ithu oru kathal mayakkam Serial Stories இது ஒரு காதல் மயக்கம் 

இது ஒரு காதல் மயக்கம்-2

2

அது மிகப்பெரிய வீடாக இருக்க வேண்டும்.  அதன் முழு விஸ்தீரணத்தை மறைத்தது முன் நீட்டி நின்ற அந்த அரை வட்ட பெரிய வராண்டா. சுற்றிலும் வரிசையாக இரட்டைத் தூண்களோடு இருந்த வராண்டா எப்போதோ யூ டியூபில் பார்த்த ஏதோ ஓர் ஜமீன் பங்களாவை நினைவுபடுத்தியது .

ஹப்பா …என்ன ஒரு ஆன்ட்டிக் லுக் …? இதுதான் இவனுடைய வீடா ?  ஆவலான கேள்வியுடன் அவனை திரும்பிப் பார்க்க …

” என்ன முழிக்கிறாய் ? நம்மை வரவேற்கத்தான் ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது. இறங்கு ” அதிகாரம்.  உடனே சுழித்துக் கொண்ட அவள் புருவத்தின் மேல் இரு விரல்களால் லேசாக சுண்டினான் .

” இந்த சுழித்தல், சிணுங்கலெல்லாம் வெளியே தெரியக்கூடாது. ஊரே கூடி நிற்கிறது . மூச்சு காட்டாமல் இறங்கி புது மணப்பெண்ணாக தலை குனிந்து நிற்கனும் “

அவனது புது மணப்பெண் விளிப்பு சிறு அதிர்வை உடல் முழுவதும் பரப்பினாலும் , அதெப்படி ஊரே கூடி இருக்கும் என்ற அவளது ஆச்சரியம் மட்டும் தீராது இருந்தது . கீழே இறங்கப் போனவளின் தோள் பற்றி  தடுத்தான் .

” கொஞ்சம் இரு …”ஒரு கையால் அவள் தோள் பற்றியபடி மறு கையால் எக்கி காரின் பின் சீட்டில் இருந்த மண மாலைகளை எடுத்தான் .




இவன் ஏன் அடிக்கடி தொட்டு …தொட்டு பேசுகிறான் …அவள் மேனி மேல் படிந்த அவனது கதகதப்பை விழி மூடி ஜீரணிக்க முயன்றபடி இருந்த போது ,  மாலைகளை எடுத்துக் கொண்டு அவன் நகர்ந்திருந்தான். அவன் கரமழுத்திக் கிடந்த தோள் வெப்பத்தை தேய்த்து விட்டுக் கொண்டாள் தாரிகா. ஒரு மாலையை தன் கழுத்தில் போட்டுக் கொண்டவன் , அடுத்ததை அவள் கழுத்தில் போட்டான். உடனே ” ஹேய் ” எனும் கூச்சல் காரின் வெளிப்புறம் .

தாரிகா திடுக்கிடலுடன் வெளியே பார்க்க  கூட்டத்தின் முன்னால் நின்றிருந்த நான்கு விடலைகள் இந்த மாலை மாற்றும் வைபவத்தை கொண்டாடியபடி நின்றிருந்தனர் .அதில் ஒருவன் இரு விரலை வாயில் வைத்து விசிலெழுப்ப …

” டேய் மணி என்னடா இது ? ” குனிந்து பார்த்து அதட்டினான்  அவன்.

” அண்ணே சும்மாங்கண்ணே. ஒரு சந்தோசத்துலதான் ” பவ்யமாக கை கட்டிக் கொண்டான்  அந்த விடலை .

” ம் …ம் …” மீசையை முறுக்கிக் கொண்டான் இவன் .

சும்மா அதையே ஏன் நோண்டிக்கிட்டு இருக்கிறடா ?  அவனது அடிக்கடி மீசை முறுக்கலை மனதிற்குள் விமர்சித்த தாரிகா இன்னமும் தங்களுக்கான வரவேற்பை நம்ப முடியாமலேயே இருந்தாள். அதெப்படி இப்படி ஒரு திடீர் திருமணத்தை ஊர் கூடி வரவேற்கும் ?

” டீ மருதாயி கண்ணாலத்தை பாக்கலைன்னு சொன்னியே …இப்போ பாத்தியா  சின்னவரு மாலை மாத்திக்கிட்டத ” யாரோ ஒரு பெண் கத்த , அவனிடம் புன்முறுவல். மீசை அசைந்து துடித்தது.

இதற்காகத்தான் இந்த மாலை போடும் படலமா …யோசனையுடன் அமர்ந்திருந்தவள் பக்கத்து கதவை  திறந்து விட்டான் .” வா …” கை நீட்டினான் .

நீண்ட கையை பற்றுவதா ..வேண்டாமா என்ற குழப்பத்தில் அவள் இருந்த போது தானே அவள் கை பற்றி இழுத்து எழுப்பினான் .இவன் ஏன் சும்மா…சும்மா தொடுகிறான் , மீண்டும் சுணக்கம் தாரிகாவினுள் .

” தமயந்தி பிள்ளைங்க வந்துட்டாங்க பாரு ” வாசல் முன் நின்று உள்ளே குரல் கொடுத்த ஒருவரை காட்டி ” அப்பா ” என்றான் அவன் .

அந்த அப்பா கொஞ்சம் நடுத்தர உயரத்தில் தலை முழுவதும் வெளுத்திருக்க திருத்தமான முகத்தோடும், முகம் நிறைய புன்னகையோடும் தென்பட்டார். அவரது சந்தோசத்தை வியப்பாக பார்த்தாள் தாரிகா .




ஹலோ சார் உங்க மகன் உங்களுக்கு தெரியாமல் யாரோ ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு வந்திருக்கிறான். கோபம் வரவில்லையா உங்களுக்கு …? இப்படி அவரிடம் கேட்க வேண்டும் போலிருந்தது அவளுக்கு. அன்பாய் வருடிய அவரது பார்வையில்   பேச்சிழந்து வாத்சல்யத்தை தவழ விட்டாள் விழிகளில். இதழ்கள் தாமாகவே மென்னகையை பூசிக் கொண்டன .

” உள்ளே வாம்மா மருமகப் பொண்ணே ”   உற்சாகம் பொங்க அழைத்தார் . பரிவும் , பாசமுமான அந்த அழைப்பு ஏனோ தாரிகாவின் மனதை நெகிழ்த்தியது. உறுத்தல்கள் சிறிதுமின்றி மறு வீடு புக ஆயத்தமானாள் அவள் .

” எப்பா எப்படி தங்கச்சிலை மாதிரி மின்னுறாக ? “

” அப்படியே சினிமாக்காரி மாதிரில்ல இருக்காக ? “

” அவுக கண்ணை பாரேன் .எப்படி துடிக்குது ? “

” எவ்ளோ நிறமா இருக்குறாக ? “

வாசல்படியில் ஏறி நின்ற போது பக்கவாட்டில் கேட்ட குசுகுசு குரலில் அவளுக்கு சிரிப்பு வந்தது .மெல்ல திரும்பி பார்க்க ஆரஞ்சு கலரிலும் , வாடாமல்லி கலரிலும் தாவணி அணிந்திருந்த இரு பெண்கள் இல்லையில்லை அவர்களை சிறுமிகள் என்றுதான் சொல்ல வேண்டும். பதினைந்து , பதினாறு வயதிற்குள்தான் இருக்கும். அவளை பிரமிப்பாக பார்த்து பேசியபடி நின்றிருந்தனர். .இவள் பார்வையை திருப்பி பார்த்ததும் புளகாங்கிதமடைந்தனர். வேகமாக கையசைத்தனர்.  தாரிகா அவர்களுக்காக மெல்ல தலையசைக்க இருவரும் ஒன்று மேல் ஓரடி எம்பி குதித்து தங்கள் மகிழ்வை கொண்டாடினர் .

” மயிலு …” சிறு கூச்சலுடன் படியேறிய மகனை தந்தை தழுவிக் கொள்ள , அந்தப் பெயர் கடினமாக  தாரிகாவினுள் இறங்கியது .பெயரைப் பார் …மயில்வாகனன். இந்த மாதிரி பெயரையெல்லாம் எங்கிருந்துதான் தேடி எடுத்து வைப்பார்களோ ? வைத்த பெயரே லட்சணம். அதை சுருக்கி கூப்பிடுவது அதை விட லட்சணம். மயிலாம் …மயிலு. ஆம்பளைக்கு வைக்கும் பெயரா இது …? அதுவும் இவனுக்கு …? தாரிகாவின் பார்வை முறுக்கு மீசையும்,  அகன்ற மார்புகளுமாக பாதி ஒட்டக உயரத்தில்  ஆண்மை ததும்ப அருகில் நின்றவனை ஓர விழியில் ஆராய்ந்தது .




அவள் இப்போதுதான் அவனை.. அவன் உருவை இப்படி கவனித்து பார்க்கிறாள் . அவனை அவள் பார்த்ததே முதல் நாளைக்கு முந்தைய நாளில் தான். அதாவது அவளது திருமண நிச்சயத்தின் போது …எங்கள் ஊர்க்கார பையன் என சாந்தாமணி அவனை அறிமுகப்படுத்தினாள்.வேறெதுவும் கவனத்தில் வராது அடர்ந்து முறுக்கி நின்ற அவனது முக மீசையை வேடிக்கையாக பார்த்தபடி தலையசைத்து வைத்தாள் அப்போது .

மேடையை விட்டு அவன் நகர்ந்ததும் ” பஞ்சாயத்து தலைவர்களும் ,  நாட்டாமைகளும் இன்னமுமா நம் நாட்டில் இருக்கிறார்கள் ? ” அவளருகில் நின்றிருந்த கௌசிக் கிண்டலாக அவளிடம் முணுமுணுக்க , அப்போது அவளுக்குமே சிரிப்பே வர , வாயை கையால் மூடி சிரிப்பை அடக்கினாள் .

அந்நேரம் மேடையை விட்டு இறங்கி எதிரில் நின்ற அவன் அவளை …அவள் சிரிப்பை கோப விழிகளுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.  இதழுறைந்து போனது அவளுக்கு அப்போது. அப்போதே அவன் அவளுக்கு அப்படித்தான் தோன்றினான் …சீறி நிற்கும் சிறுத்தையாக …




சிறுத்தைக்கு பெயர் மயிலா ?   அடங்கா திமிருடன் மடங்கா நின்றவனை  சிறுத்தையுடன் தான் ஒப்பிட தோன்றியது அவளுக்கு .கருஞ்சிறுத்தை .இவன் மட்டும் கொஞ்சம் நிறமாக பிறந்திருந்தானானால் பெரிய சினிமா ஹீரோவாகி இருக்கலாம் எனக் கணித்தாள் .ஏன் நிறமாக இருந்தால்தான் ஹீரோவா …கறுப்பான ஹீரோ கிடையாதா ? அவள் மனது அவளுடனேயே முரண , பட்டென அவள் தோள் இடிபட்டது.

” அடிக்கடி எந்த கனவுலகத்திற்குள் போய் விடுகிறாய் ?  இங்கே எதார்தத்திற்கு வா .சுற்றிலும் கவனி ” அவன்தான் அவள் தோளை அழுத்தி தன் தோளால் இடித்து விட்டு பற்களுக்கிடையே வார்த்தைகளை கடித்துக் கொண்டிருந்தான் .

எந்தக் கனவும் இல்லை.  உன் மொகரையைத்தான் நினைத்துக்   கொண்டிருந்தேன்…பட்டென சொல்ல வாய் திறந்து விட்டு ம்ஹூம் அவனிடமே உன்னையே நினைத்துக் கொண்டிருந்தேன் என சொல்வதா …? வாயை இறுக்கிக் கொண்டாள் .

நேரம் செல்ல செல்ல வீட்டின் முன் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போனது . திருவிழா கொண்டாட்டம் போல் அங்கே சூழ்நிலை நிலவியது .

” மயிலோட குடும்பம் ஊரில் பெரிய தலைக்கட்டு.  மயிலு குடும்பத்தினரின் பேச்சுக்கு எதிர்பேச்சு கிடையாது ஊருக்குள்ள …” பெருமை பொங்க பேசிய சாந்தாமணியின் பேச்சின் உண்மையை உணர்த்திக் கொண்டிருந்தன கூடிக் கொண்டிருந்த கூட்டத்தினர். பட்டத்துராசா கல்யாணத்தை பார்க்க வரும் குடிமக்களின் பாவனை அவர்கள் ஒவ்வொருவரிடமும் .

” ஏன்மா இவ்வளவு நேரம் ?”  ஆரத்தி தட்டோடு வந்த பெண்களிடம் கேட்டுக் கொண்டிருந்தார் தர்மராஜா ..மயில்வாகனனின் அப்பா .

” கரைக்க லேட்டாயிடுச்சுப்பா ” முணுமுணுத்தபடி ஆரத்தி சுற்றிய பெண்களை ” அக்காக்கள் ” என அறிமுகம் செய்தான் அவன்.

” அன்பரசி மூத்தவள் , அனந்த நாயகி சின்னவள் ”  தர்மராஜா தெளிவாக விளக்க அவர்களுக்கு பின் வந்து நின்ற பெண்ணை ” அம்மா ” என காட்டினான் .

அக்கன்னாவின் மூன்று புள்ளிகளாக நின்ற மூன்று பெண்களையும் பார்த்த தாரிகாவினுள் மின்னல் வெட்டியது . அவள் மனதினுள் சந்தோச திருப்தி உணர்வு பரவியது .




What’s your Reaction?
+1
22
+1
13
+1
2
+1
1
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!