Serial Stories அன்பெனும் ரகசியம்

அன்பெனும் ரகசியம்-5

 5

நேரம் குறைவாயிருந்த காரணத்தால் நாலு தெருவிற்குள் மட்டும் சென்று, உடுக்கையை அடித்து, குறி சொல்லி விட்டு மீண்டும் சுடுகாட்டிற்கே திரும்பினான் ராஜய்யன்.

உள்ளே வந்தவன் பார்வையில், சவ மேட்டின் மீது படுத்துறங்கும் சரவணன் பட, “திடு”மென அதிர்ந்து அங்கேயே நின்றான்.  “இந்தப் பாலக்காட்டுக்காரன் ஏன் என் பின்னாலேயே சுத்திக்கிட்டிருக்கான்?.. என்னாச்சு அவனுக்கு?… நான் வெச்சிருப்பது அவன் குடுத்த குட்டிச் சாத்தான்தான்!… அதை ஏன் அவனே திருட வர்றான்?”

தன் சந்தேகத்தை அவனையே எழுப்பிக் கேட்டு விடுவது என்கிற முடிவோடு வேக வேகமாய் சரவணன் படுத்திருந்த சமாதியருகே வந்தவன், அங்கே ஒரு சிறுவன் படுத்திருக்கக் கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளானான்.

கிழக்கு வானம் கொஞ்சம் கொஞ்சமாய் வெளுக்கத் துவங்கியது.

 “யார் இந்தப் பையன்?… இவன் எதுக்கு இங்க வந்து சவமேட்டின் மீது தூங்கறான்?… இவனா இங்க வந்தானா?… இல்லை யாராச்சும் கொண்டு வந்து போட்டுட்டுப் போயிருக்காங்களா?”

அவனை எழுப்பலாமா?… என்று நினைத்த ராஜய்யன், “இல்லை.. பையன் நல்லாத் தூங்கறான்… அவனே எழட்டும்” என்று நினைத்துக் கொண்டு அங்கிருந்து நகர முற்படும் போது அவன் கண்களில் அது பட்டது.

 “இதென்ன இந்தச் சிறுவனின் நெற்றியில் தீபம் எரிவது போலொரு தழும்பு!… சிவபெருமானின் நெற்றிக்கண் போலல்லவா இருக்கு…?” யோசித்தவாறே நகர்ந்தான்.

சிறிது நேரத்திலேயே பொழுது விடிந்து விட, சரவணன் மெல்லக் கண் திறந்தான்.  தாயின் அணைப்பில் படுத்திருப்பது போன்ற ஒரு சுகத்தை அவன் உணர, எழவே மனமில்லாமல் கண்களை மூடியபடி அப்படியே கிடந்தான்.

 “தம்பீ… எழுந்திருப்பா…” என்ற குரல் கேட்க, மெல்லக் கண்களைத் திறந்து பார்த்தான்.

 பெரும் உருவமாய் கோடங்கி ராஜய்யன் நிற்க, “விருட்”டென எழுந்தான்.

 தன்னைக் கண்டு அவன் அஞ்சுகிறான் என்பதைப் புரிந்து கொண்ட ராஜய்யன், அவனருகில் வந்து சிநேகித பாவத்தோடு அவன் தோளைத் தொட்டு, “தம்பீ… உன் பேரென்ன?” தணிவான குரலில் கேட்டான்.

 “ச… சரவணன்”

 “எங்க இருக்கு உங்க வீடு?”

 கையைத் தூக்கி வடக்கு திசையைக் காட்டி, “தண்ணீர் பந்தலில்?” என்றான்.

 “அது செரி… இங்க எப்ப வந்தே?… எதுக்கு வந்தே?… யார் கூட வந்தே?”

 “ராத்திரி எங்கம்மாவோட சேலையைத் தேடிட்டு வந்தேன்!… இது என் பக்கத்துல இருந்தால்தான் எனக்குத் தூக்கமே வரும்” என்றான் மழலைக் குரலில்.

 அவன் கையிலிருந்த மஞ்சள் நிற சேலையை எடுத்துப் பார்த்த ராஜய்யன் யோசித்தான்.  “இது…. அந்தப் புதுப்பெண் குடுத்ததாச்சே?… அந்தப் பெண்ணுக்கு எப்படி இந்தப் பையனோட அம்மா சேலை கெடைச்சுது?”

 “தம்பி… தண்ணீர் பந்தல்ல உங்க வீடு… ரேஷன் கடைக்கு அடுத்த வீடா?” ராஜய்யன் கேட்க,

 “ஆமாம்”

 “அங்க ஒரு அம்மா இருந்தாங்களே?… அவங்க யாரு?”

 “என் சித்தி!”

 “அப்ப உன்னோட அம்மா?”

 “சாமிகிட்டப் போயிட்டாங்க!ன்னு அப்பா சொன்னார்”

ராஜய்யனுக்கு கொஞ்சம் கொஞ்சமாய்ப் புரிய ஆரம்பித்தது.  “இவனோட அம்மா இறந்திட்டாங்க!… இவனோட அப்பா… ரெண்டாந்தாரமா ஒரு பொண்ணைக் கட்டிக்கிட்டார்!… அந்தப் பொண்ணு மூத்த தாரத்தோட சேலைகளையெல்லாம் தூக்கி என் கிட்டே குடுத்திருச்சு”

தலையை மேலும், கீழும் ஆட்டி தன் எண்ணத்தை தானே ஆமோதித்துக் கொண்ட ராஜய்யன், “தம்பி சரவணா… நீ அம்மாவோட சேலை பக்கத்தில் இல்லாமத் தூங்க மாட்டியா?” கேட்டான்.

 “ம்ஹும்… இது என் பக்கத்துல இருந்தா… எங்கம்மா இருக்கற மாதிரியே இருக்கும்”

 “சரி… இப்ப உன் கிட்ட உன் அம்மாவோட சேலை ஒண்ணுதான் இருக்கு… அது கிழிஞ்சிடுச்சுன்னா என்ன பண்ணுவே?”

சில நிமிடங்கள் பயத்தோடு “மலங்க…. மலங்க” விழித்த சரவணன், “அதுக்குள்ளார சாமி கிட்டப் போயிருக்கற என் அம்மா திரும்பி வந்திடுவாங்க!” என்றான் அப்பாவித்தனமாய்.

அதைக் கேட்ட ராஜய்யனின் மனம் கனத்துப் போனது.  “கவலைப்படாதே தம்பி… உங்க வீட்டிலிருந்த உங்கம்மாவோட சேலை எல்லாம் என் கிட்ட இருக்கு”

“ஹைய்ய்ய்… எனக்குக் குடுக்கறீங்களா?”

மெலிதாய்ச் சிரித்த ராஜய்யன், “அதையெல்லாம் மறுபடியும் நீ வீட்டுக் கொண்டு போனேன்னா… மறுபடியும் உங்க சித்தி தூக்கி பாத்திரக்காரனுக்குப் போட்டுடுவாங்க!..”என்றான்.




 

 “அப்படியா?” என்று சோகமாய்க் கேட்டு விட்டு, “இல்லேன்னா ஒண்ணு செய்யலாம்… அதை நாமே வெச்சுக்கலாம்!… தெனம் ஒண்ணா நான் எடுத்துக்கறேன்” என்றான் சரவணன்.

 “தம்பி… இன்னும் கொஞ்சம் நேரத்துல உங்க வீட்டிலிருந்து உன்னைத் தேடிட்டு வந்திடுவாங்க!… நீயும் அவங்க கூடப் போயிடுவே!… அதுக்கப்புறம் நீ அங்கிருப்பே… நான் இங்கிருப்பேன்…. எப்படி அம்மா சேலைகளை தெனம் ஒண்ணா உனக்குத் தர்றது?” சிரித்தபடி ராஜய்யன் கேட்க,

 “நான் எங்க வீட்டுக்குப் போனால்தானே?… எங்கம்மா சேலைகள் இருக்கற இடத்துலதான் நான் இருப்பேன்”

 “அய்ய… என் கூடவெல்லாம் உன்னால் இருக்க முடியாது… நான் வீடு வாசல் இல்லாதவன்… நாடோடி…. எனக்கு குடும்பம்… குழந்தை குட்டி எதுவும் கிடையாது!… ஒரேயொரு அக்காக்காரி… ஊர்ல இருக்கா!… எப்ப சோறு கிடைக்கும்?… எங்கே கிடைக்கும்?ன்னு எனக்கே தெரியாது… கிடைக்கும் போது சாப்பிட்டுக்குவேன்… கிடைக்காதப்ப பட்டினியாக் கிடப்பேன்” தன் நிலைமையைச் சோகத்தோடு சொன்னான் ராஜய்யன்.

 “பரவாயில்லை” படு சாதாரணமாய் ஒரே வார்த்தையில் முடித்தான் சரவணன்.

 “என்ன பரவாயில்லை?… உனக்கு வீடிருக்கு… அப்பா இருக்காங்க… சித்தி இருக்காங்க… நேரா நேரத்துக்கு வயித்துக்கு சாப்பாடு வந்திடும்!… அதையெல்லாம் விட்டுப் போட்டு இந்தப் பரதேசி கூட இருக்கப் போறியா?” சற்றுக் கோபமாகவே சொன்னான் ராஜய்யன்.

 “ஆனாலும்… எங்கம்மா இங்கதானே இருக்கு!… அதோ அந்த இடத்துல அந்த மேட்டுக்குக் கீழே… ராத்திரி நான் அங்க தூங்கும் போது உள்ளிருந்து எனக்கு கதை சொன்னாங்க”

ராஜய்யன் தலையைத் திருப்பி, அந்தச் சிறுவன் உறங்கிய சவ மேட்டைப் பார்த்தான்… “ஒருவேளை இவன் அம்மாவை அந்த இடத்தில்தான் புதைத்திருப்பார்களோ?”

சட்டென்று யோசனை வந்தவனாய், “ஆமாம்… நீ இஸ்கூலுக்குப் போறியா?” கேட்டான்.

 “ஆமாம்”

 “ஆங்… மாட்டினியா?… இங்க இருந்தா எப்படி இஸ்கூலுக்குப் போவே?”

 “போக மாட்டேனே?”

 “படிப்பு?”

 “அம்மா சொல்லிக் குடுக்கும்” என்றான் சரவணன் அந்த சவ மேட்டைப் பார்த்து.

சூரியன் மேலே ஏற ஏற கோடங்கிக்குப் பசிக்க ஆரம்பித்தது.  “தம்பி… சாப்பிடலாமா?”

 “எங்கே?”

 “கொஞ்ச தூரம் நடந்து போனா சின்னதா ஒரு டிபன் கடை வரும் அங்க போய் சாப்பிடலாம்”

 இருவரும் சுடுகாட்டின் கேட்டிற்கு வெளியே வந்து சாலையில் நடக்கத் துவங்கினர்.

அப்போது ராஜய்யன் கேட்டான்.  “ஆமாம்… அதென்ன உன் நெற்றில ஒரு தழும்பு… கீழ விழுந்திட்டியா?”

 “இல்லை… அது நான் பொறக்கும் போதே இருந்திச்சாம்… எங்கப்பா சொல்வாரு… அது ஞானதீபமாம்”

 “ஓ… அப்படியா?” என்று நகைப்புடன் கேட்ட ராஜய்யன்,  “இருக்கட்டும்… இருக்கட்டும்” என்றான். 

****




காலையில் எழுந்ததும் அறையை விட்டு வெளியே வந்த குமரேசன் ஹால் சோபாவில் சரவணன் இல்லாதிருக்க, “பாத்ரூம் போயிருப்பான்” என்று அலட்சியமாய் நினைத்துக் கொண்டு, வீட்டு வாசலில் கிடந்த செய்தித்தாளை எடுத்து வந்து சோபாவில் அமர்ந்து படிக்கத் துவங்கினார்.

காஃபி கொண்டு வந்து கொடுத்த சுமதியிடம், “சரவணனுக்கு பால்தான் குடுக்கணும்… அவன் டீ காஃபி சாப்பிட மாட்டான்?” என்றார்.

 “சரி…சரி” வெறுப்பாய்ச் சொல்லி விட்டு மீண்டும் சமையலறைக்கே போனாள்.

 நீண்ட நேரமாகியும் சரவணன் வீட்டின் பின் புறமிருந்து வராமல் போக, தானே எழுந்து போய் பின் வாசல் கதவருகே நின்று பாத்ரூமைப் பார்த்தார்.  அதன் கதவு நீக்கியிருந்தது. “என்னது… கதவு நீக்கியிருக்கு… அப்படின்னா அவன் உள்ளே இல்லையே?” தனக்குத் தானே கேட்டுக் கொண்டு வெளியே வந்தவர் நாலாப்புறமும் தேடினார்.

 “எங்க போயிருப்பான்?” திரும்பவும் வீட்டிற்குள் வந்தவர், சமையலறையைப் பார்த்துக் கேட்டார், “சுமதி… சரவணன் எங்கே?”

 “என்னைக் கேட்டா எனக்கென்ன தெரியும்?.. நான் உங்க கூடத்தானே உள் ரூமில் படுத்துக் கிடந்தேன்” உள்ளேயிருந்து பதில் மட்டும் வர, கோபமாகிப் போன கதிரேசன், “ஏய்.. கொஞ்சம் வெளிய வாடி” கத்தினார்.

 “என்னங்க?… எதுக்கு இப்பக் கத்தறீங்க?” கைகளை சேலைத் தலைப்பால் துடைத்துக் கொண்டே கேட்டாள்.

 “ஏண்டி… நான் இங்கே பையனைக் காணோம்ன்னு தவிச்சிட்டிருக்கேன்… நீ என்னவோ ரொம்ப சாதாரணமாய் இருக்கியே?… போடி வெளிய போயி… அக்கம் பக்கத்துல எங்காவது விளையாடிட்டிருக்கானா?ன்னு பாருடி”

அவள் முனகிக் கொண்டே வாசல் பக்கம் செல்ல, தாடியைச் சொறிந்தபடி யோசித்த கதிரேசன், சில நிமிடங்களுக்குப் பிறகு, “கோயில் பக்கம் கீது போயிருப்பானோ?” சட்டையை மாட்டிக் கொண்டு தானும் கிளம்பி, தெருவில் இறங்கினார்.

எதிரில் வந்த சுமதி, “எல்லாப் பக்கமும் பார்த்திட்டேன்… எங்கேயும் காணோம்” என்றாள். அவள் குரலில் சரவணனைக் காணோம் என்கிற கவலை கொஞ்சம் கூட இல்லாதது குமரேசனுக்கு வருத்தத்தைத் தந்தது.

 “கோயில் பக்கம் போய் பார்த்தியா?”

 “க்கும்… கோயில் இந்த திசையில் இருக்கு… நான் அந்த திசையிலல்ல போய்ப் பார்த்தேன்” சொல்லி விட்டு உடனே வீட்டிற்குள் சென்றாள்.

உள்ளே சென்றவள் மனதில் ஏதோவொன்று உறுத்தியது, “காலைல நாலரை மணிக்கு நான் பாத்ரூம் போறதுக்காக வெளிய வந்தப்பவே பார்த்தேன்… அப்பவே பையன் அங்க இல்லை!… வாசற்கதவும் தாழிடப்படாமல் வெறுமனே சாத்தப்பட்டிருந்தது!… நான்தான் அதை தாழிட்டேன்.  ஒருவேளை பையன் இருந்து… நான் அதைக் கவனிக்காம தாழ் போட்டதினால பையன் அப்படியே  எங்காச்சும் போயிட்டானோ?… கடவுளே,,, இந்த விஷயம் தெரிஞ்சா இந்த மனுஷன்… என்னைய உண்டு இல்லேன்னு ஆக்கிடுவாரே”




What’s your Reaction?
+1
5
+1
13
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!