Serial Stories அன்பெனும் ரகசியம்

அன்பெனும் ரகசியம்- 6

6

அந்த சிறிய டிபன் கடையின் கல்லாவில் அமர்ந்திருந்தவன் கோடங்கி ராஜய்யனையும், உடன் வந்த சிறுவனையும் மாறி மாறிப் பார்த்தான்.

 “என்ன சாமி… யாரு பையன்?” கேட்க,

 “யாருக்குத் தெரியும்… ராத்திரி சுடுகாட்டுல வந்து உட்கார்ந்திட்டிருந்தான்… விசாரிச்சேன்… இவன் மூத்த தாரத்துப் பையன்!… அவ போய்ச் சேர்ந்திட்டா… அப்பங்காரன்… ரெண்டாந்தரம் கட்டிக்கிட்டான்… அந்த சித்திக்காரி கொடுமைக்காரியா மாறிட்டா… அவ கொடுமையை இஅவனால பொறுக்க முடியலை!… அதானல… அங்க இருக்கப் பிடிக்காம வெளிய வந்திட்டான்!…” ராஜய்யன் விளக்கினான்.

 “த பாரு சாமி… இது உனக்கு வேண்டாத வேலை… இது உன்னையப் பிரச்சினைல மாட்டி விட்டுடும்…  ஜாக்கிரதை” எச்சரித்தான் டிபன் கடைக்காரன்.

 “எனக்கெப்படி பிரச்சினை வரும்?… நானா இவனை வரச் சொன்னேன்?… அவனா வந்து உட்கார்ந்திருந்தான்… பார்க்கப் பாவமாயிருந்திச்சு… ராத்திரி தனியாவும் அனுப்ப பயமாயிருந்திச்சு… சரின்னு என் கூடவே பாதுகாப்பா வெச்சிருந்தேன்!… விடிஞ்சாச்சு… இனி யாரு?…எவரு?ன்னு விசாரிச்சுக் கொண்டு போய்ச் சேர்த்திட வேண்டியதுதான்”

 “அதைச் செய்யி மொதல்ல… ஏன்னா நீ தாடி… மீசை…ஜடாமுடியோட பார்த்தா பிள்ளை பிடிக்கறவனாட்டவே இருக்கியா… அதனாலதான் பையனைக் கடத்தி வெச்சிருக்கியோ?ன்னு நெனச்சு… உன்னைய ஊர் சனங்க தர்ம அடி போட்டுடுவாங்க… பாத்துக்கோ”

கடைக்காரன் பேசிக் கொண்டே போக, “பேசினது போதும்… ரெண்டு பேருக்கும் இட்டிலி குடு” சொல்லியவாறே அங்கிருந்த கடப்பைக்கல் மேஜையில் அமர்ந்தான் ராஜய்யன். சரவணனும் மிரட்சியான பார்வையோடு அமர்ந்தான்.

 “தம்பி… சரவணா… நல்லா சாப்பிடு!… அப்புறம் உன் வீடு எங்கிருக்கு?ன்னு சொன்னே?”

 “தண்ணீர்ப் பந்தலிலே”

 “அது எங்கிருக்கு?”

 கிழக்கு திசையைக் காட்டினான் சரவணன்.

 “உனக்கு அங்க போக வழி தெரியுமா?” கோடங்கி இட்லியை விழுங்கிக் கொண்டே கேட்க,

இட, வலமாய்த் தலையாட்டினான் சரவணன்.

 “என்னது?… தெரியாதா?… அப்புறம் எப்படி உங்க வீட்டிலிருந்து ராத்திரி வந்தே?”

 “எங்கம்மா வாசம் என்னை இழுத்திச்சு… அதை அடையாளம் வெச்சு வந்தேன்!…” சாப்பிட்டுக் கொண்டே பேசிய சரவணனுக்கு புரையேறி விட,

தண்ணீரை எடுத்துக் கொடுத்து அவனைப் பருக வைத்து, தலையில் லேசாய்த் தட்டி “பார்த்துச் சாப்பிடப்பா” என்றான் ராஜய்யன்.




இருவரும் சாப்பிட்டு முடித்து கல்லா அருகே வந்ததும், “கடைக்காரரே… பையன் வீடு தண்ணீர்ப்பந்தல்ன்னு சொல்றான்!… எனக்கு இந்த ஊர் அவ்வளவா பரிச்சயமில்லை!…இவன் சொல்ற ஊர் எந்த திசையிலிருக்கு?” ராஜய்யன் கேட்டான்.

 “என்னது?… தண்ணீர்ப்பந்தலா?… அது ரொம்ப தூரமாச்சே… இங்கிருந்து கிட்டத்தட்ட பதினெட்டு… இருவது கிலோ மீட்டர் வருமே?” என்ற கடைக்காரன் சரவணனனிப் பார்த்து, “ஏம்பா… அவ்வளவு தூரம் நடந்தா வந்தே?” கேட்டான்.

மேலும் கீழுமாய்த் தலையாட்டினான் சரவணன்.

“திரும்பி வீட்டுக்குப் போகச் சொன்னா போயிடுவியா?… வழி தெரியுமா?”

 உதட்டைப் பிதுக்கி “தெரியாது” என்றான் சிறுவன்

 “’கோடாங்கி சாமி… உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன்… பேசாம பையனைக் கொண்டு போய் போலீஸ் ஸ்டேஷன்ல விட்டுடு…” என்றான் கடைக்காரன்.

அது கேட்டும், கேட்காதவன் போல் வெளியேறினான் ராஜய்யன்.

ஆனாலும் அவன் மனசுக்குள் ஒரு வித அச்சம் பிறாண்டிக் கொண்டேயிருந்தது.  “அந்த டிபன் கடைக்காரன் சொன்ன மாதிரி…. என்னைப் பிள்ளை பிடிக்கறவன்ன்னு நெனச்சிட்டாங்கன்னா… நான் இந்த ஊருக்குள்ளார நடமாடவே முடியாதே… என்ன பண்ணலாம்?.. பேசாம் இந்தப் பையனைக் கொண்டு போய் போலீஸ் ஒப்படைச்சிடலாமா?”

போகும் வழியில் சிறுவனிடம் கேட்டான், “தம்பி… உன்னைக் கூட்டிட்டுப் போய் போலீஸ் ஸ்டேஷன்ல விட்டுடறேன்!… அவங்க உன்னை உன் வீட்டுல சேர்த்துடுவாங்க!… சரியா?”

 “ம்ஹும்… மாட்டேன்… நான் இங்கிருந்து போக மாட்டேன்”

 “ஏண்டா… ஏண்டா இப்படி அடம் பிடிக்கறே?…. நீ என் கூட இருந்தா….எனக்கு பிரச்சினை வந்திடும்டா” கெஞ்சலாய்ச் சொன்னான் ராஜய்யன்.

 “எங்கம்மா சேலையெல்லாம் உங்க கிட்டத்தான் இருக்கு… அதுல எங்கம்மாவோட வாசம் இருக்கு!… அதனால நான் இங்கிருந்து போக மாட்டேன்!… எங்க வீட்டுல சித்தி சேலைகள்தான் இருக்கு… அதெல்லாம் நாத்தம்”

வேறு வழியில்லாமல் மறுபடியும் அவனை சுடுகாட்டிற்குள்ளே அழைத்துச் சென்றான் ராஜய்யன்.

*****

சரவணனைத் தேடிக் கொண்டு கோவில் பக்கம் போயிருந்த குமரேசன் திரும்பி வரும் போது பக்கத்து வீட்டு நண்பர் பாலுவோடு வந்தார்.

உள்ளே வந்ததும் சுமதி கேட்டாள், “ஏங்க… பையன் கோவில் பக்கமும் இல்லையா?”

அவளுக்கு பதில் சொல்லும் மனநிலையில் இல்லாத குமரேசன், பாலுவிடம், “சொல்லுங்க பாலு… என்ன பண்ணலாம்?” கேட்டார்.

 “நீங்க சொல்வதையெல்லாம் வெச்சுப் பார்க்கும் போது உங்க மகன், அதிகாலையிலோ… இல்லை நடு ராத்திரியிலோ வெளிய போயிருக்கான்!… நடந்தே போயிருந்தால் கூட இன்னேரம் பத்துப் பதினஞ்சு கிலோ மீட்டர் தாண்டிப் போயிருப்பான்!… அதனால….”

 “அதனால…?”

 “பேசாம போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணிடறதுதான் பெட்டர்!… நம்மூர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் கூட எனக்குத் தெரிஞ்சவர்தான்… நான் வேணா கூட வர்றேன்”




அவர்களின் அந்தப் பேச்சு சுமதியைக் குலை நடுங்கச் செய்தது.  ”அடக் கடவுளே!… இவங்க போய் போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணினா… “சித்தி கொடுமையா?… அதனாலதான் பயல் ஓடிப் போடிட்டானா?”ன்னுதான் போலீஸ்காரங்க மொதல்ல கேட்பாங்க!… இப்ப என்ன பண்றது?”

ஒரு நெடிய யோசனைக்குப் பின் சரேலென்று முன் வந்து, “வேண்டாம்ங்க… போலீஸுக்கெல்லாம் போக வேண்டாம்… அது வேற மாதிரி ஆயிடும்” என்றாள்.

 “என்னடி சொல்றே?… நாம பையனைக் காணோம்னு கம்ப்ளைண்ட் குடுக்கறோம்… அதுல என்ன வேற பிரச்சினை வரும்?” குமரேசன் கேட்க,

தன் எண்ணத்தில் தோன்றியதை அப்படியே ஒப்பித்தாள் சுமதி.

“ம்ம்ம்… குமரேசன்… உங்க மனைவி சொல்றதிலும் ஒரு அர்த்தம் இருக்கு!… அதனால… நாமே தேடுவோம்… போலீஸுக்குப் போறதைப் பத்தி பின்னாடி யோசிப்போம்” பாலு சொல்ல,

தாடையைச் சொறிந்து கொண்டு யோசித்த குமரேசன், “பாலு… என் மகனுக்கு வாச்னை உணரும் சக்தி… மத்த மனுசங்களை விட அதிகம்… எனக்கென்னவோ… இவ அவனோட அம்மா புடவைகளையெல்லாம் எடுத்து ஒரு பாத்திரக்காரனுக்குப் போட்டுட்டா… ஒருவேளை எங்கியோ இருந்து வரும் அவனோட அம்மா வாசனையை மோப்பம் பிடிச்சுக்கிட்டு… பையன் அந்த வாசனைக்குப் பின்னாடி போயிருப்பானோ?” என்றார்.

 “அப்ப ஒண்ணு செய்வோம்… அந்தப் பாத்திரக்காரனைக் கண்டுபிடிச்சு விசாரிப்போம்”

மீண்டும் குலை நடுங்கினாள் சுமதி.  அவள்தான் மூத்தாள் சேலைகளை கோடாங்கிக்கு அள்ளிக் கொடுத்து விட்டு, பாத்திரக்காரனுக்குப் போட்டு விட்டேன் என்று பொய் சொல்லி வைத்திருக்கிறாளே?

“சுமதீ… ஏய் சுமதீ” குமரேசனின் அழைப்பு. ஓடினாள்.  

“ஆமா.. “பாத்திரக்காரனுக்கு அத்தனை சேலைகளையும் போட்டுட்டேன்!”னு சொன்னியே அந்தப் பாத்திரக்காரன் யாரு?.. எந்த ஏரியா?… ஏதாச்சும் தகவல் தெரியுமா அவனைப்பத்தி?”

 “என்னங்க நீங்க?… ஒரு பாத்திரக்காரனுக்கு பழைய துணிகளைப் போடறோம்ன்னா?… அவனோட பேரு… ஊரு … ஜாதகமெல்லாம் விசாரிச்சிட்டா போடுவாங்க?.. தெருவுல கூவிக்கிட்டுப் போனான்… கூப்பிட்டேன்… வந்தான்… போட்டேன்… அவ்வளவுதான்” சற்றும் தயங்காமல் பொய்யை எடுத்து வீசினாள்.

 “அவங்க சொல்றதும் நியாயம்தானே குமரேசன்?… ஒண்ணு செய்வோம்… இந்த ஏரியாவுல எனக்குத் தெரிஞ்சு பழைய துணிகள் வாங்குற பாத்திரக்காரன் ஒருத்தன் இருக்கான்!… அவன் பேரு தங்கம்!… ஒண்ணு அவனே வந்திருக்கணும்… இல்லேன்னா… அவன் கிட்ட அனுமதி வாங்கிட்டு வேற ஆள் வந்திருக்கணும்!… ஏன்னா… தங்கம் தன்னோட ஏரியாவுல இன்னொருத்தன் வந்து பழைய துணி எடுத்திட்டுப் போக விடமாட்டான்”

 “அப்படின்னா வாங்க பாலு உடனே போய் அவனைப் பார்த்து விசாரிப்போம்”




 

What’s your Reaction?
+1
6
+1
16
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!