Entertainment lifestyles News

மே தினம் கொண்டாடப்படுவது ஏன்?அதன் காரணம் தெரியுமா..?

ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 20 மணி நேரம் உழைக்க வேண்டும், ஆனால் அதற்கு உரிய ஊதியம் கிடைக்காது, எங்கள் உரிமை என நீங்கள் எதையும் பேச முடியாது இப்படி ஒரு சூழலில் உங்களால் வேலை செய்ய முடியுமா?..

நீயும் வேண்டாம் உன் வேலையும் வேண்டாம் என சொல்லிவிட்டு சென்றுவிடுவோம். ஆனால் ஒரு காலத்தில் இது தொழிலாளர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டளை.




1880களில் உலகின் பல்வேறு நாடுகளிலும் மிகப்பெரிய தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. அங்கே தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டு ஒரு நாளைக்கு 15 முதல் 20 மணி நேரம் வரை உழைக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர். இதனால் தொழிலாளர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். சில இடங்களில் வேலை நிறுத்தங்களும் போராட்டங்களும் அவ்வப்போது நடைபெற்றன. 8 மணி நேரம் தான் வேலை என்ற கோரிக்கை உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது.

அப்படி 1886 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டம் மிகப்பெரிய அளவில் அதிர்வை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட இரண்டு லட்சம் தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் காவல்துறையினர் போராட்டத்தை ஒடுக்க நினைத்த போது வன்முறையில் முடிந்து சில தொழிலாளர்கள் இறக்க நேர்ந்தது. இந்த போராட்டத்தை நினைவு கூறவும், தொழிலாளர் உரிமைக்காக குறிப்பாக 8 மணி நேர வேலை என்ற உரிமையை ஒரு போதும் கைவிட்டு விட கூடாது என்பதற்காகவும் ஆண்டுதோறும் மே 1 ஆம் தேதி உழைப்பாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.

1889 ஆம் ஆண்டு பாரீசில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் கூட்டத்தில் 8 மணி நேர வேலைக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், 1890 ஆம் ஆண்டு மே 1 தேதி முதல் உலகளாவிய தொழிலாளர் தினத்தை கொண்டாட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவைப் பொறுத்தவரை 1923 ஆம் ஆண்டு தான் இந்தியாவில் முதன்முறையாக மே தினம் கொண்டாடப்பட்டது. அதுவும் தமிழகத்தில் தான் மே தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதி சிங்கார வேலர்தான் முதன் முதலில் சென்னை மெரினா கடற்கரையில் மே தின பொதுக்கூட்டத்தை நடத்தினார்.




கடுமையான உழைப்பின் மூலம் தேசத்தை கட்டமைப்பதில் தொழிலாளர்கள் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றனர். தொழிலாளர் தினம் என்பது தொழிலாளர்களின் கடின உழைப்பை அங்கீகரிப்பது மட்டுமல்லாமல் அவர்களின் உரிமைகள் குறித்து அவர்களுக்கு எடுத்துரைப்பதற்கும் ,சுரண்டலில் இருந்து அவர்களை காப்பாற்றுவதற்கும் பயன்படுத்தப்பட வேண்டும்.

நிறுவனங்களும் தொழிலாளர்களுக்கு சிறந்த வேலை நிலைமைகளை வழங்க வேண்டும் என்பதை நினைவூட்டும் தினமாகவும் மே தினம் இருக்கிறது.பல நாடுகளில் தொழிலாளர் தினமானது தேசிய விடுமுறை நாளாக கொண்டாடப்படுகிறது. தொழிலாளர்களின் சாதனைகளையும் பங்களிப்புகளையும் முன்னிலைப்படுத்த பல நிகழ்வுகளும் ,கருத்தரங்குகளும் இந்த நாளில் நடத்தப்படுகின்றன. . தொழிலாளர் தினத்தின் வரலாறு, தொழிலாளர்களின் உரிமைகள் ஆகியவற்றை அடுத்தடுத்த சந்ததிகளுக்கு கொண்டு செல்ல வேண்டியது நம் அனைவரின் தலையாய கடமையாகும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!