Serial Stories தேவ மல்லிகை பூவே

தேவ மல்லிகை பூவே-9

9

அந்த மிகப்பெரிய படுக்கை அறையில் நடு மையத்தில் நான்கு பேர் தாராளமாக படுத்து உருளும் அளவிற்கு பெரிய கட்டில் போடப்பட்டிருந்தது.கட்டிலில் பின்புறம் சுவரில் கட்டிலின் மரத்திலேயே சுவரில்வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

“கட்டிலைச் சுற்றி மலர்களை தொங்க விட வசதியாக சட்டங்கள் கட்ட வேண்டும் தானே?”

” வேண்டாம்.அதோ அந்த சாண்டிலியர் விளக்கின் மையத்திலிருந்து அருவி போல் மலர்களை தொங்க விட்டு கட்டிலின் விளிம்பை சுற்றி விரித்து பரப்பி விடலாம்.மெல்லிய மஸ்லின் துணியால் கட்டிலை மூடிவிட்டால் மிக அழகாக இருக்கும்” பாரிஜாதம் மலர் கூடைகளை கவனித்தபடி பேசினாள்.

“ஏதாவது ரூம் ஸ்பிரே வாங்கி அறை முழுவதும் தெளிக்கலாமா?”

” இத்தனை இயற்கை வாசனை இருக்கும் போது எதற்கு அந்த செயற்கை மணம்? நீங்கள் போய் கொஞ்சம் பன்னீர் ரோஜா மட்டும் வாங்கி வாருங்கள்”

” அது எதற்கு? நம்மிடம் இருக்கும் வாசமலர்கள் போதாதா?”




” பன்னீர் ரோஜாவும் ,மல்லிகையும் சேர்ந்தால் ஒருவகை வித்தியாசமான மணம் வரும்.அது மனதை மயக்கும்”இயல்பாக சொல்லிவிட்டு சிறு கூச்சத்துடன் நாக்கை கடித்துக் கொண்டாள்.

உதயனோ ஏதோ யோசனையில் ஆழ்ந்தான் “அட அப்படியா, பன்னீர் பூவும் மல்லிகையும் சேர்ந்தால் நல்ல வாசம் கிடைக்குமா?”

” கேள்வி கேட்டுக் கொண்டே இருக்காமல் சீக்கிரம் கிளம்புங்கள்”

உயரத்தில் ஏறி செய்ய வேண்டிய வேலைகளை அவளிடம் கேட்டு முதலில் செய்து முடித்த உதயன் “நீ தொடர்ந்து கொண்டிரு.பூ வாங்கி வருகிறேன்” வெளியேறினான் .ஏதோ ஒரு வகை கூச்சத்துடன் பாரிஜாதம் அவன் முகம் பார்த்து பேசுவதை தவிர்த்தபடியே இருப்பதை உணர்ந்தவன் அவள் சுதந்திரமாக வேலை பார்க்க இடம் கொடுத்துவிட்டு வெளியேறி விட்டான்.

சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்த உதயன் வியந்தான்.”அட கொஞ்ச நேரம் முன்பு நான் போனபோது இருந்த அறைதானா இது? ஏதோ பூந்தோட்டத்திற்குள் வந்தது போல் இருக்கிறதே” வியப்புடன் கேட்டபடி சுற்றிப் பார்த்தான்.

கட்டிலின் பின்புறம் பவளமல்லிகைகளில் இரண்டு காதல் பறவைகள் மூக்குரசி கொஞ்சிக் கொண்டிருந்தன.அவை அமர்ந்திருந்த கிளைகள் மரிக்கொழுந்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

காதலிப்பதை தவிர எங்களுக்கு வேறு வேலைகள் கிடையாது என சொல்வது போன்ற நிலையிலிருந்த அப்பறவைகளின்  பூ ஓவியம் முதல் இரவு அறைக்கு வெகு பொருத்தமாகி போனது.உதயன் கண்ணெடுக்காமல் அவற்றை பார்க்க,பாரிஜாதத்திற்குள் வீணையின் நாதமாய் கூச்ச அதிர்வுகள்.

” என்ன அது?” பன்னீர் பூக்களை கட்டிலில் தூவியபடி அவன் கையில் கொண்டு வந்திருந்த பார்சலை பார்த்து கேட்டாள்.

“சொல்கிறேன்.வேறு வேலை எதுவும் இருக்கிறதா?”

” இதோ மிஞ்சி இருக்கும் இந்த உதிரிப் பூக்களை கட்டிலில் இருந்து வாசல் வரை பாதையாக தூவ வேண்டும்”

“சரி வா” இருவருமாக மலர் பாதையை தயார் செய்தனர்.

“நீ கீழே இறங்கிப்போ பாரிஜாதம். ஐந்து நிமிடங்களில் வருகிறேன்” வெளியேறிய பாரிஜாதம் பாதி படிகளில் தனது ஹேண்ட் பேக் நினைவு வர மீண்டும் அறைக்குள் நுழைந்தாள்.அங்கே…அவள் முகம் கூசி சிவந்தது.

உதயன் தன் கையில் கொண்டு வந்திருந்த பார்சலை பிரித்து அதில் இருந்த படங்களை அறையினுள் ஆங்காங்கே சுவரில் மாட்டிக் கொண்டிருந்தான்.”சீ என்ன இதெல்லாம்?”

அவை அனைத்தும் ரதி மன்மதனின் விதம் விதமான காதல் தோற்ற படங்கள்.

“இதற்குத்தான் நான் உன்னை அப்போதே போக சொன்னேன்.சை என்று சொல்லும் அளவு இதில் அசிங்கம் ஒன்றும் இல்லை பாரு. இது இயற்கை நமக்கு கொடையாக கொடுத்த வாழ்க்கை பாடம்” அவள் முகம் பார்த்து நின்று உதயன் பேச,பாரிஜாதத்தால் தலை நிமிர முடியவில்லை.

“முடிந்தது வா போகலாம்”அவளுடைய பேக்கையும் சேர்த்து எடுத்துக்கொண்டு வெளியேறினான்.குங்கும குழம்பாய் முகம் மாறி கிடக்க அவனை பின் தொடர்ந்தாள் பாரிஜாதம்.

“புருஷன் பொண்டாட்டியா நீங்க? அவ்வளவு அழகாக அறையை மாற்றி இருக்கிறீர்களே?” மாடி ஏறி போய் பார்த்து வந்த மணமகளின் பாட்டி அதிசயித்தார்.

“அண்ணன் தங்கச்சின்னுல சொன்னாங்க?” மணமகளின் தாய் கேட்க,




“ஏய் அந்தப் பையன் வேறு.இது இந்த பொண்ணோட கணவன்தான் போல. இந்தாங்க பணத்தை எண்ணிக்கோங்க” மணமகளின் தந்தை அலங்காரத்திற்கான மிகுதிப் பணத்தை கொடுத்தார்.

“எல்லா பொறுப்பும் என் வீட்டம்மாவிடம் தான். அவர்களிடமே கொடுங்க” ஒதுங்கிக் கொண்டான் உதயன்.

அப்போதுதான் திருமணம் முடித்திருந்த பெண் வீட்டாரான அவர்களுக்கு இந்தப் பேச்சில் வெகு திருப்தி.”சரியா சொன்னீங்க தம்பி.இப்படி பொண்டாட்டிக்கு பணிஞ்சு போயிட்டா நம்ம குடும்பம் ஜே ஜே ன்னு உயரத்துக்கு போயிடும்”வெடிச்சிரிப்புடன் பணம் கொடுத்தார்.

“அதென்ன வீட்டம்மான்னு சொல்றீங்க?” வெளியே வந்ததும் பாரிஜாதம் மூக்கு விடைக்க நிற்க, சிவந்து முறுக்கி நின்ற அந்த மூக்கை ஆட்காட்டி விரல் நுனியால் லேசாக தொட்டான். “கோபமா?” மென்மையாக கேட்டான்.

முகத்தை பின்னே இழுத்துக் கொண்டாள் “கேட்டதற்கு பதில் சொல்லுங்கள்”

“நான் குடியிருக்கும் வீட்டோட அம்மா என்று சொன்னேன்.சரிதானே?” அப்பாவியாக கேட்டான்.

“பெரிய புத்திசாலி என்று நினைப்பு”முணுமுணுத்தாள்.

“புத்திசாலிதான்.ஆனால் சில நாட்களாக என்னை முட்டாளாக உணர்கிறேன் .ஏனோ தெரியவில்லை சமீப நாட்களாக ஏதோ ஒரு பித்து என் மூளையை சிந்திக்க விடாமல் தடுக்கிறது” உதயனின் கண்கள் தத்தி தத்தி  கண் புருவம் காது மூக்கு வாய் என அவள் முகத்தில் தத்தி தத்தி மலர் மேல் பட்டாம் பூச்சியாய் மாற்றி மாற்றி அமர்ந்தது.

பாரிஜாதம் மௌனமாகி விட, “என்ன விஷயமென்று விசாரிப்பாயென எதிர்பார்த்தேன்” என்றான்.

” அது எனக்கு தேவை இல்லாத விஷயம்” தோள்களை குலுக்கிக் கொண்டாள்.

“ஒன்று கவனித்தேன் பாரிஜாதம். உன் கோபத்தில் அந்த மூக்கிற்கு பெரும் பங்கு இருக்கிறது.நான் தான் முதல் என்று சிவந்து குத்துவது போல் முன்னால் நீட்டிக்கொண்டு வந்துவிடுகிறது” ரசனையான அவன் பார்வையில் இருந்து முகம் திருப்பிக் கொண்டாள்.

“கோவிலுக்கு போக வேண்டும்…சொன்னேனே”

“போகலாமே எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டேன் ” உதயனின் கார் கோவிலின் முன்நின்றிருந்தது.

” என்ன ஏற்பாடுகள்?” கேட்டபடி இறங்கியவளுக்கு பதில் சொல்லாமல் உள்ளே நுழைந்தான்.

” வாங்க வாங்க” என்ற பலமான வரவேற்பு.கோவில் அலுவலக அறை கணக்கரிலிருந்து அர்ச்சகர் வரை தேடி வந்து வரவேற்றனர்.

” இங்கே உனக்கு நிறைய பழக்கமா பாரிஜாதம்?” உதயன் கேட்க விழித்தாள். “மீனாட்சி அம்மனுக்கு கழுத்தில் போடும் மல்லிகைப் பூ மாலை தினமும் நான்தான் கட்டிக் கொடுப்பது.கோவில் அறங்காவலர் சார்பாக அது அம்மன் கழுத்தில் போடப்படும்”

“ஓ… அம்மனுக்கே பூஜைக்கு அலங்கார மாலை கொடுப்பவளாயிற்றே!அதனால் தான் இந்த மரியாதை போலும். உன்னோடு சேர்ந்து இப்போது எனக்கும்” உதயன் சொன்னபோது குருக்கள் ஒருவர் அவன் அருகில் வந்து பவ்யமாக பூஜை தட்டை வாங்கிக் கொண்டிருந்தார்.




What’s your Reaction?
+1
39
+1
25
+1
0
+1
1
+1
2
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!