Serial Stories நீ காற்று நான் மரம்

நீ காற்று நான் மரம்-10

 10

 

தாராவின் கையில் மோகன் கை இருக்கும் படம் , இப்போது வீணா கையில்.

திரையில் ஒரு நாயகன் ஒரு நாயகியின் கையைப் பிடிக்கும் போதோ, ஒரு ஓவியத்தில் ஒரு ஆணின் கையை ஒரு பெண்ணின் கை பற்றும் போதோ,

ஒரு இளம் பெண்ணுக்கு ஏற்படும் உணர்வு இப்போது வீணாவுக்கு ஏற்படவில்லை…

தனக்கு சொந்தமானவனை அடுத்தவள் அபகரித்து விடுவாளோ என்ற அச்சம்,

இந்த மோகன் என்னும் அப்பாவிக்கு இந்த அபத்தம் புரியவில்லையோ என்ற குழப்பம்..

அந்த இடத்தை விட்டு அகன்றால் போதும் என்ற நினைப்பு வீணாவுக்கு வந்ததில் ஆச்சரியமில்லை.

வீணா அந்த புகைப் படங்களை வைத்து விட்டு அவ்விடத்தை விட்டு அகன்றாள்.

மோகன் எது நடக்கக் கூடாது என நினைத்தானோ அது நடந்தே விட்டது..

“இந்த ஃபேர்வெல் பார்ட்டி போட்டோ பற்றி அப்பா அம்மாவுக்கு தான் தெரியுமே தவிர முரளிக்கு கூட தெரியாதே…”

“இந்த போட்டோ வந்தவுடன் அதனை கிழித்து விடவேண்டும்” என நினைத்தவன் இப்போது’ நாவல் பழம் திருடி தின்று மாட்டிக் கொண்டவன் போல’ அகப்பட்டுவிட்டான்..

“என்ன சொல்லி சமாளிப்பது”,

என நினைத்து நினத்து சோர்ந்து விட்டான்.

படிப்பு மனதில் ஏறவில்லை..

வகுப்பில் வழக்கமாக தாராவை அலட்சியம் செய்யும் மோகனுக்கு அன்று அவளைப் பார்த்தாலே ஆங்காரமாக வந்தது….

“என்ன மோகன் உடம்பு சரியில்லையா…?”

சாதாரணமாகத் தான் கேட்டாள் வீணா.

“எனக்கு உடம்பு சரியில்லை என்று நீ ஒன்றும் அக்கறை செலுத்தத் தேவையில்லை..”

“ஏதோ ஆகி விட்டது உனக்கு”…

படித்தால் போதுமா…??

பழக வேண்டாமா..!!!!.”

“சீ…என் கிட்டே வராதே ..தள்ளி நில்லு..!!!”

சீறும் மோகனை முதல் முறையாகப் பார்த்தாள் தாரா..




“என்ன ஆயிற்று இவனுக்கு..”

பொது நண்பர்களிடம் “ஏன் மோகன் இப்படி இருக்கிறான்…”

“எரிந்துவிழ மாட்டானே…”

“நம் வலையில் இவன் விழ மாட்டானோ… “என்ற அச்சத்தில் கேட்டே விட்டாள்.

” நாங்க எதுக்கு தாரா… ‘வீணா’ மத்தவங்க விஷயத்துல தலையிடணும்..”

“நீயே அவனுக்கு இரவு போன் பண்ணிப் பாரு..இது தான் அவங்க வீட்டு நம்பர்” என கொடுத்தனர்..

இரவு மோகன் அறையில் படித்துக் கொண்டிருக்க, முரளி தூங்கி இருக்க,போன் அடிக்க,

“வீணா.. நான் மாமாவுக்கு சப்பாத்தி செஞ்சுண்டு இருக்கேன்.

“மாமா தான் ஒரு வேளை லேட்டாகும் என போன் செய்வார்…. நீ எடுத்துக் கேளேன்.”

“ஹலோ…யார் வேணும்..???”

“ஆண்ட்டி…நான் தாரா பேசறேன்…மோகனை கூப்பிடறீங்களா???”

“நான் உங்க ஆண்ட்டி இல்லை…யாருடீ நீ இந்த ராத்திரி வேளையில் மோகனைக் கூப்பிடறே…???”

“நீயெல்லாம் ஒரு பொண்ணா???

வைடி போனை..”போனை கட் செய்தாள் வீணா…

காலை முதல் மோகன் மேலும் இவள் மேலும் இருந்த கோபத்தை குரல் மூலம் போனில் கொப்பளித்து விட்டாள் வீணா..

“லவ் பேர்ட்ஸ் ” பேனா பத்தி மட்டும் தான் முரளி சொன்னான்…

இந்த போட்டோ விவகாரம் கேட்டா” தெரியாது” என்கிறான்..இப்போது மோகனுக்கே போன் செய்கிறாள் இவள்….ஆண்ட்டி என தன்னைப் போலவே உரிமையோடு கூப்பிடுகிறாள்..

“இதெல்லாம் யாரிடம் கேட்பது ,மோகனிடமா??? வேறு வினையே வேண்டாம்…அந்த ஊமைக் கோட்டானின் உள் மனசு திறக்காதே…”

“நான் போன வருடம் பத்து நாள் பழகி விட்டு, இப்போது பத்து மாசம் கழித்து வந்து உரிமை கொண்டாடுகிறேனோ..???மோகன் மீது..”

“பத்து மாசமா இந்த தனம் பாட்டி தினமும் ஏதாவது மோகன், முரளி கதை சொல்லி சொல்லி என்னை இப்படி கனவு உலகத்தில் தள்ளி விட்டு விட்டாளே…”

“பத்து மாசமும் தாரா தானே அவன் கூட படித்தாள்..”

“முரளி, ருக்கு மாமிக்கு கூட இவர்கள் விஷயம் தெரியாம இருக்கலாமே..”

“மோகன் ..என்ன இருந்தாலும் ஒரு ஆண் தானே..”

“போன வருஷம் தன் பின்னாடியே சைக்கிளில் வந்தவர்கள் எல்லாம், இந்த வீணா கண்டு கொள்ளவில்லை என்றவுடன் பாதையை மாற்றிக் கொண்டு விட்டனரே..வருடக் கடைசியில் வேறு வேறு சைக்கிள்கள் தானே பின் தொடர்ந்தன..”

“ஆண்கள் அவ்வப்போது மாறும் சபல புத்திக் காரர்கள் தானே..”

“சரி..இந்த மோகனிடம் அப்படி என்ன இருக்கிறது???.பேச்சு கூட சுவாரஸ்யமாக பேசத் தெரியாது…படிக்க மட்டும் தான் தெரியும்..நான் ஏன் இவனைப் பற்றியே நினைக்கிறேன்..”

“யாரும்மா போனில் ..மாமா தானா??”

“இல்லை ஏதோ ராங்க் கால் ஆண்ட்டி”

ருக்கு மாமியிடம் மெதுவாக கேட்கலாம் என நினைக்கும் போது வாசலில் கோவிந்தன் வந்து விட்டார்…




அடுத்தடுத்த நாட்களில் படிப்பும் நுழைவுத் தேர்வும் நடக்க, மோகன் வீணா பற்றியும் தாரா பற்றியும் மறந்து படிப்பில் முனைந்து எடுத்த செயலை வெற்றி கரமாக முடித்தான்..

ஆனால் தாராவும் மறக்க வில்லை..வீணாவும் மறக்க வில்லை..

தாரா நண்பர்கள் மூலம் மோகன் வீட்டுக்கு வீணா என்ற பெண் வந்திருக்கிறாள் என்றும் அவள் தான், தன்னை அப்படி போனில் ஏசினாள்,  அதனால் தான் மோகன் தன்னிடத்திலும் சீறினான் என அறிந்தாள்..

இந்த விஷயங்களால் மோகனின் மனம் சலனப் பட்டால், ,’தான்’ அவனை விட அதிக மதிப்பெண் வாங்கி விடலாமே…” “இதுவும் நல்லதற்குத் தான் ..அதனால் மோகன் மனத்தை, நமக்கு பதில் இந்த வீணா பாதித்து அவனை படிக்க விடாமல் செய்து விடுவாள்..

தனக்கு வேலை சுலபம்” எண்ணினாள்..

ஆனால் தன்னைப் பார்க்காமலே இப்படி

“சீ நீயும் ஒரு பொண்ணா..வைடி போனை” என்று அவமானப் படுத்தினாளே…

” நீ வைடி போனை என்றாயே..உன்னை வெச்சு செய்யறேன் இருடி..” என மனசுக்குள் கருவிக் கொண்டாள்..

தேர்வு முடிந்து வந்த மோகன்,

இன்று ஒரு வாரம் கழித்து முதன் முதல் வீணாவைத் தேடினான்..

இதற்கிடையே தாராவிடமிருந்து போன் வந்த அடுத்த நாள் விஜியும் ரகோத்தமனும்

வீடு பார்க்கக் கிளம்பி விட்டனர்…

தனமும் முரளியும் ஏதோ விளையாடிக் கொண்டிருக்க மனதில்அலை அடித்துக் கொண்டிருந்த வீணா,

சமையல் அறையில்,

” ஆண்ட்டி நானும் காய் நறுக்கறனே…”

“அலை பாயும் மனசு…கையில் கத்தி பட்டு,

மனசிலிருந்து வெளி வரத் தயங்கிய ரத்தம் இப்போ கை வழியே வழியத் தொடங்கியது..

” அச்சச்சோ…என்ன ஆச்சு…??”

“முரளி அடிக்கடி விஷமம் செய்து அடிபட்டுக் கொள்ளும் போது கட்டுப் போடுவது மோகனுக்கும், ருக்குவுக்கும் பழகிப் போனதுதானே…!!”

“விரலில் கட்டுப் போடும் போது வீணாவின் முகத்தைப் பார்த்த ருக்கு அவள் முகத்தில் தெரிவது விரல் வலி மட்டுமல்ல என அறிந்தாள்..

அவள் தாயுள்ளம் அந்த குழந்தையின் மனசில் ஏதோ ரணம் என தெரிந்து “ஏன் வீணா நேத்துலேந்து ஒரு மாதிரி இருக்கே…??”

“யாராவது கேட்க மாட்டார்களா ..”என ஏங்கிக் கொண்டிருந்த வீணா இப்போது நேற்று வந்த போன் பற்றி சொல்ல,

” அடி அசடே…நீ இதுக்கா கவலை படறே…”

என துவங்கி..

தாரா பற்றி மோகன் சொன்னதும் அவள் கோவிந்தனின் முதலாளி மகள் என்றும் சொல்லி,

“எதுக்கும் நீ அவ கிட்ட வம்பு வளர்க்காதே.. அவங்க பணக்காரங்க… பத்திரமா இரு ..” என எச்சரிக்க வீணா வின் இளம் பெண் மனது அந்த நேரத்துக்கு ஆறுதல் அடைந்தது..

ஒரு வார காலமாக கண்ணில் படாத வீணா இன்று மோகன் அறைக்குள் இருந்த விஜியின் பெட்டியை எடுக்க வர,

“அப்போது தான் வீணாவின் விரலில் இருந்த சிறு கட்டைப் பார்த்து…

லேசா பதறிப் போய்

“என்ன ஆச்சு வீணா…கைல என்ன கட்டு???”

கையை பிடித்தான் மோகன்.

மோகனின் கைப் பிடியிலிருந்த வீணா

சட்டென உதறிப் போக முயற்சிக்க, அவள் இடது கையில் இருந்த வளையல் அனைத்தும் நொறுங்கிச் சிதற,

அங்கே வாசற் படியில் ரகோத்தமன் நின்றிருந்தார்…




What’s your Reaction?
+1
9
+1
10
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!