Serial Stories ஜில்லுன்னு ஒரு நெருப்பு

ஜில்லுன்னு ஒரு நெருப்பு-4

4

தன் உடம்பின் மீது ஒரு பெரிய பாறாங்கல் விழுந்து அழுத்துவதைப் போல் மூச்சுத் திணற, வேனின் பின் பகுதியில் ஆழ்ந்த உறக்கத்தில் கிடந்த கிருபை மெல்லக் கண் விழித்தாள். வெள்ளை வெளேரென்று பனிக்கரடி போலிருந்த வெள்ளைக்காரச் சிப்பாயொருவன் தன் மேல் படுத்திருக்க, அவனைத் தள்ளிவிட முயற்சித்தாள்.  வாயில் ஊதி ஒரு தென்னை மரத்தைச் சாய்க்க முடியுமா?

பத்து நிமிடங்களுக்குப் பிறகு அவனாக எழுந்த பிறகு அவள் உடம்பு முழுவதும் துவைத்துப் போட்டது போல் வலித்தது.  இடுப்புப் பகுதியில் தீப்பற்றிக் கொண்டாற் போல் அசுர எரிச்சல். எழ முயற்சித்தால் கால்களிரண்டும் தள்ளாடின.  

தனக்கு என்ன நடந்தது என்று கூடப் புரியாமல் வலியால் “ஓ….”வெனக் கதறினாள்.

அந்தக் கத்தலைத் தடுத்து நிறுத்தும் விதமாய் இன்னொரு முரட்டுக்கை அவள் வாயைப் பொத்தியது. 

“ம்ம்ம்… ம்ம்ம்…” என்றபடி அவள் சுதாரித்து நிற்பதற்குள் அவளைக் கீழே தள்ளி, அவள் மேல் படர்ந்தான் இன்னொரு சிப்பாய்.

மீண்டுமொரு போர்க்களம்.

அவன் எழுந்த போது கிருபை முக்கால் மயக்க நிலைக்குப் போயிருந்தாள்.  தான் எங்கிருக்கின்றோம்?… தனக்கு என்ன நேர்ந்தது?… தூங்கிறோமா?… செத்து விட்டோமா? எதுவுமே புரியாத நிலையில் ஜடம் போல் கிடந்தவளை அவர்களிருவரும் அலாக்கத் தூக்கி, வேனுக்கு வெளியே பரந்து கிடந்த மண் மேட்டில், கசங்கிப் போன காகிதத்தை வீசியெறிவது போல் வீசியதும், வேன் “விர்ர்ர்ர்”ரென்று புறப்பட்டு, புழுதியைக் கிளப்பிக் கொண்டு பறந்தது.




குப்புற விழுந்தவள் நொடியில் மயக்கமானாள்.

சரியாக மூன்று மணி நேரத்திற்குப் பிறகு கண் விழித்தவள், மெல்லக் கையை ஊன்றி எழுந்து நின்றாள்.  நேராய் நிற்க முடியாதபடி அவள் கால்கள் தள்ளாடின.  அவள் வாய் அவளையுமறியாமல்  “தண்ணி… தண்ணி” என்று பிதற்றின.

மீண்டுமொரு மயக்கத்திற்குப் போகும் நிலையிலிருந்தவள் மேல் அருமே வந்து நின்ற ரோல்ஸ்ராய்ஸ் காரின் ஹெட்லைட் ஒளியைப் பீச்சியது.

காருக்கு வழி விட நினைத்தவளால் அது முடியாமல் போக, அப்படியே காரின் பானெட் மீது சாய்ந்தாள்.

கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள் வெள்ளுடை சிஸ்டர் சகாயமேரி.

துவண்டு கிடந்த கிருபையைப் பார்த்தது, “ஓ… ஜீசஸ்” என்றவாறே அவளருகே சென்று, அவள் தலையைத் தொட்டு, “பேபி… பேபி” என்றழைத்தாள்.

கிருபையிடம் எந்தவித சலனமுமில்லாது போக அவலை அப்படியே தூக்கி அந்து காரின் பின் இருக்கையில் கிடத்தி, வேக வேகமாகச் சென்று வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.

கார் பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த பாண்டிச்சேரி சாலையில் விரைந்தது.

****

பாண்டிச்சேரி எல்லைக்குள் அந்தக் கார் நுழையும் போது, கீழ்வானம் லேசாய் வெளுக்கத் துவங்கியிருந்தது.

சிரியன் சர்ச்சுக்கு சொந்தமான அந்த இலவச மருத்துவமனை முன் அந்தக் கார் நின்றதும், சிஸ்டர் சகாயமேரி பின் இருக்கையில் கிழித்துப் போட்ட நாராய்க் கிடந்த கிருபையைத் தன் தோளில் தூக்கிச் சுமந்தபடி மருத்துவமனைக்குள் ஓடினாள்.

அவள் ஓடி வருவதைக் கண்டு பிரெஞ்சுக்காரிகளான இரண்டு நர்ஸுகள் பதட்டமாய் இவளை நோக்கி ஓடி வந்தனர். அவர்கள் அருகில் வந்ததும், “கிரிட்டிகல் கண்டிஷன்!… ஸ்டார்ட் டிரீட்மெண்ட் இம்மீடியட்லி” என்றாள் சகாயமேரி.




“ஓ.கே. சிஸ்டர்” என்றபடி அவர்கள் பக்கத்திலிருந்த ஒரு அறைக்கு சகாயமேரியை இட்டுச் சென்று அங்கிருந்த படுக்கையில் கிருபையைக் படுக்க வைத்தனர். 

ஒரு நர்ஸ் ஓடிப் போய் சீஃப் டாக்டரை அழைத்து வந்தாள்.

அந்த டாக்டரும் ஒரு பிரெஞ்சுக்காரியாய் இருந்த போதிலும் மிகவும் சாந்தமான பெண்ணாயிருந்தாள்.  “நீங்க கொஞ்சம் வெளிய வெய்ட் பண்றீங்களா?” என்று சகாயமேரியைப் பார்த்து அந்த சீஃப் டாக்டர் சொல்ல, “ஓ.கே. டாக்டர்” என்றபடி அவள் வெளியே வந்தாள்.

சற்றுத் தள்ளியிருந்த அந்த பெஞ்சில் சென்றமர்ந்த சகாயமேரிக்கு நெஞ்சே வலித்தது.  “யார் இந்த சிறுமி?… பார்த்தால் இந்தியப் பெண் போலத்தான் இருக்கா… இவள் எதுக்கு அந்த ஏரியாவிற்குப் போனாள்?… அது ஆங்கில ராணுவத்தின் கண்ட்ரோலில் இருக்கும் ரெஜிமெண்ட் ஏரியா அல்லவா?… அங்கிருக்கும் சிப்பாய்களெல்லாம் ஈவு… இரக்கம் எதுவும் துளிக்கூட இல்லாத காட்டு மிருகங்கள் அல்லவா?”

இருபத்திஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, அந்த அறையை விட்டு வெளியே வந்த சீஃப் டாக்டரைப் பார்த்ததும் வேக வேகமாய் ஓடி வந்தாள் சகாயமேரி.  “டாக்டர்.. அந்தச் சிறுமிக்கு எப்படியிருக்கு?” கேட்டாள்.

சகாயமேரியை மேலிருந்து கீழ் வரை பார்த்த அந்த லேடி டாக்டர், “அந்தச் சிறுமிக்கு….நீங்க….?” கேட்க,

“டாக்டர்… அந்தச் சிறுமி யார்ன்னே எனக்குத் தெரியாது!… நான் கார்ல வந்திட்டிருக்கும் போது நடு ரோட்டுல கண்கள் மேலே செருகிய நிலையில் தள்ளாடியபடி நடந்து வந்திட்டிருந்தா இந்தச் சிறுமி!… பக்கத்தில வந்ததும் நான் காரை நிறுத்தினேன்!… அடுத்த நிமிடமே அவள் என் காரின் முன்புற பானெட்டின் மேல் சாய்ந்து மயங்கி விட்டாள்!… ஒரு ட்ரு கிறிஸ்டியனான என்னால் அவளை அப்படியே விட்டுட்டுப் போக மனசு வரலை!… அதான் என் காரிலேயே தூக்கிப் போட்டுட்டு இங்கே வந்தேன்!.. சொல்லுங்க டாக்டர் அந்தச் சிறுமியோட உயிருக்கு எந்த ஆபத்துமில்லையே?”  “பட…பட”வெனச் சொன்னாள் சகாயமேரி.

“உங்க பேரு?” லேடி டாக்டர் கேட்க,

“சகாய மேரி டாக்டர்”

வெறுமையாய்ச் சிரித்த அந்த டாக்டர், “அந்தச் சிறுமியை ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ரேப் பண்ணியிருக்காங்க… மே பி மிலிட்டர் ஆட்கள்” என்றார்.

“ஹக்”கென்று அதிர்ந்தாள் சகாயமேரி.

“என்ன டாக்டர் சொல்றீங்க?… அந்தப் பொண்ணுக்கு அதிகபட்சம் பத்து வயசுதானிருக்கும்… அவளைப் போய் ரேப் பண்ணியிருக்காங்களா?… கர்த்தரே… இந்த உலகம் எங்கே போயிட்டிருக்கு?” மேலே பார்த்து ஜெபித்தாள்.

“சிஸ்டர்… அந்தச் சிறுமிக்கு நிறைய பிளட் போயிருக்கு!… அதனால உடம்பு ரொம்ப வீக்காயிருக்கு!… உடனடியா பிளட் குடுத்தாகணும்!… இல்லேன்னா டேஞ்சராயிடும்” என்று லேடி டாக்டர் சொல்ல,




“என்ன குரூப் பிளட் டாக்டர்?”

“ஏ பாசிட்டிவ்”

“கடவுள் கிருபையில்…. என்னோட குரூப்பும் ஏ பாசிட்டிவ்தான்!… கமான் டேக் மை பிளட்… எவ்வளவு தேவையோ எடுத்துக்கங்க டாக்டர்” சகாயமேரி சந்தோஷமாய்ச் சொன்னாள்,

யார் என்று கூடத் தெரியாத ஒரு சிறுமியை தன் ரத்தத்தைக் கொடுத்துக் காப்பாற்றத் துடிக்கும் சகாயமேரியை நெகிழ்வோடு பார்த்தார் பிரெஞ்சு நாட்டுப் பெண்ணான அந்த லேடி டாக்டர்.

மூன்று நாட்களுக்குப் பிறகு ஓரளவிற்குத் தேறியிருந்த கிருபையைக் காண வந்தாள் சிஸ்டர் சகாயமேரி. “என்னம்மா இப்ப உடம்புக்குத் தேவலையா?… வலியெல்லாம் போயிடுச்சா?” கேட்டவாறே கிருபையின் தலையை இதமாக வருடினாள்.

தாயன்பு என்பதை வெறும் வாய் வார்த்தைகளால் மட்டுமே அறிந்திருந்த அந்தச் சிறுமி திக்குமுக்காடிப் போனாள். சகாயமேரியின் ஸ்பரிசத்தில் தாயன்பு எப்படியிருக்கும் என்பதை அடையாளம் கண்டு கொண்ட கிருபை வாய் திரந்து பதில் பேச முடியாமல் கண்ணீரால் நன்றி சொன்னாள்.

“நோ… நோ… அழக் கூடாது!… நான் இருக்கேன் உனக்கு!… ஆமாம்… நீ எந்த ஊரு?… உன்னோட அப்பா… அம்மா யாரு?.. எங்க இருக்காங்க?ன்னு சொல்லு நானே உன்னைக் கொண்டு போய் அவங்களோட சேர்த்து வைக்கறேன்”

ஏற்கனவே கண் கலங்கியிருந்த கிருபை வாய் விட்டே அழத் தொடங்கினாள்.   “அட… இப்பத்தான் அழக்கூடாது!ன்னு சொன்னேன்… சரி சொல்லு உன்னைப் பெத்தவங்க எங்கே இருக்காங்க?”

உதட்டைப் பிதுக்கி, “அவங்க ரெண்டு பேருமே மேலோகத்துக்குப் போயிட்டாங்க!” என்றாள் கிருபை கண்ணீரோடு.

தொடர்ந்து அதைப் பற்றிப் பேசி அவளைக் மேலும் சோகப்படுத்த விரும்பாத சகாயமேரி, “சரி..சரி…விடு!… அதான் நான் இருக்கேன் அல்ல?… அப்புறமென்ன உனக்கு?”.. இனிமே உனக்கு அப்பா… அம்மா எல்லாமே நான்தான்… என்ன சரியா?” என்று சொல்லியபடி எழுந்தாள்.  “நல்லாத் தூங்கி ரெஸ்ட் எடு… நான் இப்பப் போயிட்டு நாளைக்கு வர்றேன்” நகர்ந்த சகாயமேரியின் கைகளை விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள் கிருபை.

“ஏம்மா?” என்று கேட்டபடி அவளை மார்போடு அணைத்துக் கொண்ட சகாயமேரி, “உன்னை விட்டுட்டுப் போயிடுவேன்னு கவலைப்படறியா?… டோண்ட் வொரி… போகவே மாட்டேன்!… என்னோட கிருபையை நானே வளர்ப்பேன்… நல்லா படிக்க வெச்சு பெரிய ஆளாக்குவேன்!… ஆமாம் நீ எதிர்காலத்துல என்னவா ஆகப் போறே?” தலையைச் சாய்த்துக் கேட்டாள்.

“ம்ம்ம்… டாக்டர்”

“அவ்வளவுதானே?… நானாச்சு உன்னை டாக்டராக்க?… எங்கே சிரி… சிரி”

வேதனை கலந்த சிரிப்பொன்று அந்தப் பிஞ்சு உதடுகளில் விரிய, சிஸ்டர் சகாயமேரி மன நிறைவுடன் வெளியேறினாள்.

விதி தன் திருவிளையாடலுக்குத் தேர்ந்தெடுத்திருக்கும் அடுத்த நபர் அந்த சகாயமேரிதான் என்பது யாருக்குமே தெரியாதல்லவா?




What’s your Reaction?
+1
6
+1
11
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!