவளை பத்திரமாக உள்ளறை சோபாவில் அமர வைத்த காருண்யா ” வெளியே வந்து விடாதீர்கள் மேடம் ” என்றுவிட்டு வெளியே ஓடினாள் .

அவள் ஓடிய வேகத்தை பார்த்து இவளெல்லாம் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக ஓடினால் தங்கப்பதக்கம் நிச்சயம் என எண்ணிக்கொண்டாள் முகிலினி .

” முகிலினி உனக்கு ஒன்றும் இல்லையே ?…நந்து அவன் ….அவனுக்கென்ன ?” பதறிக்கொண்டு தடுமாறியபடி வந்தாள் சந்திரவதனா .கூடவே சௌம்யாவும் .

” இல்லை பெரியம்மா …நாங்கள் நன்றாக இருக்கிறோம் .நீங்கள் இப்படி உட்காருங்கள் ” என அவளை அமர வைத்தாள் .

” என்ன பிரச்சினை அக்கா ? ” என சௌம்யாவிடம் வினவினாள் .

” சரியாக தெரியவில்லை முகிலினி .யாரோ திருடர்கள் புகுந்திருப்பார்கள் போல .நம் காவல் நாய்களை கொன்றிருக்கிறார்கள் .யாரும் எங்கேயும் ஒளிந்திருக்க கூடாதே .அதனால் எல்லோரும் தேடுகிறார்கள் .போலீஸ் கூட வரலாம் .” என்றாள் சௌம்யா .

உடல் ஒருமுறை நடுங்கியது முகிலினிக்கு .சிறிது நேரம் அங்கேயே அமர்ந்திருந்தாள் .யதுநந்தன் வராமல் அறைக்கு போக பிடிக்கவில்லை .அந்த திருடர்கள் இங்கேயே இருக்கலாம் என கூறுகிறார்களே , அவன்பாட்டிற்கு வெளியே நிற்கிறானே ஏதும் ஆபத்து வந்தால் ….? இருப்பு கொள்ளாமல் தவித்தாள் .வெளியே போனால் நிச்சயம் திட்டுவான் ….

அன்றொருநாள் கையில் துப்பாக்கியோடு யதுநந்தன் வெளியே சென்றது நினைவு வந்தது .இது போன்ற தொல்லைகளிடமிருந்து தன்னை காத்துக்கொள்ளத்தான் போலும் .

சந்திரவதனா சோபாவில் உட்கார்ந்த படியே பின்னால் சாய்ந்து தூங்க தொடங்கினாள் .சௌம்யா கொட்டாவி விட்டபடி செல்போனை நோண்டிக்கொண்டிருந்தாள்.

முகிலினி மெல்ல எழுந்து பின்புறம் சென்று பார்க்கலாமென எழுந்தாள் .அடுப்படி பக்கம் சென்று பின்வாசலை அடைந்தாள் .இப்போது பின்புறம் எந்த அரவமுமின்றி இருந்தது .எங்கே போயிருப்பார்கள் ? என யோசித்த போது ” எல்லாம் புது மருமகள் ராசிதான் ” என்ற குரல் கேட்டது .

இந்நேரத்தில் யார் என்னை பற்றி பேசுகிறார்கள் ? ஒதுங்கி நின்று காது கொடுத்தாள் முகிலினி .

” ஏய் பொன்னாயி நீ சும்மா கிடக்க மாட்டாய் ? “, இந்த குரலை முகிலினிக்கு அடையாளம் தெரிந்தது .சமையல்காரம்மா முத்தரசி .

” அட நமக்குள்ள பேசுறதுதானே முத்தரசி .இந்தம்மா முதன்முதல்ல கால் வைத்த அன்னைக்கே இப்படி நடந்திருக்கே …இன்னும் என்னவெல்லாம் நடக்க போகுதோ “

” ஏன்டி பொன்னாயி உனக்கு எல்லாம் தெரிந்த மாதிரி பேசுற ? “

” முத்தரசி எனக்கு தெரிந்த விசயங்களோட அளவை தெரிந்தால் நீ அப்படியே அரண்டு போயுடுவாய் “

” அப்படி என்ன விசயங்கள்டி உனக்கு தெரியும் “

” அது தெரியும் …வண்டி வண்டியாக …” என நீட்டி முழக்கியவள் சிறிது குரலை குறைத்து ” ஏன்டி அப்பாவை கொன்னவங்களையே கல்யாணம் கட்டுறது அந்தக்காலத்தில்தான் நடந்ததுன்னு நினைத்தேன் .இப்பவும் கூட அதெல்லாம் நடக்குதுங்கிறதை கண் கூடா பார்த்திட்டேன் “

” என்னடி சொல்கிறாய் ? நீ நம்ம வீட்டு புது மருமகளையா சொல்ற ? “

” அட ஆமாம்டி …அவுங்களையேதான் ”
இதன்பிறகு முகிலினி அங்கே நிற்கவில்லை .தடுமாறியபடி தனது அறையை அடைந்தவள் கட்டிலில் குப்புற விழுந்தாள் .தலையணை நனையத்தொடங்கியது .




What’s your Reaction?
+1
19
+1
15
+1
2
+1
0
+1
0
+1
1
+1
4
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!