Serial Stories அன்பெனும் ரகசியம்

அன்பெனும் ரகசியம்-13

13

கோயமுத்தூர்.

குமரேசனைத் தேடி வந்திருந்த அந்தக் கான்ஸ்டபிள் இருவரும், சரவணன் திருச்சிக்குப் பக்கத்தில் ஒரு ஊரிலிருக்கும் விஷயத்தை சொல்ல,

 “கடவுளே!…” என்று மேலே பார்த்துக் கும்பிட்ட குமரேசன், “சார் அந்த அட்ரஸைக் குடுங்க… நானே நேர்ல போய்க் கூட்டிட்டு வந்திடறேன்” அவசரப்பட்டார்.

 “அப்படியெல்லாம் தர முடியாது சார்!… உங்க பையன் இருக்கற ஊரின் போலீஸ் ஸ்டேஷனுக்குத்தான் நீங்க போகணும்!… அங்கிருக்கற இன்ஸ்பெக்டர் தான் உங்க பையனை வரவழைச்சு உங்க கிட்ட ஒப்படைப்பார்”

 “அப்ப… அவரோட பேரையும், அட்ரஸையும் குடுங்க… நான் போய்க்கறேன்”

 “போகும் போது… நீங்க மட்டும் போகாதீங்க!… உங்க சம்சாரத்தையும் கூட்டிட்டுப் போங்க…. அவங்களும் அவனோட பேசட்டும்… ரெண்டு பேர் கூடவும் சமாதான பின்னாடிதான் அந்த இன்ஸ்பெக்டர் உங்க கைல ஒப்படைப்பார்… நீங்க மட்டும் போன உங்க கூட அனுப்ப மாட்டார்” கண்டிப்புடன் சொன்னார் கான்ஸ்டபிள்.

 “ஏன்… என்னோட பையன்தானே?… என் மகனை என்னை நம்பி அனுப்ப மாட்டங்களா?” கோபமாய்க் கேட்டார் குமரேசன்.

 “சார்… நீங்க போய் சமாதானமாப் பேசி கூட்டிட்டு வந்திடுவீங்க!… நாளைக்கு உங்க மனைவி திரும்பி வந்ததும்… அவங்க மறுபடியும் பையனைக் கொடுமை பண்ணுவாங்க!… அவன் மறுபடியும் வீட்டை விட்டு ஓடுவான்!… இதெல்லாம் நாங்க நெறைய பார்த்திட்டோம் சார்!… அதனால நீங்க உங்க மனைவியையும் வரச் சொல்லி அவ்சங்களையும் கூடக் கூட்டிட்டுப் போங்க… என்ன?.. நான் சொல்றது புரியுதா?” கான்ஸ்டபிள் கட்டளையிடுவது போல் சொல்ல,

வேறு வழியில்லாமல் தலையாட்டினார் குமரேசன். 

கான்ஸ்டபிள்கள் சென்றதும், பாலுவையும் உடன் அழைத்துக் கொண்டு தன் மனைவியின் ஊருக்குச் சென்றார்.

 “இங்க பாருங்க… நானும் உங்க மகனும் ஒரே வீட்டுல இருப்பதென்பது சாத்தியமேயில்லை!…. அதனால… அவனை ஏதாவதொரு ஹாஸ்டல்ல சேர்த்து விடறேன்னு சொல்லுங்க நான் இப்பவே புறப்பட்டு உங்க கூட வர்றேன்… ரெண்டு பேரும் திருச்சிக்குப் போய் உங்க மகனைக் கூட்டிட்டு வரலாம்!” சுமதி தன் நிலைப்பாட்டில் உறுதியாயிருந்தாள்.

 அவள் தாய் ரங்கம்மா, சரவணனைக் கழட்டி விடுவதில் சுமதியை விட உறுதியாயிருந்தாள்.

 “மாப்ள… அவ என்ன உங்க மகனை  “வீட்டை விட்டுத் துரத்திடுங்க”ன்னா சொல்றா!… ஏதாச்சும் ஹாஸ்டல்ல சேர்த்துப் படிக்க வைக்கலாம்னுதானே சொல்றா?.. அப்புறமென்ன?”

 “இங்க பாருங்க… அதையெல்லாம் பேசறதுக்கு இது நேரமில்லை… இப்ப நம்ம நோக்கம் நம்ம பையனைக் கூட்டிட்டு வர்றது!… மத்த விஷயங்களை அப்புறமா பேசிக்கலாமே?” பாலு இடையில் புகுந்து சமாதானமாய்ப் பேச,

 “அந்த வேலையே ஆகாது!… எதுவானாலும் இப்பபே பேசித் தீர்மானம் பண்ணிடணும்!…“அப்புறமா பேசிக்கலாம்” என்பதெல்லாம் நடைமுறைக்கு சரிப்பட்டு வராது!” என்றாள் ரங்கம்மா.

 “அம்மா… நீங்க வயசுல பெரியவங்க நீங்களே இப்படி பேசலாமா?”

 “நான் வயசுல பெரியவதான்… ஆனா என் மகள் சுமதி வயசுல சின்னவளாச்சே?.. அவளுக்கும் மனசுக்குள்ளார ஆசாபாசங்கள் இருக்குமல்லவா?…  ‘புருஷன் கூட இப்படியிருக்கலாம்… அப்படியிருக்கலாம்!’ன்னு… விபரம் தெரிஞ்ச மகனை வீட்டுல வெச்சுக்கிட்டு அவ எல்லாத்தையும் கட்டுப்படுத்திக்கிட்டு இருக்கணும்னு அவளுகென்ன தலைவிதியா?” ரங்க எறிந்த அந்த அஸ்திரம் குமரேசனையும், பாலுவையும் ஒரே ஆட்டாய் ஆட்டி விட,

 “சரிங்க… பையனைக் கூட்டிட்டு வந்து ஏதாவது ஹாஸ்டல்ல சேர்த்திப் படிக்க வைக்க நான் சம்மதிக்கறேங்க… போதுமா?” என்றார் குமரேசன்.

அதைச் சற்றும் எதிர்பார்க்காத பாலு, “சார்… என்ன நீங்க?” எனக் கேட்க,

 “வேற வழியில்லை பாலு!.. எனக்கு என் மகன் வேணும்… அவ்வளவுதான்”

குமரேசன் தங்களுடைய விருப்பத்திற்கு ஒப்ப்தல் அளித்ததும் ரங்கம்மா அப்படியே நிறம் மாறினாள்.  “ஏய் சுமதி… புருஷன் பொண்டாட்டின்னா  சண்டை சச்சரவு இருக்கத்தான் செய்யும்!… எல்லாத்தையும் அனுசரிச்சுத்தான் இருக்காணும்!… அதுக்காக உடனே கோவிச்சுக்கிட்டு அம்மா வூட்டுக்கு வந்திடறதா?… போ… போ… அந்த மனுஷன் உன்னைக் கூட்டிக்கிட்டுப் போறதுக்காக வந்திருக்காரு!… அந்த மனசை நெனச்சு அவரு கூட உடனே கிளம்பிப் போ” என்றாள்.

விக்கித்துப் போனான் பாலு.  “பச்சோந்தி கூட ஒரு நிமிஷம் அல்லது ரெண்டு நிமிஷம் கழிச்சுத்தான் நிறம் மாறும்… இந்தப் பொம்பளை அடுத்த விநாடியே மாறிட்டாளே!… ஆஹா… வெரி டேஞ்சரஸ் லேடி போலிருக்காளே”

அந்த ஊரிலிருந்தே திருச்சி செல்லும் பஸ் ஏறினர் குமரேசனும், சுமதியும், பாலுவும்.

பஸ்ஸில் பயணிக்கும் போது குமரேசனின் மனதில் புதிதாய் ஒரு அச்சம் பரவியது.  “ஒருவேளை சரவணன் என் கூட வர மாட்டேன்னுட்டான்னா?”

தன் அச்சத்தை பாலுவிடம் சொன்னான்.  “யோசிக்க வேண்டிய விஷயம்தான்!… அவனுடைய அம்மா பயன்படுத்திய எந்தப் பொருளுமே அந்த வீட்டில் இருக்கக் கூடாது!… இருந்தா மூத்தாள் ஞாபகம் தன் புருஷனுக்கு வரும்ன்னு ஒரு பொட்டைக் கூட விட்டு வைக்காம துடைச்சு வெச்சிட்டாங்க உங்க ரெண்டாவது சம்சாரம்… தன் அம்மாவை ஞாபகப்படுத்தற எந்தப் பொருளுமே இல்லாத அந்த வீட்டுக்கு நான் எதுக்கு வரணும்!னு சரவணன் கேட்டா உங்களால என்ன பதில் சொல்ல முடியும்?” பாலு திருப்பிக் கேட்டார்.

குமரேசனால் உண்மையிலேயே பதில் சொல்ல முடியவில்லை.

திருச்சியில் இறங்கியதும், ஒரு ஆட்டோக்காரனிடம் அந்தப் போலீஸ் ஸ்டேஷன் அட்ரஸைக் காட்டிக் கேட்டார் பாலு.

 “சார்… இந்த ஊரு இங்கிருந்து கிட்டத்தட்ட இருபது கிலோ மீட்டர் தூரத்துல இருக்குது!… ஆட்டோல போனா கட்டுப்படியாவாது… இங்கிருந்து மினி பஸ் போகும் அதுல போங்க” என்றான்.

 “ஆட்டோக்காரத் தம்பி!… இருபது கிலோ மீட்டர் தூரம் உன் ஆட்டோ ஓடாதா?”

 “ஹே…. என்ன பேசறீங்க?… என் ஆட்டோ நூறு கிலோமீட்டர் தூரம் கூட ஓடும்”

 “அப்புறமென்ன பேசாம வண்டியை எடு” என்று பாலு சற்று அதட்டலாய்ச் சொல்ல,

அமைதியாய் ஆட்டோவை ஸ்டார்ட் செய்தான் அவன்.

*****

அந்த போலீஸ் ஸ்டேஷன் வாசலில் ஆட்டோ நின்றதும் வாசலில் நின்றிருந்த கான்ஸ்டபிள் ஓடி வந்து, “யார் நீங்க?… என்ன வேணும்?” கேட்டான்.




 

 “இன்ஸ்பெக்டர் துரை அய்யாவைப் பார்க்கணும்!… நாங்க கோயமுத்தூரிலிருந்து வர்றோம்”

“ஓ… அந்த சின்னப் பையனோட உறவுக்காரங்களா?”

 “ஆமாம் சார்… நான்தான் அவனோட அப்பா குமரேசன்” ஆர்வமாய்ச் சொன்னார் குமரேசன்.

 “ம்ம்… உள்ளார போய் உட்காருங்க!… இன்ஸ்பெக்டர் இன்னும் பத்து நிமிஷத்துல வந்திடுவார்”

அதே நேரம், 

ராஜய்யன் வீட்டிலிருந்த சரவணன் அந்த வாடை உணர்ந்தான்.  மூச்சை ஆழமாய் இழுத்து நிதானமாய் வெளியிட்டான். அவனுடைய அந்தச் செய்கையைக் கண்ட பூமணி, “என்னப்பா… ஏதோவொரு புது வாசனையைக் கண்டுபிடிச்சிட்டே போலிருக்கு?” கேட்டாள்.

 “புது வாசனையில்லை… பழைய வாசனை!… ரொம்ப நாளைக்குப் பின்னாடி இப்பத்தான் மூக்கு இதை நுகருது” என்றான் சரவணன்.

குளித்து விட்டு தலையைத் துவட்டிக் கொண்டே வந்த ராஜய்யன், “என்னப்பா… என்ன பழைய வாசனை?” கேட்டான்.

 “என்னைத் தேடி… எங்கப்பாவும்… சித்தியும் இந்த ஊருக்கு வந்திருக்காங்க”

 “ஹக்”கென்று அதிர்ந்தான் ராஜய்யன்.

 அதைக் கேட்டவுடன் ஓடி வந்து சரவணனைக் கட்டிக் கொண்ட பூமணி, “ராசா… எங்களையெல்லாம் விட்டுட்டுப் போகப் போறியா ராசா” கிட்டத்தட்ட அழுதே விட்டாள்.

அன்பு, பாசம், நேசம்… இதற்கெல்லாம் சிறிது மதிப்புக் கொடுக்காத ராஜய்யனின் மனம் அந்த நிமிடத்தில் கனத்துப் போனது. 

எப்படியும் இன்னும் சிறிது நேரத்தில் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து ஆள் வர்ம், என்பதைப் புரிந்து கொண்ட ராஜய்யன், தானும் ரெடியாகி சரவணனையும் தயார் செய்தான்.

அவனுக்கென்று ஒரு புது பேக் எடுத்து அதனுள் அவனுக்காக வாங்கிய துணிமணிகளையும், சில விளையாட்டு பொம்மைகளையும் உள்ளே வைத்தான்.  பூமணி தன் பங்கிற்கு தான் செய்திருந்த கடலை மிட்டாயை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்துக் கொடுத்தாள்.

 “ஊருக்குப் போனதும் எங்களையெல்லாம் மறந்துடாதே ராசா” என்றாள் பூமணி.

 “அவன் மறந்தாலும் நான் விட மாட்டேன் அப்பப்ப அவன் ஊருக்குப் போய் அவனைப் பார்த்திட்டு வருவேன்” என்றான் ராஜய்யன்.

அப்போது வேறு ஏதோ காரியமாய் அங்கே வந்த மூக்கையன், “என்ன ராசய்யா… மறுபடியும் குடுகுடுப்பையைக் கையில் எடுத்திட்டியா?… வெளியூர்ப் பயணத்துக்கான பேக்கிங் எல்லாம் ரெடியாகுது?” கேட்க,

 “அட நீங்க வேற நான் ஒரு தடவை முடிவெடுத்தா எடுத்ததுதான்!… இனி அந்த குடுகுடுப்பைத் தொழில் நமக்கு ஆகாது!… அவ்வளவுதான்!… இந்தப் பேக்கிங்கெல்லாம் இதோ இந்தப் பொடியனுக்கு… இவனைத் தேடி இவனோட அப்பாவும் சித்திக்காரியும் வந்தாச்சு!…இன்னும் கொஞ்ச நேரத்துல போலீஸ் ஸ்டேஷன்ல வெச்சு இவனை அவங்க கைல ஒப்படைச்சிட்டு வர வேண்டியதுதான்”

அதைக் கேட்டு மூக்கையனுக்கே முகம் சுண்டிப் போனது.

நேரா சரவணன் அருகே சென்று அவன் தலையை நீவிக் கொடுத்தவர், “ஹும்… பயல் இனிமே நம்முர்ப் பயல் ஆயிடுவான்!ன்னு நெனச்சிட்டிருந்தேன்!… இப்படிப்  ‘பொசுக்’ன்னு அத்துக்கிட்டுப் போறானே?” அங்கலாய்த்தார்.

“கண்ணதாசன் சொன்ன மாதிரி  “இரவல் தந்தவன் கேட்கின்றான்… அதை இல்லையென்றால் அவன் விடுவானா?” பாடியே காட்டினான் ராஜய்யன்.

அவர்கள் எதிர்பார்த்தது போலவே வாசலில் ஒரு கான்ஸ்டபிள் வந்து நின்றார்.




What’s your Reaction?
+1
5
+1
15
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!