Serial Stories மனமென்னும் ஊஞ்சலேறி

மனமென்னும் ஊஞ்சலேறி-2

2

அவர்கள் படிப்பது மகளிர் கல்லூரி. மிகவும் கட்டுப்பாடான சட்டங்கள் அங்கு உண்டு.கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்த பிறகு மீண்டும் வெளியேற மாணவிகளுக்கு நிறைய கட்டுப்பாடுகள் இருக்கும்.தகுந்த காரணத்தோடான அவுட் பாஸ் இல்லாமல் அவர்களால் இடையில் வெளியேற முடியாது.கல்லூரி வளாகத்திற்கு உள்ளேயே வந்து நிற்கும் பேருந்திலிருந்து இறங்குபவர்கள் மாலை மீண்டும் அதிலேயே ஏறி வெளியேறும் வரை கூண்டுக்குள் அடைபட்ட புள்ளிமான்கள்தாம்.

பெண்களின்,ஒரு பச்சை பசுமை கூட கண்ணில் தட்டுப்பட மாட்டேனென்கிறது என்ற புலம்பலுக்கு ஏற்றார் போல்தான் சூழல் இருக்கும். முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே இருக்கும் கல்லூரியில் வாட்ச்மேன், ஆபீஸ் பாய் என ஓரிரண்டு வயதான ஆண்கள்தான்.

“ரொம்பவும் காஞ்சிதான் போயிருக்கீங்க,அதற்காக கண்ணில் பார்ப்பதெல்லாவற்றையும் சைட் அடிப்பதா?” தாரணி புன்னகையோடு கேட்டாள்.பஸ் அப்போது அந்த கருப்பண்ணசாமியை கடந்திருந்தது.

“என்ன கண்ணில் பட்டதெல்லாமா? இப்படி அக்றிணையாகவா சொல்வாய்?” வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு தயாரானாள் புவனா. அவர்கள் செட்டில் இந்த புவனா கிட்டத்தட்ட அவனுடைய விசிறி.

இது நிஜ கோபமா அல்லது கிண்டலா? தாரணி புவனாவை உற்றுப் பார்க்க,கோபமென்றே சொல்லின கண்கள். “ஏய் என்னடி?” தாரணி அவள் தோள் தொட்டு கேட்க “போடி அப்படி பேசாதே” திரும்பிக்கொண்டாள். 

தாரணிக்கு லேசான வருத்தம். “யார் என்னவென்று தெரியாதவனை போய்… என்னடி இது?” உரிமையாக புவனாவின் கையை பற்றி கேட்க அவள் கையை விடுவித்துக் கொண்டு நகர்ந்து அமர்ந்தாள். உன் புத்திமதி எனக்குத் தேவையில்லை என்ற செயலால் காட்டினாள்.

அன்று பின் மதிய பாட வேளையில் கரும்பலகைக்கும் டேபிளுக்கும் நடுவே அல்லாடிக்கொண்டு கையில் பிரித்து வைத்திருந்த தடிமனான புத்தக வாசகங்களை இவர்கள் மண்டைக்குள் எப்படியாவது திணித்து விட வேண்டும் என்ற வெறியோடு அபிநயித்துக் கொண்டிருந்த ஆசிரியை கமலவேணியை வாழ்க்கை வெறுத்து பார்த்து கொண்டிருந்தனர் மாணவிகள்.

” பாடம்தான் புரியவில்லை. தூங்கலாம் என்று முடிவெடுத்து செயல்படுத்தினாலோ மூஞ்சியிலேயே சாக்பீசால் அடிக்கும் இந்த துதிக்கை இல்லாத டைனோசர். நிம்மதியா தூங்க கூட முடியாம என்ன வாழ்க்கை இது?” புவனா முணுமுணுக்க சொக்கி துவண்ட இமைகளை எழுத்து பிரித்தபடி தாரணி தலையை உதறிக் கொண்டாள்

“எழுந்து ஓடிடலான்டி” புவனா ஐடியா கொடுக்க உடன் அவள் சொன்னதை செய்ய துடித்த மனதை அதட்டி அடக்கியபடி தோழியை முறைத்தாள்.

 “முறைக்காதடி ,என்னால் முடியல தெரியுமா? அமாவாசை இருட்டில் சுவருக்கு வெள்ளையடிக்க சொன்னால் எப்படி?” புவனா கேட்ட விதத்தில் பொத்துக் கொண்டு வந்த சிரிப்பை அடக்கியபடி “ஏன்டி உனக்குத்தான் அமாவாசை இருட்டு என்றால் அவ்வளவு பிரியமாச்சே?” தோழியை வாரினாள்.




உடன் புவனாவின் கண்களில் வந்துவிட்ட சொக்கலுக்கு ஆச்சரியமானாள். “அந்த அமாவாசைக்குள் கரைந்து காணாமல் போனால் கூட சந்தோஷப்படுவேன்டி” கவிதை பேசியவளின் தொடையை நறுக்கென கிள்ளினாள்.

“கொல்லப் போகிறேன் உன்னை_ இதென்ன உளறல்?”

“ஏய் கவிதை மாதிரி இல்லை? ஆஹா கவிதையேதான்” குதூகலித்ததோடு சற்றுமுன் தான் உளறியதை நோட்டிலும் கிறுக்கிக்கொண்டாள். 

“ஏன்டி அவர் பெயர் என்னவாக இருக்கும்?”

“எந்த சுவர்? ஓ, நீ சற்று முன்பு வெள்ளை அடிப்பதாக பேசினாயே அந்த சுவரா?”

“போடி ரசனை கெட்டவளே! ராஜகுமாரன்… அதுதான் அவர் பெயராக இருக்க வேண்டும். என் பிரியமான கருப்பு ராஜகுமாரன். டீயை தூக்கி ஆற்றும் போது அவர் கையை கவனித்தாயா? எவ்வளவு மேன்லி இல்ல!”

“புவனா உங்க வீட்ல உன் அம்மா அப்பா எத்தனையோ பெரிய கனவுகளோட உன்னை இன்ஜினியரிங் படிக்க வச்சுக்கிட்டு இருக்காங்க. நீயானா ஒரு ரோட்டோர ஹோட்டல்காரன் மேல இப்படி ஜொள்ளு ஊத்திக்கிட்டு இருக்குற!”

“நான் படிக்கிற படிப்புக்கு என் மனதுக்கும் சம்பந்தம் கிடையாதுடி. படிப்பு நம்மை பக்குவப்படுத்த தானே தவிர, அதுவே வாழ்க்கையாகிடாது.

அதை விடு, அடுத்த பீரியடை நாம் கட்டடித்து விடலாமா?” பேராசை மின்னும் கண்களுடன் கேட்டாள்.

“அடிப்பாவி ஏண்டி?”

“இந்த கமலா பரவாயில்லை, நெக்ஸ்ட் ஹவர் வசந்தா. சத்தியமா என்னால முடியாதுடி. உன் கால்ல வேணும்னாலும் விழுறேன். நாம போய் ஜாலியா ஒரு காபி குடிச்சிட்டு வரலாம்”

“மூணரை மணிக்கு நம்ம கேன்டின்ல காபி தயாராக இருக்காதே!” என்ற தாரணி அலறினாள் “ஏய் என்னடி பிளான் பண்ற?”

“நம்ம காலேஜுக்கு பக்கத்துல இருக்குற அந்த ஹோட்டலில் போய் ஒரு கப் காபி குடிச்சிட்டு வரலாம்னு…”

“இல்லை, முடியாது… நான் வரமாட்டேன்”

“ஏய் ப்ளீஸ் ஒரு மாதமாக பஸ்ஸில் உட்கார்ந்துகிட்டு தூரமாதான் பாத்துட்டு இருக்கேன். ஒரே ஒரு நாள் பக்கத்துல போயி ஒரு அஞ்சு நிமிஷம் பாத்துட்டு வந்துடலாம்பா”

“ஏண்டி உன் போதைக்கு நான் ஊறுகாயா? அதுக்கு வேற ஆள பாரு”

“வேற யாரை சேர்த்தாலும், இந்த விஷயம் காலேஜ் ஃபுல்லா பரவிடும். தனியா போறதுக்கு எனக்கு தைரியம் இல்லை. உன்னை விட்டா எனக்கு வேற கதியில்ல. ப்ளீஸ்பா” புவனா பெஞ்சுக்கு அடியில் குனிந்து நிஜமாகவே தாரணியின் கால்களை பற்றினாள்.

“கேர்ள்ஸ் என்ன நடக்குது அங்க?” கமலவேணி குரல் உயர்த்தி கேட்க, “என் பென் கீழே விழுந்துடுச்சு மேம் “கையில் பேனாவுடன் நிமிர்ந்தாள். 

“ஒழுங்கா நோட்ஸ் எடுங்க” மீண்டும் புத்தகத்திற்குள் போக, வெறுப்பாய் நோட்டை டப்பென்று மூடினாள் புவனா.” இந்தம்மா சொல்றத நோட்ஸ் வேற எடுப்பாங்களாக்கும்?”

அடுத்த பாடவேளை ஆரம்பிக்கும் முன்பு அவசரமாக தாரணியை இழுத்துக் கொண்டு வெளியே வந்தாள் புவனா. கல்லூரி வளாகத்தில் வலது ஓரம் ஒரு பாதாம் மரத்தின் கிளை காம்பவுண்ட் சுவரை தொட்டு நிற்கும். சில மாணவிகள் இந்த வழியை வாட்ச்மேன் கண்ணில் படாமல் கல்லூரியை விட்டு வெளியேறுவதற்கு பயன்படுத்திக் கொள்வார்கள்.

“எனக்கு பயமா இருக்குடி” தயங்கிய  தாரணியை கைப்பிடித்து மேலே ஏற்றிவிட்ட புவனா தானும் பின்னே ஏறினாள். இருவருமாக கல்லூரியை விட்டு வெளியேறி அருகில் இருந்த ஹோட்டலுக்கு நடந்தனர்.




இதற்கு முன்பு இந்த இடத்தில் ஒரு ஸ்டேஷனரி ஸ்டோர் தான் இருந்தது கடந்த ஒரு மாதமாகத் தான் இந்த இடம் ஹோட்டலாக மாறியிருக்கிறது. சாலைக்கு மேலே அமைந்திருப்பதால் ஹோட்டல் ஓரளவு நன்றாகவே நடப்பது போலிருந்தது.

முகத்தை, தலையை, உடையை என சரி செய்து கொண்டு கொஞ்சம் பரபரப்போடு நடந்த தோழியை புன்னகையோடு பார்த்தபடி உடன் நடந்தாள் தாரணி. ஆனால் ஹோட்டல் வாயிலை அடைந்ததும்…

பொங்கி வந்த சிரிப்பை வாயைப் பற்றி அடக்கி கொண்டாள். ‘ஙே’ என்று விழித்தபடி நின்ற தோழியின் தலையில் கொட்டினாள்.

” அமாவாசையை காணோமே! என்ன செய்யப் போகிறாய் புவனா?”

 அழுது விடுபவள் போல் முகத்தை வைத்துக் கொண்டிருந்தாளவள். “பட்ட பாடெல்லாம் வீண். இப்ப என்னடி பண்றது?”

” சமர்த்தா திரும்ப மரமேறி காலேஜ் குள்ள போயிட வேண்டியது” 

முன்னந்தலை, பின்மாலை சூரியனில் தகதகக்க… பாய்லர் அடுப்பின் முன் நின்றிருந்த அந்த ஆளின் மேல் புவனாவிற்கு அவ்வளவு கோபம் வந்தது. “இந்த ஆளெல்லாம் டீ போட வரலைன்னு யார் அழுதாங்க?”

“ஏய் என்னடி…? தாரணி தோழியின் பேச்சை ஆட்சேபித்துக் கொண்டிருக்கும் போது…

” வாங்க என்ன சாப்பிடுறீங்க?” என்ற குரல் அவர்களுக்கு பின்னிருந்து வர பெண்கள் இருவரும் துள்ளிக் குதிக்காத குறை.




What’s your Reaction?
+1
38
+1
24
+1
3
+1
3
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!