Serial Stories மனதில் உந்தன் ஆதிக்கம்

மனதில் உந்தன் ஆதிக்கம்-15

15

“ஹலோ நீங்க ஜீவிதாதானே?” கேட்ட குரலுக்கு திரும்பிப் பார்த்தவளின் பார்வையில் பட்ட இளைஞனை இதற்கு முன் பார்த்த நினைவு சுத்தமாக இல்லை.

“ஆ…ஆமாம்.நீங்க…யாரு…?”

“என்னங்க என்னைத் தெரியலையா? நான் தான் பிரவீண்”

அப்துல் கலாம் என தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ளும் விஞ்ஞானி போஸில் நின்றிருந்தவனின் முகம் இவள் மீது வெளிப்படையாக ஜொள் ஊற்றிக் கொண்டிருந்தது.

ஜீவிதாவிற்கு உஷ்சென்றிருந்தது.வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடப்பதில் மண்டை புழுக்களின் எண்ணிக்கை அதிகமாவதாக உணர்ந்தவள், சற்றே வெளி சுவாசத்திற்கென இந்த ரெஸ்டாரன்ட் பார்க்கில் வந்து அமர்ந்திருந்தாள்.இங்கேயும் இது போன்ற இம்சைகள்.

“நம்ம தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்ல?” ஜீவிதா கேட்க,அவன் முகத்தின் உற்சாக பலூன்கள் டப் டப்பென வெடித்தன.

“சை,கலாய்ச்சுட்டீங்களே அண்ணி” கண்களை கசக்கி மூக்கை உறிஞ்சினான்.

“அண்ணியா?”

“ம்…அப்படித்தான் கூப்பிடனுமாம்.மகா பெரியவர் அந்த ஹரியோட உத்தரவு”

“ஓ…நீங்க ஹரியோட தம்பியா?”

“ம்க்கும் இந்த ஹரி மட்டும் உடனே தெரியுதாக்கும்?”

அவனை ஆச்சரியமாக பார்த்தாள்.”பாருங்க தம்பி,ஹரி என் கணவர்” நினைவுபடுத்தினாள்.

கணவரெனும் போது தன் காதுகளை கையால் பொத்தி எடுத்தவன்”அந்த ஒரே கவலைதாங்க எனக்கு உங்க கல்யாணம் முடிந்த நாளிலிருந்து”

ஜீவிதாவிற்கு புன்னகை வந்தது.இவன் இன்னமும் கல்லூரி காலத்திலிருந்து வெளி வரவில்லை.”எங்க கல்யாணத்திற்கு நீங்க வந்திருந்தீங்களா?”

“ம்…ம்…வந்தேன்.அப்பாவும்,

அம்மாவும் இழுத்துட்டு வந்தாங்க”

“ஐயோ ஏன் அப்படி?”

“பின்னே என்னங்க,இங்கே ஒருத்தன் ஒரு கல்யாணத்திற்கே திக்கி திணறிட்டு இருக்கும் போது,அண்ணன்காரன் இரண்டு மூணுன்னு போனா எரிச்சல் வராதா?அந்தக் கல்யாணத்தை மனதார அட்டென் பண்ண முடியுமா சொல்லுங்க”

ஜீவிதாவின் முகம் வாடியது.

“நீங்க ஏன் ஜீவிதா இந்த கல்யாணத்திற்கு ஒத்துக்கிட்டீங்க?என்ன தலையெழுத்து உங்களுக்கு?” பிரவீணின் பார்வை அவள் முகத்தை தோண்டி துருவியது.

“பிடித்ததால்தான்…” வறட்சியாய் வார்த்தைகளை உதிர்த்தாள்.

“யாரை? ஹரியையா?நான் நம்ப மாட்டேன்.ஹரி உங்களை மிரட்டித்தான் கல்யாணம் செய்தான்னு எனக்கு நல்லாவே தெரியும்.பயமும்,கலக்கமுமாக ஹரி பக்கத்தில் கோவிலில் நின்றிருந்தீர்களே…எனக்கு மனதை என்னவோ செய்தது தெரியுமா?” 

பிரவீண் பேசிய வசனம் சிரிப்பை தர “அட…அப்போதே என்னை காப்பாற்றியிருக்கலாமே தம்பி?”புன்னகையோடு கேட்டாள்.




 

பிரவீண் ஙே என விழித்தான். “அது…வந்து…அப்போது…நான்…”

“நீங்கள்தான் தம்பி.இந்த வீர தீர பராக்கிரமசாலி என்னை காப்பாற்றாவிட்டால் யாரைத்தான் நான் நம்ப முடியும் சொல்லுங்கள் தம்பி”

பிரவீண் நிறைய கவலையுடன் அவளை ஏறிட்டான்.”என்னை இப்படித்தான் அழைப்பீர்களா?வேறு மாதிரி மாற்ற முடியாதா?”

ஜீவிதாவிற்கு குபீரென சிரிப்பு வந்தது.

“சிரிக்காதீர்கள்.இவ்வளவு அழகான பெண்ணிற்கு தம்பியாக இருக்க நான் விரும்பவில்லை”

“இந்த தம்பியின் அர்த்தம் கொழுந்தன் தம்பி.அதாவது கணவரின் தம்பி….அதாவது கணவரின் தம்பி என் தம்பி போல்.உடன்பிறந்தான் போல் கொழுந்தனை நடத்த வேண்டுமென்பதற்காவே இந்த தம்பி அழைப்பை வழமைபடுத்தியிருப்பார்களோ தம்பி?”

“ஐயோ” இரு கைகளையும் கோர்த்து தன் தலை மேல் வைத்துக் கொண்டவன்”தெய்வமே! தெரியாமல் கேட்டுவிட்டேன்.தம்பி,சின்னதம்பி,

பெரிய தம்பி…எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள்.இந்த உறவுமுறை ஆய்வை மட்டும் விட்டு விடுங்கள்”

ஜீவிதா கலகலவென சிரிக்க,அவளைப் பார்த்தபடி இருந்தவன் “இப்படி மனம் விட்டு சிரிக்கும் போது சௌதாமினியை நினைவூட்டுகிறீர்கள்” என்றான்.

“சௌதாமினி யார்?’

” சொல்கிறேன்.எனக்கு ஒரு சந்தேகம்.ஈசனின் அப்பா யார்?”

“பிரவீண் ” ஜீவிதா அதட்ட,இரு கையுயர்த்தியவன்,”எனக்கு ஹரி மேல் அவ்வளவு நம்பிக்கை கிடையாது.உங்களை கல்யாணம் பேசி முடிப்பதற்காக என் அப்பா அம்மாவிற்கு வருடத்திற்கு பத்து கோடி தருவதாக பேரம் பேசியவன்'”

“என்ன சொல்கிறீர்கள்? அது எப்படி?”

“ஹரிகரன் வீட்டினர் போராடி இந்த எஸ்டேட்டை அவர்கள் பங்காக வாங்கினர்.அதன் லாபம் முழுவதும் இப்போது ஹரிக்கு மட்டுமே.அதிலிருந்து இரண்டு பர்சென்ட் அவர்கள் மகனுக்கு…அதாவது எனக்கு தருவதாக பேசி என் அம்மா அப்பாவை உங்களை பெண் கேட்டு வர செய்தான்.அந்த பங்கீட்டு விபரம் பேசத்தான் இப்போது நான் வந்தேன்”

ஜீவிதா யோசனையில் விழ “எங்கள் குடும்பத்தில் ஹரிகரன் குடும்பத்தை கொஞ்சம் ஒதுக்கியே வைத்திருப்போம்.எங்கள் முன்னிலையில் முன்னேறி காட்ட வேண்டுமென்ற வெறி அவர்கள் குடும்பத்தில் ஹரிகரனுக்கு கொஞ்சம் அதிகமாகவே உண்டு.பணம் சம்பாதிக்க,குடும்ப மரியாதைக்காக அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான்.அப்படி அவனிடம் ஏதோ விசயத்தில் மாட்டியவர்களா உங்கள் குடும்பத்தினர்?ஹரிகரனின் நோக்கம் நீயா ஜீவிதா?”

பிரவீண் பேசப் பேச ஜீவிதாவின் நெற்றிப் பொட்டு தெறிக்க துவங்கியது.ஏன் இருக்க கூடாது?கல்லூரி காலத்து காதலியை அடையும் லட்சியம் இருக்கலாம்தானே?

பிரவீண் சற்று முன் கேட்ட கேள்வி அவள் மனதினுள் விஷ்வரூபம் எடுத்தது.

ஈசனின் அப்பா யார்? 




What’s your Reaction?
+1
54
+1
30
+1
7
+1
1
+1
1
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!