Serial Stories என் காதல் ராட்சசி

என் காதல் ராட்சசி-14

14

ஒருவித ஏமாற்றம் மனதை கவ்வ நிமிர்ந்து ஆதித்யனின் முகத்தை பார்த்த மகிதாவிற்கு கொஞ்சம் சிரிப்பு வந்தது.தர்ம சங்கடமாக விழித்தபடி நின்றிருந்தான் அவன்.

இவள் விழிகளை சந்தித்ததும் ” ம்ஹூம்”என தலையசைத்தான். பரவாயில்லை எடுத்துக் கொள்ளட்டும் என்பதாக மகிதா ஜாடை செய்ய அதையும் தலையசைத்து மறுத்தான்.

“உனக்கு பிறந்தநாள் பரிசு வேறு வைத்திருக்கிறேன் திவ்யா. இது மகிதாவிற்காக அவளுக்கு ஸ்கூட்டி இல்லை அல்லவா?” அவன் பேசிக் கொண்டிருக்கும்போதே வெடுக்கென திரும்பி வீட்டிற்குள் போய்விட்டாள் திவ்யா.வழியில் வாசலில் நின்ற மகிதாவிற்கு ஒரு பலமான முறைப்பு.

திலகவதியும் மகனை என்ன இது என்பது போல் பார்க்க, அவன் தலையை சொறிந்தான். “நீ கூடவே வந்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காதில்லையா?”  மகிதாவை குறைபட்டான்.

“என்னை கூட்டி போய் வாங்கி வந்திருந்தால் மட்டும் உங்கள் தங்கை புன்னகையோடு வரவேற்றிருப்பாளாக்கும்?” 

” இப்போது எதற்காக திவ்யாவை வம்பிழுக்கிறாய்?அவள் பாவம்”

” அப்போ நான் ?”மகிதாவின் கேள்விக்கு திணறினான்.

“அவளை மட்டுமல்ல என்னையும்தான் குடும்பத்தோடு சேர்ந்து ஒதுக்கி வைத்திருந்தீர்கள். நான் பாவம் இல்லையா?”

” மகிதா திவ்யா பிரச்சனை வேறு.அதனை நாம் கொஞ்சம் ஜாக்கிரதையாக…”

“எந்த சமாதானமும் சொல்ல வேண்டாம். உங்கள் தங்கைக்கே கொடுத்து விடுங்கள்” கோபம் போல் முகத்தை தூக்கிக்கொண்டு உள்ளே போன மனைவியை பெருமூச்சுடன் பார்த்தான்.

 ஆளுக்கு ஒரு பக்கமாக திரும்பி நிற்கும் தங்கையையும் மனைவியையும் எப்படி சமாதானப்படுத்துவது? புரியவில்லை அவனுக்கு.

புழக்கடையில் துளசிச்செடி அருகே போய் அமர்ந்திருந்த திவ்யாவின் அருகே போய் அமர்ந்து கொண்டு அவள் கையை பற்றியபடி மென் குரல்களால் தங்கையை சமாதானம் செய்தான். இதனை அடுப்படி ஜன்னல் வழியாக பார்த்த மகிதா உடனே தங்கை பக்கம் ஓடுகிறாயா இரு உன்னை கவனித்துக் கொள்கிறேன் கருவினாள்.

ஆசையாக ஆதித்யன் வாங்கிக் கொண்டு வந்த ஸ்கூட்டர் தொடுவதற்கு ஆளின்றி அனாதரவாக வாசலில் நின்றிருந்தது.

 இரவு வீட்டிற்கு வந்த சத்யேந்திரன் அதனைப் பார்த்து புருவங்களை உயர்த்த “மகிதாவிற்காக வாங்கினேன் அப்பா. வெளியே போக வர அவளுக்கு தேவையிருக்கும்” பதில் சொல்லாமல் கடந்து போனார் அவர்.




 

அன்று இரவு மாடிக்கு படுக்க செல்வதற்கு முன் வழக்கம் போல் பாட்டி அறைக்கு வந்தான். அவன் பாட்டியை பார்க்க வருகிறானா அல்லது தன்னையா? என்ற சந்தேகம் மகிதாவினுள் எப்போதுமே இருக்கும். இன்று கோபமாக முகத்தை திருப்பிக் கொண்டு படுக்காமல் பாயில் அமர்ந்திருந்தாள்.

“எப்படி இருக்கிறீர்கள் பாட்டி?” பாட்டியை நலம் விசாரித்தபடி கண்களால் அவளை அளந்தான்.

 பாட்டி மகிதாவை கண்களால் காட்டி என்ன விஷயம் என்று கேட்டார். “அதை ஏன் பாட்டி கேட்கிறீர்கள்? ஆசையாக இவளுக்கு ஒரு ஸ்கூட்டர் வாங்கி கொடுத்துவிட்டு நான் படும் பாடு இருக்கிறதே அப்பப்பா. ஆனால் ஒன்று பாட்டி கல்யாணம் முடிந்த பிறகு வீட்டு பெண்களுக்கிடையே ஆண்கள் படுகின்ற பாட்டை வார்த்தைகளால் சொல்ல முடியாது” புலம்பினான்.

சமாளிக்க வேண்டுமடா… பாட்டி ஜாடை காட்ட ,”ஆமா நீங்களும் பெண்தானே?” புலம்பலை நிறுத்தாமலேயே முகம் திருப்பி இருக்கும் மனைவியை பார்த்தபடி எழுந்து போனான்.

பாட்டி மகிதாவை பார்க்க “திவ்யா முதலில் ஆசைப்பட்டு கேட்டுவிட்டாள் பாட்டி.பிறகும் நான் போய் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டால் நன்றாக இருக்காது.அதனால்தான் அவளுக்கே கொடுத்து விடட்டும் என்று…”

பாட்டியின் முகத்தில் திருப்தி நிலவியத. ஒற்றைக் கையால் மகிதாவின் கன்னத்தை வருடி தன் உதடுகளில் வைத்துக் கொண்டார். உன் கணவனிடம் போய் பேசு என கண்காட்டினார்.

” வேண்டாம் பாட்டி” திடுமென எழுந்த கூச்சத்துடன் மறுத்தவளை வினோதமாக பார்த்தார். அவன் உன் கணவன் போய் பேசு கண்டிப்பாக கண்களை உருட்டி சொல்ல சற்றுமுன் புலம்பியபடி இருந்தா ஆதித்யன் கொஞ்சம் பரிதாபமாக உணர வைத்ததனால் மெல்ல எழுந்து மாடி ஏறினாள் மகிதா.

ஆதித்யன் மொட்டை மாடியில் நின்றிருந்தான். இவளது லேசான செருமலை கண்டு கொள்ளாமல் வானத்தைப் பார்த்து நின்றான்.

” நான் திவ்யாவுக்கு ஏமாற்றம் தர வேண்டாம் என்றுதான் ஸ்கூட்டியை வாங்கிக் கொள்ளவில்லை” மெல்லிய குரலில் அவள் சொல்லி முடித்த மறுகணம் அவளை இறுக அணைத்திருந்தான் ஆதித்யன்.

“நிஜமாகவா மகி? உனக்கு என் மேல் கோபம் இல்லை தானே?”

 “திருமணம் செய்து கொண்டு பிறந்த வீட்டை விட்டு போன பெண் மீண்டும் பிறந்த வீட்டிற்கே வரும்போது அங்கே அவளது நிலைமை என்னவென்று எனக்குத் தெரியும்.சுயமாக அனுபவித்திருக்கிறேன். அதனால் திவ்யாவை பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம்”

 ஆதித்யன் அவளை மேலும் இறுக அணைத்துக் கொண்டான்.”எனக்கு புரிகிறது” கரகரத்த குரலில் சொன்னான். பிறகு அவள் முகம் பார்த்து “சாரி” என்றான்.

“எதற்கோ ?”

“எல்லாவற்றிற்கும்… சற்று முன் சொன்னாயே,பிறந்த வீட்டிற்கு திரும்பும் பெண்ணின் நிலைமையை, அந்த நிலைமையை உனக்கு தந்ததற்காக”




உணர்ந்து பேசியவனின் வார்த்தைகள் மனதை அசைத்தாலும் மௌனமாயிருந்தாள்.”என் ஸ்கூட்டி என்ன ஆயிற்று ?”

“அது…உன் ஸ்கூட்டியை சுகந்தி…”

” ஓ அண்ணி கொண்டு போய் விட்டாளா?”

” ஆமாம் அன்று உன் ஆபீசிற்கு வந்து எடுத்துக்கொண்டு போய் விட்டாளாம். அதனால்தான் அன்று பிறகு பார்க்கலாம் என்று உன்னை கூட்டி வந்தேன். திரும்பவும் நீ அங்கே போய் என் ஸ்கூட்டி என்று நிற்பது எனக்கு பிடிக்கவில்லை. புதிதாக வாங்க…”என்றவன் சோகத்தில் கசங்கிய மனைவியின் முகத்தை கையில் ஏந்தினான்.

” ஒரு ஸ்கூட்டிக்காக இவ்வளவு வருத்தமா?” மெலிதாய் அதட்டினான்.

“நான் 12 வகுப்பில் நல்ல மார்க் வாங்கியதற்காக அப்பா எனக்கு வாங்கி கொடுத்த பரிசு அது.என் பிள்ளைகள் வரை அதனை காட்டி பெருமை பேச வேண்டும் என்று நினைத்திருந்தேன். விள்ளாமல் விரியாமல் அடுத்தவர் கைகளுக்கு போய்விட்டது”

“மக்கு இதற்குப் போய் வருத்தமா? இதோ இந்த ஆக்டிவாவை நம் பிள்ளைகளிடம் காட்டிக்கொள்” வாசலில் நின்றிருந்த ஸ்கூட்டரை காட்டினான்.

“அது எனக்கு வேண்டாமே. திவ்யாவே எடுத்துக் கொள்ளட்டும்’

“இல்லை மகி அது உனக்காக நான் ஆசையாக வாங்கியது. திவ்யாவை நான் சமாளித்துக் கொள்கிறேன்” உறுதியாக பேசியவனை ஆச்சரியமாக பார்த்தாள்.

 இதற்குத்தான் உடனே தங்கையிடம் சமாதானத்திற்கு போனானா? மனைவியின் பார்வையில் இருந்த நெகிழ்வை கண்டு கொண்டவன் மெலிதாய் கண்சிமிட்டினான்.

“ம… வா நாம் போய் படுக்கலாம்” இயல்பாக  தோள் அணைத்தவனின் கையை தள்ளினாள்,

” இன்னமும் நமக்குள் நிறைய பேசி தீர்க்க வேண்டியது இருக்கிறது” அவன் பிடியிலிருந்து தப்பி வேகமாக கீழே இறங்கி விட்டாள்.

 உடனே வந்து நின்ற மகிதாவை பாட்டி கேள்வியாகப் பார்க்க ‘அவரிடம் பேசி விட்டேன் பாட்டி.ஸ்கூட்டரை என்னையே எடுத்துக்கொள்ள சொல்லி இருக்கிறார்” பாயில் படுத்து கண்களை மூடிக்கொண்டாள்.

 பாட்டி அவளை யோசனையுடன் பார்த்தபடி இருந்தார்.




What’s your Reaction?
+1
63
+1
35
+1
1
+1
2
+1
4
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!