Serial Stories பாதரஸ பற​வைகள்

பாதரஸ பற​வைகள்-8

8

எப்படியோ குடும்பம் செலவுகள் மாமியாரின் மருந்து செலவுகள் இரண்டு பெண்களின் படிப்பு திருமணம் என்று மலைப்பாக இருந்தது ராஜத்திற்கு, அம்மாவிடம் சம்பளத்தை கொடுத்ததைப் போல தனக்கென்று செலவுக்கு எடுத்துக்கொண்டு மீதியை சாமிப்படத்தின் முன்பு வைத்துவிட்டு தன் வேலையை பார்க்கப்போய்விடுவார் கணவர். வேலையும் ஒன்றும் பிரமாதமில்லை, வாசத் திண்ணையில் நான்கு வயதானவர்களுடன் அரசியல் அரட்டைதான் அப்போதைக்கு தண்ணீரும், சீவலும், திண்ணைக்குப் போகும். ஆனால் காப்பியோ டீயோ கேட்கமாட்டார். ஒட்டகம் சேமித்து வைப்பதைப் போல எப்போதும் தண்ணீர் மட்டும்தான். ஏழுமணிவரையில் திண்ணைவாசம் முடிந்ததும் இரவு சாப்பாடு அம்மாவோடுதான் காலையில் இருந்து மாமியாரின் தேவைகளை கவனிப்பது ராஜமாகவே இருந்தாலும், தினசரி மருமகள் மேல் குறைபடிக்கவென ஒரு பக்கம் வைத்திருப்பாள் மாமியார். 

நான் என்ன பாவம் செய்தேனோ இவகிட்டே இடிசோறு வாங்கிச் சாப்பிட வேண்டியதாயிடுச்சு, நான் பெத்தது ஏதும் சரியில்லை பொண்ணுக்கு பணத்தாசை பிள்ளைக்கு புத்தியில்லை பொண்டாட்டி பேச்சிற்கு எதிர் பேச்சு பேசாதவனா வளர்த்திட்டேனே…. சாரங்கன் அதிகம் தொணதொணக்கும் ரகமில்லை என்றாலும் மனைவியின் மேல் இருந்த கொஞ்ச நஞ்ச பாசமும் தாயின் பேச்சுக்கு பயந்து குறைந்துபோனது. 

ராஜமும் அதை கண்டுகொள்ளவில்லை சாரங்கனின் விலகல் அவருக்கு நிம்மதியையே தந்தது, அவரைப் பொறுத்தவரையில் சாரங்கனின் குடும்பம் ஒடிப்போன அக்காவும், அம்மாவும்தான் பெயருக்கு ஊர்உலகத்திற்கு தனக்கும் ஒரு குடும்பம் உள்ளது என்பதைக் காட்டிக்கொள்ளவே அவர் கல்யாணம் செய்துகொண்டு இருக்கவேண்டும். பிள்ளைகள் பக்கம் திரும்பியும் பார்ப்பது இல்லை ராதிகா பிறந்த போது அவ்வப்போது தூக்கிக்கொஞ்சுவார் விஜியிடம் அவர் விளையாடியதாய் கூட நினைவில்லை, அழகில் இருபிள்ளைகளும் ராஜத்தையே கொண்டு இருந்ததால் தங்க விக்கிரங்களைப் போல் இருக்கும் பிள்ளைகளை கூட ஒதுக்கிவைப்பாரா இந்த மனுஷன் என்ற கேள்வி நீண்ட நாளாகவே ராஜத்தை உலுக்கிக்கொண்டு இருந்தது. அதற்கு விடைகிடைத்தாற்போல ஒரு நாள் மாமியாரே அதையும் தீர்த்தாள். 

விஜி பதிமூன்று வயதில் திரண்டுவிட ராதிகா கல்லூரி மாணவி இரு பெண்களும் குணத்தில் நேர் எதிர் ராதிகா பரமசாது விஜியோ அப்படியே தன் மாமியாரைப் பிரதிபலிக்கும் குணம், வெடுக்கென்று பேச்சு அடுத்தவர்களின் மனம் வருத்தப்படுமே என்ற நினைப்பெல்லாம் இல்லை, சின்னப்பிள்ளையில அப்படிப்பட்ட பேச்சு வேடிக்கையாய் இருந்தாலும், வளர வளர அவளைக் கண்டிக்க முடியாமல் திண்டாடிப்போனாள் ராஜம். என் ஸ்கூல்ல படிக்கிற பிள்ளைகளுக்கு எல்லாம் விழா பண்ணாங்க இங்கே ஒரு புதுத்துணி கூட எடுத்துத்தரலை, உன்னால முடியலைன்னா நான் அப்பாகிட்டே கேட்டுகிறேன்.

கேளேன்….ராஜத்தின் விட்டேற்றியான பதில் 

எங்கே அவர் என்கிட்டே பேசினாத்தானே நான் இந்தப்பக்கம் போனா அவரு அந்தப்பக்கம் நகர்ந்து போயிடறார். கொஞ்சம் கூட பெத்த பிள்ளைங்க மேல அக்கறையே இல்லை, எதுக்கு அவர் அப்படியிருக்கார் ?!

இங்கே பாரு விஜி வயசுக்கு மீறிய பேச்சு பேசாதே உன் கூட பிறந்தவதானே ராதிகா அவ இப்படியா பேசிகிட்டு இருக்கா நிலையைத் தெரிஞ்சிகிட்டு….

இரு இரு இப்போ என்ன கேட்டுட்டேன்னு பொறியறே ? உனக்கு அவதானே முக்கியம் என்னைத் தவிட்டுக்கு வாங்கிட்டு வந்தியோ ? என்னடி அங்கே சப்தம் பொட்டப்புள்ளையை அடக்கி வைக்கத் தெரியாம இப்படி ஆடவிடறீயே ?! மாமியாரின் பேச்சில் கொஞ்சம் அமைதியானாலும் இந்த கிழவி வேற ஒரு நா இல்லை ஒரு நாள் நானே கல்லைத் தூக்கிப்போட்டு அது கதையை முடிக்கப்போறேன் பாரு என்று கருவிவிட்டு விஜி சென்றுவிட, பக்கத்து வீட்டு மாமியிடம் மகளின் நடவடிக்கைகளைச் சொல்கிறார் ராஜம்.

இதெல்லாம் வீட்டுக்கு வீடு நடக்கும் சடங்குதானே, அவ சின்னப்பொண்ணு கூடப்படிக்கிற பிள்ளைங்களுக்கு நடக்கும் போது அவளுக்கும் ஆசை வரத்தானே செய்யும் இப்போயென்ன பெரிசா செய்யலைன்னாலும் என்வீட்டு மொட்டைமாடியில் ஒரு கொட்டாய் போட்டு சின்னதா ஒரு விழா வச்சிடு இதெல்லாம் கல்யாணத்திற்கு ஒரு முன்னோட்டம் மாதிரி தானே, பெரியவ திரண்டப்பத்தான் உன்னால செலவழிக்க முடியலை இப்போதான் சாரங்கனுக்கும் உத்தியோக உயர்வு கிடைச்சிருக்கு உன்னோட அப்பளம் ஊறுகாய் வியாபாரமும் கை கொடுத்திருக்கே வீட்டோட தெரிந்தவங்களைக் கூட்டிட்டு செய்தா என்ன குறைஞ்சிடப்போகுது எதிர்வீட்டு மாமியின் வீட்டில் விருந்து அதிரசப்பாகு எடுக்கும் போது பேசியது அப்படியே பதிந்தும் போனது. அதே கையோடு கணவரிடம் மாமியாரிடமும் பொதுவாகவே பேசியும் விட்டார். 

குடித்துக்கொண்டு இருந்த கஞ்சியை அப்படியே கீழே துப்பிவிட்டு, ஏண்டி படுத்துதானே கிடக்கிறா என்ன செய்யப்போறான்னு உனக்கு குளிரு விட்டுடுச்சியில்லை, என்ன இங்கே கொட்டிக்கிடக்குதோ இல்லே உங்கப்பன் வீட்டுலேயிருந்து எடுத்துட்டு வந்தியா ?! எம்பிள்ளை மாடா உழைச்சி கொட்டுறான். கூடப்பிறந்தவ போயிட்டா, பெத்தவளும் அனுபவிக்க முடியாம படுத்த படுக்கையாயிட்டா அனுபவிக்க ஆளில்லைன்னு நினைக்கிறியோ ?! போடுறது தண்டச்சோறு இதிலே விழாவேறயாக்கும் டேய் சாரங்கா இவளுங்களை நம்பாதே முதப்பிள்ளை பிறந்து பெத்தவங்க வீட்டுக்கு போனவ நீயும் இல்லாம இன்னொன்னை பெத்துட்டு ஒரு வருஷம் கழிச்சி வருவா ?! அதுக்கு விழா வேறயாம் நெருப்புத்துகளை வாரி முகத்தில் அடித்தாற்போல துடித்தார் ராஜம். சாரங்கனைப் பார்த்தார் அவர் முகத்தில் எந்த விதமான மாறுதலும் இல்லை, வழக்கம் போல் அதே அமைதி,




நாக்கை அடக்கி பேசுங்க இன்னமும் என் கையாலதான் சாப்பிடுறீங்க அம்மாவுக்கு தெரியாது நான் வந்தது சொல்லிடாதேன்னு அறைக்குள்ளே வந்து கதவைச் சாத்தின உங்க பையனைக் கேளுங்க இரண்டாவது பிள்ளை எப்படி பொறந்ததுன்னு ? குணத்திலும், தோற்றத்திலும் உங்களைத்தானே உரிச்சி பொறந்திருக்கா உங்க சின்ன பேத்தி அப்படியும் நம்பிக்கை வரலையோ இன்னொரு முறை இப்படி பேசினா நான் மனுஷியா இருக்கமாட்டேன் இதுக்குமேல இந்தாளுகூட வாழ்ந்து என்ன பலன்னு பிள்ளைகளை கூட்டிட்டு தனியா போயிடுவேன் ஞாபகம் வச்சிக்கோங்க, தன்னை மீறிய கோபத்தில் கத்திய ராஜம் உள்ளே சென்று ராதிகாவின் மடியில் படுத்த விசும்பலோடு பெற்ற பிள்ளைகளின் முகத்தைக் கூட பார்க்க முடியாமல் தவித்தது இன்றும் நினைவிருக்கிறதே ?! 

விருந்துக்கு ஊரையே கூப்பிட்டேன்னு சொல்லிட்டு இப்படி மோட்டுவளையத்தைப் பார்த்துட்டே நிக்குறீயே என்னை திட்டினா மட்டும் பத்தாது மறுபடியும் விஜியின் குரல் நினைவுக்கு இழுத்து வந்தது. ராதிகா எங்கேடி

அந்தம்மாளோட குழந்தை அழுகுது அவ போய் பத்து நிமிஷமாச்சு, எந்த கோட்டையை பிடிக்க கனவு காண்றே ? பாயசம் வைச்சி இறக்கியாச்சு ரசமும் தாளிச்சிட்டேன் இனிமேயாவது நான் போய் படிக்கலாமா ? கொலுசு ஒலி சிணுங்க போகும் மகளையே பார்த்தார் ராஜம். கோபம் இருக்கிற இடத்தில் தானே குணமும் இருக்கும். சின்னப்பொண்ணு இவ தலையிலே குடும்பச் சுமையை சுமத்தியாச்சு ! விஜிக்கு ஆசைகள் அதிகம் ஒரு மகாராணியைப் போல வாழ வேண்டும் போற இடமாவது நல்லா அமையணும் என்ற கடவுளை வேண்டிக்கொள்பவள். குடும்பம் குடும்பமின்னு இருந்தா வேலைக்காகாது என்று தன் வருமானத்தில் ஒரு குட்டித் தொகையை யாரும் அறியாமல் நகைக்கடையில் சேமித்து வருகிறாள். 

அவளைப் பொறுத்தவரையில் அப்பா உதவாக்கரை மனது வந்து ஒருநாள் கூட தன்னையோ அக்காவையோ கொஞ்சியதில்லை, எத்தனை தோழிகள் வீட்டில் பெற்றோர்களின் இணக்கத்தைப் பார்த்திருக்கிறாள், ஆனால் ஒரு நாள் கூட அப்பாவும் அம்மாவும் இணைந்து பேசியோ எங்கும் வெளியில் சென்றுவந்து ஏன் சொந்தகாரங்க என்று கூட யாரும் வந்ததில்லை அப்படியென்ன தனிப்பட்ட தீவாகப் போயிருக்கவேண்டும் தங்கள் வீடு. 

விஜியின் அறிவுக்கு எட்டியவரையில் அப்பா பேசியதேயில்லை அப்பாவிற்கும் சேர்த்து பாட்டி பேசுவாள் அத்தூண்டு உருவத்திடம் இருந்து வரும் குரலின் கணமும், எதிரே இருக்கும் ஆளை குதறிஎடுக்கும் குணமும் அவளுக்கு வியப்பைத் தான் தரும். அம்மாயேன் எல்லாவற்றிலும் அட்ஜெஸ் செய்து கொண்டு போகவேண்டும். தங்களுக்கு விழா நடக்கவேண்டும் என்று பேசியபோது எவ்வளவு அபத்தமாக பேசினார் பாட்டி அன்று அம்மா அழுத அழுகை இன்றுவரையில் மனதை பிசைந்து கொண்டேதான் இருக்கும் விஜிக்கு அப்படி தடம் மாறிப் போகும் அம்மாவா துடைத்த குத்துவிளக்கைப்போல இருக்கும் அவளுக்கு அலங்காரம் என்றால் அந்த நெற்றிப்பொட்டும் மஞ்சளும்தானே வேறு ஏதுமேயில்லை ?! அத்தனை நல்லவள் தன் உடலையே குடும்பத்திற்காக தேய்த்துப் போடுபவள். அவளைக் குறை சொல்ல இவர்களுக்கு எப்படித்தான் மனம் வந்தது, அம்மாவிற்கு ஆதரவாக தான்தான் இருக்கவேண்டும் என்ற நினைத்திருந்தவளை வீட்டில் அத்தனை பேர் மேலும் கோபமாக மாற்றியது எது ?! ராதிகாவின் விஷயத்தில் நடந்ததுதான் விஜயின் மன மாறுதலுக்கு காரணம்.

மேற்கொண்டு யோசிக்கவிடாமல் ஒவ்வொருவராக வரத் தொடங்கினார்கள் விருந்துக்கு என்று விஜி வெளியே எட்டிப்பார்த்துவிட்டு தலையை இழுத்துக்கொண்டாள். அந்த குட்டி ஹால் மொத்தமும் ஒரே சப்தம் என்ன நீங்க மட்டும் தனியா உட்கார்ந்து இருக்கீங்க விருந்துக்குன்னு கூப்பிட்டுவிட்டு வீட்டு ஆள் மட்டும் தனியா உட்காரலாமா என்று கேட்டுக்கொண்டு தலையை மட்டும் எட்டிப்பார்த்த சிவாவின் கைகளில் ராதிகாவின் குழந்தை ஏனோ அவனை உடனடியாய் பிடித்துப்போனது விஜிக்கு….!




 

What’s your Reaction?
+1
9
+1
11
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!