Serial Stories உயிராய் வந்த உறவே

உயிராய் வந்த உறவே-1

1

எதிரே நின்று பாடம் நடத்திக் கொண்டிருந்த கங்காதரின் பேச்சுக்கள் எதுவுமே வாணியின் மூளைக்குள் ஏறவில்லை.சாதாரணமாக அவள் மிகவும் விரும்பும் வகுப்புதான் இவருடையது. கையசைத்து தலையுயர்த்தி என இவர் ஸ்டைலாக பேசும் ஆங்கிலத்திற்கு இவள் கொஞ்சம் அடிமை என்று கூட சொல்லலாம். அதனாலேயே என்ன நடந்தாலும் இவருடைய வகுப்பை மட்டும் தவறவிடவே மாட்டாள். இப்போதோ கங்காதரின் மேனரிசங்களோ பாடமோ எதுவும் அவள் மண்டைக்குள் ஏறவில்லை. 

ஆணி அடித்தது போல் அவர் மேல் பதிந்திருந்த பார்வை திடீரென்று மச மசக்க தூக்கம் வருவது போல் கூட தோன்றியது வாணிக்கு. அப்படியே முன் சாய்ந்து பெஞ்சில் படுத்துக்கொண்டாள். கண்கள் சொருகியது.

மஞ்சளில் அரக்கு கரை வைத்த பட்டுப்பாவாடையும், அரக்கு நிற தாவணியுமாக அந்த அழகான பெண் சாலையில் நடந்து போய்க் கொண்டிருந்தாள்.வகிடு பிரித்து ரெட்டை ஜடை போட்டு பாதி சடையில் அரக்கு நிற ரிப்பன் கட்டி இருந்தாள்.

“ஏய் இன்னைக்கும் அவன் பின்னாடியே வரான்டி” பக்கத்தில் நடந்து வந்து கொண்டிருந்த தோழி சொல்ல, அவளது மனம் படபடத்தது.




 இவன் ஏன் இப்படி செய்கிறான்? மூன்று மாதங்களாக இப்படித்தான் அவள் எங்கே போனாலும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறான். கடவுளே இதோ இவளுக்கு போல் வேறு யாருக்கும் இந்த விஷயம் தெரிந்துவிட்டால்…?

 சாலையோரம் குவிந்து கிடக்கும் சரளை கற்களை அள்ளி முந்தானையில் முடிந்து கொள்பவள் போல் தலையை குனிந்து கொண்டாள்.

டக் டக் என்ற நிதானமான குரங்கு பெடல் சைக்கிள் மிதித்தலுடன் அவன் அவளை கடந்து போனான். கடக்கையில் பார்வை முழுவதும் அவள் மீது. பத்தடி தூரம் சென்றதும் சாலையோர கல் ஒன்றின் மீது கால் ஊன்றி காத்திருந்தான்.அவள் அவனை கடக்கும் போது பார்த்தபடி இருந்து விட்டு, சிறிது தூரம் சென்றதும் மீண்டும் பின் தொடர்ந்தான். அவள் பள்ளிக்குள் நுழையும் வரை மீண்டும் மீண்டும் இதே ஊர்வலம் நடந்தது.

“ஏய் வாணி எந்திரிடி” பக்கத்தில் அமர்ந்திருந்த சந்தியா தோளில் இடிக்க வாணி திடுக்கிட்டு எழுந்தாள். கங்காதர் கேள்விக்குறியுடன் இவளை பார்த்தபடி இருந்தார். “என்னம்மா ஆச்சு?”

“சாரி சார் கொஞ்சம் உடம்பு சரியில்லை” 

வாணி இதற்கு முன்பு வகுப்பை கவனிக்கும் விதம் தெரியுமாதலால் கங்காதர் அவளது சமாதானத்தை உடனே ஏற்றுக்கொண்டார். “நீ வீட்டிற்கு கிளம்பலாம்மா”

ஆளை விட்டால் போதும் என்று வாணி எழுந்து கொண்டாள். பேக்கை  முதுகில் மாட்டிக் கொண்டு, கவனமாக வகுப்பறையின் கடைசி பெஞ்சிலிருந்தவனுக்கு பார்வை போகாமல் காத்தபடி வேகமாக வெளியே வந்தாள்.

இப்போது வீட்டிற்கு போக வேண்டுமா? ஏனோ ஒருவித சோர்வு வர கேண்டினை நோக்கி நடந்தாள். லைம் ஜூஸ் ஒன்று வாங்கிக் கொண்டு டேபிளில் அமர்ந்து ஸ்ட்ரா வழியாக சொட்டுச் சொட்டாக அதனை உறிஞ்சிக் கொண்டிருந்தபோது அவளுக்கு எதிரே இருந்த நாற்காலியில் அவன் வந்து அமர்ந்தான். விசாகன்.

“உடம்பிற்கு என்ன?”

வாணி அவனை வெறித்தாள்.

இவன் அவர்கள் கல்லூரிக்கு வந்து சேர்ந்து ஆறு மாதங்கள்தான் ஆகிறது. அன்றிலிருந்து இவளுடைய நிம்மதியான வாழ்க்கைக்கு பிடித்தது சனி.

“உன்னை பார்த்த நாளிலிருந்தே உடம்பு என்னென்னவோ செய்து கொண்டுதான் இருக்கிறது” விரக்தியாக பேசினாள்.

விசாகன் புன்னகைத்தான். “இருக்கும். உள்ளதை சொன்னால் உடம்பு எரியத்தானே செய்யும்?”

வாணி இருக்கையில் பின்னால் சாய்ந்து கொண்டாள் “வேண்டாம் விசாகன். நான் மிகுந்த மனப்போராட்டத்தில் இருக்கிறேன். என்னை குத்தாதே”

“எத்தனை போராட்டங்கள் இருந்தாலும் நாம் போட்ட திட்டங்கள் மாறக்கூடாது. அதனை நினைவில் வை” உத்தரவு இட்டு விட்டு எழுந்து கொண்டான்.

“பத்திரமாக வீட்டிற்கு போய் விடுவாயா? நான் ட்ராப் செய்ய வேண்டுமா?”

வாணி வேண்டாம் என்று தலையசைக்க,தோள்களைக் குலுக்கி விட்டு அவன் போய் விட்டான்.தளர்ந்த நடையுடன் தனது ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கல்லூரி நுழைவு வாயிலை விட்டு அவள் வெளியேறும் போது அருகே பைக்கில் வந்தவன் கடக்கும் போது “ஞாபகம் வைத்திரு.அதிகாலை 3:00 மணி” குறிப்பு கொடுத்துவிட்டு கடந்து போனான்.

ஸ்கூட்டியின் பிரேக்கை அழுத்தி சில வினாடிகள் அப்படியே அதிர்ந்து நின்று விட்டாள் வாணி.

“என்னடாம்மா உடம்பு சரியில்லையா?” மகள் வீட்டு படி ஏறும்போதே முகத்தை பார்த்தே கேட்டாள் தெய்வானை.

 தலை வருட வந்த தாயின் கரத்தை ஒதுக்கினாள். “தலைவலி. தூங்கப்போகிறேன்” சிக்கனமாய் பதில் சொல்லிவிட்டு தன் அறைக்குள் நுழைந்து கதவை பூட்டிக் கொண்டாள்.

வெளியே கசமுசா வென சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.இது அவளுடைய வீட்டிற்கே உரிய பரபரப்புகள். வாணியின் தந்தை சுந்தர்ராமன் அந்த ஏரியா கவுன்சிலராக இருந்தார்.பரம்பரை பணக்காரரான அவருக்கு ஊர் முழுவதும் ஏகப்பட்ட சொத்துக்கள் ,தொழில்கள். கடந்த இரண்டு வருடங்களாக அரசியல் பக்கம் பார்வையை திருப்பி கவுன்சிலர் ஆனார்.




 எந்நேரமும் ஏதாவது கோரிக்கையுடன் அல்லது பிரச்சனைகளுடன் அவர் வீட்டை சுற்றி ஆட்கள் கூட்டம் பரபரவென்று இருக்கும். சுந்தர்ராமனின் அடுத்த அரசியல் இலக்கு எம்எல்ஏ பதவி.

அப்பாவின் இந்த அரசியல் பிரவேசம் வாணிக்கு பிடிக்கவில்லை என்றாலும் தெய்வானைக்கு மிகுந்த திருப்தி. தாய் தந்தையின் விருப்பத்தில் தலையிடாமல் ஒதுங்கிக் கொண்டாள் வாணி.

“கொஞ்ச நாட்களாகவே நம்ம மகள் சரியில்லைங்க.ரொம்ப சோர்ந்து போய் தெரிகிறாள்” தெய்வானை சுந்தரராமனிடம் சொல்லிக் கொண்டிருந்தது சாப்பாட்டு அறைக்கு சாப்பிட வந்த வாணியின் காதுகளில் விழுந்தது.

“வயது பெண். ஒருவேளை ஏதாவது காதல் அது இதுவென்று…” சொல்லிவிட்டு முடிக்காமல் சுந்தர்ராமன் மெலிதாய் சிரித்தார்.

“என்ன பேசுறீங்க நீங்க?” தெய்வானை கோபித்துக் கொண்டாள்.

“வயதில் எல்லாம் நடப்பது தானே தெய்வா?”

“நம் மகள் அப்படியெல்லாம் போக மாட்டாள்” படபடத்தாள்.

“ஆமாம் உன் வளர்ப்பல்லவா ?”சுந்தரராமனின் குரலில் பெருமிதம்

 இறுகி விட்ட முகத்துடன் சாப்பிட அமர்ந்தாள் வாணி. தந்தையின் ஏதோ பேச்சும் தாயின் உபசரிப்பும் அவள் மனதில் ஏறவே இல்லை.

அப்பா உங்கள் யூகம் சரிதான் மனதிற்குள் பேசிக் கொண்டாள். சாப்பிட்டு முடித்து மீண்டும் அறைக்குள் போய் பூட்டிக் கொண்டவள் ஒருவித படபடப்புடன் அங்கும் இங்கும் நடந்தாள். பிறகு ஒரு சிறிய பேக்கில் அவளது உடைகள் சிலவற்றை எடுத்து வைத்துக் கொண்டாள். போட்டிருக்கும் உடையோடு கிளம்பி வந்தால் போதும் என்றுதான் அவன் சொல்லியிருந்தான். ஆனாலும் அப்படி போக விருப்பமின்றி பேக்கை தயார் செய்து கொண்டாள். அதிகாலை 3 மணிக்கு காத்திருந்தாள்.

“அப்பா நான் எனக்கான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வீட்டை விட்டு போகிறேன்” சிறு விம்மலோடு மனதிற்குள் பேசியபடி வீட்டை விட்டு வெளியேறினாள்.

தெருமுனையில் இருளுக்குள் நிறுத்தி இருந்த காரினுள் விசாகன் இருந்தான். அவளை ஏற்றிக்கொண்டு காற்றாக பறந்தான்.




What’s your Reaction?
+1
37
+1
31
+1
3
+1
1
+1
4
+1
2
+1
8
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!