Serial Stories அன்பெனும் ரகசியம்

அன்பெனும் ரகசியம்- 7

7

இவர்களது அதிர்ஷ்டம் அந்த தங்கம் இன்று வெளியே போகாமல் தன் குடோனிலேயே அமர்ந்திருந்தான்.  அந்த குடோன் மக்கிப் போன வாடையுடன், ஒரு புறம் பழைய துணிகள் மலை போல் குவிக்கப்பட்டும், இன்னொரு புறம் விதவிதமான பாத்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்ட அலமாரிகளாலும் நிறைந்திருந்தது. 

 “என்ன சாரு… என்னைத் தேடி வந்திருக்கீங்க?… என்ன சமாச்சாரம்?” தங்கம் கேட்டுக் கொண்டிருந்த நேரத்தில் குமரேசனின் பார்வை அந்த இடத்தை தீர்க்கமாய் அலசிக் கொண்டிருந்தது.  அது எதையோ தேடுகின்றது என்பதைப் புரிந்து கொண்ட தங்கம், “சார் என்னத்தையோ தேடுறார் போலிருக்கு?.. என்ன?ன்னு சொன்னீங்கன்னா… நானும் கூட வந்து தேடுவேன்” என்றான்.

 “வந்து.. வந்து… இவரு பையன்… பேரு சரவணன் நேத்திக்கு ராத்திரில இருந்து காணோம்!”

 “சரி… அதுக்கு இங்க வந்து தேடினா என்ன அர்த்தம்?… நான் கடத்திட்டு வந்திருப்பேன்னு நினைக்கறீங்களா?” விழிகள் பெரிதாகி, அதனுள்ளிருந்து ஆத்திரம் பிதுங்கியது தங்கத்திற்கு.

 “அய்யய்ய…. நாங்க… அப்படிச் சொல்லலை!… வந்து நேத்திக்குக் காலைல நீங்க பழைய துணி வாங்க வந்திருந்தீங்க போலிருக்கு… இவரு சம்சாரம் வீட்டிலிருந்த பழைய சேலைகள் மொத்தத்தையும் தூக்கி உங்க கிட்டப் போட்டுட்டா…” பாலு சொல்லிக் கொண்டே போக,

இடையில் புகுந்து அவரைக் கையமர்த்திய தங்கம், “சாரு… எனக்கு பயங்கரமான ஃபைல்ஸ் பிரச்சினை!… என்னால சைக்கிளோ… வண்டியோ ஓட்டவே முடியாது… அதனால… நான் யேவாரத்துக்குப் போயே ஒரு மாசமாச்சு” என்றான்.

 “என்னது?… நீங்க வரலையா?… அப்படின்னா வேற யாரு வந்திருப்பா?” குமரேசன் கேட்டார்.

 “தெரியலையே!… பொதுவா புது ஆளுங்க யாரு வந்தாலும்… நேராஅ என் கிட்ட வந்து சொல்லிட்டு… என்னோட பர்மிசன் வாங்கிட்டுத்தான் ஊருக்குள்ளாரவே போவானுக!… அப்படி யாரும் சமீபத்துல வரவேயில்லையே?” தங்கம் உதட்டைப் பிதுக்கினான்.

 “ஒருவேளை உங்களுக்குத் தெரியாம எவனாச்சும் பூந்திட்டானோ?” தன் சந்தேகத்தை பாலு கேட்க,

 “வாய்ப்பேயில்லை!… அவன் தெருவுல கூவிக்கிட்டுப் போகும் போதே எனக்குத் தகவல் வந்திடும்!… என்னோட ஆளுங்க அங்கங்க இருக்காங்க!… விட மாட்டாங்க” 

 “அப்ப… பாத்திரக்காரங்க யாருமே ஊருக்குள்ளார வரலை!ன்னு சொல்றீங்க… அப்படித்தானே?”

 “ஆமாம்!… எதுக்கும் நீங்க உங்க வீட்டுல உங்க சம்சாரத்துக் கிட்ட நல்லா விசாரிங்க…” 

அங்கிருந்து கிளம்பி, பாலுவையும் உடன் அழைத்துக் கொண்டு வீட்டிற்கே வந்தார் குமரேசன்.

வந்தவுடன் அதிரடியாய், “சுமதி உண்மையைச் சொல்லு… நீ நிஜமா பாத்திரக்காரனுக்குத்தான் அந்தப் புடவைகளைப் போட்டாயா?” சற்றுப் பெரிய குரலிலேயே கேட்டார்.

தான் கையும் களவுமாய்ச் சிக்கிக் கொண்டதைப் புரிந்து கொண்ட சுமதி, அடுத்து என்ன பொய் சொல்லலாம்? என்று யோசித்தாள்.  “கோடங்கி கிட்டே கொடுத்ததைச் சொன்னா… நிச்சயம் அவனைத் தேடிப் போய் அந்தப் பழைய சேலைகளை மறுபடியும் இங்க கொண்டு வந்துடுவாங்க!… பேசாம… தீயில் எரிச்சிட்டோம்ன்னு சொல்லிட்டா இந்தத் தேடுதல் வேட்டை இத்தோட முடிஞ்சிடும்!… கரெக்ட்… அதுதான் கரெக்ட்” என்று உள்ளுக்குள் தீர்மானித்துக் கொண்டு,




 “அது… வந்துங்க…” என்று இழுத்தாள் சுமதி.

 “எதுவானாலும் தயங்காமச் சொல்லும்மா…”பாலு சற்றுத் தணிவான குரலில் சொல்ல,

 “வந்து… வந்து… அதையெல்லாம் நான் நெருப்புல போட்டு எரிச்சிட்டேன்” என்றாள்.

 “அடிப்பாவி… அதானலாதாண்டி என் மகன் இந்த வீட்டை விட்டுப் போயிட்டான்” கண் 

கலங்கிச் சொன்னார் குமரேசன். 

****

சுடுகாட்டில் தீவிர யோசனையுடன் அமர்ந்திருந்தான் கோடங்கி ராஜய்யன். “என்ன செய்யலாம் இந்தப் பையனை?… இவனா வீட்டுக்கும் போக மாட்டேங்கறான்!… போலீஸ் ஸ்டேஷனுக்கும் போக மாட்டேன்ங்கறான்!… பெரிய பிரச்சினையாயிருக்கே?”

சற்றுத் தள்ளி தன் தாய் புதைக்கப்படிருந்த அந்த சவ மேட்டின் மீதமர்ந்து, தாயின் புடவையைக் கட்டிக் கொண்டு, அதனோடு பேசிக் கொண்டிருந்தான் சரவணன்.

 “பேசாம இவங்க சித்தி குடுத்த புடவையை மொத்தமா இவன் கிட்டே குடுத்து எடுத்திட்டுப் போய்ச் சேருடா!ன்னு சொல்லி அனுப்பிடலாமா?”

அதுதான் சரியான மார்க்கமாகப் பட, “தம்பி… சரவணா… இங்க வாப்பா” அழைத்தான்.

 வந்த சிறுவனிடம், “உங்கம்மாவோட எல்லா சேலைகளையும் குடுத்தா வங்கிட்டு நீ வீட்டுக்கே போயிடறியா?” கேட்டான்.

அவன் இட,வலமாய்த் தலையசைக்க,

 “ஏண்டா?… ஏன்?”

 “அதெல்லாம் இப்ப உங்க கிட்ட இல்லையே?” என்றன் சரவணன்.

 “யாரு சொன்னது?.. எல்லாம் என் கிட்டத்தான் வா காட்டறேன்” என்று அவனை அழைத்துக் கொண்டு, சுடுகாட்டிற்கு அடுத்துள்ள கார்ப்பரேஷன் குப்பைக் கிடங்கை நோக்கி நடந்தான் ராஜய்யன்.

 “அங்க ஒரு இடத்துல உங்கம்மாவோட சேலைகளையெல்லாம் ஒரு மூட்டையா கட்டி தனியா வெச்சிருக்கேன்!… போய் எடுத்துக்கலாம்”

 “இல்லை அதெல்லாம் அங்க இல்லை” என்றான் சரவணன்.

 “குப்பைகளோட வைக்காம அதையெல்லாம் நான் தனியா எடுத்து மறைச்சு வெச்சிருக்கேன்!… யாரு எடுக்க முடியாது”

 “இல்லை… அங்க இல்லை” மறுபடியும் மறுத்தான் சரவணன்.

 “அதெப்படி அவ்வளவு உறுதியா சொல்றே?”

 “அதெல்லாம் இவ்வளவு பக்கத்துல இருந்திருந்தா எனக்கு வாசனை தெரியுமே?”

 “அட… அவ்வளவு பெரிய கில்லாடியா நீ… வா போய்ப் பார்க்கலாம்”

 அங்கே போய்ப் பார்த்ததும் கோடங்கி ராஜய்யன் அசந்து போய் விட்டான். கார்ப்பரேஷன் லாரி வந்து அதையெல்லாம் அள்ளி எடுத்துக் கொண்டு போய் விட்ட விஷயத்தை அங்கிருந்த துப்புரவுப் பணியாளன் மூலம் தெரிந்து கொண்டு, சரவணனை வியப்பாய்ப் பார்த்தான்.

திரும்பி வரும் போது கேட்டான்.  “ஏம்ப்பா… உனக்கென்ன… அவ்வளவு பெரிய மோப்ப சக்தியா?”

 “தெரியலையே?” இரண்டு கைகளையும் விரித்துக் காட்டிச் சொன்னான் சரவணன்.

 “சரி… அந்த லாரி எங்கே போயிருக்கும்ன்னு விசாரிச்சிட்டு… அங்க போனா உன்னால அதுகளோட இருப்பிடத்தை உன்னால கண்டுபிடிக்க முடியுமா?”

 “இல்லை வேண்டாம்!… எனக்கு இந்த ஒரு சேலை போதும்” சோகமாய்ச் சொன்னான் சரவணன்.

 “அப்ப… உங்க வீட்டுக்குக் கொண்டு போய் விடறேன்… போறியா?’ நைஸாகக் கேட்டான் கோடங்கி.

 “மாட்டேன்… அந்த சித்தியை எனக்குப் பிடிக்கலை” தலையை பெரிதாய் ஆட்டி மறுத்தான் சிறுவன்.

 “டேய்… மொரண்டு பண்ணாதடா… நான் இந்த ஊரிலேயே உட்கார்ந்து குறி சொல்லிட்டு இருக்க முடியுமா?.. அடுத்த ஊர் தேடிப் போயிடுவேன்… உன்னை எங்க கொண்டு போய் விடறது? கோபமாய்க் கேட்டான் கோடங்கி.

 “உங்க கூடவே கூட்டிட்டுப் போங்க”

 “விருட்”டென்று தலையைத் திருப்பி அவனைக் கூர்ந்து பார்த்த கோடங்கி, “ஏம்பா.. போலீஸ் வந்து என்னைய  “ஓ… பிள்ளை பிடிக்கறவனா நீ?”ன்னு சொல்லி முட்டியைப் பேத்துக் கொண்டு போய் உள்ளார வைக்கறதுக்கா?.. ம்ஹும்.. அது செரிப்பட்டு வராதுப்பா” பயந்தான் ராஜய்யன்.

சட்டென்று கண் கலங்கி கோடங்கியின் காலைக் கட்டிக் கொண்டு, “என்னை எங்கியும் கொண்டு போய் விட்டுடாதீங்க மாமா” என்று சரவணன் சொல்ல,

 நெகிழ்ந்து போனான் கோடங்கி.  தன் வாழ்நாளில் தனக்கு உறவு என்று சொல்லிக் கொள்ள, ஒத்தை அக்காவைத் தவிர, வேறு யாருமே இல்லாத ஒரு வாழ்க்கையில் தன்னை “மாமா” என்று தயங்காமல் அழைத்த அந்தச் சிறுவனைத் தூக்கிக் கொண்டு, அவன் காதருகே சென்று, “இல்லடா… உன்னை விட மாட்டேண்டா!.. என் கூடவே.,.. நான் எங்கே போனாலும் என் கூடவே கூட்டிட்டுப் போறேண்டா” என்றான்.

மறுநாளே, சிறுவனையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு, திருச்சி செல்லும் பஸ்ஸில் ஏறினான் ராஜய்யன்.




***

ஊரெல்லாம் தேடி சலித்துப் போன குமரேசனும், பாலுவும் கடைசியில் வேறு வழியில்லாமல் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றனர்.

 “என்ன சார்… “காணாமல் போயி ரெண்டு நாளாச்சு”ன்னு சொல்றீங்க… இன்னிக்கு வந்து புகார் கொடுக்கறீங்க?… ஏன்?… ஜோசியர் கிட்டே போய் நல்ல நாள் பார்த்திட்டு வந்து புகார் குடுக்கறீங்களா?” எகத்தாளமாய்க் கேட்டார் அந்த இன்ஸ்பெக்டர்.

 “நாங்களே… எங்களுக்குத் தெரிஞ்ச இடத்தில… அதாவது அவன் அடிக்கடி போர வர்ற எடங்களிலெல்லாம் தேடிப் பார்த்திட்டு அப்புறமா எங்கேயும் கெடைக்காமப் போனதும்தான் இங்க வர்றோம்” நிதானமாய்ச் சொன்னார் குமரேசன்.

 “ரொம்ப புத்திசாலித்தனமா செய்யறதா நெனச்சு… படு படு முட்டாள்தனமா செஞ்சிருக்கீங்க” என்றார் இன்ஸ்பெக்டர்.

 “சார்… என்ன சார் சொல்றீங்க?” பதட்டமாய்க் கேட்டார் குமரேசன்.

 “பின்னே என்ன சார்?… அவனை யாராச்சும் கடத்தியிருந்தா… நீங்க உடனே வந்து சொல்லியிருந்தா… இந்த ஊரை விட்டுத் தாண்டும் முன்பே பிடிச்சிருக்க வாய்ப்புண்டு… இந்த ரெண்டு நாள்ல அவன் வட இந்தியாவுக்கே போயிருப்பான்”

 “அய்யய்யோ… சார் அப்ப அவனை யாரோ கடத்தியிருப்பாங்க!ன்னு சொல்றீங்களா?” நடுங்கும் குரலில் கேட்டார் குமரேசன்.

 “சார்… ஒருவேளை கடத்தியிருந்தா… அவனுக்கு நீங்களே டைம் குடுக்கற மாதிரி நடந்திருக்கீங்க!ன்னு சொல்றேன்!… உங்களை மாதிரித்தான் பல பேர்… சம்பவம் நடந்த உடனே போலீஸுக்கு வராம விட்டுட்டு அப்புறமா அது பெரிய பிரச்சினை ஆனதுக்கப்புறம்… “அய்யோ… அம்மா”ன்னு கத்திட்டு இங்க வருவாங்க!… ஹும்… என்ன சொல்லி என்ன பண்ண?” தலையிலடித்துக் கொண்டார் இன்ஸ்பெக்டர்.

“சரி… உங்க பையனைப் பத்திய டீட்டெய்ல்ஸ் சொல்லுங்க.. எஙகளுக்கு தேடுதல் வேட்டையைத் துவங்க ஒரு ரூட் கிடைக்கும்”

பாலு சொன்னார்.  சித்திக்காரி அவனோட அம்மா சேலைகளை தீயில் போட்டு எரிச்சிட்டதாகவும், அதனால பையன் ஓடிட்டதாகவும்.

 அதற்குள் குமரேசன் உள்ளே வந்து, “அவனுக்கு அவனோட அம்மா சேலை இல்லேன்னா தூக்கமே வராது சார்!… எப்பவும் அம்மா சேலையைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டுத்தான் தூங்குவான்!… அதிலிருந்து அம்மா வாசம் வர்றதா சொல்லுவான் சார்”

 “அது… எல்லாக் குழந்தைகளும் செய்யறதுதான்!”

 “ஆனா இவன் கொஞ்சம் வித்தியாசமானவன் சார்… இவனுக்கு கொஞ்சம் மோப்ப சக்தி அதிகம் சார்!…ஒளிச்ச வெச்சிருக்கற பொருட்களையெல்லாம் வாசத்தை வெச்சே கண்டுபிடிச்சிடுவான் சார்” என்று குமரேசன் சொல்ல,

 “அப்ப பேசாம போலீஸ் வேலைக்குப் படிக்க வைங்க!… எதிர்காலத்துல எங்களுக்கு நல்ல ஹெல்ப்ஃபுல்லா இருக்கும்” என்றார் இன்ஸ்பெக்டர் நகைச்சுவையாய்.

பாலு தன் கையிலிருந்த சரவணனின் போட்டோவை அந்த இன்ஸ்பெக்டரிடம் கொடுத்து, “சார்… கொஞ்சம் சீரியஸா பாருங்க சார்” என்றார்.

“இதென்ன பையன் நெத்தில தழும்பு?” இன்ஸ்பெக்டர் கேட்க,

“அதையே அடையாளமா வெச்சுத் தேடுங்க சார்” சொல்லி விட்டு பாலு எழ,       குமரேசனும் எழுந்தார்.

 “கான்ஸ்டபிள் இந்த போட்டோவை தமிழ்நாட்டுல இருக்கற எல்லா ஸ்டேஷன்களுக்கும் உடனே அனுப்பிடுப்பா” என்ற இன்ஸ்பெக்டரின் குரல் அவர்கள் முதுகிற்குப் பின்னால் ஒலித்தது.




What’s your Reaction?
+1
7
+1
14
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!