Short Stories sirukathai

முற்பகல் செய்யின்…….(சிறுகதை)

ஆட்டோ ஸ்டாண்ட் அருகே…….

“உன்னுடன் வரத்தானே இன்று லீவு எடுத்து கொண்டு கிளம்பி வந்தேன் . ஆபீஸ்ல இருந்து அவசர வேலை, போன் வந்து விட்டது. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ, ப்ளீஸ் . டென்ஷன் ஆகாதே” என்று அவர் தன் மனைவியிடம் சமாதானம் செய்து கொண்டு இருந்தார்.

இதோ பார் . “ஓம் வல்லக்கோட்டை முருகன் துணை”, ஆட்டோவில் இருந்த ஸ்டிக்கரை காண்பித்து “ உன் இஷ்ட தெய்வ முருகன் கூட வருகிறார். இந்த ஆட்டோவில் ஏத்தி விடுகிறேன். நீ இண்டெர்வியூ முடித்துவிட்டு வெயிட் பண்ணு. நான் கரெக்டாக மதியம் வந்து விடுகிறேன்” ,

ப்ளீஸ்… ம்.. ம் .. சரி அரை மனதுடன். “இண்டெர்வியூ முக்கியமாயிற்றே….கூடவே வரேன் என்று விட்டு இப்படி செய்தால் என்ன அர்த்தம்” – கோபத்தில் சீறினாள் அவள்.

அருகே இருந்த ஆட்டோவை அழைத்தார். அந்த ஏரியா -வில் பிரபலமான பள்ளியின் பெயரை சொல்லி அங்கே வர முடியுமா ?

“நீங்க பேசினதை எல்லாம் கேட்டுக்கிட்டுதான் சார் இருந்தேன். வாங்கம்மா நான் அழைத்து செல்கிறேன்” என்றார் அந்த ஆட்டோக்காரர். அவளை ஏற்றி விட்ட அடுத்த நிமிடம் ஸ்கூட்டர் வேகமெடுத்தது. ஆட்டோவும் கிளம்பியது.

டீச்சர் வேலைக்கு அப்ளை பண்ணி இருக்கீங்களாம்மா.?

ஆமாம்.செலக்ட் ஆகிவிட்டேன். இன்னைக்கு ஒரு போர்மல் மீட்டிங் அண்ட் சைனிங் தான்.

“வாழ்த்துக்கள் மா” …..

“நன்றி அண்ணா”




கொஞ்ச நேரம் கழித்து “ அடடே …..பர்ஸ் அவரிடம் அல்லவா இருக்கிறது. பைலை வாங்கியவள் பர்ஸ் மறந்து விட்டேனே….. ப்ளீஸ் நிறுத்துங்க. நான் நடந்து போகிறேன்.” சாரி… ஆட்டோ அண்ணா .

“அட பரவாயில்லையம்மா. நான் கொண்டு விடுகிறேன். நீங்க இங்க தான் வேலைக்கு வர போறீங்க. என்றாவது ஒரு நாள் பார்க்காமலா போய் விடுவோம். அப்போ வாங்கி கொள்கிறேன்.”

“எனக்கு ரொம்ப கஷ்டமா, சங்கடமாக இருக்குங்க.”

“ரொம்ப கவலை படாதீங்க. இக்கட்டான சூழ்நிலைதான் காரணம். இல்லாவிடில் “பிரசவத்திற்கு இலவசம்” போல “இண்டெர்வியூ க்கு இலவசம் “என்று நான் நினைத்துக் கொள்கிறேன்.”

“அப்போ பாதி சவாரி நீங்க இலவசமாகத்தான் ஓட்ட வேண்டும். நம்ம நாட்டு நிலைமை அப்படி” சிரித்தாள் அவள்.

“சரிம்மா. டீச்சருக்கு கொடுக்கிற குருதக்ஷனையாக இருக்கட்டும். இல்ல ஸ்கூல் –க்கு நான் கொடுக்கிற சின்ன டொனேஷனாக இருக்கட்டும்.”

“உங்க மொபைல் நம்பர் சொல்லுங்க. நான் எப்படியும் பணத்தை கொடுக்கணும்.”
பேசிக்கொண்டே வந்ததில் பள்ளிக்கு வந்து விட்டார்கள்.

“வந்தாச்சும்மா இறங்குங்க. எங்க வீட்டு பெண்ணாக இருந்தால் செய்ய மாட்டேனா ? எனக்கு கொடுக்க வேண்டிய பணத்தைப்பற்றி கவலை படாதீங்க. சரியான நேரத்திற்கு போய் மீட்டிங் அட்டென்ட் பண்ணுங்க. போங்க போங்க…..போய் பிள்ளைகளை படிக்க வைங்க”……

“ரொம்ப நன்றி அண்ணா” . திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே பள்ளிக்கு
உள்ளே சென்றாள் அவள்.

* * * * *

அன்று இரவு ஆட்டோக்காரரின் வீட்டில் …….. “என்னடா தம்பி ஹோம் ஒர்க் முடிச்சாச்சா. இன்னைக்கு டெஸ்ட் ஒழுங்கா எழுதினாயா ?” என்று மகனிடம் அன்றாட விசாரணை தொடங்கியது.

“அதெல்லாம் நல்லா பண்ணினேன். அப்பா….இன்னைக்கு நடந்த ஒரு விஷயம் உங்க கிட்ட சொல்லணும்.”
“இன்னைக்கு ஸ்கூலுக்கு ஸ்கெட்ச் பென் செட் எடுத்துப்போக மறந்து விட்டேன். சயின்ஸ் டெஸ்டுக்கு வேணும். கையில் காசு இல்லை. இன்டெர்வல் போது எதிரே அண்ணாச்சி கடையில் சொல்லி வாங்கி கொள்ளலாம் என்றால் வாட்ச்மன் வெளியே விட மாட்டேன் என்று சொல்லி விட்டார். எனக்கு என்ன செய்வது
என்றே புரியவில்லை.அப்போ ஸ்கூல் எண்ட்ரன்ஸ் கிட்ட மரத்தடியில் நின்று கொண்டு இருந்த ஒரு
அங்கிள் என் கிட்ட விசாரித்தார். நான் எல்லாம் சொன்னவுடன், தானே கடைக்கு
சென்று ஒரு ஸ்கெட்ச் பென் செட் வாங்கி தந்தாரப்பா.”

நான் எவ்வளவோ மறுத்தும் கேட்காம… “பரவாயில்லை. எங்க வீட்டு பையனாக இருந்தால் செய்ய மாட்டேனா ? வாங்க மாட்டேனா ….. வைச்சுக்கோ” என்று கொடுத்து விட்டார்.

“என் மனைவி இங்குதான் டீச்சராக வரப்போறாங்க. அவங்க ஒரு ஸ்டுடென்ட்க்கு கிப்ட் பண்ணியதாக இருக்கட்டும்” என்று சொல்லி விட்டார். நான் அவங்க பேரை கேட்டபோது கூட சொல்லாமல் சிரித்து விட்டு, என்னை கிளாஸ்சுக்கு போக சொல்லி விட்டார் .

இன்னைக்கு மாரல் சயின்ஸ் வகுப்பில் —- மத்தவங்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் நம்மளால முடிந்த அளவுக்கு பலனை எதிர்பாராமல், உதவி செய்ய வேண்டும் ஏதோ ஒரு வகையில் அதற்கான பதில் யாரிடம் இருந்தாவது நமக்கு கிடைக்கும் —- என்று மிஸ் சொன்னார்கள் .அப்போ அந்த அங்கிள் இன்னைக்கு எனக்கு செய்த உதவிக்கு பதில் / உதவி அவருக்கு கிடைக்குமா ?” என்றான்.

உங்களுக்கு இந்த மாதிரி ஏதும் கிடைத்து இருக்கா ?

“கட்டாயம் கிடைக்கும் ; கிடைத்து இருக்கு” ஆட்டோகாரரின் முகம் புன்னகையில் மலர்ந்தது.
“நாளைக்கு உங்க மாரல் சயின்ஸ் மிஸ் கிட்ட ஒரு நல்ல வாழ்க்கை பாடம் சொன்னதற்கு நன்றி சொல்லப்பா”…..
“நீயும் என்றும் இதை நினைவில் வைத்துக்கொள் “ என்றார் ஆட்டோகாரராகிய அந்த அப்பா.

* * * * *




What’s your Reaction?
+1
18
+1
12
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!