Serial Stories உயிராய் வந்த உறவே

உயிராய் வந்த உறவே-8

8

“மகாராணி இனிப்பு மட்டும்தான் சாப்பிடுவீர்களா?” நக்கலாக கேட்டபடி அவளருகே வந்து அமர்ந்த விபீசனை வாணி எதிர்பார்த்துக் கொண்டுதான் இருந்தாள்.

“எனக்கு பிடித்ததை தெரியப்படுத்தினேன் அவ்வளவுதான்”

“இனிப்பு மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருந்தால் ஒரு கட்டத்தில் நாக்கே மரத்துப்போய் சுவை தெரியாமல் போய்விடும் தெரியுமா?”

“இதுவரை அந்த பிரச்சனை எனக்கு வந்தது இல்லை” மரத்த குரலில் சொன்னாள்.

“இனி வரும். வரத்தான் போகிறது பாரேன்” அவனிடம் அவளுக்கு அப்படி ஆகிவிட வேண்டும் எனும் ஆக்ரோஷம்.

இந்த வேகம் தாங்காது வாணியின் கண்கள் கலங்கிவிட “சுவைக்கு எப்படியோ… உணர்வுகள் மரத்துப் போய்விட்டால் நன்றாக இருக்கும். அதற்கு எதுவும் வழி இருந்தால் சொல்லுங்கள்” என்று விட்டு வேகமாக அறையை விட்டு வெளியேறி விட்டாள்.

சிறிது நேரம் யோசனையோடு அமர்ந்திருந்த விபீசன் மகேஸ்வரியை தேடி சென்றான். “இனியும் எங்கள் திருமணத்தை தள்ளிப் போடும் எண்ணமில்லை. விரைவிலேயே அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள்”

உத்தரவு போன்ற அவனது பேச்சுக்கு மகேஸ்வரி தலையசைத்தாள்.




 

அன்று இரவு உணவின் போது மாணிக்கவேல் வாணியிடம் திருமண விஷயத்தை சொல்ல அவள் விழித்தாள். இது அவள் எதிர்பார்த்ததுதான்…  இதனை ஒருவகை ஒப்பந்தம் போல் இட்டுத்தான் இங்கே அழைத்து வரப்பட்டிருந்தாள்.

ஆனாலும் இந்த பேச்சு அவளால் ஏற்றுக் கொள்ள முடியாததாகவே இருந்தது. இதழ் அசையும் முன்பு மறுப்பாக தலை அசைந்து விட்டது போலும்.

“நமது ரூல்ஸ் மறந்து விட்டதா?” சீறினான் விபீசன்.

” எனக்கு கொஞ்சம் டைம் வேண்டும் .நான் யோசிக்க வேண்டும்”

“அட, மூளையை பயன்படுத்தி யோசிக்கவெல்லாம் செய்வாயா நீ?”

அவனது தொடர் தாக்குதல்களில் வாணி ரொம்பவே பலம் இழந்து கொண்டிருந்தாள். பரிதாபமான அவள் பார்வையை பார்த்த பார்வதி மெல்ல தலை வருடினாள்.” விபா நீ பேசாமல் இரு. வாணியிடம் நாங்கள் பேசிக் கொள்கிறோம்”

“என்னவோ செய்யுங்கள். எனக்கு தேவை ரிசல்ட் மட்டும்தான்” சாப்பிட்ட தட்டை தூக்கிக்கொண்டு எழுந்து போனான் அவன்.

அன்று இரவே எல்லோருமாக தன் அறையில் மாநாடு கூட்டப் போகிறார்கள் என்று வாணி எதிர்பார்த்திருக்க, யாரும் வரவில்லை. சிறிய டம்ளரில் பால் எடுத்து வந்த மகேஸ்வரி “மனதை குழப்பிக் கொள்ளாமல் படுத்து தூங்குடாம்மா” என்று விட்டு போனாள்.

சப்பென்றானது போல் இருந்தது வாணிக்கு. என்ன எதிர்பார்த்தேன்… ஏன் இப்படி ஒரு மனநிலை? தன்னைத் தானே உணர்ந்து கொள்ள முடியாமல் தூக்கம் வராமல் புரண்டாள். கடிகார முட்கள் இரண்டும் ஒன்றை ஒன்று கொஞ்சிக் கொண்டு உறவாடி நின்ற நடுராத்திரி தாண்டிய பிறகும் தூக்கம் அவள் பக்கம் வராமல் இருக்கவே எழுந்து அறையை விட்டு வெளியே வந்தாள்.




வாசல் கதவை திறந்து கொண்டு முன் வராண்டாவில் அமர்ந்து கொண்டாள்.மலைப்பிரதேசத்திற்கேயுரிய ஜில்லென்ற காற்று வீசி மனப்புழுக்கத்தை குறைத்தது.வராண்டாவில் கிடந்த மூங்கில் நாற்காலிகளை விடுத்து ஜில்லென்றிருந்த தரையில் அமர்ந்து கால்களை கட்டிக்கொண்டாள்.

“என்னடாம்மா தூக்கம் வரவில்லையா?” கேட்டபடி அவளருகே மகேஸ்வரி அமர கொஞ்சம் துணுக்குற்று பின் மெல்ல தலையாட்டி வைத்தாள். சிறிது நேர தனிமை அதற்கும் இடையூறா… மனம் சலித்துக் கொண்டது.

“சில நேரங்களில் தனிமை நன்றாகத்தான் இருக்கும். ஆனால் எப்போதும் தனிமையிலேயே இருந்து விட முடியாதில்லையா? மகேஸ்வரி புன்னகைத்து கேட்டாள்.

அவள் கேட்ட கணத்திலே

 மனதில் தோன்றி விட்ட வார்த்தைகளை எவ்வளவோ அடக்கப் பார்த்தும் வானியின்

 உதடு தாண்டி உதிர்ந்து விட்டன அவை.” இதனை நீங்கள் சொல்கிறீர்களா? இருபதுவருடங்களாக தனிமையில் இருப்பவர்தானே நீங்கள்?”

விசையுடன் அடித்த பந்தை முகத்தில் வாங்கிய அதிர்ச்சி மகேஸ்வரிக்கு.ஆனால் கணப்பொழுதில் தன்னை மீட்டுக் கொண்டவள் விரக்தி புன்னகை சிந்தினாள். “தனிமை நான் கேட்டதில்லை எனக்கு விதிக்கப்பட்டு விட்டது”

சை…வாணி உனக்கு நாவடக்கம் வேண்டும் தன்னைத் தானே சபித்துக்கொண்டாள் வாணி.

“சாரி”என்று மன்னிப்பும் கேட்டுக்கொள்ள மகேஸ்வரி மெல்ல அவள் கன்னம் வருடினாள்.பிறகு இரு கைகளாலும் அவள் முகத்தை தாங்கியவள் “அழகுடா நீ” என்று விட்டு நெற்றியில் முத்தமிட்டாள்.

வாணியின் உடல் தடதடவென நடுங்கத் தொடங்கியது.இதனை எதிர்கொள்ள முடியுமென்று அவளுக்கு தோன்றவில்லை. பரிதவிப்புடன் அலைந்த அவள் விழிகளில் வாசல் நிலையில் சாய்ந்து நின்றிருந்த விபீசன் தென்பட்டான்.

ஆதிமூலமே!என சரணடைய தகுந்தவனாக அப்போது அவன் தோன்ற கண்ணால் அவனை இறைஞ்சினாள். பெருமூச்சொன்றுடன் அவன் இவர்கள் இருவருக்கும் இடையில் வந்து சம்மணமிட்டு அமர்ந்தான்.

“என்ன மகி ஒரே கொஞ்சல் போல? நானெல்லாம் உன் கண்ணுக்கு தெரியவில்லை பார்த்தாயா?” அன்னையை கொஞ்சும் பிள்ளையின் குரலில் கேட்டவனை வியப்பாய் பார்த்தாள் வாணி. இவன் இப்படிப்பட்ட குரலில் கூட பேசுவானா?

“போடா போக்கிரி, உன்னை மறப்பேனா?” மகேஸ்வரியின் வலது கை இப்போது விபீசனின் கன்னம் வருடியது.

” நீங்கள் இரண்டு பேரும் என் இரு கண்கள்.நீங்கள் இருவரும் வாழ்க்கையில் இணைய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” குரல் தழுதழுக்க சொன்னாள்.




“அதனை உன் அம்முவிடம் சொல்லு” விபீசன் சொல்ல மகேஸ்வரியின் கை வாணியின் கன்னத்தில் சற்று அழுத்தமாக பதிந்தது.

 “அம்மு நிச்சயம் இது உனக்கு நல்ல வாழ்க்கைடாம்மா”

இந்த செல்ல அழைப்பும் மகேஸ்வரியின் ஸ்பரிசமும் விபீசனின் அருகாமையும் கலந்து வாணியை திக்கு முக்காட வைத்தது. எந்நேரமும் ஆற தழுவி கொள்பவள் போன்ற மனநிலையில் இருந்த மகேஸ்வரியிடம் மீண்டும் ஒருமுறை சரணடைய இப்போதைக்கு வாணிக்கு மனமில்லை.

இதனை மகேஸ்வரிக்கு புரிய வைக்க முடியும் என்று அவளுக்கு தோன்றவில்லை. ஏன் விபீசனுக்குமேதான். அவன் இப்படித்தான் வேறு வழி இல்லை என்ற வட்டத்திற்குள்ளேயே தன்னை அடக்க நினைப்பதாக உணர்ந்தாள். ஆனாலும் தனது இந்த தயக்க நிலையை மகேஸ்வரியை விட விபீசனுக்கே உணர வைக்க முடியும் என்ற எண்ணத்தோடு மீண்டும் அவனையே ஏறிட்டாள்.

இந்த தளையிலிருந்து என்னை விடுவியேன் ப்ளீஸ்…

விபீசன் இவளுக்கு கண்களில் சிறு சலிப்பை காட்டிவிட்டு மகேஸ்வரியின் கைப்பற்றி எழுப்பினான்.”நீ போய் படு மகி. நான் அம்முடன் பேசிவிட்டு வருகிறேன்”

மகேஸ்வரி மனமின்றி எழுந்து நின்றாள்.”சண்டை எதுவும் போட்டு விடாதீர்கள்” கெஞ்சல் போல் இருவரிடமும் கேட்டுக் கொண்டாள்.

“என் செல்ல அம்மு…” என்று இருவரும் ஒன்று போல் பேசிவிட்டு நிறுத்தி சிரித்தனர். “என் செல்ல அம்முவை ஒன்றும் சொல்லக்கூடாது என மகேஸ்வரியும்… செல்ல அம்முவை திட்டுவேனா… என்று விபீசனும் முடித்தனர்.

இந்த கொஞ்சல்கள் வாணியின் மனதிற்குள் மெல்ல மெல்ல பனித்துகள்களாய் இறங்கிக் கொண்டிருந்தன.

அந்த இரவின் முடிவில் அவள் விபீசனிடம் திருமண சம்மதத்தை தந்திருந்தாள்.




What’s your Reaction?
+1
36
+1
23
+1
1
+1
2
+1
2
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!