Serial Stories குறளி வசியம்

குறளி வசியம்-1

சென்ற நூற்றாண்டின் ஏதோ ஒரு ஆண்டு ,ஏதோ ஒரு மாதம், ஏதோ ஒருநாள்; இடம் சின்னமனூர் கிராமம். கிருஷ்ண ஐயர் வீட்டு திண்ணை……

கிருஷ்ண ஐயர் வீட்டு வாசலில் கூடியிருந்த குழந்தைகளெல்லாம் குதூகலமாக ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவருக்கும் அன்றைய தேதிக்கு ரியல் லைப் ஹீரோ நம் “கிருஷ்ணய்யர்” தான்.

கிருஷ்ணய்யரின் தலை தெரிந்து விட்டாலே, குட்டியர் கூட்டம் குதூகலமாய் கும்மாளம் அடிக்க ஆரம்பித்துவிடும். அவர் ஏதாவது வித்தைகளை செய்து காண்பித்து விடமாட்டாரா என்று, அவர் வீட்டு வாசலிலேயே தவம் கிடப்பார்கள்.

“போதுமப்பா பீடிகை”, ‘யார் கிருஷ்ணய்யர்’ என்று நீங்கள் என்னிடம் கேட்டீர்களேயானால், சாரி நீங்கள் வசியம் மற்றும் வசித்துவம்,  ஜாலம் போன்ற வித்தைகள் பற்றிய அறிவில் பூஜ்ஜியம் என்று அர்த்தம்.

ஜாலம் என்றால் மாயாஜாலமா என்று கேட்டு விடாதீர்கள். “இன்றைய சூழ்நிலை அப்படி” ,”இவை எல்லாம் நம்மிடம் இருந்து மறைந்து காணாமல் போன நம்முடைய சொத்துக்கள்”. இவற்றை ‘மந்திர ஜாலம்’ ,’இந்திரஜாலம்’, ‘பீதாம்பர ஜாலம்’, ‘ஜால வித்தை’ என்று பல பெயர்களில் அழைக்கலாம்.

இதில் கை தேர்ந்தவர்தான் ‘கிருஷ்ணய்யர்’. ‘சித்துக்கள்’ பற்றி நீங்கள் ஓரளவு தெரிந்து இருப்பீர்கள். அந்த சித்து வரிசையில் வரும் வசித்துவம் எனும் சித்து தான் இந்த ஜால வித்தையின் அடிப்படை.

‘சரி சரி ‘என்னை விட்டால் நான் பேசிக்கொண்டே இருப்பேன். கதையின் போக்கில் வேறு விஷயங்களை கிருஷ்ணய்யரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இதோ வீட்டிற்குள் இருந்து’ ஐயர் ‘வெளியே வந்தாயிற்று, குழந்தைகளிடம் ஒரே ஆர்ப்பரிப்பு.
நேரம்  மதியம் உச்சிப் பொழுது தொட்டிருந்தது.

என்ன குட்டிகளா? எல்லாரும் சாப்பிட்டாச்சா?

நாங்க எல்லாரும்; முன்பே சாப்பிட்டோம் , நீங்க எப்ப வருவீங்கன்னு காத்துகிட்டு இருக்கோம்.

ஓஹோ!! அப்படியா!!!  ஆமாம்….? நீங்கள் எதற்காக எனக்கு காத்துக் கொண்டிருக்கிறீர்கள்?

“குழந்தைகளின் முகம் வாடியது;” கூட்டத்தில் மிகவும் துடுக்கான ஒரு பையன் எழுந்தான்,

“ஐயா, இன்றைய தேதியில் நீங்கள் எங்களுக்கு ‘ஜால வித்தை’ செய்து காட்டுவதாக சொல்லியிருந்தீர்கள்”. அதற்குள்ளாகவா மறந்து விட்டீர்கள்?

அப்படியா!! நான் உங்களுக்கு ஜாலவித்தை காண்பிப்பதாக சொல்லி இருந்தேனா? எனக்கு ஒன்றும் அப்படி நினைவில்லையே….

இப்பொழுது குழந்தைகளிடம் மீண்டும் மனவாட்டம். நீங்கள் நன்றாக நினைவுபடுத்திப் பாருங்கள். இன்றைக்கு செய்து காட்டுவதாக தான் சொன்னீர்கள். அந்த சிறுவனின் குரல் இப்பொழுது லேசாக கரகரத்தது அழுது விடுவான் போலிருந்தது.

எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது .நான் உங்களுக்கு எந்த ஜால வித்தையும் காட்டுவதாகச் சொல்லவில்லை.

இப்பொழுது அந்த சிறுவன் கோபாவேசம் ஆனான். நீங்கள் சொல்வது முற்றிலும் சரி அல்ல .நீங்கள் வேண்டுமென்றே எங்களை ஏமாற்ற பார்க்கிறீர்கள். நாங்கள் யாரும் பொய் சொல்லவில்லை. நீங்கள் தான் பொய் சொல்கிறீர்கள் .படபடவென்று பொழிந்தான் பொடியன். ஆத்திரத்தில் அவன் உதடுகள் துடித்தது அழகாக இருந்தது.

தனக்குள்  எழுந்த சிரிப்பை பற்களின் இடையே கடித்துக்கொண்டு அடக்கியபடி அப்பா மகேஸ்வரா, நீ என் மீது கோபப்படுவது இருக்கட்டும். முதலில் உன் பின்னால் பார்; உண்மையில் நீ தைரியசாலிதான், இல்லாவிட்டால் இந்த சுவற்றில் சாய்ந்தபடி அமர்ந்து இருப்பாயா?

கிருஷ்ண ஐயர் சொன்னதும் மகேஸ்வரன் மட்டுமல்ல, ஒட்டுமொத்த சிறுவர்களும் பின்னால் திரும்பிப் பார்த்தனர். அவர்களுக்கு பின்புறம் இருந்த சுவற்றில் சிறியதும் பெரியதுமாக நல்லபாம்பு ,கட்டுவிரியன், பச்சைப் பாம்பு என்று பாம்பு கூட்டமே மொத்தமாக நெளிந்து கொண்டிருந்தது .குழந்தைகள் மத்தியிலே “வில்” என்ற அலறல். பயத்தால் ஓரடி பின் வந்து அவர்கள் கண்களை மூடிக்கொண்டு ,மீண்டும் திறந்து பார்த்தபோது அவர்கள் பார்த்த காட்சி அங்கு இல்லை.




“சரி தான்” கிருஷ்ண ஐயர் தன் வேலையை ஆரம்பித்துவிட்டார். அதன் பிறகு அவர் காண்பித்த வித்தைகளில் குழந்தைகள் கண் விழி பிதுங்கி வெளியே வந்து விடுவது போல் இமைக்காது பார்த்துக்கொண்டிருந்தனர்.

நன்கு தீயிலிட்டு காய்ச்சிய இரும்புக் கம்பியை ஒற்றைக் கையில் அசாதாரணமாக பிடித்துக் காட்டினார். ‘தகதக’ என்று ஜொலித்துக்கொண்டிருந்த நெருப்பு கட்டிகளை தீபாவளிப் பட்சம், மென்று தின்பது போல் சவுகரியமாக ஒன்றொன்றாக எடுத்து மென்று தின்று காண்பித்தார்.

குழந்தைகள் நேரம் போவதே தெரியாமல் குதூகலித்து இருந்தன.

போதும் குழந்தைகளா, மேலும் ஜால வித்தைகளை இன்னொரு நாள் பார்க்கலாம். சோர்வோடு கிருஷ்ணய்யர் கூறினார்.

ஆனால், குழந்தைகள் இனிப்பு பண்டத்தை மொய்த்த எரும்பு போல் அவரை விட்டு விலகாது இருந்தனர். கிருஷ்ணய்யரின் மனைவி கோமளத்தம்மாள் குழந்தைகளை சமாதானம் செய்து ,அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

இந்த தம்பதியருக்கு குழந்தைகள் கிடையாது. ஆதலால், குழந்தைகள் என்றாலே இவர்களுக்கு அதீத பிரியம் தான்.

பெரிய அளவில் இவர்களுக்கு வசதி இல்லை என்றாலும், இவர் கற்று வைத்திருந்த மாந்திரீக கலைகள் மூலம் ஓரளவிற்கு இவர்களுக்கு தேவையான வருமானம் வந்து கொண்டிருந்தது.

மாந்திரீகம் தொடர்பாக இவர் எத்தனையோ புத்தகங்களை எழுதி இருந்தாலும், “பீதாம்பர ஜாலத்திரட்டு” என்னும் புத்தகம் மிகவும் பிரசித்தி ஆயிரக்கணக்கான சித்து வேலைகளை எவ்வாறு செய்வது அதற்கு என்னென்ன தேவை, மாந்திரீக உச்சாடணம் என்ன என்பது போன்ற பல்வேறு தகவல்களை அந்தப் புத்தகத்தில் அவர் குறிப்பிட்டு இருப்பார்.

குழந்தைகள் இவரை இப்படி தேடி வந்தால், வயதில் பெரியவர்கள் சிலர் தங்களுடைய சொந்த தேவைக்காகவும் ,பெண்களை வசியம் செய்யவும், வேறு சில தவறுதலான காரியங்களுக்கும் கிருஷ்ணன் ஐயரை தேடி வருவதும் நடக்கத்தான் செய்யும்.

முக்கியமாக இளவட்டங்கள் பெண் வசியத்திற்கு இவரை பலமுறை வந்து தொடர்பு கொண்டிருக்கிறார்கள். கண்களை உருட்டி மிரட்டி ஒரு அதட்டலில் அவர்களை விரட்டி விடுவார்.

ஆனால், அன்று அவரை ஊர் நாட்டாமை தேடி வந்த விஷயம் சற்று வித்தியாசமானதாக இருந்தது. நாட்டாமைக்கு பணத்தாசை எப்பொழுதும் மிகவும் அதிகம். வயதில் கிருஷ்ணரை காட்டிலும் மூத்தவர் என்றாலும் பணத்தின் மீதான பற்று அவருக்கு இன்னும் விடவில்லை.

எங்கேயோ யாரோ எப்போதோ என்னவோ அவரிடம் சொல்லித் தொலைத்து இருக்கிறார்கள். அதிலிருந்து அவர் கிருஷ்ணய்யர் வீட்டிற்கு நடையாக நடக்க ஆரம்பித்துவிட்டார். அப்படி அவர் கிருஷ்ணய்யர் வீட்டிற்கு நடந்ததன் காரணம் தெரியுமா ? “குறளி வசியம்”

(தொடரும்……)




What’s your Reaction?
+1
4
+1
10
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!