Short Stories

சுந்தரிக்கா… நீங்க ரொம்ப மோசம்! (சிறுகதை)

”ஏட்டி சுந்தரி… நல்லா இருக்கியாட்டி…” என்று யாரோ ஒருவர், தெருவில் நலம் விசாரிக்கும் குரல் கேட்டு, சுந்தரிக்காவின் நினைவு என் மனதெங்கும் பரவியது.

எங்கள் வீட்டில் வேலை பார்த்து வந்தவள், சுந்தரிக்கா. கெச்சலான தேகம்; மினுங்கும் கறுமை நிறம்; ஒற்றை நாடி; பெரிய குங்கும பொட்டு வைத்து, கோடாலிக் கொண்டை போட்டிருப்பாள். பின்னால் கொசுவம் வைத்த சேலை; யாரிடமும் கோபப்படாத குணம்; எப்போதும், சிரித்த முகத்துடன் இருக்கும் சுந்தரிக்கா, கை சுத்தமானவள்.

எத்தனை முறை சொன்னாலும் தட்டாமல் கடைகளுக்கு சென்று, பொருட்கள் வாங்கி வருவாள்.

‘எழுந்து காப்பிய குடிபா…’ என, எழுப்பும் சுந்திரிக்கா முகத்தில் தான் தினமும், காலைப் பொழுது விடியும்.
வேலை செய்யும் போதே, ‘எம்மாடி… கொஞ்சம், ‘டிவி’ய போடேன் பாப்போம்…’என்பாள்.

‘டிவி’யை போட்டதும், அதைப் பார்த்தபடியே, துவைத்த துணிகளை மடித்து வைப்பது, வெங்காயம் உரிப்பது, கீரை ஆய்வது என, ‘துறுதுறு’ வென்று, கண்கள் படத்திலும், கைகள் வேலையிலும் லயிக்கும்.
கடையில் ஏதாவது வாங்கி வர, இங்கிலீஷில் சொல்லிவிட்டால், வேற ஏதாவது வாங்கி வந்து நிற்பாள். உடனே, நானும், என் தங்கையும், ‘சுந்தரிக்கா, நீங்க ரொம்ப மோசம்…’ என்போம்.

உடனே பதறி, ‘அப்படி சொல்லாதீங்க… அது, ரொம்ப கெட்ட வார்த்தை…’ என்பாள்; நாங்கள் விடாமல், பதின்ம வயதுக்கே உண்டான குறுகுறுப்புடன், ‘என்னக்கா அது கெட்ட வார்த்தை, சொல்லுங்க…’ என்போம்.
அப்போது அவரைப் பார்க்க, பாவமாக இருக்கும்.

நாங்கள் எங்கே போனாலும், சுந்தரிக்காவை எங்களுக்கு துணைக்கு அனுப்புவாள், அம்மா. நாங்கள் திட்டியபடியே கூட்டிச் செல்வோம்; ஆனால், அதற்கெல்லாம் கவலைப்பட மாட்டாள்.

அக்கம் பக்கத்தில், யார் வீட்டில் என்ன நடந்தாலும், அவளுக்கு தான் முதலில் தெரியும். யார், யாரை காதலிக்கிறாங்க, யார் வீட்ல புதுசா என்ன வாங்கி இருக்காங்க, மாமியார், மருமகள் சண்டை என எல்லாவற்றையும் என் அம்மாவுடன் அமர்ந்து, ‘குசுகுசு’வென்று பேசுவாள்.

போகிற போக்கிலோ, ஏதாவது எடுக்கிற சாக்கிலோ, நானும், என் தங்கையும், நைசாக, ‘என்னக்கா பேசுதிய?’ன்னு கேட்டா, ‘நாங்க, அரிசி, பருப்பு கணக்கு பேசுறோம்; ஒங்களுக்கு புரியாது, போய் படிங்க’ன்னு விரட்டுவாள்.

சுந்தரிக்காவின் கணவர் பெயர், மாணிக்கம். வெள்ளை வேட்டி ஜிப்பா; குள்ளமான உருவம்; கடுகடு முகம்.
‘சுந்தரி…’ என்று, மாணிக்கம் அண்ணாச்சி வாசலில் நின்று குரல் கொடுத்ததும், பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை, அப்படியே போட்டு சென்று விடுவாள். அவளின் இரண்டாவது கணவர் தான், மாணிக்கம் அண்ணாச்சி!

‘சுந்தரிக்கா… உங்களுக்கு தமிழ், இங்கிலிஷ் எல்லாம் எழுத சொல்லி கொடுக்குறேன், வாங்க…’ என்று கூப்பிட்டால், ‘அதெல்லாம் வேணாம்மா; எனக்கு கையெழுத்து போட தெரியும்…’ என்பாள்.

‘நீங்கள் எல்லாம் திருந்தவே மாட்டீங்க… எப்ப பாரு சாப்பாடு, சமையல், சினிமா, தூக்கம், ஆவலாதி பேசுறது இதை விட்டா, உங்களுக்கு எல்லாம் என்ன தெரியும்…’ என்று, திட்டி தீர்ப்பதுடன், ‘உங்கள மாதிரியெல்லாம் நான் கல்யாணம் செய்துக்க மாட்டேன்; நல்லா படிச்சு, பெரிய வேலைக்கு போய் சம்பாதிச்சு, உலகம் பூரா சுத்திப் பாப்பேன். நிறைய புத்தகம் வாங்குவேன்…’ என்று, பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக என்னை கற்பனை செய்து, சராசரி வாழ்க்கை வாழும் பெண்களை பார்த்து, பொங்கி சீறுவேன்.




ஒருநாள், எங்களுக்கு துணைக்கு சுந்தரிக்காவை இருக்கச் சொல்லி விட்டு, அம்மாவும், அப்பாவும் ஊருக்கு சென்று விட்டனர். நானும், என் தங்கையும், பக்கத்து வீட்டு தோழிகளுடன் சேர்ந்து, அவளிடம் பேச்சுக் கொடுத்தோம்.

‘சுந்தரிக்கா… உங்க கதைய சொல்லுங்க…’ என்றோம்.

எங்களையே சிறிது நேரம் உற்றுப் பார்த்தவள், ஆசுவாசமாக பெருமூச்சு விட்டபடியே, தன் கதையை சொல்ல துவங்கினாள்…

‘எல்லாரையும் போல, எங்கம்மா, அப்பா எனக்கு கஷ்டப்பட்டு நல்லா தான் கல்யாணம் செய்து வைச்சாங்க; அவரு பேரு துரை. தினமும் குடிச்சிட்டு தான் வீட்டுக்கு வருவாரு. அதோட வேலை வெட்டிக்கு போகாம, எப்பவும் சீட்டாடிக்கிட்டே இருப்பாரு. இதனால, வீட்டுல கஷ்டம் ஆரம்பிச்சது. ஆனாலும், துட்டு வச்சு சீட்டு ஆடுறது நிற்கல. அதப்பத்தி எதாவது தட்டிக் கேட்டா, எனக்கு அடி, உதை தான்!

‘ஒருநாள், காசு வச்சு விளையாடினதுல, எல்லா பணமும், பொருளும் போயிருச்சு. அப்புறம்…’ என்றவளுக்கு அழுகை அடைத்தது.

நாங்கள் பதறி, ‘என்னாச்சுக்கா…’ என்றோம்.

‘இந்த மாணிக்கம் அண்ணாச்சி கூட தான் சீட்டு விளையாடியிருக்கார் என் புருஷன். கையில இருந்த காசெல்லாம் தீர்ந்த பின்னாடி, வச்சு விளையாட எதுமில்லன்னதும், என்ன வச்சி விளையாடி, தோத்துட்டார்; அதனால, மாணிக்கம் அண்ணாச்சி கிட்ட என்னை குடுத்துட்டாரு…’ என்றாள்.

இதைக் கேட்டதும், எங்களுக்கு அதிர்ச்சியானது. ‘அவளது சிரித்த முகத்திற்கு பின், இப்படி ஒரு துயரமா…’ என, உறைந்து போனோம்.

அவள் கதையைக் கேட்டபோது, மகாபாரதத்தில், திரவுபதியை வைத்து பாண்டவர்கள் விளையாடியது தான் ஞாபகத்திற்கு வந்தது.

‘எப்படிக்கா, அவரை விட்டுட்டு, இவர் கூட வந்தீங்க… போக மாட்டேன்னு சண்டை போட்ருக்கலாம்ல…’ என்றோம் கோபத்துடன்!

‘கட்டுனவனே வேணாம்ன்னு சொன்னப்போ, எனக்கு, என்ன செய்றதுன்னு தெரியல. பொம்பள ஜென்மங்களுக்கு, இதுதான் விதி…’ என, விரக்தியுடன் கூறினார்.

‘என் பொண்ணு மூத்த புருஷன் கிட்ட வளர்ந்தா… இவருக்கும், எனக்கும் ஒரு பையன்; எல்லாருக்கும் கல்யாணம் முடிஞ்சாச்சு. அப்பப்போ வந்து பாப்பாங்க… வாழ்க்கை ஓடுது…’ என்று, உணர்வற்று கூறியதும், என்ன சொல்வது என தெரியாமல் மவுனமானோம்.

அம்மா வந்ததும், அவளிடம் சொல்லி புலம்பி, ‘இதே மாதிரி, ரெண்டு பொம்பளைங்க புருஷன வச்சு விளையாண்டு தோத்து போயிட்டா, இப்படி, மாப்பிள்ளைய மாத்துவீங்களா…’ எனக் கேட்டதும், ‘இதுக்குத் தான் பெரியவங்க பேசுறப்ப, சின்னவங்கள பக்கத்தில் வச்சு பேசக் கூடாதுன்னு சொல்றது… படிக்கப் போங்க…’ என்று விரட்டி விட்டாள், அம்மா.

கடைசி காலத்தில், உடம்புக்கு முடியாமல் இருந்த மாணிக்கம் அண்ணாச்சியை முகம் சுளிக்காமல், நன்றாக கவனித்தாள், சுந்தரிக்கா. மாணிக்கம் அண்ணாச்சியும் இறந்து விட, மகன், மகளிடம் கூட போகாமல், தனியாகவே, எப்போதும் போல, வேலை பார்த்துக் கொண்டு இருந்து விட்டாள்.

அம்மாகிட்ட கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து, காதுக்கு சின்னதாக கம்மலும், கழுத்துக்கு, மெலிதான செயினும் வாங்கிப் போட்டுக் கொண்டாள்.

‘என்னக்கா… வயசான காலத்துல உங்களுக்கு நகை மேல ஆசையா…’ என்று நாங்க கிண்டல் செய்த போது, ‘ஆசையெல்லாம் இல்லம்மா… நா செத்துப் போயிட்டா, நல்லபடியா காரியம் செய்ய பணம் வேணும்லா… அதான் என் பையன்கிட்ட சொல்லியிருக்கேன்… இதையெல்லாம் வித்து, என் கடைசி காரியத்தை பாத்துக்கடான்னு! அதுக்கு முன்னாடி முடியாம கிடந்தாலும், வைத்தியம் செய்ய, காசு வேணும்லா அதுக்கு தான்…’ என்றாள்.

வாழ்க்கைப் போராட்டத்தில் ஒரு பெண் எத்தனை இடர்பாடுகளை கடந்து வர வேண்டியுள்ளது என நினைத்த போது, சுந்தரிக்காவின் மீது பரிதாபமே ஏற்பட்டது.

காலங்கள் நகர நகர எனக்கும், என் தங்கைக்கும் அடுத்தடுத்து திருமணம் ஆகி, வெவ்வேறு ஊர்களுக்கு பிரிந்தோம். விடுமுறைக்கு அம்மா வீட்டுக்கு வரும்போது விடிய விடிய கேலியும், கிண்டலும், அரட்டையுமாய் பொழுது போகும். எங்கள் பிள்ளைகளுக்கும், அவள், சுந்தரிக்கா தான்!

அப்பா, அம்மாவிற்கு சொந்த ஊரை விட்டு, வேறு ஊருக்கு மாற வேண்டிய நிர்ப்பந்தம். சுந்தரிக்காவை கூப்பிட்ட போது, பிறந்த ஊரை விட்டு வர மறுத்து விட்டாள்.

ஒருநாள், ‘சுந்தரிக்கா, முதியோர் இல்லத்துல சேர்ந்துட்டாங்களாம்… நம்மளையெல்லாம், ரொம்ப விசாரிச்சதா சொல்லி விட்டிருக்காங்க…’ என்றாள், அம்மா.

எனக்கு சுந்தரிக்காவை பார்க்க வேண்டும் போல் இருந்தது. அவளிடம், ‘உங்க முதல் கணவர், உங்கள சீட்டாட்டத்துல தோற்று, உங்களை இன்னொருத்தருகிட்ட போய் வாழச் சொன்ன போது, அவரப் பத்தி என்ன நினைச்சீங்க… அவரு கூட இருக்கணும்ன்னு தோணலயா… மாணிக்கம் அண்ணாச்சிய எப்படி ஏத்துக்கிட்டீங்க, அவர் உங்க பழைய வாழ்க்கையைப் பற்றி கேட்பாரா, ஒரு பந்து போல, உங்கள அந்த ரெண்டு பேரும் பந்தாடும் போது, என்ன நினைச்சீங்க…’ என்று கேட்க நினைத்தேன்.

ரொம்ப நாட்களாகவே இந்தக் கேள்விகளை கேட்க நினைத்தாலும், ஏதோ ஒரு சங்கடத்தால் மனம் அதற்கு துணியவில்லை. காரணம், ஒரு பெண்ணின் அந்தரங்கத்தையும், உணர்வுகளையும், எந்தவித முன் அனுமானங்களும் இல்லாமல் பெண்கள் தங்களுக்குள்ளேயே ஆத்மார்த்தமாய் பேசும், புரிந்து கொள்ளப்படும் காலம் இன்றளவும் வரவில்லை.

ஒரு பெண் அவள் சந்திக்கும் நிகழ்வுகள் வழியே தான் விமர்சிக்கப்படுகிறாள்; உணர்வுகள் வழியே அல்ல! அதை, புரிந்து கொள்ளவும் இங்கு யாரும் இல்லை.

தங்கள் பிரச்னையை சொன்னால், கேட்பவர்கள் என்ன நினைப்பார்களோ என தயங்கித் தயங்கியே தங்கள் உணர்வுகளை எல்லாம் மனதுக்குள் போட்டு புதைத்து, சவமாய் உலா வருகின்றனர், பல பெண்கள். அவர்களில் சுந்திரிக்காவும் ஒருத்தி எனும் போது, என்னையும் அறியாமல், ‘சுந்தரிக்கா… நீங்க ரொம்ப மோசம்!’ என்று என் வாய் முணுமுணுத்தது.




What’s your Reaction?
+1
4
+1
7
+1
0
+1
0
+1
0
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!