Serial Stories மனமென்னும் ஊஞ்சலேறி

மனமென்னும் ஊஞ்சலேறி-18 (நிறைவு)

18

“அந்த ஆட்டோவையே உனக்கு மாதத்திற்கு பேசி விட்டேன். நீ இனிமேல் அதிலேயே தொடர்ந்து காலேஜ் போய் வா. சீக்கிரமே உனக்கு ஒரு ஸ்கூட்டி வாங்கி தந்து விடுகிறேன்” ஒப்பிப்பது போல் பேசிவிட்டு அறைக்கு வெளியே போகப் போனவனின் சட்டையை பற்றி இழுத்தாள் தாரணி.

இருவருக்குமான பைக் பயணத்திற்காகவே அவளுக்கு ஸ்கூட்டி வாங்குவதை இருவருமாக ஏதோ காரணம் சொல்லி தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தவர்கள்…இப்போது

” இதெல்லாம் எதற்கு ?ஏன் என்னை தவிர்க்கிறீர்கள்?”

“உனக்காகத்தான்” அவள் கையை தள்ளி விட்டு போய் விட்டான். அன்று கல்லூரியில் பாடம் மனதில் பதியாமல் மதியத்திற்கு மேல் லீவ் சொல்லிக் கொண்டு வெளியேறினாள் தாரணி். 

அவரா ? அப்பாவா ? யார் இருக்கிறார்கள் ஹோட்டல் பக்கம் திரும்பியவள் அதிர்ந்தாள்.

 அங்கே  திவ்யா பூர்ணசந்திரனுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

ஒருவித பதட்ட அலை உடல் முழுவதும் பரவ வேகமாக ஓடி அவர்கள் முன் நின்றாள்.அவளை  ஏற இறங்க பார்த்த திவ்யா ” சும்மா பேசிக் கொண்டிருந்தோம். உன்னுடைய கரியனை கூட இப்போதுதான் சொல்லிக் கொண்டிருந்தேன்” என்றாள்.

 தாரணி திடுக்கிட்டாள். பூரணசந்திரனை பார்க்க அவன் முகம் எழுத்துக்கள் எழுதாத வெற்று காகிதமாய் கிடந்தது.

“சரி நான் வருகிறேன், நீங்கள் அந்த  சென்னை பிரான்ச்ஞ் விஷயம் நன்றாக யோசித்து வையுங்கள்”  திவ்யா எழுந்து போனாள்.

” அவர்களுக்கு சென்னை பிரான்ச்ஞ் உரிமை கொடுக்கக் கூடாது” படபடத்த தாரணியை வெறுமையான விழிகளால் அளந்தவன், “அதுதான் அன்றே இல்லை என்று விட்டேனே” என்று விட்டு போய் அடுப்பின் முன் நின்று கொண்டான். இரண்டு நாட்களுக்கு மேல் பூரணசந்திரனின் பாராமுகத்தை தாரணியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அவனைத் தேடி டவுன் பிரான்ச்சுக்கு போனாள். புதிதாக சேர்ந்த சமையல் மாஸ்டருக்கு பெரிய சதுர இரும்பு தோசை கல்லில் தோசை ஆம்லெட் என்று அடுத்தடுத்து ஊற்றுவதை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான் பூரணசந்திரன். அடுப்பின் வெப்பத்தில் வியர்வை ஆறாக ஓடிக்கொண்டிருக்க கருத்து சுருங்கி சோர்வாக தெரிந்தான்.

 இவளை பார்த்ததும் “நிறைய வேலை இருக்கிறது ,இங்கே வராதே போ” என்றான்.

“எனக்கு உங்களுடன் பேச வேண்டும்” பிடிவாதமாக அவன் அருகில் போய் அடுப்பின் அனலுக்குள் தானும் நின்றாள்.




சட்டென கைக் கரண்டியை மாஸ்டரிடம் கொடுத்துவிட்டு அவள் கைப்பற்றி இழுத்து கொண்டு வெளியே வந்தான் “என்ன பிடிவாதம்? இப்போது என்ன அவசரம் பேசுவதற்கு?”

சாப்பிடுவதற்கு ஆட்கள் போகவும் வரவுமாக இருக்க தாரணி அவர்களுக்கு வழிவிட்டு அவனை நெருங்கி நின்றாள். “ஏன் என்னை தவிர்க்கிறீர்கள்?” கேட்கும்போதே குரல் உடைய உதட்டை கடித்து அழுகையை அடக்கினாள் 

அவன் அவளைப் பார்த்தபடி நிற்க, “திவ்யா என்னை பற்றி தப்பாக ஏதாவது சொன்னாளா? என்னை பிடிக்காமல் போய்விட்டதா உங்களுக்கு?” உதடு பிதுங்கி அழுவதற்கு தயாரானவளை கைப்பற்றி அழுத்தி ஆசுவாசப்படுத்தினான்.

“எனக்கில்லை.உனக்குத்தான் என்னை பிடிக்கவில்லை.கரியன்,கரிச்சட்டி என்று எனக்கு பெயர் வைத்திருந்தாய்”

“கரிச்சட்டி என்றது திவ்யா.கரியன் நான் உங்களுக்கு ஆசையாக வைத்த பெயர்” சொல்லிவிட்டு முகம் சிவக்க நாக்கை கடித்துக் கொண்டாள்.

அவளது வெட்கம் அப்போது பூரணசந்திரனிடம் எந்த பாதிப்பையும் உண்டாக்கவில்லை.

” கரியன்: திருடன்?”

” இல்லை இல்லை, கரி என்றால் யானை. கரியன் என்றால் யானையைப் போன்றவன், எப்போதுமே செருக்காய் நடந்து வரும் யானையை எனக்கு நினைவூட்டுவீர்கள். அதனால்தான் யோசித்து இந்த பெயரை வைத்தேன். என் போனில் கூட உங்களை அப்படித்தான் சேவ் செய்திருக்கிறேன்” ஃபோனை எடுத்துக் காட்டினாள்.

முகத்தில் எந்த உணர்ச்சியையும் காண்பிக்காமல் மேலே சொல் என்பது போல் நின்றான் 

பூரணசந்திரன்.

“புவனாவிற்காக என்று சொல்லிக் கொண்டாலும் எனக்காகத்தான் உங்களை பார்க்க காலேஜில் மரமெல்லாம் ஏறிக் குதித்து வந்தேன். இதையெல்லாம் அப்பொழுது நானே உணரவில்லை. நம் திருமணத்திற்கு பிறகுதான் ஒவ்வொன்றாக உணர்ந்து கொண்டே வந்து, இப்போது நீங்கள் இல்லாமல் நான் இல்லை என்ற நிலைமையில் இருக்கிறேன்” தன் ஆழ் மனதை உடைத்து வெளியேற்றிக் கொண்டிருந்தாள் தாரணி.

 சலனமே இல்லாமல் அவளது காதலை கேட்டுக் கொண்டிருந்த பூரணசந்திரன் “ஆக நீ என்னை விரும்பித்தான் திருமணம் செய்து கொண்டதாக கூறுகிறாய். அப்படித்தானே?” என்றான்.

” நிச்சயமாக ஆமாம்” என்றாள் அவசரமாக.

” அப்படியென்றால் அதை நிரூபித்து காட்டு. உன்னுடைய பழைய விவரிப்புகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. இப்போதே நேரடியாக எனக்கு உன் காதலை உணர்த்து”

தாரணி திகைத்தாள். இப்போதா? இங்கேயா?அணைப்பையும்,முத்தத்தையும் விட காதலை நிரூபிக்க சிறந்த வழி ஏது?ஆனால் இந்த இடத்தில்…கசகசவென்று சுற்றிலும் இருந்த சூழ்நிலையை பார்த்து விழித்தாள்.

” எங்கே என்றாலும் உன் காதலை எனக்கு நிரூபிக்க ஒரு நிமிடம் போதும்” பூரணசந்திரன் சொல்ல குழம்பினாள்.

” ப்ளீஸ் எனக்கு புரியவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்? நீங்களே சொல்லுங்களேன்”

” அது உனக்கேதான் தெரிந்து கொள் தெரிந்திருக்க வேண்டும்” பூரணசந்திரன் பைக்கை எடுத்துக்கொண்டு இரக்கமின்றி அவளை அங்கேயே விட்டு விட்டு போய்விட்டான். 

தாரணி பக்கத்தில் இருந்த பார்க்கில் போய் உட்கார்ந்து வெகு நேரம் யோசித்துக் கொண்டிருந்தாள். நிச்சயம் திவ்யா என்னை பற்றி தப்பு தப்பாகத் தான் சொல்லியிருப்பாள். ஆனால் அவருக்கு அதிலெல்லாம் என் மேல் அதிருப்தி வரவில்லை. அவர் கேட்பது என்னுடைய மன நிலைமையை மட்டும்தான்.

 தனது தோற்றத்தில் கவலைப்பட்டிருந்த பூரணசந்திரன் அவள் காதலுக்கான உறுதியை தேடுவது நன்றாக புரிந்தது. ஆனால் எப்படி…? இந்த திவ்யா என்ன சொல்லி குழப்பினாளோ…?

 சட்டென தாரணியின் மூளையில் பல்பு எரிந்தது. வேகமாக வீட்டை நோக்கி ஓடினாள். ஹாலில் உட்கார்ந்து சுந்தராம்பாளும் தசரதனும் டிவி பார்த்துக் கொண்டிருக்க, டிவியை வெறித்த பார்வையோடு பூரணசந்திரனும் அங்கேதான் அமர்ந்திருந்தான்.

 மூச்சிளைக்க அவன் முன் போய் நின்ற தாரணி “ஒரு போன் பண்ணனும்” என்றபடி அவன் சட்டை பையில் இருந்த போனை எடுத்து டயல் செய்தாள்.




” ஹலோ அஸ்வின் அத்தான், சென்னையில் நீங்கள் எங்கள் ஹோட்டல் பிரான்ச் ஆரம்பிப்பதில் எங்களுக்கு சம்மதம். மற்ற விபரங்கள் எல்லாம் நேரில் பேசிக் கொள்ளலாம். நாளை இங்கே வாருங்கள்.ம்… ஃபோனை திவ்யாவிடம் கொடுங்கள். ஹாய் திவ்யா எப்படி இருக்கிறாய்? ஒன்றுமில்லை, உனக்கு நான் மிகுந்த நன்றி சொல்ல வேண்டும். எதற்காகவா? நீ செய்த தியாகத்தால்தான் என் கணவர் எனக்கு கிடைத்தார். இதற்காக நான் என் வாழ்நாள் முழுவதும் உனக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருப்பேன். ரொம்ப நன்றி” போனை கட் செய்து மீண்டும் 

பூரணசந்திரனின் சட்டை பைக்குள் வைத்தாள்.

 அவள் முடிவை சந்தோஷமாக பார்த்துக் கொண்டிருந்த அப்பா மாமியாரிடம் திரும்பி “எனக்கு தூக்கம் வருகிறது, தூங்கப் போகிறேன்” என்று அறிவித்து விட்டு அறைக்குள் போய்விட்டாள். இரண்டாவது நிமிடமே அறைக்குள் வந்த பூரணசந்திரன் கட்டிலில் உட்கார்ந்து போனை பார்த்துக் கொண்டிருந்தவளை பின்னிருந்து இறுக்க அணைத்தான்.

“ம்…ஒன்றும் வேண்டாம்,போங்க  நான்கு நாட்களாக என்னை அழ வைத்துவிட்டு… இப்போது என்ன கொஞ்சல்?” ஊடினாள்.

“சாரி கண்ணு ,உன் அக்கா உன்னை பற்றி என்னென்னமோ சொன்ன போது எனக்கு பெரிதாக படவில்லை. ஆனால் மாப்பிள்ளையை மாற்றியதற்காக கோபப்பட்டு நீ இந்த ஹோட்டல் பிசினஸை அவள் கணவனுக்கு கொடுக்க மறுக்கிறாய்னு சொன்னபோது என் மனது உடைந்து விட்டது. அப்படியானால் என்னை திருமணம் செய்து கொண்ட வெறுப்பை உன் அக்காவிடம் வஞ்சமாக காட்டுகிறாய் என்ற அர்த்தம் தானே?  இதனை… உன் காதலை…நான் தெளிவாக உணர்ந்து கொள்ள நினைத்தேன். அதனால்தான்….”

 பேசிக் கொண்டே போனவன் தாரணி அவள் போனை நோண்டிக் கொண்டிருப்பதை பார்த்து செல்லமாக தலையில் கொட்டினான். “எவ்வளவு முக்கியமான விஷயம் பேசிக் கொண்டிருக்கிறேன். அங்கே என்ன செய்கிறாய்?”

” அதைவிட முக்கியமான விஷயம் பார்த்துக் கொண்டிருக்கிறேன்”

” அது என்ன விஷயம்?” என்றவனிடம் போனை உயர்த்தி காட்டினாள்.

” இது திவ்யா அன்று சொன்ன பிரக்னன்சி ஆப். இதனை என் போனில் டவுன்லோட் செய்து விட்டேன்.இனி  இது நமக்கு அவசியமாக தேவைப்படும் என்று நினைக்கிறேன்” வெட்கத்தில் முகம் சிவக்க தாரணி சொல்ல,

” ம்ஹூம்”என்றான்  பூரணசந்திரன். “நீ ரொம்பவே லேட் கண்ணு. ஒரு மாதத்திற்கு முன்பே என் போனில் நான் அந்த ஆப்பை டவுன்லோட் செய்துவிட்டேன். எப்படி உன்னிடம் சொல்வது என்று தெரியாமல்தான் இவ்வளவு நாட்களாக யோசித்துக் கொண்டிருந்தேன்”

” அடப்பாவி கரியா! ஒரு மாதத்தை வேஸ்ட் பண்ணி விட்டாயே!” தாரணி கத்த, “ஏய் டா சொல்ற… உன்னை..?” பூரணசந்திரன் அவள் மேல் பாய்ந்தான்.

 கணவனும் மனைவியும் ஒருவர் மனதில் ஒருவர் ஊஞ்சலாக ஆடியபடி தங்கள் தாம்பத்தியத்தை இனிமையாக தொடங்கினர்.

-நிறைவு – 




What’s your Reaction?
+1
45
+1
15
+1
4
+1
0
+1
2
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!