Serial Stories இது ஒரு காதல் மயக்கம்

இது ஒரு காதல் மயக்கம்-18

18

 இவனா …? அபிஷேக் என்றால் …சுந்தரேசனின் தங்கை பையன்தானே …? இவன் ஏன் போன் செய்கிறான்.  தாரிகா யோசித்துக் கொண்டிருக்கும் போதே போன் அடித்து நின்றது . இவர்கள் இருவருக்குள்ளும் தொடர்பு இருக்கிறதா …? பேசிக் கொண்டுதான் இருக்கிறார்களா …? குழம்பியபடி கட்டிலில் அமர்ந்து விட்டாள் .அவள் கை போனை வருடியபடி இருந்தது.

திடுமென போனின் மீது பார்வை போக ,  அந்த சிறிய சாதாரணமான போனை மயில்வாகனன் காதில் பொருத்தி பேசும் விதம் நினைவு வந்தது . கையை குவித்து போனை பொத்திப் பிடித்தபடி லேசாக தலை சாய்த்து போனில் வழியும் உரத்த குரலுக்கு ஈடாக குரல் உயர்த்தி பேசும் அவனது மேனரிசம் நினைவிற்குள் அலையாடியது .

மனதிற்குள் ஏதோ உந்த தாரிகா போனை அவனைப் போன்றே கைகளுக்குள் பொத்திப் பிடித்துக் கொண்டாள் .தலையை சாய்த்து காதில் போனை வைத்துக் கொண்டு ,  தொண்டையை செருமிக் கொண்டு ” லேய் யாருலே …என்னடா வேணும் …? ” அவனை குரலில் கொணர முயன்று கொண்டிருந்த போது பட்டென பாத்ரூம்  கதவு திறந்தது .

” என்ன பண்ற …? ” மயில்வாகனன் வந்து நின்றான் .

” ஒ…ஒண்ணுமில்லை …சும்மா …”  காதிலிருந்த போனை தன் தோள் சேலையில் துடைத்து விட்டு அவனிடம் நீட்டினாள்.

” யார் போனில் …? ” போனை கையில் வாங்காமல் கேட்டான் .

தாரிகாவிற்கு இப்போது போனில் வந்தது யாரென்ற நினைவு வர ”   அந்த அபிஷேக்குடன் உங்களுக்கு பேச்சு இருக்கிறதா …? ” வேகமாக கேட்டாள் .

” எந்த அபிஷேக் …? ”  மயில்வாகனன் நிதானமாக தோளில் கிடந்த துண்டின் நுனி திருக்கி காதிற்குள் விட்டபடி கேட்டான்.

தாரிகாவிற்கு அவனை அறைய வேண்டும் போல் இருந்தது .  திமிருடா உனக்கு பொறுமியபடி ” உங்கள் மாமாவின் தங்கை பையன் ” விளக்கம் கொடுத்தாள்.

” எந்த மாமா …? ” அடுத்த அலட்சியக் கேள்வி .

அடேய் …உள்ளுக்குள் அலறியபடி ” உங்கள் அத்தையின் புருசன் ”  குத்தல் பதில் கொடுத்தாள் .




” புருசன் …அப்படி அவர்கள் சொன்னார்களா என்ன …? ”  தலையை துவட்ட ஆரம்பித்தவனின் தோள் தொட்டு தன் பக்கம் திருப்பினாள் .

 ” என்னைப் பார்த்து பேசுங்க மயிலு. உங்களுக்கு அந்த மாமாவை தெரியாது ? “

 மயில்வாகனன் நேராக அவள் கண்களை சந்தித்தான்.  தாரிகாவும் விழிகளிரண்டும் மோதியதில் மின்னலொன்று உருவாகி இருவர் தேகத்திற்குள்ளும் மின்சாரம் பாய்ச்சியது . காலை குளியல் முடித்து புது மலராக மிதமான அலங்காரத்தில் முன் நின்றவளை அவனது விழிகள் விழுங்க , பரந்த உடம்பை மறைக்கவென அவன் மேலே போட்டிருந்த மெல்லிய துவாலையால் முடியாமல் நீராவியாக அது உடம்போடு ஒட்டிக் கிடக்க திமிறும் களிறாக நின்றிருந்தவனை அவளது விழிகள் ஒத்தி ஒத்தி பார்வையிட பிறவை அனைத்தும் மறந்து அவர்களை மட்டுமே அந்த நிமிடம் நினைத்திருந்தனர் இருவரும் .

ஆட்காட்டி விரல் நீட்டி அவள் மூக்கு நுனி தொட்டான் அவன் .” என்ன கூப்பிட்டாய் …? “

தாரிகா நாக்கைக் கடித்துக் கொண்டாள் .  இதென்ன இப்படிக் கூப்பிட்டு வைத்திருக்கிறேன் ?

” அந்தப் பெயர்தான் உனக்குப் பிடிக்காதே ? “

அவள் விழி விரித்தாள் .” அதெப்படி உங்களுக்கு தெரியும் ? “

” தெரியும்.  இந்தப் பெயரைத்தானே அன்று நீயும் அந்த கௌசிக்கும் கிண்டல் செய்தீர்கள் ? ” கேட்டு முடித்தபோது அவனது குரலில் கடினம் ஏறியிருந்தது.

 ” அ…அது ..உங்களுக்கு …” தடுமாறினாள்

” வாயசைப்பை வைத்தே பேச்சை ஓரளவு புரிந்து கொள்வேன்.  அத்தோடு அன்று உங்களுடைய முக பாவனைகள் வேறு …” மயில்வாகன ன்னின் கைகள் அவள் இரு தோள்களிலும் விழுந்து ஆத்திரமாக  நசுக்கியது .தாரிகாவின் முகம் வலியில் சுருங்கியது. அதனைக் கண்டதும் தன் கைகளை எடுத்துக் கொண்டவன் அவளுக்கு முதுகு காட்டியபடி சன்னலருகே போய் நின்று கொண்டான்.

” வெளியே போ ” சிங்கமாக கர்ஜித்தான்.  விரித்து துடித்துக் கொண்டிருந்த அவன் தோள்கள் கோபத்தை சொன்னாலும் அப்போது தன்னிலை   விளக்கம் தராமல் அங்கிருந்து நகர தாரிகா விரும்பவில்லை. இவனது திடும் திடுமென்ற கோபத்திற்கு இதுதான் காரணமா …? தன்னைத் தெளிவுபடுத்த விரும்பினாள் அவள்.

” உங்கள்  பெயர் அப்போது எங்களுக்கு  பரிட்சயமற்ற வித்தியாசமன  பெயர். அதனால்தான் அதனை …”

” கிண்டல் பேசி சிரித்தீர்களாக்கும் ? ” முகம் திருப்பாமலேயே சீறினான்.

” அம்மா உங்கள் பெயரை சொல்லி அறிமுகம் செய்து வைத்ததும் ,  எங்களுக்கு ஆச்சரியம் . மயில் என்ற பெயர் பொதுவாக பெண்களுக்கு சூட்டுவது. உங்களுக்கு அந்த பெயரென்றால் …எங்களுக்கு வித்தியாசமாகப் பட்டது. அத்தோடு …”

” மயிலில் ஆண் மயில் கிடையாதா என்ன ?  என் பெயர் மயிலை வாகனமாக கொண்டவன் எனப் பொருள்படும். அதாவது …”

” கடவுள் முருகனை குறிக்கும் ” தாரிகாவே விளக்கத்தை முடித்து வைத்தாள். அவனோடான சமாதானத்தை விரும்பினாள். ஆனால் அவனோ சற்றும் தளரவில்லை. முகத்தை திருப்பவும் இல்லை .

” இ..இப்போதுதான் இந்த விளக்கத்தை தெரிந்து கொண்டேன் …”  மெல்ல நுனிவிரல்களால் அவன் தோள் தொட்டாள்.

” ஓ …அப்போ  அந்த பஞ்சாயத்து தலைவர் …? ”  தோளை அசைத்து தன்னைத் தொட்ட அவள் விரலை உதறியபடி கேட்டவனின் குரலில் கோபம் சிறிதும் குறையவில்லை .




தாரிகா அவனருகே வந்து சன்னலில் சாய்ந்து கொண்டு அவன் முகத்தை பார்த்தாள் .” கொஞ்சம் யோசியுங்கள் .  அன்று நானும் கௌசிக்கும் மணமக்களாக ரிசப்சன் மேடையில் நின்று கொண்டிருக்கிறோம். அம்மா உங்களை ஊர்காரர் என்று பெயர் சொல்லி அறிமுகம் செய்கிறார்கள். மயில்வாகனன என்ற வித்தியாசமான பெயரோடு வேட்டி , சட்டையும் , முறுக்கு மீசையுமாக நீங்களும் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறீர்கள். கௌசிக் அமெரிக்காவில் படித்து வளர்ந்தவர். நான் சென்னை நாகரீகத்தில் வளர்ந்தவள். உங்களைப் பற்றிய எங்கள் கருத்துக்களை நாங்கள் பேசிக் கொண்டோம். அவ்வளவுதான் …”

தனது நிலைமையை நல்லபடியாக விளக்கி விட்டதாகவே தாரிகா நினைக்க , ரௌத்ரம் சுமந்தது மயில்வாகனின் முகம்.

”  ஓ …அவன் அமெரிக்காவில் படித்த உயர் குடிமகன் .நீங்களும் மெத்த படித்த மேதாவி மேடம். இருவருமாக கண்ணில் பட்டவர்களை கேலி பேசுவீர்களோ …? அந்த உயர்ந்தவன் தானே உன் கழுத்தில் தாலி கட்டிய கையோடு உன் அப்பாவிடம் சொத்துக்களை எழுதி தர  வேண்டுமென  கண்டிசன் போட்டவன் ? உன் மேதகு அப்பா அதற்கும் தலையாட்டிக் கொண்டு அவன் பின்னால் போனவர் தானே …? சீச்சி என்ன ஒரு தன்மானமில்லாத குடும்பம் .? உன் அம்மாவின் அழுகையை பார்க்காமல் உன்னை தூக்கி எறிந்து விட்டு வந்திருக்க வேண்டும் . தப்பு செய்துவிட்டேன் …”

மயில்வாகனின் துச்சமான  பேச்சு தாரிகாவின் மனதிற்குள் கங்குகளாக விழுந்தது .” போதும் …” கையை உயர்த்தி கத்தலாக சொன்னாள் .

 ”  சொத்துக்கள் வேண்டுமென கௌசிக் குடும்பத்தினர் கேட்டதும் முதலில் மறுத்தவர்தான் அப்பா. ஆனால் பிறகு யோசித்து மகளின் வாழ்க்கை பாழாகி விடுமோ எனும் பதட்டத்துடன்தான் கோபித்துக் கொண்டு போனவர்களை அழைத்து வர கிளம்பி போனார். ஆனால் எனக்கும் , அம்மாவிற்கும்  கௌசிக் குடும்பத்தினர் மேலிருந்த  மரியாதை போய் விட்டது .நாங்கள் இந்த திருமணத்தை நிறுத்த நினைத்தோம். அப்போது அம்மா சொன்ன யோசனைதான் உங்களைக் கல்யாணம் செய்து கொள்வது. அந்நேரம் எனக்கு வேறு எதையும் யோசிக்க முடியவில்லை. உடனே தலையசைத்து விட்டேன். ஆனால் நீங்கள் நானே நேரில் வந்து என்னைத் திருமணம் முடித்துக் கொள்ளுங்களென  கேட்க வேண்டுமென கண்டிசனெல்லாம் போட்டீர்கள் .வேறு வழியின்றி அதையும் நான் செய்தேன் . பிறகுதான் மகாராசா இறங்கி வந்து தாலி கட்டினீர்கள் . வேறு வழியின்றி நடந்த கல்யாணம்தான் இது. ஆனால் விலக முடியாது. அம்மாவிற்காகவாது நான் இங்கே வாழ்ந்தாகத்தான் வேண்டும். என் தலைவிதி இது …” படபடவென பேசி விட்டு அறையை விட்டு வெளியேறினாள் தாரிகா .

அவள் மனது கொதித்துக் கொண்டிருந்தது.இவன் என்னையும் ,  என் குடும்பத்தையும் என்ன நினைத்தான் …? இவன் சொடக்கு போட்டால் பின்னால் வருவோமென்றா …? அப்படி என்ன தவறு செய்து விட்டோமாம் …இவனுக்கு தலையாட்டுவதற்கு. பேசிய பேச்சுக்களுக்கு மன்னிப்பு கேட்காமல்  அவன் முகத்தில் விழிக்கப் போவதில்லை என தனக்குள் சூளுரைத்துக் கொண்டாள் .

அப்பா திரும்ப வருவதற்குள் இவர்கள்  திருமணத்தை செய்து வைத்து விட்ட அம்மா , இப்போது அப்பாவிடம் வதை பட்டுக் கொண்டிருப்பதை வேதனையுடன் எண்ணிப் பார்த்தவள் , இதையெல்லாம் கொஞ்சமாவது நினைத்துப் பார்க்கிறானா இவன் …? வெறுப்பை வளர்த்துக் கொண்டாள் .

மாடிப்படி இறங்கிக் கொண்டிருந்தவளின் கண்களில் சுகந்தி பட்டாள் .  ஒரு மாதிரி பதுங்கி பதுங்கி வீட்டிற்குள் நகர்ந்து கொண்டிருந்த சுகந்தியின் போக்கு  கண்ணில் பட்டதும் , தாரிகாவின்  மனம் யோசனையில் விழுந்தது .

எங்கே போகிறாள் இவள் …?  தாரிகா அவளைப் பின் தொடர ஆரம்பித்தாள்.




What’s your Reaction?
+1
18
+1
11
+1
1
+1
0
+1
3
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!