Serial Stories யாரோடு யாரோ

யாரோடு யாரோ-5

(5)

      “கூகா, கூகா  எங்கோ மயிலின் அகவல்.

         “குகா, குகா– சத்யா குரலெடுத்துக் கூவினாள்.

மருதமலை அடிவாரம் என்பதால் அடிக்கடி இந்தப் பகுதிகளில் மயிலின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். விடுமுறை தினங்களில் சத்யா அவர்களுக்கு தானியங்கள் போடுவாள். எனவே அவள் வீட்டு மொட்டை மாடியில் மயில்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.




ஆனால் இன்று லேசாக மழைத் தூரம் இருந்ததால் மயில்களைக் காணவில்லை. மொட்டை மாடியிலிருந்து பார்க்கும்போது மரங்கள் அடர்ந்த சோலைகள் ரம்யமாக இருந்தது. லேசான மழைத் தூறல் அதை இன்னும் அதிகமாக்கியது.

ஏற்கனவே மருதமலை அடிவாரம் ஃபிரிஜ்ஜில் வைத்த மாதிரி ஜில் என்று இருக்கும். இன்று மழை மூட்டத்தில் இன்னும் ஜில் என்று இருந்தது. குளிரியது. சத்யா கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு எம்பி மயில் தெரிகிறதா என்று பார்த்தாள்.

அதே நேரம் ஒரு மயில் பறந்து வந்து மாடி கைப்பிடி மீது அமர்ந்து, பின் தரையில் அமர்ந்தது.

“வாங்க, வாங்க– சத்யா உற்சாகமாக வரவேற்றாள்.

“என்ன இன்னைக்கு லேட்?

மயில் அவளை ஒய்யாரமாகத் திரும்பிப் பார்த்தது.

“இருங்க. உங்களுக்கு காலை உணவு கொண்டு வரேன்– சத்யா வேகமாக கீழே இரங்கி வந்தாள். மைதிலி மதிய சமியளுக்கு பட்டாணி உரித்துக் கொண்டிருந்தாள்.




“என்ன இவ்வளவு அவசரமா?

“மயில் வந்திருக்கு அண்ணி. அதுக்கு டிபன் தரணுமே.

“ரொம்ப முக்கியம். இடியாப்பம், இட்லி, பொங்கல், வடை செஞ்சிருக்கேன். சட்னி, சாம்பார் வச்சு எடுத்துட்டு போ.– விஜய்.

“மயில் எங்க போகுது?– விஜய்.

மயில், மயிலுக்கு டிபன் எடுத்துட்டு வரப் போகுது.– மைதிலி.

சத்யா தானியங்களை எடுத்துக் கொண்டு மேலே வரும்போது, மயில் தோகை விரித்திருந்தது. அழகான வண்ணங்கள் விரிய, மழைச் சாரலில் மகிழ்ந்து தோகை விரித்து ஆடிய அதன் அழகைக் கண்டு மயங்கி நின்றாள் சத்யா.

கண்கள் மலர, அழகை விட்டு விடாமல் ரசித்தாள் சத்யா.

“ஆஹா, ஆஹா அற்புதம். மயிலே, மயிலை ரசிக்கிறது?




பின் பக்கம் குரல் கேட்டுத் திரும்பினாள் சத்யா. கௌதம்.

“என்ன ஒரு அழகு?– அவன் யாரைச் சொல்கிறான் என்று தெரியவில்லை. ஆனாலும் அங்கு அவன் வந்து நின்றதை ரசிக்கவில்லை சத்யா. அவளின் உள்ளுணர்வா? இல்லை உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் சத்யா தனியாக இருக்கும் நேரங்களில் கௌதம் அங்கு வந்து விடுகிறான்.

வாசுதேவன், தன் தங்கையின் அழுகை, நிலை குறித்து மனம் கலங்கி விட்டார். சரி, போனதெல்லாம் போகட்டும். எல்லாத்தையும் மறந்துட்டு இங்க இரு என்று வீட்டு மாடியை அவளுக்குக் குடி விட்டிருந்தார். கௌதம் துபாய் போகும் முயற்சியில் இருந்தான் என்று கேள்விப் பட்டார்.

“அதுக்குச் சில கோர்ஸ் படிக்கணும் மாமா.– என்றான்.

சரி நீ படி மாப்ளே.– வாசுதேவன்.

“இல்லை மாமா. அதுக்கு பணம் கட்டனும். அதனால நான் நம்ம கடைக்கு வேலைக்கே வரேன்– என்றான்.

வாசுதேவன் அவன் கடையில் வேலை பார்ப்பதற்கு சம்பளம் தந்தார்.

“இதுல நீ படிக்கறதுக்கு செலவு பண்ணிக்கோ.என்றார்.

தங்கம் சமைப்பதில் சிவகாமிக்குக் கொடுத்து அனுப்பி விடுவார்.

“நான்தான் சமைக்கறேன்ல. நீ எதுக்கு?– என்று சொல்லி விடுவார். சிவகாமி மேல் எல்லோருக்கும் நிறையப் பாசமும், சிறிது அனுதாபமும் இருந்தது. காதல் என்று யாரையோ நம்பிப் போய், எல்லாச்  சொத்தையும்  இழந்து விட்டு, புருஷனையும் இழந்து, நிராதரவாக வந்து நிற்கிறாள் என்று பரிதாபம் இருந்தது.




சிவகாமியும், வீட்டில் கை வேலைகளைப் பிடிங்கி உதவி செய்வாள். வேண்டாம் என்றாலும் கேட்க மாட்டாள்.

“நான் செஞ்ச காரியத்துக்கு மன்னிப்பே கிடையாது. ஆனா நீங்க என் பழைய வாழ்க்கைக்கே இழுத்துட்டுப் போய், அதே பிரியமும், அன்புமா பாத்துக்கறீங்க. அதுக்கு என்னால் முடிந்த கைம்மாறு.– என்பாள்.

கௌதமும் உண்மையாக உழைத்தான். கடையில் நல்ல லாபம் காட்டினான். ஆட்களை நம்பாமல், தானே போய் சரக்குகளை எடுத்து வந்து விடுவான். கணக்குகள் சரியாக, துல்லியமாக இருந்தது. அப்பாவின் முழு நம்பிக்கையையும் பெற்று விட்டான்.

ஆனால் மைதிலி, சத்யாவுக்கு மட்டும் எதோ ஒரு உறுத்தல் என்றாலும் கௌதமிடம் இயல்பாக இருந்தார்கள். எதோ ஒரு காரணம் வைத்து, அவன் சத்யாவிடம் பேசுவதும், அவ்வப்போது உனக்குப் பிடிக்கும் என்று ஏதானும் வாங்கி வருவதும் சிறிது வித்தியாசமாக இருந்தது.

ஆனால் அவனின் பேச்சு, நடத்தையில் ஒரு கண்ணியம் தெரிந்தது. அனாவசிய வழிசல் இல்லாமல், நேரடியாகக் கண்ணைப் பார்த்துப் பேசினான். அப்பாவுக்குமே அவனை ரொம்பப் பிடித்தது.

இப்போதுமே அவளின் பார்வை முறைப்பைக் கண்டு கௌதம் பின் வாங்கினான்.

“சாரி, சத்யா. விஜய் உன்னை மயில்னு சொன்னதால நானும் சொன்னேன்.

“அவன் என் அண்ணா.

“உண்மைதான். அவன் உரிமையுள்ளவன். எப்படி வேணாலும் கூப்பிடலாம். அதே உரிமையை நானும் எடுத்துக்கக் கூடாது.

அவனுக்குப் பதில் சொல்லவில்லை சத்யா. மௌனமாக மயிலை ரசிக்கத் தொடங்கினாள். ஆனால் ஆள் நடமாட்டம் கண்டு மயில் பறந்து விட்டது.

“அடடா, மயில் பறந்து போச்சே.




“நம்ம குரல் கேட்டதால

“எங்க போயிருக்கும்?– சத்யா மெதுவாக நகர்ந்து கைப்பிடியின் ஓரம் வந்தாள். அங்கு வழுக்கலாக இருந்தது. தோட்டத்து மரத்தின் கிளைகள் அடர்த்தியாக அங்கு கிளை பரப்பியிருந்தது. அதன் ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு எட்டிப் பார்த்தாள்.

மயில் தோட்டத்திற்குள் நடை பயின்றதைப் பார்த்து சத்யா உற்சாகத்துடன் கூவினாள்.

“கௌதம் இங்க பாருங்க. மயில் இங்க இருக்கு.

கௌதம் அருகில் வந்து எட்டிப் பார்த்தான். திரும்பியவன் முகம் பீதியில் அதிர்ந்தது. சத்யா என்றபடி சட்டென்று அவளை இழுத்தான். வழுக்கலில் கால் நழுவி கீழே விழுந்தாள் சத்யா.

“எ…எ…என்னது?– சத்யா தடுமாறி எழுவதற்குள் ஒரு சின்ன கருநாகக் குட்டி, நெளிந்து ஓடியது.

“முருகா– கத்தினாள் சத்யா.

“நத்திங், நத்திங்.– கௌதம். “ரிலாக்ஸ்.

ஆனாலும் சத்யாவின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. அந்த பீதி அடங்காமல் உடல் நடுங்க ஆரம்பித்தது. அதற்குள் குட்டி, டிரெயினேஜ் குழாய் வழியே கீழே இறங்கி விட்டது. சத்யா பீத்யில் வார்த்தைகள் வராமல் உடல் நடுங்க எழுந்து நிற்க முயன்றாள். ஆனால் முடியவில்லை. அதற்குள் கௌதம் கீழே ஓடிப்போய் மைதிலி, விஜயை கூட்டி வந்தான்.

மைதிலி அருகில் வந்து, சத்யாவை தாங்கிப் பிடித்துக் கீழே இறக்கி கூட்டிப் போனாள். அதற்குள் வீட்டில் விஷயம் தெரிந்து கூடி விட்டது.

சத்யா பயத்தில் உடல் நடுங்க, உடல் கொதிக்கத் தொடங்கியது.




What’s your Reaction?
+1
14
+1
10
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!