Serial Stories தொடுவதென்ன தென்றலோ

தொடுவதென்ன தென்றலோ-11

11

ஒரு வாரத்துக்கு பிறகு…

ஒரு சுபமுகூர்த்த நன்நாளில்‌ இளமாறனுக்கும்‌ செம்பருத்திக்கும்‌ நட்சத்திர ஹோட்டல்‌ ஒன்றில்‌ நிச்சயதார்த்தம்‌ வெகு விமர்சையாக நடந்தேறியது.

செம்பருத்திக்கு என்னென்ன பிடிக்கும்‌ என்று ஒவ்வொன்றாய்‌ கேட்டு கேட்டு

அதன்படி பிடித்த நிறத்தில்‌ புடவை வளையல்‌, பொட்டு, என்று பார்த்து பார்த்து வாங்கியிருந்தார்கள்‌. அதுமட்டுமல்லாமல்‌ இளமாறன்‌ தன்னுடைய இனிஷியல்‌ பொறித்த தங்க செயினை செம்பருத்தி கழுத்தில்‌ அணிவித்தான்‌. செம்பருத்தியின்‌ அத்தை மாலதியைத்‌ தவிர மற்ற அனைவரின்‌ முகத்திலும் சந்தோஷம்‌ நிரம்பி வழிந்தது.

நிச்சயதார்த்தம்‌ முடிந்த கையோடு திருமண தேதியை குறிக்க முனைந்தபோது செம்பருத்தியின்‌ செமஸ்டர்‌ எக்ஸாம்‌ முடிந்த பிறகு தான்‌ திருமணம் என்று உறுதியாக சொல்லிவிட்டார்‌ மணாளன்‌. படிப்பை பாதியில்‌ நிறுத்துவதோ தடைபடுவதோ தவறென்பது அவரின்‌ கருத்து. அதனால்‌ தேதி குறிப்பிடாமல்‌ மூன்று மாதத்திற்கு பிறகு வருகிற முதல் முகூர்த்த தேதியில்‌ திருமணம்‌ என்ற அறிவிப்போடு நிறைவடைந்தது நிச்சயதார்த்த விழா.

அன்றையிலிருந்தே இரு குடும்பத்தாரும்‌ போனில்‌ பேசியும்‌ நேரில் சந்தித்தும்‌ தங்களுக்குள்‌ ஒரு நெருக்கத்தை உண்டாக்கிகொண்டார்கள்‌. அதற்கு விதிவிலக்காய்‌ இருந்தார்கள்‌ இளமாறனும்‌, செம்பருத்தியும்‌. இளமாறன்‌ அவனுடைய பிசினஸில்‌ பிசியாய்‌ இருப்பதாய் காட்டிகொண்டான்‌. இரு முறை பேசியதோடு சரி மற்றபடி அவனாக முன்வந்து செம்பருத்திக்கு கால்‌ பண்ணி பேசவோ மெசேஜ்‌ அனுப்பவோ இல்லை. இவளும்‌ அவனாக பேசட்டும்‌ நாமாக எதற்கு வலிய சென்று பேச வேண்டும்‌ என்ற கெத்தோடு இருந்தாள்‌.

அடுத்த நாளிலிருந்து எப்போதும்‌ போல கல்லூரிக்கு சென்று வந்தாள்‌. அப்படியே நாட்களும்‌ சென்றிருந்தால்‌ எந்த பிரச்சனையும்‌ இல்லாமல் இயல்பாகவே வாழ்க்கை சென்றிருக்கும்‌. ஆனால்‌ அப்படி இல்லாமல் இயல்புக்கு மாறாய்‌ நடந்த அந்த விஷயம்‌ தான்‌ செம்பருத்தியை திசை திருப்பியது.

நிச்சயதார்த்தம்‌ முடிந்து விட்ட விஷயத்தை தோழிகளிடம்‌ சொல்ல அவர்கள் செம்பருத்தியை உண்டு இல்லைன்னு ஆக்கிவிட்டார்கள்‌ எவ்வளவு பெரிய விஷயம்‌ நடந்திருக்கு எங்களை யாரையும்‌ கூப்பிடாம கமக்கமா நிச்சயம்‌ பண்ணிட்டு வந்திருக்கியே? இது உனக்கு நல்லா இருக்கா இதுக்கெல்லாம் கண்டிப்பா நீ பதில்‌ சொல்லணும்‌. நாளைக்கே எங்கள சினிமாவுக்கும்‌ கூட்டிட்டு போகணும்‌ அதுதான்‌ நீ எங்களுக்கு வைக்கிற பேச்சிலர்‌ பார்ட்டி என்று உடன்பயிலும்‌ தோழிகள்‌ சிலர்‌ அவளை தொல்லைப்படுத்த வேறு வழியின்றி நாம எல்லாரும்‌ சினிமாவுக்கு போயிட்டு அப்படியே டின்னர்‌ சாப்பிட்டுட்டு வீட்டுக்கு கிளம்பலாம்‌ என்பதை சொன்னாள்‌. அதன்படியே அடுத்தநாள்‌ பெற்றோரிடம்‌ இன்று தான்‌ வருவதற்கு தாமதமாகும்‌ என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்‌. இதெல்லாம்‌ நம்ம விட்ல இருக்கிற வரைக்கும்‌ தான்‌ அங்க போயிட்டா அவங்க கட்டுப்பாட்டில்‌தானே இருக்கணும்‌ எப்படியோ செம்பருத்தி முகத்துல இப்பதான்‌ சந்தோஷம்‌ தெரியுது. நான்‌ கூட அவளுக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்லையோன்னு நெனச்சு ரொம்பவே குழம்பிட்டேன்‌ அவ சிரிச்சு பேசினவுடனேதான்‌ எனக்கு நிம்மதியா இருக்கு என்றார் விநாயகம்‌.

அன்று தோழிகளோடு புதிதாய்‌ ரிலீசான திரைப்படத்தை பார்த்துவிட்டு அடுத்த கட்டமாக ஹோட்டலுக்கு போகலாம்‌ என்றபோது ஒட்டு மொத்தபேரும்‌ ஒரே ஓட்டலின்‌ பெயரையே சொல்ல, செம்பருத்திக்கு சிறு அதிர்ச்சி காரணம்‌ அன்று இளமாறனோடு சென்ற அதே ரெஸ்டாரன்டை அனைவரும்‌ சொல்ல, சரி என்று தலையசைத்தாளே தவிர அங்கு செல்ல கொஞ்சம்‌ தயக்கமாகவே இருந்தது. ஓட்டலின்‌ நுழைந்து இரண்டாவது ஃபுளோருக்கு போவதற்காக லிஃப்ட்டின்‌ அருகே சென்றபோது அன்று பில்‌ கவுண்டரில்‌ அமர்ந்திருந்த அதே நபர்‌ இவளை பார்த்து சிநேகத்துடன் சிரித்தப்போது, “யாருடி அது உனக்கு தெரிஞ்சவரா?” என்று கேட்டு தோழிகள்‌ துளைத்தனர். “ஆமாம்..”‌ என்று தலையாட்டி சமாளித்தாள்‌. அந்த அமைதியான சூழலில்‌ தோழிகளோடு சாப்பிட அமர்ந்தபோது அன்று இளமாறனோடு அமர்ந்திருந்த அதே இருக்கையில்‌ அமரும்‌ சூழல் உருவானது.




இளமாறனோடு பேசியதை நினைவு படுத்தி பார்த்தபோது எல்லா விஷயங்களும்‌ நினைவுக்கு வந்தது அவனுடைய முகமோ சிரிப்போ மனதில் பதியாமல்‌ இருந்தது தான்‌ இவளுக்கு இன்னும்‌ குழப்பத்தை உண்டுபண்ணியது.

கனவில்‌ கூட நிச்சயதார்த்தம்‌ நடந்தது எல்லாம்‌ அழகான காட்சிகளாய் விரிந்த போது அதில்‌ இளமாறனுக்கு பதில்‌ ராஜாவின்‌ முகம்‌ பொருந்தி இருந்தது குழப்பமாகவும்‌ பயமாகவும்‌ இருந்தது. அப்படின்னா ராஜாவோட நினைப்பு என்‌ மனதில்‌ இருந்து விலகவில்லை என்று தானே அர்த்தம்‌ இந்த இளமாறனின்‌ உருவமும்‌ முகமும்‌ மனசுல பதியவே இல்லையே? அதற்கு என்ன காரணம்‌ என்று குழம்பினாள்‌.

ஒரு வழியாக ட்ரீட்‌ எல்லாம்‌ முடிந்து தோழிகளோடு வெளியில்‌ வந்த போது இரவு எட்டு முப்பதை நெருங்கிக்‌ கொண்டிருந்தது. அனைவரும் தனித்தனியாக கலைந்து செல்ல எப்போதும்‌ உடன்‌ வரும்‌ சுபா மட்டும் அன்று வராதது இவளுக்கு ரொம்பவும்‌ கஷ்டமாக இருந்தது. தனியாகத்தான்‌

போக வேண்டும்‌ என்று எண்ணி கால்டாக்ஸ்சிக்கு முயற்சித்து கொண்டிருந்தாள்‌. சரிடீ அப்போ நாங்க கிளம்புறோம்‌ என்று சொல்லிவிட்டு

ஒவ்வொருவரும்‌ வெவ்வேறு திசைகளில்‌ கிளம்பி செல்ல, இவள்‌ மீண்டும் மீண்டும்‌ கால்டாக்ஸிக்கு ட்ரை பண்ணி கிடைக்காமல்‌ கேன்சலாகவே அருகில்‌ இருந்த ஒரு ஆட்டோவை கையசைத்து நிறுத்தினாள்‌.

ஆட்டோ அருகில்‌ வந்தது எங்க போகணுமா ஏறுங்க என்று சொல்ல போகவேண்டிய இடத்தை சொல்லிவிட்டு ஏறி அமர்ந்துகொண்டாள்‌. சற்று தூரம்‌ சென்ற பிறகுதான்‌ அந்த மாற்றத்தை கண்டுகொண்டாள்‌. டிரைவரின் மேல்‌ மதுவாடை வீசியது. இந்த லட்சணத்துல இவன்‌ கூட எப்படி வீடு போய்‌ சேர முடியும்‌ என்னதான்‌ குடிக்ககூடாதுன்னு ரூல்ஸ்‌ போட்டாலும் எல்லாமே ஒன்னு இல்லாம ஆக்கிடறாங்க குடிச்சிட்டு வண்டி ஓட்ட கூடாதுன்னு எவ்வளவு சொன்னாலும்‌ இவங்க எல்லாம்‌ திருந்த மாட்டாங்க

என்று மனசுக்குள்‌ நினைத்தவள்‌ ஆட்டோவிலிருந்து எப்படியாவது இறங்கிவிடவேண்டும்‌ என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது, ஒரு இடத்தில்‌ நிறுத்திவிட்டு ஆட்டோ ஸ்டார்ட்‌ ஆகல என்றான்‌.

யோரோ ஒருவருக்கு போன்‌ பண்ணி பொண்ணுங்களை பற்றி தரகுறைவாக பேசினான்‌. முதலில்‌ புரியாமல்‌ குழம்பினாலும்‌ அடுத்த நிமிடமே தன்னையும் தரைக்குறைவாக அவன்‌ நினைத்துக்‌ கொண்டு பேசுகிறான்‌ என்பதை புரிந்து கொண்டாள்‌ செம்பருத்தி. 

“ஹலோ மிஸ்டர்‌ அளந்து பேசுங்க தேவையில்லாம பேசுனிங்கன்னா அப்புறம்‌ என்‌ கை தான்‌ பேசும்‌.” என்று தைரியத்தை வரவழைத்துக்‌ கொண்டு அவனை திட்ட அவன்‌ கோபத்தோடு ஆட்டோ விட்டு கீழே இறங்க இருவருக்குள்ளும்‌ வாக்குவாதம்‌ தொடங்கியது. அப்போது ஆட்டோவை உரசிகொண்டு வந்து நின்றது அந்த வெள்ளை நிற கார்‌.

“என்ன ஆச்சு என்ன பிராப்ளம்‌ என்று கேட்டவனை தலையை உயர்த்திப் பார்த்தாள்‌ செம்பருத்தி அதிர்ச்சி முகத்தில்‌ மட்டுமல்ல உடலிலும்‌ பரவி தடுமாற்றத்தை உண்டாக்கியது காரணம்‌ அங்கே வந்து நின்றவன்‌ வேறு யாரும்‌ அல்ல சாட்சாத்‌ இளமாறனேதான்‌.

அடுத்த செகண்ட்டே அருகில்‌ இருந்த ஆட்டோக்காரன்‌ மெல்ல நழுவினான் இவளுக்கு பதற்றம்‌ தொற்றிக்‌ கொண்டது இவன்‌ எப்படி இங்கே இரவு நேரத்தில்‌ தனிமையில்‌ இவனோடு என்னவென்று பேச்சை ஆரம்பிப்பது என்று குழம்பிய நிலையில்‌ நின்றிருந்தாள்‌.

“உங்களுக்கு ஆட்சேபனை இல்லன்னா சொல்லுங்க நான்‌ ட்ராப்‌ பண்றேன்‌.” என்றான்‌ இதுவும்‌ ஒரு நல்ல சந்தர்ப்பம்‌ தான்‌ மனசுல இருக்குறத எல்லாம்‌

கொட்டி தீர்த்துடலாம்‌. என்று தோன்றவே பட்டென்று “ஓகே…வீட்ல ட்ராப் பண்ணுங்க…” என்றாள்‌. பின்‌ இருக்கையில்‌ அமருமாறு அவன்‌ சொல்லவும் தலையசைத்து விட்டு ஏறி அமர்ந்து கொண்டவளின்‌ முகம்‌ வேர்த்து கொட்டியது. கண்ணாடியில்‌ அவளை பார்த்தபடி சற்று நேரம்‌ காரை ஓட்டிக்கொண்டு சென்றவன்‌ வழியில்‌ பெட்ரோல்‌ பங்கில்‌ பெட்ரோல் நிரப்பினான்‌. அங்கே மற்றொரு கார்‌ வந்து நிற்கவும்‌ அந்த காரை ஓட்டிக்கொண்டிருந்தவனை பார்த்து அறிவுகெட்டவன்‌ முன்னாடி கார் நிக்கிறது தெரியாமல்‌ ஓவர்‌ டேக்‌ பண்றான்‌. என்று யாரையோ திட்டினான்‌ இவள்‌ திரும்பி பார்த்தபோது மற்றொரு பேரதிர்ச்சி தோன்றியது. அது வேறு

யாருமல்ல இவளுடைய ரகசிய காதலன்‌ ராஜராஜன்தான்‌. அவன்‌ தன்னை கவனித்துவிடகூடாது என்பதற்காக தலையை பின்புறம்‌ சாய்த்து தன்னுடலை மறைத்தவாறு அமர்ந்துக்கொண்டாள்‌. பெட்ரோல்‌ போட்டு முடித்தவுடன்‌ இளமாறனின்‌ கார்‌ வேகமெடுத்து கிளம்பியது. அல்ரெடி ரொம்ப லேட்டாகிவிட பதற்றத்தோடு இருந்தாள்‌ செம்பருத்தி.

“ரொம்ப லேட்டாயிடிச்சின்னு நினைகிறேன்‌…உங்க பேரன்ட்ஸ்கிட்ட போன்‌

பண்ணி வந்துகிட்டு இருக்கேன்னு சொல்லிடுங்க…”

சே…இந்த யோசனை நமக்கு வரலையே? மொபைலை எடுத்து விஷயத்தை சொன்னாள்‌.

“மாப்பிள்ளைகூடதானே வரே ஒன்னும்‌ அவசரமில்லை பொறுமையாவே வாங்க…” என்றார்‌ விநாயகம்‌.

“என்ன சொல்றாங்க…?”

“உங்க கூட வரேன்னு சொன்னேன்‌ அப்பா ஓகேன்னு சொன்னார்‌”.

“நீங்க…இப்போ ஒருத்தரை ஓவர்‌ டேக்‌ பண்ணிட்டாருன்னு திட்டினிங்களே அவரை உங்களுக்கு தெரியுமா?” பொறுத்துப்பார்த்து அந்த கேள்வியை கேட்டே விட்டாள்‌.

“ஆமாம்‌…ஏன்‌ கேக்கிறீங்க?… “என்றான்‌.

என்னை காதலிப்பதாய்‌ சொல்லி நம்ப வைத்து கழுத்தை அறுத்தவன்‌ என்றா சொல்ல முடியும்‌?

“இல்லே சும்மாதான்‌ கேட்டேன்‌.” என்று சமாளித்தாள்‌ குரல்‌ கரகரத்தது.

சற்றுநேரம்‌ அவனிடம்‌ பதிலில்லை. கார்‌ வெளிச்சம்‌ நிறைந்த ஒரு கடையை கிராஸ்‌ பண்ணும்போது கவனித்தாள்‌ அவன்‌ முகம்‌ இறுகிப்போயிருந்தது.

“எல்லாம்‌ நேரம்‌…வேறென்ன சொல்ல…?” குரலை கனைத்து சரிசெய்தபடி சொன்னான்‌.

“அவனுடைய வாழ்க்கையில்‌ நடந்ததை பற்றி சொன்னேன்‌..

இளமாறனின்‌ பேச்சு அதிர்ச்சியளித்தது. இவன்‌ எதை சொல்ல நினைக்கிறான்‌? எனக்கும்‌ அவனுக்குமான காதலையா? அல்லது அவனுக்கும் வேறொரு பெண்ணிற்கும்‌ நடந்த திருமணத்தையா?

“நான்‌ ஒன்னு கேட்டா தப்பா நினைச்சிக்க மாட்டீங்களே?” என்றான்‌.

“இல்ல…. சொல்லுங்க…?”

“நீங்க ஏன்‌ அவனை பார்த்து ஒளிஞ்சீங்க…?” என்றான்‌.

அதிர்ந்த முகத்தோடு இளமாறனை ஏறிட்டாள்‌.

“இல்ல…சும்மா தெரிஞ்சிக்கத்தான்‌ கேட்டேன்‌. அவன்‌ என்‌ நண்பன்தான்‌ ஆனா இப்போ இல்ல…” என்றான்‌.

வீட்டிற்கு வரும்‌ வரை இருவரும்‌ பேசிக்கொள்ளவில்லை. வீட்டு வாசலிலேயே காத்திருந்தார்‌ அப்பா. அவனை கட்டாயப்படுத்தி வீட்டிற்குள் அழைத்து ஒரு கப்‌ பாலை குடிக்கவைத்து அனுப்பிவைத்தனர்‌. அறைக்குள்‌ சென்று கதவை தாளிட்டு கொண்டாள்‌ செம்பருத்தி.

அடுத்தநாள்‌ காலை வாக்கிங்‌ சென்றிருந்த விநாயகம்‌ பரபரப்பாக வீட்டிற்குள்‌ வந்தார்‌.

“தேவகி…” மனைவியை சத்தம்போட்டு அழைத்தார்‌.

“என்னங்க….?”

“இன்னைக்கி சம்மந்தி நம்ப…வீட்டுக்கு வர்றதா கால்பண்ணி சொன்னார்‌…”

“அப்படியா…” “ஆமாம்‌…நம்ப மாப்பிள்ளை புது கம்பெனி ஒன்னு ஆரமிக்கப்போறாராம்‌. அந்த கம்பெனி திறப்பு விழாவுக்கு அழைப்பிதழ்‌ கொடுப்பதற்காக சம்மந்தியும்‌ சம்மந்தியம்மாளும்‌ இன்று நம்ம வீட்டிற்கு வருவதா போன்‌ பண்ணினாங்கள்‌…” என்றார்‌ விநாயகம்‌.

“அப்பா…நான்‌ கிளம்புறேன்‌…”

“இன்னைக்கு கொஞ்சம்‌ சீக்கிரமா வந்துடு செம்பருத்தி…”




 

What’s your Reaction?
+1
19
+1
18
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!