Serial Stories அன்பெனும் ரகசியம்

அன்பெனும் ரகசியம்-9

9

நான்கு தெருக்கள் தாண்டிச் சென்றதும், அங்கிருந்த ஒரு தங்க நகை அடகுக்கடை முன் நின்ற சரவணன்.  “இதோ இந்தக் கடைக்குள்ளார அந்த வாசம் இருக்கு” என்றான். கடும் கோபத்துடன் அதனுள் நுழைந்த மூக்கையனின் தம்பிகள் இருவரும், அந்தக் கடை முதலாளியிடம் மிரட்டலாய்க் கேட்டனர், “இந்த ரெண்டு மூணு நாள்ல யாராவது வந்து பழைய தங்க நகையை அடமானம் வெச்சாங்களா?”

 “அடமானம் வைக்கலை!… வித்தாங்க” என்றான் அந்தக் கடைக்காரன் பயந்து கொண்டு.

 “யாரு?… யாரு?” கர்ண கடூரக் குரலில் கேட்டான் முக்கையனின் சின்னத் தம்பி.

“தம்பி… அது வந்து.,… சொல்லக் கூடாது!ன்னு”

 “ஓ… அப்ப போலீஸைக் கூட்டிட்டு வந்தா சொல்லுவியா?” 

 “இல்லை தம்பி… வேண்டாம் தம்பி!… பிரச்சினை பண்ண வேண்டாம் தம்பி” கடைக்காரன் ஏதோவொரு உண்மையை, எதற்காகவோ மறைக்க முற்பட்டான்.

 “நீ அந்த நகைத் திருடன்… யாரு?ன்னு சொல்லிட்டா பிரச்சினை இல்லை!… சொல்லலேன்னாத்தான் பிரச்சினை”

 “வந்து… வந்து….”

தாவி வந்து அவன் சட்டைக் காலரைக் கொத்தாகப் பற்றிய மூக்கையன், “சொல்லுடா… சொல்லுடா” என்று மிரட்ட,

அவனை ஒரே தள்ளாய்த் தள்ளி விட்ட அடகுக்கடைக்காரன், “தம்பிகளா… உங்க பூர்வீக பழைய நகைகளை ஒவ்வொன்னாக் கொண்டு வந்து என்கிட்ட வித்தது… வேற யாருமில்லை… இதோ இந்த மூக்கையன்தான்” உண்மையைப் போட்டுடைத்தான்.

மூக்கையனின் தம்பிகள் இருவரும் அண்ணனை நெருங்கி வந்து, “அண்ணே… மூத்தவன் உன் கிட்டேயே அந்தப் பொட்டி இருக்கட்டும்!னு நாங்க ரெண்டு பேரும் எத்தனை நம்பிக்கையோட விட்டிருந்தோம்… இப்படிப் பண்ணிட்டியேண்ணா!…” கரகரத்த குரலில் கேட்க,

 “என்னை மன்னிச்சிடுங்கடா… தம்பிகளா என்னை மன்னிச்சிடுங்கடா!… புத்தி கெட்டுப் போய் தப்புப் பண்ணிட்டேண்டா..” தம்பிகளின் கைகளைப் பற்றிக் கொண்டு தழுதழுத்த மூக்கையன், சட்டென்று தன் இரு கைகளாலும் தன் முகத்தில் தானே அறைந்து கொண்டு கதறினான். 

சில நிமிடங்களுக்குப் பிறகு சரவணனின் அருகே வந்து, “தம்பி… நீ யாருப்பா?… எங்கிருந்தோ வந்து எனக்கு புத்தி புகட்டிட்டியே நீ யாருப்பா?…” என்று கேட்க, ராஜய்யன் மூக்கையனின் தோளைத் தொட்டு, “இவன் ஒரு பரிதாப ஜீவன் அண்ணா….” சோகக் சரவணனின் கதையை சுருக்கமாய்ச் சொன்னான்.

 “அடப்பாவமே… இந்தச் சின்ன வயசுல இவனுக்கு இப்படியொரு சோதனையா?… போகட்டும்… இனி இவன் சந்தோஷமா… இந்த ஊரிலேயே இருக்கட்டும்” என்ற மூக்கையன், “அது மட்டுமல்ல… எங்க குடும்பத்தோட பாரம்பரிய நகைகள்ல எனக்கு பங்கே வேண்டாம்!… எப்ப நான் அதுல முறைகேடா கை வெச்சேனோ அப்பவே எனக்கு அதை அனுபவிக்கும் உரிமை இல்லை… அதனால அதை நம்ம ஊர் அம்மன் கோயிலுக்கு காணிக்கையா செலுத்திடறேன்” என்றான்.

அதைக் கேட்டு மெலிதாய்ச் சிரித்த மூக்கையனின் தம்பிகள், “அண்ணே… உனக்கு அதை அனுபவிக்கும் தகுதி இல்லை என்கிற எங்களுக்கு மட்டும் எப்படி தகுதி இருக்கும்?… அதனால… நான்ம்க்களும் எங்க பங்கை அம்மன் கோவிலுக்கே தந்து விடுகிறோம்” என்று சொல்ல,

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பூமணிக்கு சரவணன் மீது அதீத பாசம் ஏற்பட்டு விட்டது. அவனருகில் வந்து, அவனைத் தூக்கி எல்லோருக்கும் காட்டி, “இவன் நம்ம ஊருக்கு வந்திருக்கற தெய்வக் குழந்தை… இவனை பத்திரமாய்ப் பாதுகாப்பது நம்ம கடமை” என்றாள்.

“அது செரி… நாளைக்கு அவனோட அப்பன்காரன் வந்து நின்னான்னா… என்ன பதில் சொல்லுறது?” ராஜய்யன் கேட்டான்.




 “பையனையே கேட்போம்… அவன் எங்க இருக்க விருப்பப்படறானோ அங்கியே இருக்கட்டும்!… அதுவரைக்கும் நாம அவனைப் பார்த்துக்குவோம்” என்ற மூக்கையன், “அப்புறம் ராஜய்யா… நீ உன்னோட குடுகுடுப்பை வேலை பார்க்க ஊர் ஊரா போயிட்டேன்னா… அவனை யார் பார்த்துக்கறது?” கேட்க,

 “இல்லைண்ணே… நான் இனிமே மத்தவங்களை மாதிரி ஏதாச்சும் வேலை பார்த்தே பொழைச்சுக்கறேன்!… அந்த வேலை இனி வேண்டாம்”

இரு கையையும் “பட…பட”வெனத் தட்டிய பூமணி, “ஹும்… பல வருஷமா நான் சொல்லிட்டிருந்தே… இந்த கோடாங்கிப் பொழைப்பை விட்டுடுடா”ன்னு கேட்கலை… இன்னிக்கு சரவணன் வந்து ராஜய்யனையே மாத்திப் போட்டான்… நான் ஆரம்பத்திலேயே சொல்லலை… “இவன் ஞானக் குழந்தை”ன்னு” என்றாள்.

****

தன் மகன் வீட்டை விட்டுப் போனதற்கு முழுக் காரணம் சுமதியே, என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்ட குமரேசன், அவளுடன் பேசுவதையே நிறுத்திக் கொண்டான்.  அவளும் எவ்வளவோ முயற்சிகள் செய்தும் அவளால் அவரைச் சமாதானமே செய்ய இயலாத நிலையில், தன் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு பிறந்து வீடு நோக்கிப் பயணமானாள் அவள்.

அவளும், மகனும் இல்லாத வீட்டில் தனிமையில் வாடினார் குமரேசன்.  “ஹும்… அப்பவும் எல்லோரும் சொன்னார்கள், “வேண்டாம்… இரண்டாம் கல்யாணம் செய்தால் நிச்சயம் சித்தி கொடுமைக்கு சரவணன் ஆளாக நேரிடும்” என்று.  குமரேசனும் சிறிது காலம் வரை இரண்டாம் மணம் என்பதையே நினைத்துப் பாராமல் வைராக்கியமாகத்தான் இருந்தார்.

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையுமே!.

“வீடுன்னு இருந்தா நிச்சயம் அதில் ஒரு பெண் வேணும்!… இல்லா விட்டால் குடும்பம் குடும்பமாய் இருக்காது” என்று சிலரும்,

 “உன் மகன் தாயன்பு,  தாய்ப் பாசம், தாயின் அரவணைப்பு இல்லாமல் வளர்ந்தால் நிச்சயம் அவனுடைய எதிர்கால வாழ்க்கை நல்ல வாழ்க்கையாக இருக்காது.  அதனால், உனக்கொரு மனைவி என்றில்லாவிட்டாலும், அவனுக்கு ஒரு தாய் வேணும், என்பதற்காவது ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்” என்று பலரும்,

 “ரெண்டாம் தாரம்ன்னா… மூத்த தாரத்துக் குழந்தைகளைக் கொடுமைப்படுத்துற அரக்கியாகவே கதைகளிலும், சினிமாக்காளிலும் காட்டிக் காட்டி அதையே உண்மைன்னு ஆக்கிட்டாங்க!… நிஜ வாழ்க்கையில் எத்தனையோ சித்திகள் தங்களோட மூத்த தாரத்துக் குழந்தைகளைத் தன் குழந்தையைப் பார்த்துக்கறாங்க தெரியுமா?” என்றும்,

குமரேசனைத் தினமும் பேசிப் பேசிக் கரைக்க, அவர் தன் வைராக்கியத்தை இழந்து சுமதியை மறுமணம் செய்து கொண்டார்.

 அதன் விளைவை இப்போது அனுபவிக்கிறார்.




பக்கத்து வீட்டு பாலுவும் அவரும் தினசரி தவறாமல் போலீஸ் ஸ்டேஷன் சென்று சரவணனைப் பற்றி ஏதாவது தகவல் கிடைத்ததா? என்று விசாரித்துக் கொண்டுதான் உள்ளனர்.  பதில் மட்டும் தினமும் ஒரே மாதிரி, “தேடிக்கிட்டுத்தான் சார் இருக்கோம்… தகவல் கிடைச்சா நாங்களே கூப்பிடுவோம்” வந்து கொண்டிருந்தது.

வாசலில் யாரோ கூப்பிடும் குரல் கேட்க, வெளியே வந்து பார்த்தார் குமரேசன்.  கான்ஸ்டபிள் நின்று கொண்டிருந்தார்.

 “சார்…. ஏதாச்சும் தகவலுண்டா?” ஆர்வமாய்க் கேட்டார்.

 “உண்டு… ஆனா அது அவ்வளவு நல்ல தகவலா இல்லை” என்றார் கான்ஸ்டபிள் பூடகமாய்,

 “சார்… என்ன சொல்றீங்க?”

 “சுடுகாட்டுக்குப் பக்கத்துல…ஒரு பாழுங் கிணத்துல சிறுவன் பாடியொண்ணு கிடந்திருக்கு… எங்க ஆளுங்க எடுத்து வெளிய போட்டிருக்காங்க!… நீங்க வந்து அது உங்க பையனா?ன்னு பார்த்து அடையாளம் சொல்லணும்”

கண்ணீருடன் ஓடினார் குமரேசன்.

ஏற்கனவே அங்கே பொது மக்கள் கும்பலாய்க் கூடியிருந்தனர். 

 “ம்ம்… எல்லோரும் கொஞ்சம் தள்ளி நின்னு வழி விடுங்க… வழி விடுங்க” என்று சொல்லி கும்பலை விலக்கி குமரேசனுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தார் இன்ஸ்பெக்டர்.

உள்ளங்கையால் வாயைப் பொத்திக் கொண்டே உள்ளே சென்ற குமரேசன், வெள்ளைத் துணி போட்டு மூடப்பட்டிருந்த அந்த சிறிய சவத்தின் முகத்தை மூடியிருந்த துணியை விலக்கினார்.

அவர் முகத்தில் இதுவரையில் இருந்து வந்த கலவரம் இப்போது மறைந்து போய் பிரகாசமாய் மாற, “இல்லை சார்… இல்லை சார்… இது என் மகன் சரவணனில்லை சார்” என்றார் கத்தலாய்.

அவருடைய சந்தோஷம் இன்ஸ்பெக்டருக்கு எரிச்சலைத் தந்தது  “ச்சை… எப்படியோ இந்த கேஸ் இத்தோட முடிஞ்சது!ன்னு நெனச்சேன்… மறுபடியும் தொடருதே!… இந்தாளு வேற தெனமும் ஸ்டேஷனுக்கு வந்து உயிரை எடுக்கறானே?”

அங்கிருந்து வீடு திரும்பிய குமரேசன் அந்த பழைய பீரோவைத் திரந்து அதிலிருந்த சுமதியின் புடவைகளையெல்லாம் கீழே தள்ளி, ஒரு மூட்டையாய்க் கட்டி, ஸ்டோர் ரூமினுள் வைத்தார். “ஹும்… அவளே இங்கில்லை… அவ புடவைகள் எதுக்கு?”

 “என்ன குமரேசன் சார்?… போலீஸ் கான்ஸ்டபிள் வந்திட்டுப் போனதா எங்க வீட்டுல சொன்னாங்க… என்னாச்சு?” ஆர்வமாய்க் கேட்டவாறே உள்ளே வந்தார் பாலு.

 “க்கும்… எங்கியோ பாழுங் கிணத்துல ஒரு பையனோட பொணம் கிடந்திருக்கு… அதை எனக்கு அடையாளம் பார்க்கச் சொல்லி என்னைக் கூப்பிட்டாங்க!… போய்ப் பார்த்தேன் அது வேற யாரோ”

 “தெரியும் சார்!… உங்க மகன் நிச்சயம் உயிரோடதான் இருப்பான்… அதுவும் நல்லா இருப்பான்!… அவன் இருக்கற இடத்துல கூட இருக்கற ஜனங்க அத்தனை பேரும் அவனை ரொம்ப நல்லாவே கவனிச்சுக்குவாங்க!… அவன் ராசி அப்படி சார்” என்றார் பாலு.

அவர் தன்னை ஆறுதல் படுத்தவும், தன் மனச் சோர்வைக் குறைக்கும் விதத்திலுமே அவ்வாறு பேசுகிறார், என்பது புரிந்தும், புரியாதவர் போல மேலும், கீழும் தலையாட்டினார் குமரேசன்.




What’s your Reaction?
+1
7
+1
12
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!