Serial Stories காதல் தேசம்

காதல் தேசம்-9

 9

      நெற்றியில் வழிந்த வேர்வையை வழித்து  எறிந்துவிட்டு, ரயிலில் பின்புறத்தை மனநிறைவோடு அது கண்களில் இருந்து மறையும் வரை பார்த்தபடி இருந்தான் கணேஷ்.
அப்பொழுது அவனது தோளின் மீது ஒரு கை விழுந்தது. யாரது திரும்பிய கணேஷின் விழிகள் பிதுங்கி வெளியே வந்து விடும் போல் ஆகிவிட்டது. எதிரே நின்றது ‘அன்வர்’.
கணேஷ் நீ எப்போது இங்கே வந்தாய்?. எப்படி என் கண்ணில் சிக்காமல் போனாய்? சக்தி எங்கே ? ஆயிஷா, உன்னை ரயில் நிலையத்தின் முகப்பில் தானே இருக்க சொன்னேன்?.
நீ இவனை கவனிக்கவில்லையா? படபடவென்று கேள்விகளை அடுக்கினான் அன்வர்.

கணேஷிற்கு பேசுவதற்கு நா எழவில்லை . ஆயிஷாவும் அன்வரோடு இருக்கிறாளா? அப்படி என்றால், சக்திக்கு என்று இருந்த ஒரே ஒரு துணையையும் பிரித்து விட்டு அவளை அனாதையாக ரயிலில் ஏற்றி விட்டு விட்டேனா?, தாளாத மனச்சுமை ஒன்று கணேஷின் இதயத்தில் வந்து அமர்ந்தது.

அன்வர்   கணேஷை உலுக்கினான்.சொல் நண்பா எங்கே சக்தி? , அன்வரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் ரயில் சென்று கொண்டிருந்த திசையை நோக்கி விரலை நீட்டினான் கணேஷ்.

சட்டென்று தலையில் அடித்துக்கொண்டான் அன்வர்.,என்ன கணேஷ் இப்படி செய்து விட்டாய்?. ‘ஆயிஷா ‘தவறு உன்னிடமும் இருக்கிறது. எந்த நேரத்திலும் கணேஷ் வரலாம் நீ கவனமாக இரு என்று கூறினேன். நீ , இவர்களை கவனிக்கவில்லையா?
இல்லை நான் ரயில் நிலையத்தின் வாசலில் தான் இருந்தேன். இவர்கள் எப்படி உள்ளே வந்தார்கள் என்பதே எனக்குத் தெரியவில்லை.





ஆயிஷாவை திட்டாதே அன்வர், நான் ரயில் நிலையத்தில் முன்புறமாக அல்ல பின்புறமாக பக்கவாட்டு வழியாக உள்ளே நுழைந்தேன். என் அவசரம் அப்படி,
நீ இவ்வளவு தூரம் யோசித்து ஆயிஷாவை வாயிலில் நிற்க வைத்தவன், நீயும் பிளாட்பாரத்தில் என்னை எதிர்பார்த்து இருக்கலாமே.

ஐயோ இந்தக் கொடுமையை நான் என்னவென்று சொல்ல, எப்படியும் ரயில் கிளம்புவதற்கு முன்னால் நீ வந்து விடுவாய் என்பது எனக்கு நன்றாக தெரியும். அதனால்தான் ஆயிஷாவை வாயிலிலும் நான்  பிளாட்பார்மிலும் காத்திருந்தோம்.

“சரி, நீ எப்படி எங்களை தவற விட்டாய்”?.

பேசுவதற்கு நேரமில்லை கணேஷ் .நாம் உடனே ரயிலை பின் தொடர வேண்டும்.
ரயிலை பின்தொடர்வதா!!! ‘ எப்படி அன்வர்’?
அது எனக்குத் தெரியவில்லை, ஆனால் சக்தி ஆபத்தில் இருக்கிறாள் அது மட்டும் தெரிகிறது.

நண்பா சக்திக்கு என்ன ஆபத்து வந்துவிடப் கூடும். ரயிலில் நீ இல்லை என்று தெரிந்ததும் அடுத்த நிலையத்திலேயே அவள் இறங்கி விடுவதற்கு சாத்தியங்கள் உண்டு. இல்லையென்றால் நிலைய அதிகாரியை தொடர்பு கொண்டு அடுத்த ரயில் நிலையத்திற்கு தகவல் தர சொல்வோம். சக்தியை அங்கேயே தேங்கி நிற்க வைப்போம். நாம் ரயிலை பின் தொடர்ந்து செல்வதால் மட்டும் சக்தியை பிடித்துவிட முடியாது நண்பா.

கணேஷ் உனக்கு நான் சொல்வது புரியவில்லை.போகின்ற பாதையில் பேசிக்கொள்ளலாம். சக்தி ஆபத்தில் இருக்கிறாள். நாம் உடனே ரயிலை பின் தொடர வேண்டும். என்னோடு கிளம்பு உத்தரவு போல் வந்தது அன்வரின் குரல்.

அன்வர் கூறுவது ஏன் என்று புரியாவிட்டாலும் நண்பனின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு, சட்டென்று செயல்பட ஆரம்பித்தான் கணேஷ். தாய் அமர்ந்திருந்த சக்கர நாற்காலியை ஆயிஷாவின் கையில் ஒப்படைத்து, ஆயிஷா நீ எக்காரணம் கொண்டும் ரயில் நிலையத்தை தாண்டி வெளியே சென்று விடாதே, அதிகாரிகளின் கண் பார்வைக்கு உட்பட்டு அவர்களின் பாதுகாப்பில் இருப்பதுபோல் பார்த்துக் கொள். என் தாயாரை உன்னை நம்பித்தான் ஒப்படைக்கிறேன் என்று கூறிய அன்வர், அவளிடம் இருந்து எந்த ஒரு பதிலையும் எதிர்பார்க்காமல் வில்லில் இருந்து விடுபட்ட அம்பு போல் பாய ஆரம்பித்தான்.

ரயில் நிலையத்தின் வாசலில் ஒரு நபர் மோட்டார் சைக்கிளுடன் வந்து நிற்க,  அவரிடம் மோட்டார் சைக்கிளை இரவலாக தரும்படி மன்றாடி கேட்டான் கணேஷ்.

முட்டாள் இந்த பைக்கின் விலை தெரியுமா, நீ யார்? உன்னை நம்பி நான் ஏன் என் பைக்கை தரவேண்டும் ?வழி விடு.. இல்லையென்றால் போலீசை கூப்பிடுவேன். கத்தி கூச்சலிட்டு கொண்டிருந்தார் அந்த நபர்.

அவர்கள் இருவருக்கும் இடை புகுந்தான் அன்வர்.  அவன் கையிலிருந்து பைக்கின் மதிப்பிற்கும் அதிகமான தொகை பைக்கின் உரிமையாளருக்கு மாறியது. அவர் திறந்த வாய் மூடாமல் நிற்க அதுகுறித்து எந்த ஒரு வியப்பும் இல்லாமல் பைக்கை ஸ்டார்ட் செய்தான் கணேஷ்.
வேகம் , வேகம் ,மின்னல் வேகம் காற்றுடன் போட்டிபோட்டு அந்த பைக் சீறியது.

ரயில் பெட்டி முழுவதிலும் நடந்திருந்தாள் சக்தி. ஆயிஷா இங்கேதானே இருக்கவேண்டும். ஏன் அவள் இல்லை. ஒருவேளை ரயிலின் முன்புறம் ஏரி இருப்பாளோோ, பின்புறம் ஏறிக் கொள்வதாக தானே இருவரும் பேசினோம் .
இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு இடையில் நிறுத்தங்கள் எதுவுமில்லாமல் இந்த ரயில் செல்லுமாமே,  ‘இறைவா ‘ இது என்ன சடுகுடு ஆட்டம்.ஒரே ரயிலில் ஒரு புறம் நான், மறுபுறம் என் ‘அன்வர்’. ஆனால், இருவரும் பார்த்துக் கொள்ள முடியாது. இன்னும் எவ்வளவு நேரம் இதுபோல் இருக்க வேண்டுமோ தெரியவில்லை.

ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்த்தபடி நேரத்தை விரட்டியடிக்க முயற்சி செய்தால் சக்தி. ரயிலுடன் ஓடிவரும் மரங்களை எண்ண ஆரம்பித்தாள். அப்பாபா நீண்ட நேரத்தை கழித்து ஆயிற்று என்று பெருமூச்சு விட்டுவிட்டு, அருகில் இருந்த நபரிடம் மணி என்ன ஆயிற்று என்று கேட்டபொழுது கடந்திருந்தது, “வெறும் 5 நிமிடங்களே”.
‘சே’   எப்பொழுதுமே இப்படித்தான் இந்த நேரம் நான் நினைக்கும் பொழுது நகர்வதில்லை. நான் நிற்கச் சொல்லும் பொழுது நிற்பதும் இல்லை, கால்களால் தரையை உதைத்துக் கொண்டான்.

இருக்கையில் அமர பிடிக்காமல் பெட்டிக்கு உள்ளே, இங்கும் அங்குமாக நடக்க ஆரம்பித்தாள்.

‘அன்வர்’  நான் இங்கே தான் இருக்கிறேன். உனக்கு அருகிலேயே தான் இருக்கிறேன். என்னை உன்னால் உணர முடிகிறதா, மனதிற்குளாகவே அன்வருடன் வாதாட ஆரம்பித்தாள்.

திடீரென்று ரயில் பெட்டிக்குள் பேரிரைச்சல்.  மக்களின் அவலக் குரல். ஏதோ விரும்பத் தகாத காரியம் பெட்டிக்குள் நடக்கிறது என்பது மட்டும் சக்திக்கு புரிந்தது.அது என்ன என்பது தான் புரியவில்லை.




அன்வர்  இப்பொழுதாவது சொல் என்ன பிரச்சனை? பைக்கை செலுத்தியபடி கேட்டான் கணேஷ்.

நீ ,சக்தியை அழைத்துக்கொண்டு சென்று விட்டாய் என்று தெரிந்ததுமே  எப்படியும் நீ ரயில்நிலையம் வருவாய் என்று எனக்குத் தெரியும். எனவே நீ வருவதற்காக காத்திருந்தேன்.

அப்பொழுது பிளாட்பார்மில் என் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் இரண்டு நபர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.  எனக்கு ஏனோ அவர்கள் மேல் ஒரு அதிருப்தி ஏற்பட ஆரம்பித்தது. ஆயிஷாவை என் பெட்டியிலேயே அமரச் செய்துவிட்டு அவர்கள் கவனிக்காத வண்ணம் நான் அவர்கள் அருகில் சென்று அவர்கள் பேசுவதை கவனித்தேன்.

அவர்கள் கலவர கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதும்  ஒரு பெரிய தாக்குதலை நடத்த முடிவு செய்திருக்கிறார்கள் என்பதும் எனக்குப் புரிந்தது . ஆனால் எங்கே, எப்போது, என்பது எனக்கு புரியவில்லை .ஒருவேளை இப்போது இங்கே இந்த ரயில் நிலையத்தை  கூட இவர்கள் தாக்கக்கூடும் என்ற பயம் எனக்கு ஏற்பட்டது.

இவர்கள் இன்னும் எத்தனை பேர் இங்கே ரயில் நிலையத்திற்குள் இருக்கிறார்கள், நிலையத்தை தாக்குவதானால் எப்போது ? எப்படி தாக்கப் போகிறார்கள் ? நான் அவர்களை மேலும் கூர்ந்து கவனித்தேன். ஆனால், அவர்களுக்கு என் செயல்பாட்டில் ஏதோ வித்தியாசம் தெரிந்திருக்க வேண்டும். அவர்கள் என்னை விட்டு விலகிச் சென்றார்கள்.

எனக்கு பயம் வந்தது. எதுவானாலும் அம்மாவும் ஆயிஷாவும் என் கண் பார்வையில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ரயிலில் பயணம் செய்யவும் பயம் ஏற்பட்டது.  நீ மட்டும் சக்தியை அழைத்து செல்லாது இருந்திருந்தால் இந்த நேரம் சக்தியையும் அழைத்துக் கொண்டு உன்னுடைய வீட்டிற்குத்தான் வந்து இருப்பேன்.
நீ சக்தியுடன் எந்த நேரமும் ரயில் நிலையத்திற்குள் வருவாய்  என்பதனால், ரயில் நிலையத்தை விட்டு வெளியே செல்ல முடியாமல் ஆயிஷாவை ரயில் நிலையத்தில் வாசலில் நிற்க செய்துவிட்டு நான் உள்ளிருந்த படி உன்னை எதிர்பார்த்து காத்திருந்தேன்.

அப்பொழுது, என்னுடைய சந்தேகத்திற்கு உண்டான அந்த இரண்டு நபர்களும் தங்களுக்குள் கடிதத்தை பரிமாறிக் கொண்டனர். பிறகு ஒருவரை ஒருவர் திரும்பியும் பாராமல் வேறு வேறு பாதையில் நடக்க ஆரம்பித்தனர். அதில் ஒருவன், கடிதத்தை தன் சட்டைப்பையில் வைப்பதாக நினைத்து கீழே போட்டுவிட்டு சென்று விட்டான். அந்த கடிதத்தை எடுத்து வாசித்த போதுதான் எனக்கு அவர்கள் தாக்கப் போகும் இடம் எது என்றும், எப்போது என்றும் தெரிந்தது.

அந்தக் கடிதத்தை நான் வாசித்து, சிறிது நேரம் நிலைகுலைந்து போய் நின்ற நேரத்தில் தான் நீ சக்தியை ரயிலில் ஏற்றி அனுப்பி இருக்கிறாய்.

( தொடரும்…..)




What’s your Reaction?
+1
6
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!