Serial Stories காதல் தேசம்

காதல் தேசம்-2

2

கோவர்த்தனனும் , அவர் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், ஆண்டவன் அருளால் எவர் கண்ணிலும் படாமல் அந்த வீதியை தாண்டி வெளியேறியிருந்தனர் .அந்த வீதியை தாண்டிய அவர்களால் விதியை தாண்ட முடியவில்லை.ஒரு இலக்கு இல்லாமல் எங்கேயோ நடந்து கொண்டிருந்தார்கள் அவர்கள்.

” என்னங்க;, இப்போ நாம எங்கே போகிறோம்”?

அதுதான் காமாட்சி எனக்கும் தெரியவில்லை. இப்பொழுது நாம் இங்கே இருக்க முடியாது அது மட்டும் தெரிகிறது.

               சக்திக்கு நடப்பது அத்தனையும் உண்மை தானா என்ற சந்தேகம் இருந்தது. ஏன், என்ன நடக்கிறது, இங்கே ,என்ன பிரச்சனை இவர்களுக்கு? இவ்வளவு நாளாக எல்லாம் நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது,. இன்று திடீரென்று என்ன கேடு வந்து நேர்ந்தது.

               ஐயோ!!! பாவம் , அந்த விஜயலட்சுமி அக்கா,எப்படி கதறினாள். அந்த முரடர்கள் அவளை புதர் மறைவிற்கு கொண்டு சென்றது, ஏன் நினைக்கும் பொழுதே சக்தியின் உடல் முழுவதும் ஒரு நடுக்கம் பரவியது. பிறந்தது முதல் இது போன்ற உணர்வுகளை அவள் அனுபவித்தவள் இல்லை. இத்தனைக்கும் அந்த பெண் இரண்டு குழந்தைகளின் தாய் , சக்தி எவ்வளவு  வற்புறுத்தி கேட்டும் தந்தை விஜயலட்சுமிக்கு உதவ மறுத்துவிட்டார்.

அந்த பக்கம் சிறிதும் திரும்பாமல் வேறு புறமாக அவர்களை திரும்பச் செய்து அழைத்து வந்துவிட்டார்.’ என்ன மனிதர்  இவர் ‘ அந்தப் பெண்ணின் அலறல் ஒலி பிரபஞ்சத்தையே கிழித்துவிடுவது போல் ஒலித்துக் கொண்டிருக்கும் பொழுது, ஏதும் நடக்காததுபோல்,  எதையும் கேளாதது போல், எப்படி இவ்வளவு இலகுவாக அந்த இடத்திலிருந்து இவரால் விலக முடிகிறது.!!! முதல் முறையாக சக்திக்கு தந்தை மீது வெறுப்பு வந்தது.

‘நாம் பீகாருக்கு செல்லலாம் காமாட்சி’. திடீரென்று தோன்றிய மன சிந்தனையை சட்டென்று சொல்லினார் ‘கோவர்தனன்’.

இங்கு நடக்கும் கலவரம் இப்பொழுது பீகார் வரை பல பரவி இருப்பதாக தானே கேள்விப்பட்டேன். அங்கு நாம் மட்டும்  எங்கு சென்று விட முடியும்.

இல்லை, காமாட்சி பீகாரில் கலவரம் பரவியிருப்பது உண்மைதான். ஆனால், நமக்கு அங்கே பெரிய பாதிப்பு இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. மேலும் நாம் அங்கே சிறிது பாதுகாப்பாகவே இருக்கலாம் என்று நான் உணர்கிறேன்.

              நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. ஆனால், பீகாரில் நமக்கு யாரையும் தெரியாது  அங்கு நாம் யாரிடம் உதவி கேட்க முடியும்.

               ஒரு சிறிய மௌனம் அங்கே நிலவியது. திடீரென்று “இஸ்மாயில்” என்று குரல் கொடுத்தார் கோவர்தனன்.

                 அதை நான் முன்னமே சிந்தித்து விட்டேன். ஆனால் ,அவர் இருக்கும் இடம் இப்பொழுது நமக்கு பாதுகாப்பானதாக இருக்குமா?

அதையெல்லாம் யோசிக்க இப்பொழுது நேரம் இல்லை,. இப்பொழுது நம்முடைய முடிவு பீகார் செல்கிறோம். அங்கு நமக்கு இருக்கும் ஒரே  நபர், என் நண்பன் இஸ்மாயில் மட்டுமே.  பால்ய காலம் தொட்டே நாங்கள் இருவரும் இணைபிரியாதவர்கள். நிச்சயம் நம் பாதுகாப்பை அவன் சிரமேற் கொள்வான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. மேலும், அவன் நம்மைப்போல் நித்திய தரித்திரன் ஆக இல்லாமல், சீரும் சிறப்புமாக செல்வச் செழிப்போடு வாழ்ந்து வருகிறான். பணம் இருக்கும் இடத்தில் பாதுகாப்பிற்கு என்ன பஞ்சம் இருக்கப்போகிறது.  நாம் போக வேண்டிய இடம் இஸ்மாயிலின் வீடுதான் ‘நட, நட ‘,விரைவாக நட.

இஸ்மாயில் இந்த பெயரை கேட்டவுடனேயே, சக்தியின் உள்ளத்தில் ஆணி அடித்ததுபோல் , அன்வர் வந்து நின்றான். அன்வர் இஸ்மாயிலின் மகன்தான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை அவர்கள் நவகாளியில் தான் இருந்தனர். இவர்கள் இருவருக்கும் வீடு அருகருகே தான்இருந்தது.  எந்த ஒரு வேற்றுமையும் இன்றி இரு குடும்பத்தினரும் சொந்தங்கள் ஆகத்தான் வாழ்ந்து வந்தனர். பொருளுக்கு ஏற்படும் தேவையும் அதன் மேல் உள்ள பற்றும் தான் மனித வாழ்க்கையை எப்படி புரட்டிப் போட்டு விடுகிறது., அப்படித்தான் இஸ்மாயில் பொருளின் பின்னால் ஓட, “அன்வரும் சக்தியும்,  சக்தியும் அன்வரும்” ஒருவரை ஒருவர் பார்த்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன.

அன்வரின் வீட்டிற்கா,  இப்பொழுது செல்லப்போகிறோம்! !. சக்தியின் மனது இரண்டு இறக்கைகளை கட்டிக்கொண்டது.

“அன்வர்”  இந்த பெயரில் அப்படி என்ன இருக்கிறது ?இதை நினைத்த மாத்திரத்திலேயே, என் மனதிற்க்கு ஏன் இப்படி பித்து பிடிக்கிறது. ஒருவேளை இது ஏதேனும்  மந்திரச்சொல்லோ ! ! இந்தப் பெயரை உச்சரிக்கும் பொழுது  மட்டும் நாவு தித்திக்கின்றதே! “என்அன்வர் ” என்று உள்ளுக்குள் ஒரு முறை சொல்லி குதூகலித்தாள் சக்தி.

ஊரெல்லாம்  பற்றி எரிந்து கொண்டிருந்தாலும் ,அந்த வெம்மை மாறி சந்தனத்தின்  குளிர்ச்சியை இப்பொழுது உணர ஆரம்பித்திருந்தாள் ‘சக்தி’  எங்கெங்கும் பரவிக் கிடந்த கரித்துகள்கள் பட்டாம் பூச்சிகளாய் மாறின.  மக்களின் அழுகுரல் கூட இப்பொழுது அவளது செவிகளில் விழவில்லை.  அவள் தனக்கென்று ஒரு உலகத்தை சிருஷ்டித்து அதில் பொன்னாலான ஊஞ்சல் ஒன்றை அமைத்து அன்வருடன் ஆனந்தமாக ஆடிக் கொண்டிருந்தாள். வானத்து தேவதைகள் எல்லாம் அவர்கள் இருவரையும் சுற்றி நின்று ஊஞ்சலை ஆடச் செய்து கொண்டிருந்தனர்.

          “அன்வர்” என் நான்கு எழுத்து மந்திரம்  காலையில் நான் காயத்திரிமந்திரம் கூட ஜெபித்த தில்லை. கையில் துளசிமாலை ௨ருல  நான் ஜெபித்த மந்திரம் எல்லாம் “அன்வர்” இந்த ஒன்று மட்டும்தான்.




                பழைய நினைவுகள் மெல்ல வந்து அவளை தழுவ ஆரம்பித்தன.

             அது மாகாளியம்மன் கோவில் சன்னிதி. பிரம்மாண்டமான அந்த கோவிலின் மிகப்பெரிய தூண்களுக்கு பின்னால் குறும்பு பார்வையுடன் ஒளிந்தபடி இருந்தாள்  சக்தி.

       கட்டுமஸ்தான அந்த இளைஞன் வானத்தைப் பிளந்து கொண்டு வந்த தேவன் போலிருந்தான். அவன் அந்தக் கோவிலின் ஒவ்வொரு மூலையிலும் சென்று யாரையோ தேடிக் கொண்டிருந்தான் .அவன் நடையில்தான் எத்தனை கம்பீரம் .  ஆண் களிறு ஒன்று ஆணவத்துடன் நடக்கும் மிடுக்கு இருந்தது அவன் நடையில்.

தூண்களின் பின்னால் மறைந்து இருந்தாலும், அவன் தன் பார்வையில் இருந்து விலகி விடாமல் கூர்ந்து கவனித்தபடியே அவன் தன்னை கவனிக்காது இருக்க; துணுக்குத் தூண் மாறிக் கொண்டிருந்தாள் சக்தி.

               “சக்தி”, போதும் எனக்கு இந்த தண்டனை, எங்கே இருக்கிறாய்”?  பத்து நிமிடம் நான் தாமதமாக வந்ததற்கு, அரைமணி நேரமாக என்னை அலைக்கழிக்கிறாய். என்னை மன்னித்துவிடு. இனி நிச்சயமாக தாமதிக்க மாட்டேன்.  வா சக்தி இன்னும் எவ்வளவு நேரம் இந்த கண்ணாம்பூச்சி ஆட்டம்.

சக்தியின் முகத்தை காணும் ஆவல் அவன் கண்களில் தெரிந்தது. அவன் கண்கள் முழுவதிலும் காதல் வழிந்து கொண்டிருந்தது. பரந்து விரிந்து இருந்த அவனது மார்பு  தோளில் சாய்ந்து கொள்ள, அந்த பைங்கிளி கிடைக்காததனால் சுருங்கிப் போய் இருந்தது. ஆனால், கால்கள் மட்டும் சிறிதும் சளைக்காமல் கோவில் முழுவதும் மீண்டும் மீண்டும் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தன.

 

                 நான் மன்னிப்புக் கேட்ட பிறகும், நீ வரப்போவதில்லையா சக்தி? சரி சரி… நான் வராததற்கான பரிகாரத்தை உன் சாமிக்கு செய்து விடுகிறேன். நன்றாகப் பார்த்துக்கொள் என்று கூறியபடி காதுமடல் இரண்டையும் பிடித்துக்கொண்டு, தோப்புக்கரணம் போட ஆரம்பித்தான் அவன்.

 

             தலையிலே குல்லா, முகத்தில் குறுந்தாடி கழுத்தில் தொங்கும் பிறைநிலா இவை அத்தனையுடனும் அவன்  தோப்புக்கரணம் போட்டது சக்திக்கு சிரிப்பை வரவழைத்தது,. தூண் மறைவில் இருந்த சக்தி ‘கொல்லென்று’ சிரித்தாள்.

 

 


  இந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த  அன்வரும், குறிப்பிட்ட தூணுக்கு பின்னால் கையை செலுத்தி அவளது காது மடலை திருகி அவளை வெளியே இழுத்தான்.

“ஏய்! சுட்டிப் பெண்ணே மாட்டிக் கொண்டாயா”?.அன்வரின் கையை சட்டென்று தட்டிவிட்டு சடுதியில் ஓட ஆரம்பித்தாள் சக்தி. இப்பொழுது அவர்கள் இருவருக்கும் இடையே ஓட்டப் பந்தயம் ஆரம்பமானது.

இப்பொழுது சக்தியின் கையை யாரோ இறுகப் பற்றுவது போல் ஒரு உணர்வு. அடடா!!! அன்வர் என்னை பிடித்துக்கொண்டானா? இப்படி வசமாக மாட்டிக் கொண்டேனே. சிந்தித்து முடிப்பதற்குள் அவளைப் பற்றிய அந்தக் கை சட்டென்று அவளை இழுத்து சாலை அருகே இருந்த ஓடையில் தள்ளியது.

                   முற்றிலும் எதிர்பாராத சூழ்நிலையில் இழுக்கப்பட்டு ஓடைக்குள்ளே தூக்கி வீசப்பட்டது. சக்தியை நிலைகுலையச் செய்து இருந்தது. அவள் தன்னிலையை சமன்படுத்தி கொள்ள எவ்வளவோ முயற்சி செய்தும் முடியாதவளாய் தலைகுப்புற பள்ளத்திலும் விழுந்தாள். அவள் விழுந்த இடத்தில் இருந்த ஏதோ ஓர் கூறிய கல் அவள் நெற்றியில் இடிக்க, புதியதாய் ஒரு இரத்தப் பொட்டு உதயமானது.

இப்பொழுது, அவள் விழுந்து கிடக்கும் பள்ளத்திற்கு  மேலே சாலையில்  ஏகப்பட்ட மனிதர்கள் ஒருசேர வருவது போன்ற ஓர் ஆர்ப்பரிப்பு அவளுக்கு கேட்டது . ஒரு முறை தன்னை தானே தட்டி விட்டுக் கொண்டு   சுயநினைவிற்கு வந்தாள் சக்தி.

               அன்வர் குறித்த எண்ணம் என்னை எப்படிப்பட்ட மயக்க நிலைக்கு தள்ளியிருக்கிறது.  இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையை முற்றிலும் மறந்து போனேனே., இந்த வெறிகொண்ட கும்பலிடம் இருந்து காப்பாற்றும் பொருட்டு என் தந்தை தான் என்னை இந்த பள்ளத்தில் தள்ளி இருக்க வேண்டும். சூழ்நிலை புரிய ஆரம்பித்தவுடன், சாலையில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கும் எண்ணம் தோன்றிய மிகப்பெரிய அளவில் சப்தம் எதையும் ஏற்படுத்தி விடாமல் மெதுவாக மேலே ஏறினாள்.

அவளுடைய எண்ணம் சரியானதே!வந்து கொண்டிருக்கும் அபாயத்தை உணர்த்தி அவளை பள்ளத்திற்குள் பதுங்கிக் கொள்ள எச்சரித்து, ‘மாறி மாறி’ கோவர்த்தனன் கூறியதை சிறிதும் செவிமடுக்காது ராஜகுமாரன் உடன் நகர்வலம் வரும் ராஜகுமாரி போல்  டாம்பீகம் ஆக நடைபயின்று கொண்டிருந்த சக்தியை காப்பாற்றும் பொருட்டு பள்ளத்திற்குள் தள்ளியது கோவர்த்தனன்தான்.

இப்பொழுது, பொழுது நன்றாக இருட்டி விட்டது, நேரம் எப்படியும் நடு நிசியை நெருக்கி இருக்கும்.. இந்த நேரத்திலும் இந்த மனித ஓநாய்களின் வெறி அடங்கவில்லை போலும். புதிதாய் வந்திருந்த அந்த கும்பல் இப்பொழுது, சக்தியின் தாய் தந்தையை சுற்றிவளைத்து இருந்தது.  அவர்கள் பேசும் ஒலி தெளிவாக சக்தியின் காதுகளில் விழவில்லை. , ஆனால் அந்த வெறியர்கள் ஆவேசமாக இருந்தார்கள் என்பதை உணர முடிந்தது.

சக்தியின் தந்தை இரு கைகளையும் கூப்பி அவர்களிடம் மன்றாடி வேண்டிக் கொண்டிருந்தார். “புள்ளி மானுக்கு புலியிடம் இறக்கம்  பிறக்க வா செய்யும்”. அந்த பொல்லாதவன் கையில் எப்பொழுது அந்த ஆயுதத்தை எடுத்தான், அதை எப்பொழுது பிரயோகித்தான் என்று எதுவும் தெரியவில்லை. ஆனால், அவள் தாய் தந்தையர் இருவரும் தலையும் ஒரு போல கொய்யப்பட்டு சக்தி மறைந்திருந்த அந்த பள்ளத்திற்கு உள்ளே உருண்டு வந்து விழுந்தது.

சிறிதும் எதிர்பாராத தாங்க முடியாத இந்த அதிர்ச்சி அவளை மெல்ல மெல்ல நினைவிழக்க செய்தது.

   ( தொடரும்…..)




What’s your Reaction?
+1
7
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
5
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!