Serial Stories பாதரஸ பற​வைகள்

பாதரஸ பற​வைகள்-9

9

தன் முன்னால் நின்று பேசிய அவனை நிமிர்ந்து பார்த்தாள் விஜி. பார்த்ததும் பிடித்துப்போகிறதைப் போல ஏதோவொன்று ஈர்த்தது. யாரிவன் முன்பின் அறியாத வீட்டுக்குள் அந்தவீட்டின் நிலைப்படிக்கும் மேல் இருந்தது அவனுருவம். ராதிகாவின் குழந்தை அவனின் கரங்களில் சமத்தாக …..

என்ன பாக்குறீங்க உங்க அக்கா குழந்தைதான் நாங்க எல்லாரும் விருந்துக்கு வந்திட்டோம் வீட்டுக்கு உகந்தவங்களா நீங்க உபசரிக்க வேண்டாமா ? அவனின் அலட்டலான பேச்சில் படித்துக்கொண்டு இருந்த புத்தகத்தை மூடிவைத்துவிட்டு எழுந்தாள்.

ஓஹோ புத்தகங்கள் எல்லாம் வாசிப்பீங்களா ? என் அறையில் நிறைய புத்தகங்கள் இருக்கு, எல்லா ஆர்த்தர்ஸ்ஸீம் எனக்கு வாசிக்க பிடிக்கும் இங்கேதானே இருக்கப்போறீங்க நான் அப்பப்போ எடுத்துவந்து தர்றேன். நான் சிவா இந்த வீட்டுலே ஒரு போர்ஷன்லே இருக்கேன் எல்லாருக்கும் செல்லபிள்ளை அத்தோடு ரொம்பநேரம் பசியோடு இருக்க முடியலை மிஸ்.

விஜி…

ஆங். விஜி… உங்க வீட்டுலே விருந்துன்னு சொன்னதும் நான் காலையிலே இருந்தே சாப்பிடலை, இப்போ நீங்க வரலைன்னா நானே அடுப்படியில் போய் பரிமாறவேண்டியிருக்கும் எப்படி வசதியென்று சிரிக்காமல் அவன் கேட்க இவள் கலகலவென்று சிரித்தேவிட்டாள். அவளுக்கு வழிவிட்டு ஒதுங்கிநின்றவன் அவளைத் தொடர்ந்து வெளியே வர எதிர்பட்ட அபிராமிக்கு மட்டும் சக்தியிருந்தால் அவளின் விழிகளாலேயே அவனை எரித்திருப்பாள். அடடா இன்னும் நம்மேல் கோபம் தணியவில்லை போலும் என்று தலை கவிழ்ந்து கொண்டான். 

நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்களா அதென்ன வயசுப்பொண்ணு இருக்கிற அறைக்குள்ளே சட்டுன்னு நுழையறது பெரிய மன்மதன்னு நினைப்பு மனசுக்கு பார்த்தவுடனே எல்லா பொண்ணும் சட்டுன்னு உங்ககிட்ட விழுந்திடணும் இல்லை அடிக்குரலில் குழந்தையைக் கொஞ்சுவதைப் போல அபிராமியின் இந்தக் கண்டிப்பிற்கு என்ன சொல்வது என்று புரியவில்லை சிவாவிற்கு ஆனால் இன்னும் இன்னும் அவள் தன்னைத் தவறாகவே எண்ணிக்கொள்ளும் படியான சந்தர்ப்பங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறதே என்று தவிப்பு எழுந்தது. அந்த வருத்தமே அவனின் கலகலப்பான சுபாவத்தை சற்று தள்ளி வைத்தது எனலாம்.

என்னடா சோறு சோறுன்னு காக்காயா கத்திகிட்டே இருந்தே விருந்துக்கு வந்துட்டு இலைப்பக்கமே வரலை ஆனாலும் கொடுத்து வைச்சவன்டா நீ காலனியின் கிருஷ்ணபரமாத்மா எப்பபாரு சின்னபொண்கள் புடை சூழ இருக்கே, சிவா தன் அருகில் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்துவிட்டு மீண்டும் சுதாவின் கணவருக்கு பதிலளித்தான். 




ஏன் ஸார் கிண்டல் பண்றீங்க கையிலிருக்கிறது பச்சக்குழந்தை சுத்திப் பாருங்க எல்லாரும் பெரியவங்க கிட்டத்தட்ட அம்மா அக்கா வயசிலே இருக்கிறவங்க இந்த இடத்தில் நானென்ன கிருஷ்ணன் மாதிரியா உங்க கண்களுக்குத் தெரியறேன் முதல்ல போய் கண்ணாடியைப் போடுங்க இல்லைன்னா சுதா அக்காவைக் கூப்பிடிவா ?

அடேய் பாவி நடிக்காதே அபிராமியும், அந்த புதுவீட்டுப்பொண்ணும் பேசினாங்களே அதைச் சொன்னேன்

அவங்க எங்கே என்கிட்டே பேசினாங்க இதோ இந்த வாண்டுகிட்டதான் பேசினாங்க. சரி அதை விடுங்க சாப்பிட்டாச்சா சமையல் எப்படி ? பேருக்குத்தான் மச்சான்னு கூப்பிடறீங்க லட்சணமா தம்பதி சமயதராய் உங்க பொண்டாட்டிக்கூட சாப்பிடப் போயிட்டீங்க நான் தெரியாம இந்த பிள்ளையோடு மாட்டிகிட்டேன். அவன் சொல்லி முடிக்கவும் ராதிகா அந்த பிள்ளையை அந்த தம்பிக்கிட்டே இருந்து வாங்கும்மா அவரும் சாப்பிடட்டும் என்று அம்மா சொல்லவும், விஜிக்கு சுர்ரென்று கோபம் வந்தது. 

இருந்திருந்து அந்த உம்மனாமூஞ்சியிடமா இதை சொல்லவேண்டும் அம்மா நான் செய்திருக்க மாட்டேனா ?! சிவாவிடம் குழந்தையைப் பெறும் போது ரொம்ப நல்ல பையன் அமைதியா இருந்தான் நீங்க வேற வேலை இருந்தா முடிச்சிட்டு வாங்க நான் வச்சிக்கிறேன் என்றான் ராதிகா நன்றியாய் தலையை அசைத்தாள் அவள் வரையில் அதுவே அதிகம் ஆனால் சிவாவின் இயல்பு அது இல்லையே நல்லா தூங்கிட்டாள் நான் வேணுன்னா தொட்டில்ல போட்டுடவா ? ஏன்னா என்கூட பழகிய யாரும் சட்டுன்னு பிரிஞ்சி போயிடமாட்டாங்க, ஒருவேளை இந்த குட்டியும் எழுந்து மாமா கிட்டேதான் போவேன்னு அழுதா என்ன செய்வீங்க, பேசாம இரண்டு கவளம் சோற்றை பிசைந்து கொடுங்க இப்படியே சாப்பிட்டு விடுகிறேன் இந்த ஏரியாவிலே ராப்பிச்சைக் காரன் வேற இல்லை என்று இடக்கான பேச்சோடு முகத்தை அப்பாவியாய் வைத்துக்கொண்டு கேட்க, ராதிகா சற்று சப்தமாகவே சிரித்துவிட்டவள் டக்கென்று வாயை அடைத்துக்கொண்டு குழந்தையையும் பறித்துக்கொண்டு அறைக்குள் ஒளிந்துகொண்டாள். 

ஆனால் பெண்ணின் தகப்பானருக்கும், தாயாருக்கும் அந்த சிரிப்பு கண்களில் தவறவில்லை வழக்கம்போல் எந்த உணர்வையும் தந்தையின் முகம் வெளிக்காட்டவில்லை, ஆனால் ராஜத்திற்கு ராதிகாவின் சிரித்த முகத்தைப் பார்த்ததும் அதற்கு காரணமான சிவாவை பிடித்துப்போனது. வாங்க தம்பி சாப்பிடலாம் என்று அழைத்துப்போய் அமர வைத்தாள் அங்கே விஜி அமர்ந்து சாப்பிடும் இடத்தில் இடமிருக்க சுவாதீனமாய் அமர்ந்தான், குறுகுறுவென்று ஓடிய மனதை மறைத்துகொண்டு காலையில் கிண்டல் செய்த அதே கத்திரிக்காய் வதக்கலையும் சாம்பாரையும் அவனிடத்தில் தள்ளி வைத்தாள் விஜி

இன்னும் வத்தக்குழம்பும் பாயசமும் இருக்கு ரொம்ப டேஸ்டா இருக்கும் பெரிய ஹோட்டல்ல கூட இந்த மாதிரி டேஸ்ட் கிடைக்காது எங்கம்மா கைப்பக்குவம் அப்படி, சாப்பிட்டபடியே அவன்மேல் பட்டும் படாமலும் இடித்துக்கொண்டு குழம்பினைப் பரிமாறினாள் விஜி. இரண்டு கவளம் வாய்க்குள் செல்லும் முன்னரே சட்டென்று அவன் இலையில் தண்ணீர் கவிழ்க்கப்பட்டது. தண்ணீர் குவளையுடன் அபிராமி நின்றுகொண்டு இருந்தாள்.மன்னிசிடுங்க சாப்பிடத் தண்ணீர் இல்லையேன்னு எடுத்துட்டு வந்தேன் ஆனா.. எதிர்பாராத விதமா ?! இப்பவே வேற இலை போடறேன் என்று இலையை மாற்றியவள் வெகு கவனமாக தானே சிவாவிற்குப் பரிமாறினாள். 




யாரும்தவறாகஎதையும்அர்த்தம்பண்ணிக் கொள்ளாத அளவிற்கு அபிராமியின் செயல்பாடுகள் அனைத்தும் சிவாவிற்கு வியப்பாக இருந்தது. அவள் முகத்தில் கோபம் வெறுப்பு இன்னும் சொல்லமுடியாத ஏதோவொரு உணர்வுக் கலவை  அவள் கரங்களில் திருப்தியாக உண்டவன் வெளியே கூடியிருந்த கும்பலோடு கலந்துகொண்டான்.

வெற்றிலைப் பாக்கோடு வெளியே வந்த விஜி எல்லாருக்கும் நீட்டிவிட்டு சிவாவின் பக்கம் திரும்பினாள். சிவா நீங்க வெற்றிலை போடுவீங்களா ?

எப்பவாவது ? அதிக பழக்கம் கிடையாது இரண்டு வெற்றிலை சீவல்களை மடித்து அவன் புறம் நீட்டினாள். அப்பறம் எங்க வீட்டு விருந்து எப்படியிருந்ததுன்னு நீங்க சொல்லவேயில்லையே ? 

ரொம்ப அற்புதம் ….. சிவா பேச ஆரம்பிக்கவே அய்யய்யோ அவன் கிட்டே போய் சாப்பாட்டைப் பற்றி ஏம்மா கேட்கறே ? உடனே எனக்குன்னு உறவு யாருமில்லை தினமும் ஹோட்டல்ல சாப்பிட எனக்கு இன்னைக்கு உங்க சாப்பாடு தேவாமிர்தன்னு பேச ஆரம்பிச்சிடுவான் லட்சுமியின் கணவரின் கிண்டலில், 

அப்படின்னா ? 

சிவா இந்தக் காம்பெளண்ட்டுக்கு வந்து ஆறேழு வருஷமாச்சி, இராமநாத புரத்தில ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தப்போ நெருங்கின சொந்தகாரர் ஒருத்தர் சிவாவைக் காட்டி இந்தப் பையனுக்கு சொல்லிக்கொள்ளும் படி எந்த உறவும் இல்லை, எப்படியோ படிச்சிட்டான் சென்னையிலே எனக்கு தெரிந்த விளம்பர நிறுவனத்திலே ஒரு வேலையும் கிடைச்சிட்டது தங்க இடமில்லைன்னு சொன்னதும் உங்க நினைவுதான் மாமி வந்ததுன்னு சொன்னார். என்னவோ அநாதை அநாதையைப் பிடிச்சிகிட்ட கதையா எனக்கும் அவனைப் பிடிச்சிப்போச்சி அன்னையிலிருந்து இங்கேதான் ஜாகை, எனக்கு மட்டுமில்லை இங்கேயிருக்கிறே அத்தனை பேருக்கும் இவன்தான் உதவி. யாரும் கைநீட்டி ஒரு குறை சொல்ல முடியாத உத்தமமான பிள்ளை என்ன வாய்தான் கொஞ்சம் நீளம் என்று ஆச்சி சொல்ல அவர் தந்த சலுகையாய் அவரின் மடியில் சாய்ந்து கொண்டான் சிவா

ஏன் ஆச்சி இவனென்ன எதிர்நீச்சல் நாகேஷா…. ?பாட்டிக்கு எத்தனை சொத்து தேருன்னு உங்களையே சுத்தி வர்றான்…..

இருக்கட்டுமே எனக்கென்ன இந்த வயசுக்கு மேல, இந்த சம்பாத்தியத்தை கோவில் குளன்னு என் விருப்பம் போல செலவு செய்யறேன் சொன்னாலும் சொல்லலைன்னாலும் சிவாதான் எனக்கு வாரிசு,. இந்த வீடு பேங்க் பணம் எல்லாம் அவனுக்குத்தான் என்று ஆச்சி மடியில் படுத்திருந்த அவனின் தலையைக் கோதினாள் கண்களில் ஓரம் எட்டிப்பார்த்த விழி நீரை யாரும் அறியாமல் சுண்டிவிட்டான் சிவா. 

ஆள் அழகன் பாாத்தவுடன் மனதிற்குப் பிடித்து விட்டாலும் உத்தியோகம் புருஷ லட்சணம் என்பதற்கு ஏற்றாற்போல நல்லவேலை இதற்கு மேல் வறுமையிலேயே உழண்ட விஜி தன்னுடைய கனவு நாயகனைக் கண்டுபிடித்தாற்போலவே மகிழ்ந்துபோனாள். பாட்டியின் சொல்படி இத்தனை பெரிய வீடு இந்த நாளில் எத்தனை விலை போகும். சிவாவைக் கட்டிக்கொண்டால் அதற்கு தான் தானே வாரிசு இப்போதே இந்தக் கிழவியைக் கைக்குள் போட்டுக்கொள்ள வேண்டும் சிவா உனக்குத்தான் என்று அவரே சொல்லும் படி புதிய இடத்தில் யாரையும் நம்பி ஏமாறுவதைக் காட்டிலும் இவன் தேவலை தெரியாத கடவுளைக் காட்டிலும் தெரிந்த பிசாசு மேலல்லவா என்று எண்ணம் ஓடியது. அவள் தன் கண்களை சிவாவின் மேல் காதலாய் ஒட்டினாள். உன்னை யாருக்காகவும் நான் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று ! 

அதேநேரம் கொல்லைப்புறத்தில் துணிகளை உலர்த்திக்கொண்டு இருந்த அபிராமியிடம் நின்றான் சிவா….

அபிராமி நீங்க நினைக்கிறா மாதிரி நான் தப்பானவன் இல்லை குற்றவாளிக்கு கூட அவன் தரப்பு விளக்கம் தர நேரம் இருக்கும் ஆனா நீங்க எனக்கு…..?!

என்ன சொல்லப்போறீங்க ? உங்க வாய்ஜாலம் எல்லாம் ஆச்சிகிட்டேயும், அந்த புதுப்பொண்ணு கிட்டேயும் வைய்யுங்க என்கிட்டே வேண்டாம், அதென்ன அப்படி விழுங்கறா போல உங்களைப் பாக்குறா ? நீங்களும் எப்படா பேசுவா ? மசிவான்னு ச்சீ….நானொன்னும் நீங்க எப்போ பேசுவீங்கன்னு தவம் கிடைக்கலை மிஸ்டர் . இனிமே என்னைத் தொந்தரவு பண்ணாதீங்க…. நான் முட்டாள் இல்லை விளக்கின் வெளிச்சித்தில் விழ …. சொல்லிவிட்டு விரைவாக உள்ளே சென்றுவிட்ட அபிராமியை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டு நின்றான் சிவா. 




 

What’s your Reaction?
+1
9
+1
8
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!