Serial Stories மல்லிகைப் பந்தல்

மல்லிகைப் பந்தல்-5

(5)

தன்னைவிட்டு தாய் நிலவு பூமிக்கு வந்துவிட்டதோ என்று ஒற்றை நட்சத்திரம் ஒன்று  தேடிக்கொண்டு தரைக்கு வந்துவிட்டதைப் போல் மல்லிகைப் பந்தலின் நடுவே தீபம் எரிந்துக் கொண்டிருந்தது.

அது அம்மா அம்மா என தன்னை நோக்கி துடிப்பதாய் உணர்ந்தாள் லலிதா. ஜன்னல் கம்பிகளைப் பற்றியபடியே முகத்தை அதில் அழுத்தியிருந்தாள். அவளுடைய பார்வை தூரத்தே ஒற்றைப் புள்ளியாய் மினுக்கும் சுடரையே பார்த்துக் கொண்டிருந்தது. பெருகி வழியும் கண்ணீரில் சுடர் மறைய அந்த ஒரு நிமிடம் அதை பார்ப்பதைக் கூட இழந்துவிடக் கூடாதென அவசரமாக கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

அதே நேரம் அறைக்குள் நுழைந்தான் வீரமணி. மனைவியை பின்னாலிருந்து அணைத்துக் கொண்டான். மோகத்துடன் அவளுடைய கழுத்தில் உரசிய மல்லிகைப் பூவை முகர்ந்தான்.

அவள் அவனை நாசூக்காக விலக்க முயன்றாள். 

“ஏய்… சாயந்தரம் கோவிலுக்குப் போகும் போது பட்டுப் புடவையில எவ்வளவு அழகாயிருந்தே தெரியுமா? கோவிலுக்குப் போற நேரத்துல உன்னை எச்சில் படுத்தினா சாமிக் குத்தமாயிடும்னுதான் கம்முன்னு இருந்துட்டேன். இப்ப எச்சில் படுத்தலைன்னா… பொண்டாட்டி குத்தமாயிடும்” என்று அவளுடைய முகத்தை திருப்பி முத்தமிட முயன்றான். 

கண்ணீரின் உப்பை தன் உதட்டில் உணர்ந்தவன் அப்பொழுதுதான் அவள் அழுகிறாள் என்பதை உணர்ந்தான்.

உறங்கப் போகும் முன் இப்படி ஜன்னலோரம் நின்று மல்லிகைப் பந்தலை அவள் பார்ப்பது வழக்கம்தான். ஆனால் அது ஒரு தியான நிலையைப் போலிருக்கும். அவளை அதே தியான நிலை மாறாமல் கைப்பற்றி அழைத்து வந்து உறங்க வைப்பான். இன்று கண்ணீருடனான தியான நிலை. தாயல்லவா? 

குழந்தையின் நினைவு வர குறிப்பிட்ட நேரமும், கண்ணீருக்கு கட்டுப்பாடும் உண்டா?

“ஏய்… என்ன இது ஏன் அழறே?” அவளை மெல்ல அழைத்து வந்து படுக்கையில் அமர வைத்தாள்.

லலிதா முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொண்டு மெல்ல சிரிக்க முற்பட்டாள்.

“ஒன்னுமில்லை. மீனாளோட ஞாபகம் வந்துட்டு”

“உன்னை நினைச்சா எனக்கு விசித்திரமா இருக்கு. முன்னாடி நீ அழுததுல அர்த்தம் இருக்கு. இப்ப நீயே தான் மீனாள் மறுஜென்மம் எடுத்து என் வயித்துல வளர்றான்னு சொன்ன. அப்ப மகிழ்ச்சியாத்தானே இருக்கனும். இப்படி அழுதா எப்படி?” ஆதரவாய் தலை கோதினான். 

அவனுடைய நெஞ்சில் அப்படியே சாய்ந்துக் கொண்டவள் “நானும் அப்படித்தான் நினைச்சேன். ஆனா… இப்ப என்னவோ மனசே சரியில்லை.”

“ஏன் இந்த மனசுக்கு என்னாச்சு? கோவில்லேர்ந்து திரும்பும் போது நல்லாத்தானே சிரிச்சுப் பேசிக்கிட்டு வந்தே.”

“சந்தோ\hமாத்தான் இருந்தேன். ஆனா… அத்தை சொன்னது மனசை என்னவோ பண்ணுது,”

“அம்மா உன்னை திட்டறதும், பேசறதும் புதுசா என்ன? எப்பவுமே அதையெல்லாம் பெரிசா எடுத்துக்கவும் மாட்டே. என்கிட்ட சொல்லவும் மாட்டே. இப்ப என்ன புதுசா? அப்படி என்ன உன்னைத் திட்டினாங்க?”

“என்னை ஒன்னும் திட்டலை”

“பின்னே”

“அவங்க சொன்ன ஒரு விசயம்தான் மனசை என்னவோ பண்ணுது”




“விசயமா? என்ன விசயம்?”

அவனுடைய நெஞ்சிலிருந்து முகத்தை எடுத்தவள் சொன்னாள். 

“நம்ம குடும்பத்துக்கு ஏதோ சாபம் இருக்காமே”

அவன் லேசாக அதிர்வது அவனுடைய முகத்தில் தெரிந்தது. இதை அவன் எதிர்ப்பார்க்கவில்லை. 

“நம்ம குடும்பத்துல பெண் குழந்தை பிறந்தா இறந்திடுமாம். அப்படி ஒரு சாபம் இருக்காம். அதனாலதான் நம்ம முதல் குழந்தை செத்துப் போச்சாம்.”

“இதையெல்லாம் அம்மா உன்கிட்ட சொன்னாங்களா?”

“என்கிட்ட சொல்லலை. கோமதியத்தை வந்திருந்தாங்க இல்லையா? அவங்க என் வயித்தைப் பார்த்துட்டு பெண் குழந்தையாத்தான் இருக்கும்னு சொன்னாங்க. அப்ப அத்தை…உன் வாயால அப்படி சொல்லாதே. பொறக்க போறது ஆணாத்தான் இருக்கனும். பொண்ணாப் பொறந்தா அது செத்துத்துப் போயிடும்னு சொன்னாங்க. சமையக்கட்டிலேர்ந்து இதை நான் கேட்டுட்டேன். எனக்கு ஒரே அதிர்ச்சியாப் போயிட்டு. என்ன சாபம்னு கோமதி அத்தை துருவித் துருவி கேட்டாங்க. ஆனா… அத்தை சொல்லவே இல்லை. அப்பறமா சொல்றேன்னு சமாளிச்சுட்டாங்க. ஒரு சமயம் எனக்குத் தெரியக் கூடாதுன்னு அப்படி சொல்லலையோ என்னவோ. அது என்னங்க சாபம்?” 

வீரமணி அலட்சியமாக சிரித்தான். “ப்ச்… அதெல்லாம் சும்மா கட்டுக்கதை. கிராமம் இல்லையா? இங்கெல்லாம் மனிதர்கள் இப்படித்தான் பேசுவாங்க. சின்ன ஒரு நிகழ்வைக் கூட கடவுள், மாய மந்திரம் இப்படி தொடர்புப்படுத்திப் பார்ப்பாங்க. இதெல்லாம் உனக்கு இப்ப தேவை இல்லை. சும்மா எதையாவது கேட்டுக்கிட்டிருக்காதே. படு” அவளை படுக்ககையில் சாய்த்தான். 

அவள் சாயவில்லை. மறுபடியும் எழுந்து அமர்ந்தாள். 

“இங்கப் பாருங்க. உங்களுக்கே நல்லாத் தெரியும். நான் இந்த கிராமத்து மனு~ங்க மாதிரி கிடையாது. எனக்கு இந்த மூட நம்பிக்கைகள்ல கொஞ்சம் கூட நம்பிக்கைக் கிடையாது.”

“அப்பறம் எதுக்கு கேட்கறே? விடு. பேசாமப் படு”

“இல்லங்க, எனக்கு நம்பிக்கையில்லைன்னாலும் நம்ம குடும்பத்தைப் பத்தின விசயமா அதை நான் தெரிஞ்சுக்கனும். அது சிரிச்சுட்டு கடந்து போற விசயமா இல்லை யோசிச்சு செயல்பட வேண்டிய விசயமான்னு தீர்மானிக்கனும். அதனாலதான் கேட்கறேன். சொல்லுங்க”

“நாளைக்கு சொல்றேனே. இப்ப எதுக்கு ராத்திரி வேளையில. ஜாலியா… இருக்கற இந்த நேரத்துல போயி எதுக்கு கண்டதையும் யோசிச்சுக்கிட்டு” அவன் அவளை இழுத்து மறுபடியும் தன் மார்போடு சேர்த்துக் கொள்ள அவள் பிடிவாதமாகயிருந்தாள்.

“இல்லங்க. என் மனசுல எதையாவது தெரிஞ்சுக்கனும்னு பட்டுட்டா… என்னலா நிம்மதியா தூங்க முடியாது”

“சரி… சொல்றேன். சொன்னா நீ நம்ப மாட்டே. சிரிப்பே. நானே இதையெல்லாம் நம்ப மாட்டேன். அதனாலதான் இதையெல்லாம் உன்கிட்ட சொல்லலை.”

“சரி… இப்ப சொல்லுங்க. நம்பலாமா? வேண்டாமான்னு அப்பறம் யோசிக்கலாம்.”

ஒரு பெருமூச்சுடன் ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார் என்று கதை சொல்வதைப் போல் ஆரம்பித்தான் வீரமணி.

“ என் தாத்தாவோட அப்பா காலத்துல இந்த ஊர்ல முக்கால்வாசி நிலம் அவரோடதாத்தான் இருந்தது. பெரிய மிராசு. ஆனா…அவருக்கு பத்து பொண்ணாம்.’

“அப்பவெல்லாம் டஜன் கணக்குல புள்ளைங்களைப் பெத்துக்கறது வழக்கம் தானே”

“அவருக்கு ரெண்டு பொண்டாட்டி. முதல்ல பொண்டாட்டி வரிசையா பொண்ணா பெத்ததால ஆண்பிள்ளை வேணும்னு ரெண்டாவதா ஒரு பொண்டாட்டி கட்டினாரு. அதுவும் தன் பங்குக்கு அஞ்சு பொம்பளைப் புள்ளையை பெத்துட்டு.”

லலிதா வாய்விட்டு சிரித்தாள். 

“ஆண்குழந்தையோ, பெண் குழந்தையோ அதை தீர்மானிக்கறது ஆண்களோட குரோமோசோம்தானே. அது தெரியாமா பெண் குழந்தைப் பிறந்தா அதுக்கு பெண்கள்தான் காரணம்னு நினைக்கிறாங்களே”

“அப்பவெல்லாம் அந்தளவுக்கு ஏது கல்வியறிவு?”

“இப்பக் கூட நிறைய ஆண்கள் இப்படித்தான் இருக்காங்க”

“நான் அப்படி இல்லையே”

“நான் உங்களை சொல்லலை. கதைக்கு வாங்க”




“பத்துப் பொண்ணைப் பெத்த என் தாத்தாவோட அப்பாவுக்கு கடைசியா எப்படியோ எங்க தாத்தா பொறந்துட்டாரு. ஆனா…அந்த பத்துப் பொண்ணையும் அவரோட தகுதிக்கு தகுந்த மாதிரி இடம் பார்த்து மிட்டா மிராசுன்னு கட்டிக் கொடுக்க தன் சொத்தையெல்லாம் விக்க வேண்டியதாச்சு.”

“அஞ்சும் பொண்ணா பெத்தா அரசனும் ஆண்டியாவான்ங்கற கதை மாதிரி…”பாவமாக இருந்தாலும் சிரித்தாள் லலிதா.

“அஞ்சு பெத்த அரசனுக்கே அந்த கதியின்னா… பத்து பெத்த அவரோட நிலைய நினைச்சுப் பாரு. பரம்பரை சொத்தை குடிச்சும், பல பொம்பளைங்கக்கிட்ட போயி அழிச்சும் தெருவுக்கு வந்த சீமான்களோட கதையை படிச்சிருக்கோம். ஆனா… பாவம் அவரு பொண்ணுங்களை கரை சேர்க்கவே சொத்தையெல்லாம் வித்துட்டாரு. எங்க தாத்தாவுக்கு மிஞ்சியிருந்தது, சாப்பாட்டுக்கு மட்டுமே சோறு போடற அளவுக்கு  நிலம். பெரும் மிராசா… பெருமையும், கம்பீரமும், செல்வாக்குமா வாழ்ந்த நாம நம்ம புள்ளைக்கு சொத்து வைக்க முடியலையேங்கற குற்ற உணர்விலேயே தாத்தா செத்துட்டார். அப்பத்தான் அவரோட மனைவி என் கொள்ளு பாட்டிக்கு ஒரு ஆவேசம் வந்தது. கண்ணகி பாண்டியன் கிட்ட நியாயம் கேட்க மதுரையை நோக்கி தலைவிரி கோலமா ஓடின மாதிரி என் கொள்ளுப்பாட்டி தலைவிரி கோலமா… நம்ம ஊர் எல்லையம்மன் கோவிலுக்குப் போய் சாமிக்கே சாபம் விட்டுச்சு”

திக்கென்றானது லலிதாவிற்கு. வீரமணி விவரித்த காட்சி கற்பனையாக கண் முன் தோன்றியது. கூடவே பூம்புகார் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி வேறு  இணைந்துக் கொள்ள சாபம் இட்ட பாட்டி கண்ணெதிரே உயிரோட்டமாய் வந்தாள்.

“பாட்டி எல்லையம்மன் கோவில்ல போய் கண்ணீரும் கம்பலையுமா…இனிமே என் பரம்பரையில பெண் குழந்தையே பொறக்கக் கூடாது. அப்படி பொறந்தா உன் கோவில் இடிஞ்சு மண்ணோடு மண்ணாயிடும்னு சாபம் கொடுத்துட்டு வீட்டுக்கு வந்ததுட்டாங்க. அதே மாதிரியே என் தாத்தாவுக்கு என் அப்பா மட்டும்தான் ஆண்பிள்ளையா பிறந்தார். என் அப்பாவுக்கு நான் மட்டும்தான் பிள்ளை. அதனால் பாட்டி கொடுத்த சாபத்துக்கு சாமி பயந்துட்டுன்னு ஊர் நம்ப ஆரம்பிச்சுட்டு. உனக்கு பெண் குழந்தை பிறந்ததுமே எங்கம்மா பயந்தாங்க. அய்யோ… பொண்ணு பொறந்துட்டே. இப்படி ஒரு சாபம் இருக்கேன்னு. நான் அதை பெரிசா எடுத்துக்கலை. இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனா… சரியா பத்தாம் நாள் குழந்தை ஜன்னிக் கண்டு செத்துப் போயிடுச்சு. அம்மா சாபம் பலிச்சுட்டுப் பார்த்தியா?ன்னு கேட்டாங்க. காக்கா உட்கார பனம் பழம் விழுந்த கதை மாதிரிதான் இது. குழந்தை சாவு சாபத்தாலன்னு அம்மா முடிச்சுப் போட்டுட்டாங்க. அதனாலதான் பெண் குழந்தை பிறக்கக் கூடாதுன்னு சொல்றாங்க. அப்படி பிறந்தா… அது செத்துடும்னு நம்பறாங்க”

லலிதா அமைதியாகயிருந்தாள். மெல்ல அவளுடைய கூந்தலை வருடிக் கொடுத்தவன் “இதையெல்லாம் நீ மனசுல போட்டுக்கிட்டு குழம்பாதே. உனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லைங்கறது எனக்கு பெருத்த நிம்மதி. அதனாலதான் இந்தக் கதையையெல்லாம் உன்கிட்ட நான் சொல்லாம விட்டுட்டேன். ஆணோ பெண்ணோ எதுப்பிறந்தாலும் நல்லபடியா பிறக்கும். இப்ப கதை தெரிஞ்சுட்டுல்ல. பேசாம தூங்கு.” சொன்னவாறே அவளை மெல்ல சாய்த்து படுக்க வைத்தான்.

சற்று நேரத்தில் அவன் உறங்கிவிட்டான்.

லலிதாவிற்கு உறக்கம் வரவில்லை. சாபம், மந்திரம், மாயம் இதிலெல்லாம் அவளுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால்…. ஏதோ இனம் புரியாத பயம் அவளை ஆட்கொள்ளத் தொடங்கியது. 

வயிற்றுக்குள் புரளும் குழந்தை பெரும் பயத்தை ஏற்படுத்தியது.  




What’s your Reaction?
+1
8
+1
11
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!