Serial Stories உயிராய் வந்த உறவே

உயிராய் வந்த உறவே-13

13

“எப்போதுமே உன் அதிகாரம் மட்டுமே செல்லுபடியாகுமென்று நினைத்தாயா? இனி இங்கு நான் வைத்ததுதான் சட்டம். இதே அறையை விட்டு தானே நேற்று என்னை வெளியே தள்ளினாய்? இன்று வெளியே போக வேண்டியது நீதான்” கையை உயர்த்தி முழக்கமாய் பேசி நிறுத்தினாள் வாணி. உடனே தன் பேச்சில் தானே குதூகலித்து குதித்து கைகளை தட்டிக் கொண்டாள்.

“ஹை சூப்பர் இப்படியே பேசிடு” கண்ணாடியில் தெரிந்த தன்னிடம் தானே பேசினாள். அந்த அறை முதலிரவு அறைக்கான அலங்காரத்தோடு இருந்தது. நிறைய பயத்தோடும் பரபரப்போடும் இருந்தவளை தோள் வருடி சமாதானம் செய்த மகேஸ்வரி “நீ முதலில் உள்ளே போய்விடும்மா” என்று அறைக்குள் முதலில் அனுப்பி இருந்தாள். 

முன்பே அறைக்குள் இருப்பவனுக்கு காட்சி பொருளாக உள்ளே நுழையும் சங்கடம் இல்லாததில் ஓரளவு படபடப்பு குறைய கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக உணர்ந்தாள்.  உள்ளே வரப்போகிறவனிடம் என்ன பேசலாம் என தனக்குத்தானே ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தாள்.

வாசல் பக்கம் ஏதோ அரவம் கேட்க, வேகமாக கட்டிலில் அமர்ந்து கொள்ளப் போனவள் ,ஏனோ அந்த கட்டிலை பார்த்து பயந்து அருகில் கிடந்த பிளாஸ்டிக் சேர் எடுத்து அறை மூலைக்கு கொண்டு போய் அதில் அமர்ந்து கொண்டாள். அருகில் இருந்த செல்பிலிருந்து எதையோ பிரித்து கையில் வைத்துக் கொண்டாள்.

விபீசன் உள்ளே நுழைந்து கதவை பூட்டிவிட்டு கட்டிலில் வந்து அமர்வது வரை ஓசைகள் கேட்டாலும் தெரியாதது போன்று கையில் இருந்ததிலேயே தலை கவிழ்ந்து கிடந்தாள்.

“இதிலெல்லாம் உனக்கு இவ்வளவு இன்ட்ரஸ்ட் உண்டா அம்மு?” விபீசனின் குரல் ஒரு மாதிரி கொஞ்சலும் சீண்டலும் கலந்து வர, அப்போதுதான் தன் கையில் இருந்ததை கவனித்தாள். உடன் முகம் சிவக்க சீ என்று அந்த புத்தகத்தை எறிந்தாள்.

ஆண் பெண் காதல் உணர்வுகளை வெளிப்படையாக வார்த்தைகள் மட்டுமின்றி புகைப்படமாகவும் அறிவித்துக் கொண்டிருந்தது அந்த ஆங்கில புத்தகம்.

அசிங்கம் பிடித்தவன் என்ன கண்றாவியெல்லாம் வைத்திருக்கிறான் பார்!

“அட அதற்குள் எல்லாவற்றையும் பார்த்து விட்டாயா அம்மு? விபீசன் புத்தகப் பக்கங்களை புரட்ட வேகமாக பாய்ந்து அவன் கையிலிருந்தும் பிடுங்கி கட்டிலுக்கடியில் எறிந்தாள்.

“இனி இதையெல்லாம் தொடாதீர்கள்” உத்தரவு போல் ஒற்றை விரலாட்டியவளுக்கு பணிந்து கைகளை கட்டிக் கொண்டான் அவன்.

“சரிதான் அம்மு இனி நிஜம் இருக்கும்போது நிழல் படம் எதற்கு ?”பணிவு போன்ற அவன் பாவனை.

முன்னொருநாள் இப்படி தன்னிடமும் அவன் பயந்து பணிய வேண்டுமென ஆசைப்பட்டது நினைவு வர,இந்த பணிவு சந்தோஷத்தை கொடுத்தாலும் அவன் பேச்சுக்கு கொஞ்சம் பயந்தே பார்த்தாள்.

நிஜம்… நிழல் என்ன சொல்கிறான் இவன்?

” புரியவில்லை” என்றாள்.

 “நாம் கணவன் மனைவி. இது நம் முதல் இரவு “உணவு உண்பது உடலுக்கு அத்யாவசியமானது என்று குழந்தைக்கு விளக்கும் தொனியில் இருந்தது அவன் குரல்.

“நான் உங்களிடம் முன்பே சொல்லியிருக்கிறேன். காதலில்லாத கல்யாணம் சாத்தியமில்லை. ஆனால் இந்த திருமணம் எனக்கு நிர்பந்தத்தில் அமைந்துவிட்டது. அம்மாவிற்கு அப்பா செய்த அநியாயத்திற்கு நான் பொறுப்பேற்க வேண்டியிருந்தது.கழுத்தில் தாலி கட்டி விட்டதாலேயே கணவன் மனைவிக்கான மற்ற எல்லாமும் நடக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளலாம். காதலிக்க முயற்சிக்கலாம். பிறகு மற்றவற்றை பார்க்கலாம்”

இறுகிய முகத்துடன் அவள் பேச்சை கேட்டு முடித்த விபீசன் கடித்து குதறும் குரலில் கேட்டான். “காதல் என்றால் என்ன? அது என்ன செய்யும்? எனக்குத்தான் தெரியவில்லை.உனக்காவது தெரியுமா?”

“எனக்கு அதில் முன் அனுபவம் கிடையாது. ஆனால் காதல் மனதுக்கு பிடித்தவளின் மன உணர்வுகள் புரியாது கன்னத்தில் அறையாது என்பது மட்டும் தெரியும்” 

வாணிக்கு விபீசனை பார்த்தாலே கொஞ்சம் பயம்தான். அவனது உயர்ந்த குரலும் வாட்டசாட்டமான உடல் அமைப்பும் எப்போதும் அவளுக்கு ஒரு விலகலையே மனதில் உண்டாக்கும். ஆனாலும் இன்று மிக தைரியமாகவே பேசி விட்டாள்.

“முட்டாள்தனமான முடிவுகள் எடுப்பவளை கன்னத்தில் அறையாமல் மடியில் தூக்கி வைத்து கொஞ்ச சொல்கிறாயா?” சீறினான்.

“கொஞ்ச வேண்டாமென்றுதான் சொல்கிறேன்” அவன் முகம் பார்க்க முடியாமல் பார்வையை ஜன்னலுக்கு வெளியே திருப்பிக் கொண்டாள்.” நான் முட்டாள் இல்லை. என்னாலும் என் வாழ்விற்கான முடிவுகளை எடுக்க முடியும். அதற்கு எந்த திருமணமே சாட்சி”

“மிஸ்டர் சுந்தர்ராமனும் மகேஸ்வரியும் காதலித்த நிகழ்வுகளை அந்த தெய்வானை தாங்கள் காதலித்ததாக உன்னிடம் மாற்றி சொல்லியதை மனதிற்குள் பதித்துக் கொண்டு அதேபோல் காதல் வாழ்க்கை என்று கற்பனை செய்து கொண்டு திரிந்தவள் தானே நீ? இதனை முட்டாள்தனத்தில் சேர்க்காமல் வேறென்ன சொல்வது?”

வாணியின் மனம் கலங்கியது. உண்மைதான் தெய்வானை அப்படித்தான் அவளிடம் சொல்லி வைத்திருந்தாள் ஒரு முறை இரு முறை அல்ல சமயம் வாய்க்கும் போதெல்லாம் உன் அப்பாவும் நானும் இப்படி காதலித்தோம் உன் அப்பா என் பின்னே கோவில் குளம் பள்ளிக்கூடம் நாட்டிய வகுப்பு டைப்ரைட்டிங் கிளாஸ் என்று சுற்றினார். எங்கள் காதலை இரண்டு பக்க விட்டாலும் ஏற்றுக்கொள்ளவில்லை அதனால் வீட்டை விட்டுப் போல் திருமணம் செய்து கொண்டோம்.




 

வாணிக்கு ஓரளவு புரியும் பக்குவம் வந்ததும் தெய்வானை துளித்துளியாய் நஞ்சு போல இந்த விஷயங்களை அவள் மனதிற்குள் ஏற்றி இருந்தாள். பதின் பருவத்தின் ஆரம்பத்தில் டிவியில் காதல் காட்சி ஒன்றை கொஞ்சம் சுவாரஸ்யமாக கவனித்துக் கொண்டிருந்தவளருகே வந்து அமர்ந்தவள் இதுபோலவே  அப்பாவும் அம்மாவும் காதல் செய்தனர் என்று மெலிதாய் சொல்லத் தொடங்கினாள்.

பிறகு அதுவே அவ்வப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் போது சிறிது சிறிதாக வளர்ந்து வாணியின் மனதினுள் அச்சாணியாய் காட்சிகள் படிந்தன.செல்வமும் செல்வாக்குமான தந்தை அவளது ஹீரோவாக இருந்த அக்காலகட்டத்தில் கூடுதலாக தந்தையின் காதல் கதையும் சேர தந்தை தாயின் ஒப்புயர்வற்ற வாழ்க்கையில் கண்கள் சொருக ஒருவித பிரேமையில் ஆழ்ந்து போனாள் வாணி.

ஆறு மாதங்களுக்கு முன்பு விசாகனை அவள் சந்திக்கும் வரை அவள் நிலைமை இதுதான். திடுமென வந்த அறியாத ஒருவன் உன் தாய்… தாயே அல்ல,என்று சொன்னால்…? துடித்துப் போனாள் வாணி. அவன் சொன்னவற்றை நம்ப மறுத்தாள்.

தகுந்த ஆதாரங்களை காட்டினான் விசாகன்.அதில் ஒன்று அவளை பெற்ற தாய் மகேஸ்வரியின் புகைப்படம்.

மறுத்தேதும் பேச வழியின்றி அப்படியே வாணியை ஜெராக்ஸ் காபி எடுத்தாள் போலிருந்தாள் மகேஸ்வரி. பாவாடை தாவணியும் குடை ஜிமிக்கியும் இரட்டை பின்னலும் மட்டுமே கால வித்தியாசம் .

அதிர்ந்து அலமளந்து கிடந்தவளை விபீசனை சந்திக்க அழைத்துப் போனான் விசாகன்.

விபீசனிடம் இன்னமும் கூடுதல் தகவல்களை பெற்றாள் வாணி. அவளது பெயர் வெறும் வாணியல்லவாமே! அமுதவாணி என்று என் வாழ்வின் அமுதம் இவள் என்ற பொருள் படும்படி அவள் அன்னை மகேஸ்வரி வைத்ததாமே!

விபீசன் அவளை அப்படித்தான் அழைத்தான் “அம்மு”

கிட்டத்தட்ட இருபது வருடங்களாக தெய்வானையை தாயாக கொண்டவள்,சுந்தர்ராமனையும் தெய்வானையையும் காதல் ஜோடிகளாக வரித்து மகிழ்ந்திருந்தவள்.திடுமென அவள் உச்சந்தலையில் இறங்கிய கூர் ஆணிகள் வாணியின் உள்ளத்தை பொத்தலிட்டன.

அம்மாவிடம் கேட்கிறேனென்று நின்றவளை சீறி அடக்கினான் விபீசன். “ஒப்புக் கொள்வார்களென்றா நினைக்கிறாய்?”

“பிறகு என்னதான் செய்வது?” பரிதாபமாக கேட்டவளுக்கு, “பழிக்கு பழி செய்வது” கண்களில் வஞ்சம் மின்ன சொன்னான்.

அந்த பழி வாங்கலின் முடிவுதான் இதோ இவர்களது திருமணம்.




What’s your Reaction?
+1
30
+1
26
+1
1
+1
1
+1
1
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!