Serial Stories உயிராய் வந்த உறவே

உயிராய் வந்த உறவே-9

9

“நீங்க விசாரிக்கிற வழியே தப்பு” செய்வானை 

சுந்தர்ராமனிடம் உறுதியாய் சொன்னாள்.

“பிறகு எந்த வழியில் என்னை போக சொல்கிறாய்?” சுந்தர்ராமன் எரிந்து விழுந்தார்.

“காதல்… காதல் என்று அதை தவிர வேறு உங்கள் மூளையில் உதிக்கவே இல்லையா ?வாணி காதலில் வீட்டை விட்டு போகவில்லை”

தெய்வானை உச்சரித்த காதல் சுந்தர்ராமனுள் எதையோ தொட்டுவிட அப்படியே அமர்ந்திருந்தார். தெய்வானை அவர் தோள் தொட்டு உலுக்கினாள்.

“வேறேதாவது கனவு உலகத்திற்குள் போய் விடாதீர்கள். நம் மகளை தேட வேண்டும். எனக்கென்னவோ அவள் பச்சைமலைக்குத்தான் தான் போயிருப்பாள் என்று தோன்றுகிறது”

“அங்கே என்றால் அவளுக்கு எல்லாம் தெரிந்திருக்கும் என்கிறாயா?” சுந்தரராமனின் குரலில் தடுமாற்றம்.

அந்த அட்டையை சுற்றிலும் பார்டராக தங்க நிறத்தில் கோடுகள் ஓட அதன் மேல்  வெள்ளி ஜிகினாக்கள் தூவப்பட்டிருந்தன. அட்டையின் நடுவில் மாப்பிள்ளை பெண்ணின் பெயர் வெள்ளி நிறத்தில் மின்னிக் கொண்டிருந்தது. தன் முன் நீட்டப்பட்ட கல்யாண பத்திரிகையை திகைப்பாய் பார்த்தால் வாணி.

அவளைச் சுற்றிலும் பட்டுச்சேலைகளும் நகைகளும் இறைந்து கிடந்தன. இந்த கல்யாண ஏற்பாடு இரண்டு நாட்களுக்கு முன்புதான் ஆரம்பித்தது போல் தெரியவில்லையே… எத்தனையோ நாட்களாக திட்டமிட்டு இப்போது முடித்தது போல் இருக்கிறதே! மீண்டும் அவள் மனது நெருட ஆரம்பித்தது.

“டிசைன் பிடித்திருக்கிறதா ?”விபீசன் அவள் முன் நீட்டிய செயினை திகைப்பாய் பார்த்தாள் .அது தாலி செயின்.

“எப்படி எல்லாம்…அதற்குள்?” 

“மூன்று மாதங்களுக்கு முன்பே தயார் செய்ய ஆரம்பித்து விட்டோம் விபீசன் பிசிறில்லாத குரலில் சொன்னான்.

மூன்று மாதங்களுக்கு முன்பென்றால்… அவளிடம் விசாகன் நெருக்கமாக பழக அதாவது அவள் மௌனத்தை உடைத்து சொந்த வாழ்வு பற்றி பேச வைத்த நாட்கள். படிப்படியாக அவள் மனதை திசை திருப்பிய மூன்று மாதங்கள்…

ஆக இங்கே திருமண ஏற்பாடுகளை செய்து வைத்துக் கொண்டுதான் அங்கே வந்து அவளிடம் முயற்சியை ஆரம்பித்திருக்கின்றனர். இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் தங்கள் முயற்சி வெற்றியில் இவர்களுக்கு சந்தேகமே இருந்திருக்கவில்லை. எப்படியும் எலி வலைக்குள் சிக்கி கொள்ளத்தான் செய்யும் என்று முடிவில் ஏற்பாடுகள்  செய்து வைத்து காத்திருந்திருக்கின்றனர். சிக்கிக்கொண்ட எலியாக தன்னை உணர்ந்தாள்.

அவளால் இந்த திருமண ஏற்பாடுகளில் ஈடுபாட்டுடன் நுழைய முடியாமல் போயிற்று.

“முத்தாலம்மன் கோவில்ல தாலி கட்டிட்டு நம்ம கல்யாண மண்டபத்திலேயே ரிசப்ஷன் மாதிரி வைத்து விடலாம். தாலி கட்டும் போது தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் என்று பத்திருபது பேருக்குள் போதும். ரிசப்ஷனுக்கு ஊருக்குள் சொல்லிக் கொள்ளலாம்” மாணிக்கவேல் திட்டங்களை சொன்னார்.

நம்ம பொண்ணு கல்யாணத்தை தமிழ்நாடே திரும்பி பார்க்கணும். அவ்வளவு கிராண்டா ஏற்பாடுகள் செய்யணும்… கண்களில் கனவுடன் சொன்ன சுந்தர்ராமன் வாணியின் நினைவுக்கு வந்தார்.

“ஆமாங்க நம்ம கல்யாணம் மாதிரி நம்ம மகள் கல்யாணம் யாருக்கும் தெரியாம கோவில்ல நடந்து விடக்கூடாது. லட்சோப லட்சம் பேர் பார்க்கணும்… டிவிகளில் லைவ் போடணும்..” கனவுகளை வளர்த்துக் கொண்டே போன தெய்வானை நினைவிற்கு வந்தாள்.




“என் அப்பா அன்று யாருக்கும் தெரியாமல் கோவிலில் திருமணம் முடித்ததற்கு பழிவாங்குவதற்காக இப்படி செய்கிறீர்களா அங்கிள்?” வாணி மாணிக்கவேலிடம் கேட்டே விட்டாள். அவர் ஸ்தம்பித்து பேச்சின்றி அமர்ந்திருக்க மகேஸ்வரி கண் கலங்கினாள்.

“அம்மு வாயை மூடு. என்ன பேச்சு இது? சாரி கேள்”

வாணி முகத்தை திருப்பிக் கொண்டாள். அவள் நினைத்ததே உண்மை என்று தோன்றும் போது சாரி கேட்பதாவது…

“சும்மா இரு மகி, அம்மு சின்ன பிள்ளை அவளுக்கென்ன தெரியும்? நீ மனதை குழப்பிக்காதடா கண்ணு. இதில் எதுவும் பிடிக்கலைன்னா சொல்லு மாத்திடலாம் “மாணிக்கவேல் மீண்டும் இயல்பான திருமண வேலைகளுக்குள் இழுத்தார்.

“நீங்களே பார்த்து எதையாவது முடிவு பண்ணுங்க” கம்மியான குரலில் சொல்லிவிட்டு தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

விபீசன் மகேஸ்வரி குறைந்தபட்சம் மாணிக்கவேலாவது என யாரோ ஒருவரை தன் அறைக்குள் எதிர்பார்த்தபடி இருந்தவள், யாரும் அப்படி தேடி வராதிருக்கவே மிகவும் சோர்ந்தாள். கதவு இடுக்கு வழியே எட்டிப் பார்க்க அவள் அறையை நோக்கி வந்த மகேஸ்வரியை ஏதோ சொல்லி விபீசன் திருப்பி அனுப்புவது தெரிந்தது.

அடேய் இங்கு நடக்கும் எல்லாவற்றிற்கும் நீ தான் காரணம் மூஞ்சியை பாரு ராட்சசன். அவன் உயரத்தையும் உடம்பையும் மனதில் வைத்து வசவுகளை இறைத்தாள்.

அவனது உயரத்திற்கான அவள் நினைப்பை உறுதி செய்வது போல் ஹாலில் உயரமாக இருந்த பரண்மேல் இருந்து ஏதோ சாமானை கீழே நின்றபடியே இழுத்து எடுத்துக்கொண்டு போனான் அவன்.இந்த பரணின் நுனியை தொடுவதற்கும் அவளுக்கு உயரமான ஸ்டூல் வேண்டும்.இவனானால் கீழிருந்தே கையை உயர்த்தி… யப்பா எவ்வளவு நீளமான கை, அப்படியே வாரி சுருட்டி கொள்வதைப் போல்!

அந்த கைகளின் வலிமையில் அச்சமோ கூச்சமோ ஏதோ ஒரு உணர்வால் வாணியின் தேகம் சிலிர்த்தது. இரவில் பேச்சு வாங்கிய எல்லோரும் நிம்மதியாக உறங்கிப் போய் விட ,தூக்கம் இன்றி தவித்தவள் பேசிய வாணிதான். அறை கதவை திறந்து கொண்டு ஹாலிற்கு வந்தவளின் கால்களை ஏதுவோ இடற குனிந்து பார்த்தாள். விபீசன் எதையோ பரணிலிருந்து எடுத்தபோது விழுந்திருக்கலாம் .போட்டோ ஆல்பம் போல் தெரிந்தது.

அதனை எடுத்து கொண்டு அறைக்குள் வந்து திறந்து பார்த்தால், தாவணியும், பட்டுப்பாவாடையும் ரெட்டை ஜடையும் குடை ஜிமிக்கியமாக, அந்த ஆல்பம் முழுவதும் சிரித்துக் கொண்டிருந்தவள் 

அவள்தான்… அவளேதான்.

 வருடங்களாக அவள் மனதிற்குள் உலாவிக் கொண்டிருக்கும் காட்சிகளுக்கு தனது உரு கொடுக்க அவள் மிகவும் முயன்ற போது கலைந்த தோற்றம், இப்போது ஒன்றுபட்டு கச்சிதமாக பொருந்திப் போனது.

வெடித்து கிளம்பிய விசும்பலுடன் முகத்தை மூடிக்கொண்டவள்,உடலை அலைக்கழித்த ஒரு வகை உணர்வுடன் எழுந்து மாடியேறினாள். மாடியில் மகேஸ்வரியின் அறைக்தவு பூட்டப்பட்டிருக்க உள்ளிருந்து பாட்டு சத்தம் கேட்டது. உற்றுக் கவனிக்க ஜதிகளின் ஓசை.

உடலும் மனமும் பரபரக்க கதவை தட்ட தொட கதவு திறந்து கொண்டது. உள்ளே பார்த்தவள் திகைப்புடன் மலர்ந்தாள். மகேஸ்வரி காலில் சலங்கையுடன் ஒலித்துக் கொண்டிருக்கும் இசைக்கேற்றவாறு நடனமாடி கொண்டிருந்தாள்.வாசலில் இவளைப் பார்த்ததும் நடனத்திற்கிடையே லேசாக புன்னகைத்து தலையசைத்தாள்.

வாணி வேகமாக உள்ளே போய் சேரில் அமர்ந்து கொண்டு ஆர்வமாக அவள் நடனத்தை பார்க்க,மகேஸ்வரி கண்களாலேயே ஆட வருகிறாயா எனக் கேட்க, வாணி துள்ளியபடி எழுந்து விட்டாள். மகேஸ்வரியுடன் நடனத்தில் இணைந்து கொண்டாள்.

வாணி முறையாக நடனம் பயின்றவளல்ல. நாட்டியம் நடனம் எல்லாம் தெய்வானைக்கு பிடிக்காது. அது குடும்பப் பெண்கள் செய்வதல்ல என்பாள். ஆனாலும் வாணிக்கு இயல்பாகவே நடனத்தின் மீது ஈடுபாடிருந்தது. பள்ளியில் படிக்கும்போது நடன வகுப்பில் கற்றுக்கொண்ட சில விஷயங்களை வைத்து தானாகவே அறைக்குள் ஆடிக் கொள்வாள்.ஆனால் மகேஸ்வரியோ நடனத்தை கரைத்து குடித்திருப்பாள் போலும்.பொருத்தமான நடன அடவுகளோடு உடன் இருந்தவளையும் வழிநடத்தி ஆட வைத்தாள் மகேஸ்வரி.




பாடல் முடிந்ததும் களைத்து இருவரும் அமர்ந்து மூச்சிரைத்தனர்.”எனது மன அழுத்தத்திற்கு வடிகால் இந்த நடனம்தான்” நெற்றி வியர்வையை துடைத்தபடி சொன்னாள் மகேஸ்வரி.

“ஆடிக் களைத்த இருவருக்கும் என் அன்பான உபசரிப்பு” சொன்னபடி கையில் இரண்டு டம்ளர்களுடன் அறைக்குள் பிரசன்னமானான் விபீசன். அவன் அவ்வாறு திடுமென்று அங்கே வந்த விதம் அப்படி… கடவுள் முன்னே தோன்றுவது போலத்தான் இருந்தது.

“அங்கேதான் இருந்தீர்களோ? அறையின் மூலையை காட்டி நக்கலாக கேட்டாள் வாணி.

“இல்லையே அதோ அங்கே இருந்தேன்.அறை வாசலுக்கு அந்தப் பக்கம் காட்டினான். “சுவரோரமாக நின்று கொண்டு ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருந்தேன்” தெளிவாக விளக்கினான்.

அவன் சொன்ன விதத்திற்கு மகேஸ்வரி படக்கென சிரித்து விட கோபப்பட முயற்சி செய்து கொண்டிருந்த வாணிக்குமே சிரிப்பே வந்தது.

மூவருமே லேசாக சிரித்தபடி விபீசன் கொண்டு வந்திருந்த பாலை மெல்ல அருந்தினர். காய்ந்திருந்த தொண்டைக்குள் கதகதப்பான பால் வருடலாய் இறங்குவதை ரசித்தபடி பாதி டம்ளரை வாணி முடித்திருந்தபோது, மகேஸ்வரி சாதாரண குரலில் மென்மையாக அந்த வெடியை வெடித்தாள்.

“நாளை மிஸ்டர் சுந்தர்ராமனுக்கு கல்யாண பத்திரிக்கை வைக்கப் போகிறோம்”




What’s your Reaction?
+1
35
+1
22
+1
2
+1
2
+1
1
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!