Serial Stories மனதில் உந்தன் ஆதிக்கம்

மனதில் உந்தன் ஆதிக்கம் -16

16

“ஜீவி என்னத்தைடி உருட்டிட்டு இருக்கிறாய்?” ஸ்டூலின் மேல் ஏறி நின்று லாப்டை குடைந்து கொண்டிருந்தவளை பார்த்து கேட்டாள் கலைவாணி.

“அம்மா அக்காவோட போன் எங்கேம்மா?”

“அதானே…ஸ்வேதா போனை எங்கே?”

பதில் கேள்வி கேட்டவளை முறைத்தாள்.”ம்மா…”

“எனக்கு தெரியலை ஜீவி.கையிலேயேதான் வைத்துக் கொண்டிருந்தாள்.ஒரு வேளை மாப்பிள்ளையிடம் இருக்கிறதோ என்னவோ?”

ஜீவிதாவிற்கு திக்கென்றது.ஸ்வேதாவை பற்றிய உண்மைகளை தெரிந்து கொள்ள அவளது போன் ஒன்றே வழி என்று போனை தேட ஆரம்பித்திருக்கிறாள் .ஆனால் முதலிலேயே போனை கைப்பற்றிக் கொண்டானா அந்த வில்லன்? 

பிரவீணுடன் பேசி வந்த பிறகு ஹரிகரனை வில்லனாகத்தான் நினைக்க தோன்றியது.அவனைப் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ளும்  முன் நிச்சயம் அவனை… ஹரிகரனை சந்திக்கவே கூடாது.பாவிப்பயல் ஏதோ வசிய மந்திரம் வைத்திருப்பான் போலும்.சித்தி,சித்தப்பா,தம்பி,




 

மனைவி,குழந்தை என அவனது வசிய வளையத்திற்குள் விழுந்தவர்கள் ஏராளம்.

அவனது தம்பி, அவ்வளவு பேசிக் கொண்டிருந்தவன்,அவனைப் பார்த்ததும் மகுடி நாகமாகி விடவில்லையா?கைகளை தலைக்கு மேலுயர்த்தி பாம்பு நடனமாடவில்லை அவ்வளவுதான்.மற்றபடி அண்ணனின் மகுடிக்கு நடனமாடியது தம்பியின் தலை.

திடுமென அங்கு வந்து நின்றவனை அவள் எதிர் பார்க்கவில்லை.”பிரவீண் அது ஹரி மாதிரி தெரிகிறது” உடன் பேசிக் கொண்டிருந்தவனிடம் குரல் குறைத்து சொல்ல,அவன் திரும்பிப் பார்த்து அலட்டாமல் தலையசைத்தான்.”ஹரியேதான்”

“இங்கே எப்படி வந்தார்?”

“சொன்னேனே,நாங்கள் தொழில் விபரம் இந்த ரெஸ்டாரன்டில்தான் பேசிக் கொண்டிருந்தோம்.ஒரு போன் வரவும் எழுந்து போனான்.அப்போதுதான் உன்னை பார்த்தேன்”

அடப்பாவி பக்கத்தில் அண்ணனை வைத்துக் கொண்டே அவ்வளவு புறணி பேசினாயா நீ ?அதோ தூரத்தில் வருபவன் சமீபிக்கும் முன் ஓடி விடலாமா? அவசரமாக திட்டமிட்டாள்.

பின்வாசலா…முன்வாசலா…

யோசனை செய்து முடிவெடுக்கும் முன் “இங்கே என்ன செய்கிறாய்?” முன் வந்து நின்று அதட்டிக் கொண்டிருந்தான் ஹரிகரன்.

விளக்கு பூதமா இவன்?அதற்குள் எப்படி அருகே வந்தான்…விழித்தபடி நின்றிருக்க,”நீங்கள் வரும் வரை பேசிக் கொண்டிருந்தோம் அண்ணா” என்ற குரல் அருகிலிருந்து எழுந்தது.

யார் இது இவ்வளவு மரியாதையும்,பவ்யமும் காட்டுபவர்…அவள் ஆச்சரியமாக திரும்பிப் பார்க்க,பிரவீண் கை கட்டி வாய் பொத்தாத பள்ளிக்கூட மாணவனாய் நின்றிருந்தான்.ஹரிகரனின் பார்வை அவனை அலட்சியம் செய்து இவள் மீதே இருந்தது.

“ஈசன் எப்படி இருக்கிறான்?”

ஆஹா பிள்ளை மீது பாசம்தான், முகம் திருப்பிக் கொண்டாள்.”வீட்டை விட்டு வெளியேற்றும் போது இந்த அக்கறை இருந்திருக்க வேண்டும்” முணுமுணுத்தாள்.

“என்னது? நீ இப்போ எஸ்டேட்டில் இல்லையா?” பிரவீண் அலறலாய் கத்தி விட்டு,ஹரிகரனின் தீக்குச்சி பார்வையில்…”அண்ணா…அண்ணி…” என தந்தியடித்து வாய் மூடிக் கொண்டான்.இப்போது நிஜமாகவே அவன் வாய் மேல் கை.

“ஒரு நிமிடம் இங்கே வா ஜீவி” ஹரிகரன் எழுந்து நின்று அழைக்க,ஜீவிதா கண்டு கொள்ளாமல் திரும்பி நிற்க,பொத்திய கைக்கு மேலாக உருண்ட விழிகளுடன் இருவரையும் பார்த்திருந்தான் பிரவீண்.

ஹரிகரன் வலுக்கட்டாயமாக அவளை எழுப்பி ரெஸ்டாரன்டின் உள்ளிருந்த தங்கும் விடுதியின் தனி அறை ஒன்றுக்குள் அழைத்துப் போனான்.

“அதென்ன உனக்கு எங்கே போனாலும் கூஜா தூக்க ஆள்.எப்போதும் என்னை கண்காணிக்கிறாயா?” அறைக்குள் நுழைந்ததும் எகிறினாள்.

“ஆமாம்” நிதானமாக பதில் சொன்னவனை கோபமாக பார்த்தாள்.”எதற்காக இப்படி என் பின்னாலேயே அலைகிறாய்?”

ஒரு நிமிடம் அவளைப் பார்த்தபடி நின்றவன்,சட்டென அவளை இழுத்து இறுக்கி அணைத்தான்.

“நமக்காக…நம் குழந்தைக்காக…நம் வாழ்க்கைக்காக…நம் காதலுக்காக” ஒவ்வொரு வார்த்தையின் முடிவிலும் ஒரு முத்தமிட்டான்.உறைந்து நின்று விட்டாள் ஜீவிதா.




அவள் கண்ணோரம் துளிர்த்து விட்ட நீர்த்துளியை சுட்டு விரலால் துடைத்தான்,”கொஞ்ச நாட்கள் பொறு ஜீவி.எல்லாம் சரியாகி விடும்”

“காதலா…அந்த புனிதமான வார்த்தையை கூட சொல்லாதே” அவன் மார்பில் குத்தினாள்.

“நம் காதல் புனிதமானது ஜீவி.எத்தனை தடைகள் வந்தாலும் நம்மை சேர்த்து வைக்கும்”

“பெரிய காதல் மன்னனென்ற நினைப்பு உனக்கு” பொருமினாள்.

“இல்லை.உனக்கு மட்டுமானவன் என்ற நினைப்பு.நிதானமாக அமர்ந்து நம் காதலை யோசி.வா”மீண்டும் ரெஸ்டாரன்ட் வந்தவன்,பிரவீண் முன் அமர்ந்து அவன் முகத்திற்கு நேரே கை நீட்டினான்.

“இவன் சொல்வதை நம்பாதே.லூசு மாதிரி எதையாவது உளறுவான்”பிரவீண் வார்த்தைகளின்றி விழித்திருந்தான்.

ஜீவிதாவிற்கு மிக உடனே பிரவீண் சொன்ன அனைத்தையும் நம்ப வேண்டும் போல் தோன்றியது.”அவன் அப்பா,அம்மாவிற்கே பணம் கொடுத்து நம் கல்யாணத்தை நடத்தியவர்தானே நீங்கள்?” 

“ஆமாம்” ஹரிகரன் மறுக்கவில்லை.”எனக்காக வந்து நிற்க ஆட்கள் வேண்டுமில்லையா? புட்டு ஐஸ்க்ரீம் ஆர்டர் சொல்லவா? “கண் சிமிட்டினான்.

“ப்ராடு.ஐஸ்க்ரீமே சாப்பிட்டிராத மாதிரி அன்று எப்படி நடித்தாய்?”

“ம்…உன்னை இம்ப்ரஸ் பண்ண வேண்டுமே.ஆனால் அந்த வெரைட்டி ஐஸ்க்ரீம் அன்றுதான் புதிதாக சாப்பிட்டேன்.நீதான் அறிமுகம் செய்து வைத்தாய்.வெகு ருசி” நாக்கை சப்பு கொட்ட,ஜீவிதாவிற்கு டென்சன் ஏறியது.

டேபிளிலிருந்து தண்ணீரை அவன் மேல் விசிறியவள்”நீயே கொட்டிக்கோ.நான் போறேன்” வெளியேறினாள்

பெரிய இவன் மாதிரி பேசுகிறானே!இவன் முகமூடியை கிழிக்கனும் கறுவியபடி ஸ்வேதாவின் போனை தேடினாள்.வீடு முழுவதும் உருட்டி பார்த்து இறுதியில் அவளது அழுக்கு உடைகள் போட்டு வைக்கும் லாண்டரி் பேக்கினுள் கண்டுபிடித்தாள்.

இதற்குள் தெரியாமல் விழுந்ததா?அல்லது அக்காவே மறைத்து வைத்தாளா?இனம் புரியா ஏதோ படபடப்புடன் போனை சார்ஜில் போட்டு எடுத்து  லேப்டாப்போடு கனெக்ட் செய்து அதன் பாஸ்வேர்டை உடைத்து திறந்து பார்த்தாள்.

அவளது யூகம் சரியானது.ஸ்வேதாவின் போனில் அவளுடன் உற்சாகமாக பல போஸ்களில் இருந்தவன் ஹரிகரன் இல்லை.




What’s your Reaction?
+1
61
+1
44
+1
9
+1
3
+1
5
+1
1
+1
2
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
Bala
Bala
1 year ago

Hari brother?

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!