Entertainment Serial Stories யாரோடு யாரோ

யாரோடு யாரோ-16

(16)

அப்பா அந்த லேபின் உள்ளே நுழைந்தார்.

மிகப் பெரிய லேப். சகல நவீன வசதிகளுடன் இருந்தது.

“இப்படி உட்காருங்க மாமா– என்று சொல்லி விட்டுக் கௌதம் ரிசப்ஷனுக்குச் சென்றான். ஏற்கனவே பழகிய இடம் போல. அந்த ரிசப்ஷன் பெண் வாங்க என்று புன்னகைத்தாள்.

“அவர் எங்க மாமா. ஒரு மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்யணும்.

“செஞ்சுடலாம் அவள் குறித்துக் கொண்டாள்.

ஒரு பேப்பரை எடுத்து நீட்டினாள். “இதில் எது வேணுமோ, டிக் செஞ்சுக் கொடுங்க.

“அவருக்கு அறுபத்தி அஞ்சு வயசு. பிபி இருக்கு. சுகர் இருக்கு. எதெல்லாம் செய்யலாம்?

அவள் யோசித்தாள். பின் “உள்ளே சார் இருப்பார். கேளுங்களேன்

அவன் உள்ளே சென்று சிறிது நேரத்தில் திரும்பி வந்தான்.

“மாமா எல்லா டெஸ்டும் செஞ்சிடலாம். நல்லது. முதல்ல ஈசிஜி எடுத்துடலாம்.

அப்பா எழுந்தார். தலை சுற்றியது. இரண்டு நாளாக ஒரு தலை சுற்றல். படபடப்பு. டாக்டர் எதுவும் இல்லை என்றாலும், ஒரு ஹெல்த் செக்கப், ஈசிஜி எடுத்துடுங்க என்றார். வீடு பயந்து விட்டது.

“ஒண்ணும் இல்லை. அலைச்சல், டென்ஷன், அவ்வளவுதான். ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும் என்று அப்பா சொல்லியும் கேட்கவில்லை. வற்புறுத்தி லேபுக்கு அழைத்து வந்து விட்டார்கள். விஜய் காரை பார்க் செய்யப் போயிருந்தான். சத்யா தண்ணீர் பாட்டிலுடன் அப்பா அருகில் அமர்ந்தாள்.

கௌதம் அவளை உட்காரச் சொல்லி விட்டு அப்பாவை உள்ளே அழைத்துச் சென்றான்.

“அப்பா எங்கே?– விஜய் வந்து விட்டான்.

“ஈசிஜி எடுக்கக் கூட்டிட்டுப் போயிருக்கார்.

“ரெஸ்ட் எடுங்கன்னா கேக்கறதே இல்லை. இப்ப எதுக்கு இந்த ஏஜென்சி எல்லாம்? அத்தையோட டார்சரே பாதி.

சத்யா எதுவும் பேசவில்லை. வீடு மீண்டும் கௌதம் கைக்குப் போய் விட்டதோ என்றுதான் இருக்கிறது. கௌதம் தன் கையைப் பொசுக்கிக் கொண்ட பிறகு அப்பா முழுவதும் மாறி விட்டார் என்றுதான் தோன்றுகிறது. எப்போதும் அவனைக் கூடவே வைத்திருக்கிறார். எதற்கெடுத்தாலும் கௌதம் என்ன சொல்றே? என்று அவனைத்தான் கேட்கிறார்.





“வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிடுச்சா?– விஜய்.

“அது எங்கே கீழே இரங்கிச்சு?

“அப்போ கௌதம்தான் என் கணவனா?– சத்யா.

“மணாளனே மங்கையின் பாக்கியம்– விஜய்.

“அண்ணா– சத்யா கலங்கினாள்.

“கவலைப் படாதே. அவன்தான்னு முடிவு ஆச்சுன்னா, மவனே செத்தான். நானே கொன்னுடுவேன்– விஜய் பல்லைக் கடித்தான்.

அப்பா இது எதைப் பற்றியும் கவலைப் படவில்லை. தன்னிடம் இருந்த பத்திரங்கள், நில கிரயம், சிவகாமி எழுதிக் கொடுத்த பத்திரம் எல்லாவற்றையும் வக்கீலிடம் ஒப்படைத்தார். இன்னும் விலை படியவில்லை. அப்பா ஒரு கோடிக்கு நிற்கிறார். எண்பத்து அஞ்சுக்கு நிற்கிறார்கள்.

“வச்சு எதுக்குப்பா அழகு பாக்கணும்? எண்பத்து அஞ்சு நல்ல அமௌண்ட் தானே?– விஜய் கூடக் கேட்டான்.

“தரகர் கமிஷன் இருக்கு. ஏஜென்சிக்கு இருபது லட்சம் ஆகும். சத்யா கல்யாணம் இருக்கு.

“சிம்பிளா செய்யலாம் மாமா.– கௌதம். நான் எந்த டிமாண்டும் செய்யலையே. கோவில்ல வச்சு கல்யாணம் செஞ்சு தந்தா கூடப் போதும்.

“நீதான் மாப்பிள்ளைன்னு இன்னும் முடிவாகலை கௌதம்– விஜய் அவனை அதட்டினான்.

“இப்போ எதுக்கு இந்தச் சண்டை?- அப்பா குறுக்கிட்டார். “கௌதமோ, வேற யாரோ? ஆனா என் பொண்ணு கல்யாணம் சிறப்பா நடக்கணும். அவ்வளவுதான்.

அதற்கு மேல் அப்பா பேசவில்லை. நேற்று ஒரு இடம் வந்து தொண்ணூற்றி இரண்டுக்கு முடிவானது. தொழிற்சாலை ஒன்று கட்ட அந்த இடம் அவர்களுக்குத் தோதாக இருந்தது. விலை படிந்து நாளை கிரயம் என்பதற்குள் அப்பாவுக்கு லேசான மயக்கம், தலை சுற்றல். படபடப்பு.

“ஒண்ணும் சீரியஸ் இருக்காதே அண்ணா?

“அதெல்லாம் எதுவும் இல்லை. அவர் மனசுக்குள் எதுவோ இருக்கு. வெளில சொன்னாத் தேவலாம்.

சத்யா கவலையோடு அமர்ந்திருந்தாள்.

“ஹலோ சத்யா, இங்க என்ன விஷயம்?

அருகில் வந்த பெண்ணைப் பார்த்ததும் சத்யா முகம் மலர்ந்தாள். அவளுக்கு வாந்தி, மயக்கம் வந்த போது இந்தப் பெண் வேலை பார்த்த லேபுக்குத்தான் கௌதம் கூட்டிப் போனான்.

“அண்ணா இவங்க பெயர் ரத்னா. இவங்க வேலை பார்த்த லேபுக்குத்தான் என்னை கௌதம் அன்னைக்கு கூட்டிட்டுப் போனார்.

“ஒ! அப்படியா? இங்க என்ன செய்யறீங்க?– விஜய்

“அங்க கொஞ்சம் இல்லீகல் விஷயங்கள் எல்லாம் நடக்குது சார். அதனால அங்க பிடிக்காம இங்க வந்துட்டேன். உங்களுக்கு என்ன சத்யா?

“எனக்கு எதுவும் இல்லை. அப்பாவுக்கு டெஸ்ட் செய்ய வந்தோம்.

“அதானே பார்த்தேன். அன்னைக்கு கௌதம் அத்தனை டெஸ்ட் எடுத்தாரே?

“பிளட் டெஸ்டுதானே?””– விஜய்

“உங்களுக்குச் சொல்லலையா? அவர் எல்லா டெஸ்டும் எடுத்தார். அவர்தான் இவங்களைக் கல்யாணம் செஞ்சுக்கப் போறார்னு சொன்னாங்க. திருமணம் முடிஞ்சுதா சத்யா?

“இன்னும் இல்லை. எல்லா டெஸ்டும் எடுத்தார்னா? என்னென்ன?

“உங்களுக்குத் தெரியாதா?





“சொன்னார். நான்தான் ரிசல்ட் வரட்டும் பாக்கலாம்னு இருந்தேன்.– சத்யா சமாளித்தாள்.

“உங்க மேல ரொம்ப அக்கறை. இவ்வளவு பிரியமான மனுஷர் கிடைக்கறது உங்க புண்ணியம்.– ரத்னா

அதற்குள் யாரோ ரத்னா என்று அழைக்க அவள் உள்ளே போனாள்.

“எல்லா டெஸ்டும்னா என்னென்ன?– விஜய்.

“பிளட், யூரின். யூட்ரஸ்ல ஏதானும் இன்பெக்க்ஷன் இருக்கான்னு டெஸ்ட் செஞ்சாங்க.

விஜய் பேசவில்லை. “அந்த ரிபோர்ட் எங்கே? 

“அப்படியே வாங்கி டாக்டர்கிட்ட கொடுத்துட்டேன்னு சொன்னார்.

“கிறுக்கி, மடச்சி. அறிவு இல்லை உனக்கு

“நான் என்ன அண்ணா செஞ்சேன்?

“ஒருத்தன் கூட்டிண்டு போய் நிறைய டெஸ்ட் எடுக்கறான்னா என்ன எதுன்னு கேட்க மாட்டியா?

“பிளட், யூரின் மட்டும்தானே கொடுத்தேன். அந்த டெஸ்ட் தான் டாக்டரும் எடுக்கச் சொன்னார். அப்போ எல்லாம் கௌதம் மேல இவ்வளவு சந்தேகம் இல்லையே? நேரிடையாத்தான் லேபுல எல்லாம் நடந்தது.

விஜய் பேசவில்லை. அவனுக்குள் எதோ ஒரு சந்தேகம் எழுந்தது. எல்லா டெஸ்டும் என்கிறாள். அது என்னென்ன? கௌதமுக்குத் தெரிந்த லேப் என்பதால், சத்யாவுக்குத் தெரியாமல் அவன் வேறு ஏதானும் எடுத்திருப்பானோ?

எதற்கு எடுத்தான். என்னென்ன?

விஜய் யோசனையுடன் இருந்தான்.

அப்பா எல்லா சோதனைகளையும் முடித்து விட்டு வந்தார்.

“ரிசல்ட் எப்போ கிடைக்கும்?-விஜய்.

“ரெண்டு மணிக்கு வரச் சொன்னாங்க.

“சரி. நீ இவங்களை கூட்டிட்டு வீட்டுக்குப் போ. நான் ஆபீஸ் போய்ட்டு, ரெண்டு மணிக்குச் சாப்பிட வரும்போது வாங்கிண்டு வரேன்.

“உனக்கெதுக்கு சிரமம் விஜய்? நானே வந்து வாங்கிண்டு வரேன்.– கௌதம்.

“இதிலென்ன சிரமம்? சத்யா நீ என் கூட வரியா? மொபைல்ல எதோ மாத்தணும்னு சொன்னியே

“நானே கூட்டிண்டு போறேன் விஜய்.

“என் தங்கையை எங்க கூட்டிண்டு போறது, என்னன்னு எனக்குத் தெரியும் கௌதம். நீ உன் வேலையைப் பாரு. விஜய் சீற்றத்துடன் பேசினான்.

அவனுடன் மேற்கொண்டு பேசாமல் “வா சத்யா– என்று நடக்க, சத்யா தொடர்ந்தாள்.

        “கௌதம் நீ கடைக்குப் போ. நான் நாளைய கிரயம் விஷயமா வக்கீலைப் பார்த்துட்டு வரேன். அப்பாவும் கிளம்பினார்.

“கார் இல்லையே மாமா?

“ஆட்டோல போய்க்கறேன்.– அவன் பதிலுக்குக் காத்திராமல் அப்பா நடந்தார். எதிரில் வந்த ஒரு ஆட்டோவில் ஏறிக் கிளம்ப, கௌதம் முகம் கோபத்தில் சிவந்தது.




What’s your Reaction?
+1
9
+1
19
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!