Serial Stories

நீ தந்த மாங்கல்யம்-16

( 16 )

யதுநந்தன் மீண்டும் அவர்கள் அறைக்கு வந்த போது முகிலினி வெளிறத் துவங்கியபடி இருந்த வானத்தை வெறித்தபடி சன்னலருகில் நின்றிருந்தாள் .

” சாரிடா முகில் , இது எதிர்பாராமல் நடந்துவிட்டது .எனக்கு ….இல்லை நமக்கே நமக்கான முதல் நாள் இப்படி ஒரு ஏமாற்றத்தில் ஆரம்பித்திருக்க வேண்டாம் .” மனைவியின் தோள் பற்றி அவளை தன்புறம் திருப்பியவன் அவளது வெறித்த பார்வை கண்டு திகைத்து ஒரு நிமிடம் மௌனமானான் .

பின் மெல்ல அவள் தலையை வருடிபடி ” எனக்கும் ஏமாற்றம்தான்டா .விடு அதுதான் நமக்கு வாழ்நாள் முழுவதும் இருக்கிறதே .நேற்றைய தடங்கலையும் இன்றைக்கு சேர்த்து ஈடு கட்டி விடுவோம் குட்டிம்மா ” என சரசமாக உரைத்தபடி அவளை இறுக அணைத்தான் யதுநந்தன்  .முகிலினியின் உடல் தூக்கி போட்டது .அவனது சரச பேச்சினால் அல்ல .அவன் இறுதியில் உரைத்த குட்டிம்மாவினால் .

அவள் தந்தை தமிழ்செல்வனின் பிரத்யேக அழைப்பு அது .அதுவும் எப்போதும் அப்படி அழைக்க மாட்டார் .அவர் மிக மிக மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களில் மட்டுமே அப்படி ஒரு மாதிரி குரலை குழைத்து “குட்டிம்மா ” என்பார் .அந்த நேரங்களில் முகிலினி முன்பு நிறைவேறாத  தனது தேவைகளை தந்தையிடம் எளிதாக நிறைவேற்றிக்கொள்வாள் .சரஸ்வதி கூட அப்பா …மகள் கொஞ்சல் தாங்க முடியவில்லை என பெருமையாக அலுத்துக்கொள்வாள் .

தன் அணைப்பிற்குள் இருந்த மனைவியின் உடல் நெகிழாமல் கட்டை போல் இறுக்கமாக இருக்க யோசனையோடு பிடியை சிறிது தளர்த்தினான் யதுநந்தன் .

” என்னை அப்படி கூப்பிட வேண்டாம் ” மரத்த குரலில் கூறினாள் முகிலினி .
” எப்படி …? ” யோசனையுடன் கேட்டான் யதுநந்தன் .

” குட்டிம்மா …என்று .அது …என் அப்பா செல்லமாக கூப்பிடுவது ….” குரல் கம்மியது முகிலினிக்கு .

” தெரியும் முகில் …அதனால்தான் நானும் ….”

” இல்லை அந்த உரிமை எப்போதும் என் அப்பாவிற்கு மட்டும்தான் ” மெல்லிய குரலில் கூறினாலும் உறுதியாக கூறினாள் முகிலினி .

பேச்சற்று திகைத்து நின்றான் யதுநந்தன் .” என்னாச்சு முகில் ?”

” என் அப்பாவின் மரணத்தில் உங்கள் பங்கு ஏதாவது இருக்கிறதா ? “கணவனின் கண்களுக்குள் நேரடியாக பார்த்துக்கேட்டாள்.

யதுநந்தன் அதிர்வது துல்லியமாக தெரிந்தது .




” அ…அது …வ..வ..வந்து …எப்படி …அது …யார் ….உனக்கு ….” தடுமாறியது அவன் குரல் .அந்த தடுமாற்றமே முகிலினிக்கு உண்மை உரைத்துவிட்டது .

தோள் தொட வந்த கணவனின் கைகளை விலக்கியபடி ” நான் கோவிலுக்கு போகப்போகிறேன்.அதனால் தொட வேண்டாம் ” என்றுவிட்டு நடந்தாள் .

” பத்துநிமிடம் வெயிட் பண்ணேன் .நானும் வந்து விடுகிறேன் ” என்றவனுக்கு …

” இல்லை நான் கிளம்பிவிட்டேன் ” என அறைக்கதவுக்கு மறுபுறமிருந்து பதில் சொன்னாள் முகிலினி .

கண்மூடி அம்மனின் முன் அமர்ந்திருந்தாள் .உலைக்கலனாக கொதித்துக்கொண்டிருந்தது மனது .ஏன் இப்படி நடந்தது ? யதுநந்தனை முதலில் சந்தித்த நாள் முதல் நேற்றிரவு வரை மனதில் படமாக ஓடியது .கணவனுக்கும் , தந்தைக்கும் உள்ள புரிதலை உணர்ந்தாள் .

என்ன நடந்திருக்கிறது என்பதனை அவளால் இப்போது எளிதாக ஊகிக்க முடிந்தது .தனது உயிருக்கு ஆபத்தான சூழலென்று யதுநந்தன் சிறிது காலம் தலைமறைவாக இருக்க தங்கள் வீட்டை தேர்ந்தெடுத்திருக்கிறான் .அவனது ஆபத்தை உணர்ந்த தனது தந்தை அவனுக்கு அடைக்கலம் கொடுத்து அவனை  காக்கும் முயற்சியில் தன்னை பறி கொடுத்துவிட்டார் .

குமுறியது முகிலினியின் நெஞ்சம் .யாரோ ஒருவருடைய உயிருக்கு விலை தன் குடும்ப நிம்மதியா ? இப்போது வேண்டுமானால் அவன் கணவனாக இருக்கலாம் .ஆனால் அப்போது யாரோதானே.அன்று அப்பாவை இழந்து என் அம்மா எவ்வளவு தவித்தார்கள் ?

அன்று நடு இரவில் எழுந்து சரஸ்வதி சமைத்தது நினைவு வர , உடைந்து அழத்துவங்கினாள் முகிலினி .நாங்கள் எப்படி இருந்தோம் ? அக்கம் பக்கத்தினர் , உறவினர் பொறாமை கொள்ளும் அளவு ….இப்போது அப்பா போனபின் எவ்வளவு துயர் ….?.

பணத்திற்காக எவனோ ஒருவனுக்கு என்னை மணம் பேச ….அவன் பணக்கணக்கு கேட்டு திருமணத்தை நிறுத்த …அவமானத்துடன் மணமேடையில் நின்ற அந்த கணங்கள் .இவையெல்லாம் தந்தையில்லாமல் போனதாலன்றோ நடந்தது .

சாகும் வயதா என் தந்தைக்கு ? சிங்கம் போல் நடந்து வருவாரே .அவருக்கு பின் சுபநிகழ்ச்சிகளில் முன் நிற்க தயங்கி பின் நிற்கும் என் அம்மா .என் மணமேடையில் கூட ஓரமாக ஒதுங்கிதானே நின்றார்கள் .இப்படி ஓரம் ஒதுங்கும் வயதில்லையே .ஆறுமாதங்களுக்கு முன்பு கூட எங்கள் சுடிதார் ஒன்றை அம்மாவுக்கு மாட்டிவிட்டு அப்பாவுடன் , நானும் அக்காவுமாக அம்மாவை கலாட்டா செய்தோமே .

இனி அந்த இனிமையான நாட்களுக்கெல்லாம் எங்கே போவேன் ? தொழிலென்ற போர்வையில் வந்து தங்கி என் தந்தையின் உயிரை பறித்துவிட்டானே .அவரவர் இடத்தில் அவரவர் இருந்திருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்காதே .

வாழ்நாள் முழுவதும் தான் பட வேண்டிய வருத்தத்தையெல்லாம் இன்றே பட்டாக வேண்டுமென கங்கணம் கட்டியபடி கண்ணீரில் கரைந்தாள் முகிலினி .மோகனரங்கம் சற்று தள்ளி நின்று அவளை விசித்திரமாக பார்த்திருந்து விட்டு வெளியே போனார் .




போனது போகட்டும் என மறக்க எண்ணினாலும் , இனி யதுநந்தனோடு ஒரு முழுமையான வாழ்வை தன்னால் வாழ முடியுமா ? என முகிலினிக்கு சந்தேகம் வந்தது .அவனை காணும் ஒவ்வொரு சமயமும் இவன் தன் தந்தை சாவுக்கு காரணமானவன் எனும் முள் குத்திக்கொண்டே இருக்குமே .

முன்பு மன்னர்கள் காலத்தில் நாட்டிற்காக தாய், தந்தை, உறவினர்கள் என அனைவரையும் கொன்று நாட்டையும் கைபற்றி தன்னையும் மணமுடித்துக்கொண்ட அரசர்களுடன் சந்தோசமாக வாழும் பெண்களின் கதையை படித்து வெறுத்திருக்கிறாள் முகிலினி .அப்படி என்ன இவர்களுக்கு ஒரு வாழ்க்கை வேண்டிக்கிடக்கிறது என நினைத்திருக்கிறாள் .இப்போது அவளும் அந்த நிலையில்தான் இருக்கிறாள் .

எதிர்காலம் பயங்கரமாக மருட்டியது அவளை .இந்த வாழ்வே வேண்டாமென போவதானால் தன் அன்னையின் நிலை ???……

துடைக்க துடைக்க பெருகிக்கொண்டிருந்த கண்ணீர் திடீரென நின்று வெறும் கன்னம் கைகளுக்கு தட்டுபட்ட  போதுதான் உள்ள கண்ணீரையெல்லாம் உதிர்த்துவிட்டதை உணர்ந்தாள் .

வடிக்க வடிக்க பெருகியது
உதிர்க்க உதிர்க்க உருவானது
உன்னை வடிக்கிறேனோ
என்னை உதிர்க்கிறேனோ
எல்லாம் முடிந்து தென்பட்ட
வெறுமை
கன்னங்களில் அல்ல
வாழ்வில் ….

கிட்டத்தட்ட இரண்டுமணி நேரமாக அழுது கொண்டிருக்கிறாள் .ஆனால் அதுவே ஒரு ஆறுதல் போல மனது இப்போது கொஞ்சம் லேசானது போல் தோன்றியது .பத்து நிமிடத்தில் வருவதாக சொன்ன கணவன் என்ன ஆனான் ? எப்படி வருவான் ? என் முகத்தில் எப்படி முழிப்பான் ?

தன் கணவன் அப்போதே வந்து தன் வேதனையை எட்டி நின்று செய்வதறியாது பார்த்து விட்டு சென்றதை அவள் அறியவில்லை .

தளர்ந்த நடையுடன் வீட்டை அடைந்தவள் நேரே படுக்கையில் விழுந்தாள் .கண்களை மூடியபடி தனக்குள்ளேயே மீண்டும் புலம்ப ஆரம்பித்தாள் .மதிய உணவுக்காக அவளை அழைக்க வந்த சௌம்யா அவள் தூங்குவதை கண்டதும் போய்விட்டாள் .

முகிலினி கண் விழித்ததும் பார்த்தது யதுநந்தனைத்தான் .அவள் எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தபடி அவளை பார்த்தவாறு இருந்தான். வேகமாக முகத்தை மறுபுறம் திருப்பிக்கொண்டவளை வேதனையுடன் பார்த்தான் .

” முகிலினி எழுந்து முகம் கழுவிக்கொண்டு வா .உன்னுடன் பேச வேண்டும் “, கண்டிப்பான குரலில் இதனை கூறிவிட்டு ஒலித்த செல்போனை காதுக்கு கொடுத்தபடி பால்கனிக்கு நடந்தான் .

யதுநந்தனை கண்டதும் மீண்டும் பொங்கி வந்த அழுகையை அடக்க முகிலினிக்கும் முகம் கழுவ வேண்டியிருந்தது .

தன்னை திருத்திக்கொண்டு முகிலினி வந்த போது ” ஒரு மணி நேரம் கழித்து பார்க்கலாம் ” என யாரிடமோ போனில் பேசிக்கொண்டிருந்தான்.

முகிலினி அமர்ந்ததும் டீப்பாயில் மூடி வைத்திருந்த தட்டை திறந்து அவளிடம் நீட்டினான் .அதில் இரண்டு சாண்ட்விச் துண்டுகள் இருந்தன .”, முதலில் சாப்பிடு ” என்றான் .

“, நான் சாப்பிட வரவில்லை “, கோபமாக கூறினாள் முகிலினி .

” இல்லை நீ சாப்பிடுகிறாய் .” அழுத்தமாக கூறினான் .முகிலினி அசையாமல் இருக்கவும் ” பிறகு நானாக வாயில் திணிக்க வேண்டியிருக்கும் “, மிரட்டலாக கூறினான் .

அவசரமாக தட்டை கையில் எடுத்துகொண்டாள் முகிலினி .இவன் செய்தாலும் செய்வான் . முதல் நாள் இரவு உண்ட உணவு .எனவே முகிலினிக்கும் சிறிது பசிதான் .அவசரமாக தட்டிலிருந்த உணவை அவள் உண்ணுவதை ஒரு வித மரத்த தன்மையுடன் பார்த்தபடி இருந்தான் யதுநந்தன் .

முகிலினிக்கு இப்போது கையில்
வைத்திருந்த சாண்ட்விச் முன்பொருநாள் முகிலினி வீட்டில் இருவருமாக பகிர்ந்து உண்ண சாண்ட்விச்சை நினைவுபடுத்த பாதிக்கு மேல் தொண்டைக்குள் இறங்காமல் விக்கியது .

முகிலினியின் முன்னால் தண்ணீர் நீட்டப்பட்டது .தொடர்ந்து ஒரு கப் காபியும் .இதற்குள் மூன்று முறை போனில் அழைப்பினை கட் செய்தான் யதுநந்தன் .

” முகிலினி நான் எனது மேல் படிப்பை அமெரிக்காவில் முடித்தேன் .அதற்கேற்ற வேலை அங்கேயே கிடைக்க அங்கேயே தங்கி வேலை பார்த்து கொண்டிருந்தேன்.இதில் பாட்டி , அப்பா , அம்மாவிற்கும் மிகுந்த வருத்தம் .இங்கே கோடி கோடியாக கொட்டிக்கிடக்கையில் எதற்கு அடுத்த இடத்தில் சம்பளத்திற்கு வேலை பார்க்க வேண்டும் என்பது அவர்கள் கேள்வி .

எனக்கு தொழிலில் சுவாரஸ்யம் இருந்தாலும் , அதனை இங்கே வந்து செய்ய பிடிக்கவில்லை .காரணம் எங்கள் குடும்ப அரசியல் .எங்கள் தாத்தா மார்த்தாண்டனும் ,  நேற்று கோவிலில்  பார்த்தாயே எங்கள் பாட்டி , அவர்கள் என் அப்பாவை பெற்றவர்கள் .பெயர் அன்னபூரணி.அவர்களுக்கும் , எங்கள் தாத்தாவின் தம்பி ஆளவந்தானுக்கும் சொத்து தகராறு .அதனை ஊர் பெரியவர்களை வைத்து ஓரளவு பேசி முடித்தார்கள் .




தம்பி ஆளவந்தான் தாத்தாவுக்கு என் மார்த்தாண்டம் தாத்தா அதிகளவு சொத்துக்களை விட்டுக் கொடுத்திருக்கிறார் .தம்பி சிறியவன்தானே என்ற எண்ணத்தில் .

எங்கள் குடும்ப தொழில் கிரானைட் எடுத்தல் .பிரிவினை சமயம் இரு குடும்பத்திற்கும் பொதுவான ஒரு சாதாரண நிலத்தில் நிறைய கிரானைட் இருப்பது தெரிய வந்திருக்கிறது .அந்த நிலத்தை தனக்கு தந்து விடும்படியும் , அதற்கு பதில் தாங்கள் குடியிருக்கும் வீட்டை எங்கள் தாத்தாவிற்கு தந்து விடுவதாக பேசியுருக்கிறார் ஆளவந்தான் தாத்தா .

எங்கள் தாத்தாவும் சம்மதிக்க நிலத்திற்கு பக்காவாக பத்திரம் எழுதி வாங்கிக்கொண்டு , வீட்டை எழுதி தர சிறிது டைம் கேட்டிருக்கிறார் .வேறு வீடு கட்டிக்கொண்டு  போவதாக கேட்டிருக்கிறார் .

எங்கள் தாத்தாவும் நம்பி சம்மதிக்க , அந்த நிலத்தை வாங்கி அதிலிருந்து கிரானைட் எடுத்து பல கோடிகள் சம்பாதித்தவர் ,எங்கள் தாத்தா வீடு பற்றி கேட்ட போதெல்லாம் அப்புறம் …அப்புறமென பத்து வருடங்களை தள்ளி விட்டார் .இறுதியில் மிக கோபத்துடன் தாத்தா கேட்ட போது என்ன ஆதாரம் இருக்கிறது .முடிந்தால் என்னிடமிருந்து வாங்கிப் ்பார் என சவால் விட்டிருக்கிறார் .

கோபப்பட்ட என் தாத்தா இருந்த ஆதாரங்களை வைத்து கோர்ட்டில் கேஸ் போட்டுவிட்டார் .அது கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து  வருடங்களாக இழுத்து போன வருடம்  எங்கள் பக்கம் தீர்ப்பாகி விட்டது .அதற்குள் எங்கள் தாத்தா
போய்விட்டார் .அந்த பிரச்சினைக்குரிய சொத்து
இதோ இப்போது இருக்கிறோமே இதையே போன்று ஒரு வீடு இந்த தோட்டத்தின்  மறுபுறம் உண்டு .அதுதான் .இருவருக்கும் பொது இடையில் இருக்கும் கோவில் .

ஒரு வருடம் முன்பு இந்த தீர்ப்பு வந்ததும் எங்கள் அப்பா , அம்மா , அத்தை , மாமா போன கார் விபத்துக்குள்ளானது .அம்மா , அப்பா மாமா எல்லோரும் போய்விட்டார்கள் .அத்தைக்கு கண்பார்வை போய்விட்டது.

இந்த இடத்தில் குரல் கம்ம சிறிது நிறுத்தினான் யதுநந்தன் .அமெரிக்காவிற்கு ஒரு ராத்திரி எனக்கு போன் வருகிறது .யாரோ ஒரு இன்ஸ்பெக்டரிடமிருந்து .விபத்தில் உங்கள் குடும்பமே …..மேலே சொல்ல முடியாமல் திணறினான் .மெல்ல அவன் கைகளை ஆறுதலாக பற்றினாள் முகிலினி .

” முகில் ஒரு ஐந்து நிமிடம் உன்னை அணைத்து கொள்கிறேன் .வெறும் ஆறுதலுக்காகத்தான் .வேறேதும் எண்ணமில்லை ” என்றான் .

மனம் நெகிழ அவன் கைகளோடு இழுத்து தன் மடியில் அவன் தலையை வைத்துக்கொண்டாள் முகிலினி .

மிகுந்த ஆறுதலுடன் அவள் மடியில் முகம் புதைத்துக்கொண்டான் யதுநந்தன் .




What’s your Reaction?
+1
20
+1
14
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!