Entertainment Serial Stories யாரோடு யாரோ

யாரோடு யாரோ-11

(11)

“உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா?

சிவசு நேரடியாகக் கேட்டான். சத்யா பதில் சொல்லவில்லை

என்ன பதில் சொல்வது என்றுதான் தெரியவில்லை.

சிவசுவை மிகவும் பிடிக்கும். அவனின் பேச்சு, செயல் எல்லாமே மிகக் கண்ணியமாகவும், மரியாதையாகவும் இருக்கும். இரண்டு வருஷம் அவன் கம்பெனியில் பணியாற்றி இருக்கிறாள்.

நேர்மை, உண்மை, சுத்தமான பழக்கம், மனித நேயம் என்று பல விஷயங்களிலும் அவளைக் கவர்ந்தவன் சிவசு. ஆனால் அது திருமணம் செய்வதற்கான விருப்பமா என்று தெரியவில்லை.

பதில் சொல்லாமல் விழித்தாள் சத்யா.

முதலில் விஜய் அலுவலகத்தில் சிவசு இருப்பான் என்று நினைக்கவில்லை அவள். மைதிலியுடன் கிளம்பி வந்தபோது விஜய் உள்ளே ரூமில் இரு. இதோ வரேன் என்றான். சாப்பாட்டுக் கேரியரை டேபிளில் வைத்து விட்டுத் திரும்பிய போது ஜன்னல் அருகில் சேரில் இவளைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் சிவசு.

இவளைப் பார்த்ததும் மெல்லியதாகப் புன்னகைத்தான்.

“நலமா?

பதில் சொல்லாமல் சங்கடத்துடன் வெளியில் போக எத்தனித்தாள்.

“இரு, இரு.– மைதிலி அவசரமாக உள்ளே வந்தாள்.

‘சத்யா, முதலில் நீ இவர் கூட மனசு விட்டுப் பேசணும். உன் மனசு எப்படின்னு தெரியாம நாங்க எந்த முயற்சியும் செய்ய முடியாது.

“அண்ணி, அப்பா சந்தேகப்படற மாதிரி இப்போ இவரை சந்திக்கறது தப்பு இல்லையா?

“அப்போ கௌதமை கல்யாணம் பண்ணிக்க.

“அதுதான் என் விதின்னா, அப்படியே நடக்கட்டும்.




“படிச்சவதானே நீ?– விஜய் சீறினான்.

“உனக்குன்னு ஒரு சுய புத்தி இல்லையா? அப்பா சொன்னதுக்கெல்லாம் மண்டையை, மண்டையை ஆட்டிட்டு நாளைக்கு கண்ணீர் விட்டுண்டு உட்காரப் போறியா?

“எனக்கு மனசு பூரா விரக்திதான் இருக்கு.– சத்யா.

“அப்போ, உன் அடி மனசுல இருக்கிற எதோ ஒரு ஆசை நிறைவேறலைன்னு அர்த்தம். மைதிலி.

“எனக்கு எதைப் பார்த்தாலும் வெறுப்பா இருக்கு. யாரைப் பார்த்தாலும் எரிச்சலாக இருக்கு. நான் அப்பாகிட்ட தோற்றுப் போயிட்டே,ன். சத்யாவின் குரல் கலங்கியது.

“இதற்கு உன் மனச் சோர்வுதான் காரணம்.-சிவசு மெதுவாகக், கனிவுடன் பேசினான்.

“நீ விரும்பினபடி எதுவும் நடக்கலை. உனக்குக் கிடைத்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதை நீ மனசளவில் எதிர்க்கிறே. அதான் காரணம்.

“என்னால எதுவும் மாற்ற முடியவில்லை.

“அப்போ அதை ஏத்துக்கோ– விஜய்.

“என்ன அண்ணா நீயுமா?– சத்யா சினுங்கினாள்.

“ஆமாம், உன்கூட நாங்களும் உட்கார்ந்து அழனுமா? மற்றவர்கள் இரக்கத்தைச் சம்பாதித்து என்ன செய்யப் போறே? இதனால எதையானும் மாத்த முடியுமா?

“கொஞ்சம் அமைதியா இருங்க– மைதிலி அவர்களை அடக்கினாள். “ “சத்யா முதலில் நீ ஒன்றைப் புரிஞ்சுக்கணும். நாம விரும்பற படியெல்லாம் மத்தவங்க மாற மாட்டாங்க. ஒரு அநியாயம் நடக்கக் கூடாதுன்னா, சில முடிவுகளை துணிச்சலா எடுக்கணும். முதலில் இந்த மனச் சோர்வை விடு. இது உள்ளுக்குள் இருந்து அப்படியே புழுவா அரிக்கும். உன்னை நீயே அழிச்சிக்கறே. சும்மா வருத்தபட்டு உக்காந்துண்டு இருக்கறதால எந்தப் பிரயோஜனமும் இல்லை.– மைதிலி சிறிது கடுமையுடன் பேசினாள்.

“உன்னையே நீ அழிச்சிக்கறதுக்குப் பதிலா கிடைச்சதை ஏத்துக்கோ

“அப்படின்னா கௌதமைக் கல்யாணம் செஞ்சுக்கனுமா?

“அதுதான் வழி

“எனக்கு அவனைப் பிடிக்கலை.

“அப்போ எதிர்த்து நில்லு.




“அப்பாவை எதிர்த்து நான் எதுவும் செய்ய மாட்டேன்.

“அம்மா தாயே! உங்க அப்பாவை நீ எதிர்க்க வேண்டாம். அப்படியே அவரைச் சுத்தி வந்து நமஸ்காரம் செஞ்சுட்டு, கௌதமைக் கல்யாணம் பண்ணிக்கோ– விஜய் மீண்டும் கோபப் பட்டான்.

“ இருங்க விஜய். நான் பேசறேன். சத்யா, இங்க பாரு, நீ மகிழ்ச்சியா இருக்கறதும், மனச்சோர்வுடன் அழிஞ்சு போறதும் உன் இஷ்டம். ஆனா நீ மகிழ்ச்சியா, உற்சாகமா வாழணும்னு நாங்க நினைக்கிறோம். ஒவ்வொரு  அடியையும் நீ துணிச்சலா வைக்கணும். இந்தக் கல்யாணத்தை நிறுத்த நாங்க ரெடியா இருக்கோம். ஆனா நீ எங்களுக்கு ஆதரவா இருக்கணும்.

சிவசு மென்மையாகப் பேசினான்.

“நீ என்னைக் கல்யாணம் செஞ்சுக்கணும்னு சொல்லலை. ஆனா தைரியமா நில்லு. உன்னுடைய குறை, துணிஞ்சு பேசாம இருக்கறது. அப்பா பேச்சைக் கேட்க வேண்டியதுதான். அதற்காக, ஒரு அநியாயத்திற்கு உன் வாழ்க்கையைப் பலி கொடுக்கப் போறியா?

சத்யா பேசவில்லை. கலங்கிய கண்களோடு அவனை ஏறிட்டாள். அவளின் கலங்கிய விழிகள் சிவசுவை உருக வைத்தது.

“வேண்டாம் சத்யா. நீ கண்ணீர் விடப் பிறந்தவ இல்லை. மகிழ்ச்சியும், மன நிறைவுமா வாழனும். அதுதான் என் ஆசை. நாங்க எல்லோரும் அதுக்குத்தான் ஆசைப்படறோம். ஆனா உன் வாழ்க்கையை டிசைட் பண்ற உருமை உனக்குத்தான் உண்டு.

“புரியுது சிவசு. ஆனா என்னால் அப்பாவை எதிர்த்துச் செயல்பட முடியாது. அவர் என்னைப் பலமுறை திட்டியிருக்கிறார். கோபப் பட்டிருக்கிறார். ஆனால் அது எல்லாம் என் நன்மைக்கு. அவரின் இடத்தை யாரும் நிரப்ப முடியாது. அவர் எங்களுக்காகவே வாழ்ந்தவர். என்னைப் பொறுத்தவரை அவர் கடவுளை விட மேலானவர்.

இன்னைக்கு என் இந்த நிலைக்கு அவரே காரணம். பெத்து, அறிவு கொடுத்து, படிப்பு தந்து, சமூகத்தில் உயர்த்தி வச்சது அவர். அவரை எதிர்த்து என்னால் எதுவும் செய்ய முடியாது.

“அப்போ சரி. நீ கௌதமைக் கல்யாணம் செஞ்சுக்க.– மைதிலியே பொறுமை இழந்தாள்.

“சரி. மனம் திறந்து உண்மையைச் சொல். உனக்கு கௌதமைப் பிடிச்சிருக்கா?– சிவசு.

“இல்லை.

“அவனைக் கல்யாணம் செஞ்சுண்டா நீ நிம்மதியா இருப்பியா?

“இல்லை.

“சரி இந்தக் கல்யாணம் நின்னா உனக்கு மகிழ்ச்சியா?

“கொண்டாட்டம்.

“அப்புறம் யாரைக் கல்யாணம் செஞ்சுப்பே?

“அப்பா சொல்றவரை.

“என்னை உனக்குப் பிடிச்சிருக்கா?

ஒரு நிமிஷம் அவள் கண்கள் பளிச்சிட்டதை சிவசு கவனித்தான். மனம் துள்ளியது. சத்யா தலையைக் குனிந்து கொண்டாள்.

“உங்கப்பா, சிவசுவைக் கல்யாணம் செஞ்சுக்கன்னு சொன்னா செஞ்சுப்பியா?

“கண்டிப்பா

“இது போதும்.

சிவசு உற்சாகமாகக் கூறினான். விஜய் அவனை குழப்பத்துடன் பார்த்தான்.

“சத்யா மறுக்கலை. சம்மதிச்சிருக்கா. இதுவே எனக்கு உற்சாகமா இருக்கு. நான் கொஞ்சம் சத்யா கூடத் தனியாப் பேசணும்.

அதற்குச் சம்மதித்து இருவரும், எழுந்து வெளியில் போனார்கள்.

சிவசு அவள் அருகில் சேரை நகர்த்திப் போட்டான். அவளின் கண்களை உற்றுப் பார்த்தான். அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்தாள் சத்யா.

“வேஷம் வேண்டாம் சத்யா. கண்கள் சொல்லும் செய்திகளை மறைக்க முடியாது. உன் மனசுல நான் இருக்கேன்னு தெரியுது.

“எப்படி?– சத்யா புன்னகைத்தாள்.

“என்னைப் பார்க்கும்போது உன் கண்களும், முகமும் குழையுது.

“காதல்ல ரொம்ப எக்ஸ்பீரியன்ஸ் போல.

“இல்லை உன் முகத்தின் ஒவ்வொரு உணர்வுகளையும் படித்தவன்.

“நோ யூஸ்




“நோ சொல்லாதே. என் மனசை நான் எப்பவும் பாசிடிவா வச்சிருக்கேன். உன்னை நான் நேசிக்கிறது சத்தியம்னா, உன் மனசுலேயும் அந்த எண்ணம் இருக்கறது சத்தியம்னா, காலமும் அதற்கான சூழலை உருவாக்கும். நிச்சயம் நடக்கும்

“நடக்குமா?– தன்னை மறந்து கேட்டாள் சத்யா.

“ஒ! மனசை ஏன் மூடி மறைக்கற சத்யா?

“உதடு துடிக்க தலையைக் குனிந்து கொண்ட அவளின் கை விரல்களை எடுத்து தன் கைகளுக்குள் பொத்திக் கொண்டான் சிவசு.

“சத்யா எனக்குக் கனவுகள் அதிகம். பிறந்த இந்த வாழ்வுக்கு அர்த்தம் தர மாதிரி வாழனும். எனக்கு கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஒரு அமைப்பு உருவாக்கணும்னு விரும்பறேன். காதலன் ஒருவனைக் கை பிடித்தே, அவன் காரியம் யாவினும் கை கொடுத்தேன்னு எனக்குத் துணையா, நீ நிக்கணும். உன் கனிவான பார்வையில், சொற்களில் நான் உயிர் வாழனும்.

நீ இங்கு வேலைக்கு வந்த நாளிலிருந்து உன்னைக் கவனிக்கிறேன். நீ சராசரியா புடவை, நகைன்னு விரும்பற பொண்ணு இல்லை. எல்லோர்கிட்டயும், நீ கனிவா அன்பா இருக்கே. என்கூட சேர்ந்து நீ நிறைய அநாதை இல்லங்களுக்கு உதவி இருக்கே. நீ என் துணையா வந்தா, நம் வாழ்வுக்கு ஒரு அர்த்தம் கிடைக்கும்.

சிவசுவின் குரல் குழைந்தது.

அவனை வியப்புடன் பார்த்தாள் சத்யா. காதல் ஒரு ஆடவனை மென்மையாக்கி விடுமா? கம்பெனியின் முதலாளி என்ற கம்பீரத்துடன் இருக்கும் சிவசுவா இவ்வளவு குழைந்து உருகுவது?

தன் மனமும் கரைவதை உணர்ந்தாள் சத்யா. அவளுக்குள் ஒளிந்திருந்த அவன் மீதான காதல் வெளிப்பட, மெல்ல அவன் கை விரல்களை இறுக்கிக் கொண்டாள்.




 

What’s your Reaction?
+1
16
+1
15
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!