Serial Stories இது ஒரு காதல் மயக்கம்

இது ஒரு காதல் மயக்கம்-22

22

” அந்த அபிஷேக் சுகந்திக்கு பொருத்தமானவனாக இருப்பான் என்று நினைக்கிறாயா ?  ”   அன்று இரவே தன் அறை தேடி வந்து மயில்வாகன்ன் கேட்ட கேள்விக்கு ஆச்சரியமானாள் தாரிக்கா.

” உங்களுக்கு அபிஷேக்கை பற்றி தெரியாதா ? “

“அவனைப் பற்றி எனக்கு எப்படி தெரியும் ?  அவனை காரணமாக வைத்துத்தான் சுந்தரேசன் மாமா சுகந்தியை அவர் பக்கம் இழுக்க நினைத்தார். பெண் குழந்தை வளரும் வரை தாயின் பொறுப்பாம். வளர்ந்தபின் அவளது திருமண பருவத்தில் தந்தையிடம் ஒப்படைத்து விட வேண்டுமாம் .தந்தையால் தான் அவளுக்கு நல்ல துணையை கொடுக்க முடியுமாம். அந்த நல்ல துணை எனது தங்கை மகன் அபிஷேக் தான் என்று கூறிக் கொண்டு தான் அவளை எங்கள் வீட்டிலிருந்து அழைத்துப் போய் விட முயற்சித்துக் கொண்டிருந்தார். அதனால் எனக்கு அவன் மீது பெரிதான அபிப்ராயம் எதுவும் கிடையாது “

” ஆனால் அன்று அவர் உங்கள் போனிற்கு வந்தாரே ?   நான் உங்கள் இருவருக்கும் பேச்சுவார்த்தை இருக்கிறது என்று நினைத்தேன் “

“இல்லை .அவன் இப்படி அடிக்கடி என்னுடன் பேச முயல்வான்.  நேரிலோ போனிலோ .நான் எதற்குமே அவனுக்கு பிடி கொடுத்ததில்லை “

” ஏன் இப்படி…?  இரண்டு வார்த்தை பேசி இருக்கலாம் இல்லையா ? .பிரச்சனை என்றோ முடிந்து இருக்கும். இதோ இப்போது நான் தேடிப்போய் பேசியதால் எவ்வளவோ பிரச்சனைகள் முடிந்துவிட்டன.”

” அப்படி என்று உனக்கு என்ன நிச்சயம் ? ம் …இதுபோல் தேடிப்போய் பேசுவதற்கெல்லாம் உனக்கு உதவியது யார் ? “

” அது ….செவ்வரளி , சம்பங்கி”

” ம்… நினைத்தேன். அக்கா என்று கூப்பிட வைத்து அவர்களை உன் வசம் இழுத்துக் கொண்டாய் போலும். எவ்வளவு எளிதாக எல்லோரையும் வசியம் செய்கிறாய் .” அவன் கண்கள் ஏதோ செய்தி சொல்லியது

” வசியமெல்லாம் செய்யவில்லை .அவர்களுக்கு நியாயமானதை செய்தேன்.  மனிதர்களுக்கிடையே  உயர்வு தாழ்வு ஏன் …? ”  தாரிகா சீறினாள்.

” சரிதான்மா. புரட்சி பெண்மணியே உன் வம்புக்கு நான் வரவில்லை. என்னை விட்டுவிடு”  மயில்வாகனன் உடனடியாக சரணாக …

”  அதெப்படி விட முடியும் ? அது ஊர் பிரச்சனை.  அதை விடுங்கள் இப்போது நம் குடும்ப பிரச்சனை தீரவில்லை என்றா சொல்கிறீர்கள் ? ”  தாரிகாவின் குரலில் சிறு கலக்கம் .

”  ம் …பார்க்கலாம் ஏதோ செய்திருக்கிறாய் .இங்கே குடும்பமும் தொழிலும் ஒன்றுக்குள் ஒன்று தொடர்புடையவை .ஒன்றில் ஏற்படும் மாற்றம் மற்றொன்றை பாதிக்கும். இது …சரி நான் பார்க்கிறேன்… சரி பார்க்கிறேன் …” தெறித்த உறுதியுடன் மயில்வாகனன் பேச்சை முடிக்க முயன்றான் .

”  அபிஷேக்கின் அன்பு உண்மைதான் .அவரை தவறாக நினைக்க வேண்டாம் .அதனால் நமக்கு எந்த பாதிப்பும் வராது .

 அவர் உங்களிடம் சுகந்தியை பற்றித்தான் பேச நினைத்திருக்கிறார்.  சுகந்தியின் மீது அவருக்கு இருக்கும் காதலை உங்களிடம் தெரிவித்துவிட முயன்றிருக்கிறார்  ” இதனைச் சொல்லியபடி தாரிகா மயில்வாகனின் முகத்தை கூர்ந்து பார்த்தாள் .எந்த உணர்ச்சியும் காட்டாமல் கற்பாறையாய் இறுகியிருந்தது அவனது முகம்




“சை …ஸ்டோன் பேஸ் ” மனதிற்குள் புலம்பினாள்.

“அவனை என்னால் நம்ப முடியவில்லை “உறுதியோடு ஒலித்தது மயில்வாகனன் குரல் .

” ஏன் ? “

” அவன் நிறைய படித்திருக்கிறான். நல்ல வேலையில் இருக்கிறான்.  நிறைய சொத்துக்களும் இருக்கிறது .சாதாரணமான சுகந்தியை அவன் விரும்புகிறான் என்றால் என்னால் நம்ப முடியவில்லை “

“உண்மையான அன்பிற்கும் காதலுக்கும்   இடையில் படிப்பு அந்தஸ்து வருவதில்லை.”  அவனுக்கு எதையோ உணர்த்திவிட முனைந்தாள் .

“அதனை நீ சொல்கிறாயா ? ” இந்தக் கேள்வியின் அர்த்தம் தாரிகாவிற்கு புரியவில்லை .

“என் மனதை நான் தானே சொல்ல வேண்டும் “குழப்பமாக அவனைப் பார்த்தாள்.

” உன் மனது இதுதானா ? “உறுதிப்படுத்திக் கொள்வது போல் இருந்தது அவனது குரலில்.

”  அபிஷேக் –  சுகந்தி பற்றிய என் மனதை சொன்னேன்.  மற்றபடி நீங்கள் கேட்க வருவது எனக்குப் புரியவில்லை . “தாரிக்கா உண்மையைத்தான் சொன்னாள். மயில்வாகனன் தோள்களை குலுக்கி கொண்டான் .

“நடப்பது நடக்கட்டும் “அலட்சியமான பதில் .

 தாரிகாவிற்கு கோபம் வந்தது .பெரிய இவன்…. எதையும் வெளிப்படையாக பேச மாட்டான். அரைகுறையாக பேசிக்கொண்டு… சொல்ல நினைப்பதை முழுதாக சொல்லாமல் சை …போடா , துடித்த வார்த்தைகளை சத்தம் வெளியில் வராமல் உதடை கடித்தாள். ஆனாலும் அவள் இதழசைந்த  ஓசை கூட அவனுக்கு கேட்டுவிட்டது போலும். வேகமாக திரும்பினான்.

” என்னடி சொன்னாய் ? ” அவளை நெருங்கினான் .

“இன்று ரோட்டில் வைத்து கூட ” டா ” சொன்னாய்தானே..? ”   தாரிக்காவின் இருபுறமும் கைகளை ஊன்றி அவளை சுவற்றோடு சிறைப்படுத்தினான்.

கன்னங்கள் ரோஜாவாக தாரிக்காவின் இதழ்கள் சூரியகாந்தியானது.  மறுப்பும் ஏற்புமாக அவனது கண்களை சந்திக்கும் தெம்பின்றி கையற்ற வெள்ளை பனியன் அணிந்திருந்த அவனது தோள்களில் சுருண்டிருந்த கருப்பு முடிகளில் பார்வையை பதித்திருந்தாள் தாரிகா.

” அராஜகம் செய்தால் அப்படித்தான் கூப்பிடுவேன் ” சவால் போல் இல்லை அவளது குரல்.  செல்லமாய் சினுங்கியது அம்மாவிடம் பருப்புச் சோறு கேட்கும் மழலையினுடையதை  போல.

” அராஜகம் …? செய்து காட்டவா …? ”  குரல் குழைந்த அடுத்த நொடியில் மயில்வாகனனும் பருப்புருண்டை உருட்டி தரும் தாயாகவே மாறினான். ஆனால் அது ஒரே நொடி தான் .அந்த நொடியின் இறுதியில் மீண்டும் ஓர் கற்பாறை தோற்றம் .

 ” படுத்து தூங்கு .காலையில் பேசிக்கொள்ளலாம் ” சட்டென திரும்பி அறையைவிட்டு வெளியேறி விட்டான்.

தாரிகாவின் அந்த இரவு தீச்சுடர் பொழியும் நிலவின் அருகாமையை கொண்டிருந்தது.

” திருவிழா வருகிறதும்மா . நிறைய வேலைகள் இருக்கிறது ”  மயில்வாகனன் தாயிடம் சொல்லிக் கொண்டிருப்பதை கேட்டாள் தாரிகா.




“என்ன திருவிழா ? என்ன வேலைகள் ?”ஆவலுடன் கேட்டாள்.

”  நம்மூர் முத்தால பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா.  மிகவும் விமர்சையாக விமர்சையாக இருக்கும் .இதுவரை கோவில் திருவிழாக்கள் பார்த்திருக்கிறாயா? ” மயில்வாகனன் கேட்க உதட்டை பிதுக்கினாள்.

” இதுவரை இல்லை .இப்போது பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது என்னை கூட்டி போகிறீர்களா ? “

 ” ஊரே கலகலப்பாக இருக்கிறது .அவளையும் கூட்டிக்கொண்டு போய் காட்டு மயிலு ”   தமயந்தி சொல்ல இப்போது மயில்வாகனன் உதடு பிதுக்கினான் .

” வெளியூர் வேலை இருக்கிறதும்மா .நீங்களே இவளைக் கூட்டிப் போங்க “

அலட்சிய கையசைவுடன் நடந்தவனை ஆத்திரமாய் பார்த்தாள்.

” அப்படி என்ன வேலை வந்துவிட்டது உங்களுக்கு ? ”  அறை வாசலில் வந்து நின்று கேட்டவளை திரும்பியும் பார்க்கவில்லை அவன் . தனது உடைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான் .

“இரண்டு நாட்கள் வெளியூர் வேலை .முக்கியமான வேலை. வந்து சொல்கிறேன்.”  அவள் முகம் பாராமலேயே பேசினான்.

 விடுவிடுவென நடந்து போய் அவன் எதிரில் நின்ற தாரிகா அவன் தோள்களைப் பற்றி தன் பக்கம் திருப்பினாள் .”அப்படி என்ன வேலை ?திருவிழாவை கூட பார்க்கமுடியாமல்…”

” அதுதான் வந்து சொல்கிறேன் என்றேன்னே …” தோள் தொட்ட கையை உதறினான்.

 உதட்டை மடித்து கோபத்தை அடக்கியவள் ,  சட்டென எம்பி அவன் மீசையை இரு பக்கமும் பிடித்து வெடுக்கென்று இழுத்தாள் .” போடா மீசைக்காரா ….உன்னோடு பேச மாட்டேன் .” சொன்னதோடு தடதடவென கீழே இறங்கிப் போய் தமயந்தியின் அருகே பாதுகாப்பாக இருந்து கொண்டாள்.

பின்னால் வருவானோ என்ற அவளது எதிர்பார்ப்பை பொய்த்து போக வைத்து விட்டு மயில்வாகனன் கிளம்பிப் போய்விட்டான் .ஊரே அமளி துமளி பட்டுக்கொண்டிருந்த திருவிழா தாரிகாவின் மனதினை அவ்வளவாக ஒட்டவில்லை.

குடை ராட்டினங்கள் , நீர் மோர் , சர்பத்  , வளையல் ,  ரிப்பன் கடைகள் என புதிது புதிதாக முளைத்திருந்த கடைகள் . கரகாட்டம் , ஒயிலாட்டம் , தப்பாட்டம் என நித்தம் ஒரு கிராமிய கலைகளென முத்தாலம்மனுக்கான கொண்டாட்டங்களுடன் ஊர் ஜே ஜே என்றிருந்தது . தாரிகா தமயந்தியின் முறைப்பை மீறி செவ்வரளி , சம்பங்கியோடு சேர்ந்து ஊர் சுற்றினாள். கை நிறைய கண்ணாடி வளையல்களை வாங்கிப் போட்டுக் கொண்டாள். ஆரஞ்சு கலர் ரிப்பன் வாங்கி சடையின் நுனியில் கட்டிக் கொண்டாள்.  தலை நிறைய கனகாம்பரம் வாங்கி வைத்துக் கொண்டாள் .  மனதை அழுத்தும் பிரச்சனையிலிருந்து தப்பிக்கவோ என்னவோ …பக்கா கிராமத்து பெண்ணாகி  திருவிழாக் கூட்டத்தோடு கலந்து போனாள் .

வெற்றிலையின் காம்பு கிள்ளி லேசான சுண்ணாம்பு தீற்றலோடு கொட்டை பாக்கொன்றை உள் வைத்து மடித்து செவ்வரளி மென்று கொண்டிருக்க ,  தானுமே முயன்றாலென்ன என்று அவளிடம் வாங்கி தன் வாயினுள் அதக்கினாள். காரமும் , துவர்ப்புமாக அதன் சுவை பிடிக்காமல் போக , துப்பி விடலாமென சற்று ஓரமாக நகர்ந்த போதுதான் அதை பார்த்தாள் .

யாரோ இருவர் ஒரு பெண்ணை வாயை பொத்தி இழுத்துப் போய் கொண்டிருந்தனர் .  முகம் மறைத்த மரக்கிளைக்கு குனிந்து கவனித்து பார்த்தவள் அதிர்ந்தாள் .

மயில்வாகனன் சொன்னது உண்மைதானோ …? நான் ஏதோ தப்பு செய்து விட்டேனோ …? மறுகினாள் .

அவளது மறுகலுக்கு  காரணம் இருந்தது  .அங்கே இழுத்துக் கொண்டு போகப்பட்டுக் கொண்டிருந்தவள் சுகந்தி .




What’s your Reaction?
+1
22
+1
12
+1
0
+1
0
+1
1
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!