Entertainment Serial Stories மனதில் உந்தன் ஆதிக்கம்

மனதில் உந்தன் ஆதிக்கம் -3

3

மாலை ஆறு மணிக்கு மேல் வருவானென அவள் எதிர்பார்த்திருக்க,நடராஜ் பதினோரு மணிக்கே கையில் பழத்தட்டுடன்,அம்மா அப்பாவை அழைத்துக் கொண்டு வந்துவிட்டான்.சிறிய தாமதமும் ஜீவிதாவின் மனதை மாற்றி விட்டால்…எனும் கவலை அவனுக்கு.

“நீங்கள் முன்பே எந்த தகவலும் கொடுக்கவில்லையே” சகாதேவன் யோசனையாக நெற்றியை வருட,

“நாங்கள் உங்களை வரச் சொல்லவில்லையேங்க” கலைவாணி நேரிடையாகவே ஆட்சேபித்தாள்.

“கல்யாணம் பண்ணிக்க போகிற பொண்ணோட சம்மதத்தோடுதான் நாங்க வந்திருக்கிறோம்” நடராஜ் தலையை உயர்த்தி பேச,கலைவாணி திகைத்தாள்.

“வாங்க! வாங்க!” வரவேற்போடு மாடியிலிருந்து இறங்கி வந்தான் ஹரிஹரன்.

“அத்தை,மாமா எதற்கு இப்படி விழித்துக் கொண்டு நிற்கிறீர்கள்?நம்ம வீட்டுப் பொண்ணு அழைத்து வந்திருக்கிறார்கள்.அவர்களுக்கு உரிய மரியாதையை நாம் கொடுக்க வேண்டாமா?வணக்கம் எல்லோரும் உட்காருங்க”

“இவர் யாரு?” நடராஜனின் அம்மா மகனிடம் முணுமுணுக்க,”பிறகு சொல்கிறேன்” என்றான் அவன்.

“அத்தை எல்லோருக்கும் காபி கொடுங்க.நான் ஜீவிதா தயாராகிட்டாளான்னு பார்க்கிறேன்” அவர்கள் முன்னேயே இருந்த பெட்ரூமுக்குள் நுழைந்தவன் கதவை மூடிக் கொண்டான்.





 

நடராஜனின் அம்மா முகம் மாற மகனின் முகமோ அஷ்ட கோணலானது.

பூட்டிய அறைக் கதவின் மீதே ரிலாக்சாக சாய்ந்து நின்று கொண்ட ஹரிகரன் “அலங்காரம் பண்ணிக்கலை?” சன்னல் ஓரமாக கிடந்த பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து நகம் கடித்துக் கொண்டிருந்த ஜீவிதாவிடம் கேட்டான்.நிமிர்ந்து அவனை பார்த்து முறைத்தாள் அவள்.

“ஈசா என்ன பண்றீங்க?” தரையில் விரித்து வைத்திருந்த மியூசிக்கல் மேட்டில் குதித்து குதித்து ஆர்மோனியம் வாசித்துக் கொண்டிருந்த குழந்தையை பார்த்து கேட்டான்.

“ம்மூசிக்பா..நானா போட்றன்…” காலடியிலிருந்து எழுந்த இசையில் மகிழ்ந்து மேலும் மேலும் குதித்துக் கொண்டிருந்தான் குழந்தை.

 “ம்…அப்புறம் போடலாம்.இப்போ அம்மாவுக்கு டிரஸ் செலக்ட் செய்து தரலாம்.வாங்க” குழந்தையை கையில் அள்ளிக் கொண்டான்.வார்ட்ரோபை திறந்தான்.

“சேலையா?சுடிதாரா?பட்டா?டிசைனர் சாரியா?” அலமாரியை கலைத்து தேடியவன் மேல் கண்களால் நெருப்பம்பு எய்தாள்.

“உங்கள் வேலையை பார்த்துக் கொண்டு போங்க” அறைக் கதவை திறக்க போனவள்,அலறினாள்.

“கதவை ஏன் பூட்டினீர்கள்?”

“இல்லையே…ஆட்டோமேட்டிக் லாக் விழுந்திருக்கும்” உதட்டோரம் சிரிப்பை மென்றான்.

“இது ஆட்டோமேட்டிக்கா?” மேலே சொருகு போடப்பட்டிருந்த தாழை காட்டினாள்.

“அடடா இந்த தாழ் எப்படி விழுந்தது?” அவளுக்கு மேல் கவலை காட்டினான்.

“ப்ராடு” முணுமுணுத்தபடி கதவைத் திறந்தவளின் பார்வையில் அறைக்கு நேர் சோபாவில் அமர்ந்து இங்கேயே வெறிக்க பார்த்துக் கொண்டிருந்த நடராஜ் பட்டான்.

கெஞ்சுதலான பார்வையுடன் வெளியே வந்தவளின் பின்,”ஜீவி சேலை மாற்றாமலேயே போகிறாயே?” என்ற ஹரிகரனின் கவலைக் குரல் கேட்டது ஹாலில் அமர்ந்திருந்தவர்களுக்கும் சேர்த்து.

எதிரில் ஒரு சேரை இழுத்துப் போட்டு அமர்ந்தவள் அனைவருக்கும் பொதுவாக”வாங்க…வணக்கம்” கை குவித்தாள்.

“ம்.உன் பெயர் என்னம்மா? என்ன படித்திருக்கிறாய்?எங்கே வேலை பார்க்கிறாய்?” நடராஜின் அம்மா கேட்ட கேள்விகளுக்கு பவ்யமாக பதில் சொன்னாள்.

“இப்போதே என் அளவுக்கு சம்பளம் வாங்குகிறாள்மா.இன்னமும் அதிகமாகத்தான் வாய்ப்பிருக்கு” நடராஜ் சொல்ல,அந்த அம்மாளின் முகத்தில் திருப்தி.

“உங்க அப்பாவிற்கு கவர்ன்மென்ட் உத்யோகம்தானே? அம்மா கூட வேலை பார்க்கிறார்கள்தானே?இரண்டு பேருக்கும் எவ்வளவு சம்பளம் வருகிறது? இந்த வீட்டோட மதிப்பு எவ்வளவு இருக்கும்? இது தவிர உங்களுக்கு வேறு சொத்துக்கள் இருக்கிறதா?அப்பா,அம்மா காலத்திற்கு பிறகு இதெல்லாம் உனக்குத்தானே பொண்ணே?”

அந்த அம்மா பேசப் பேச சகாதேவனும்,கலைவாணியும் கோபத்தின் உச்சிக்கே சென்றனர்.நடராஜ் அம்மாவின் நோக்கம் இவைகள் தானென்பது ஜீவிதாவிற்கு நன்றாகவே தெரியும்.ஆனாலும் அதனை இப்படி சபை நடுவே தெளிவாக வெளிப்படுத்துவாளென அவள் எதிர்பார்க்கவில்லை. சங்கடத்துடன் அப்பாவை பார்க்க சகாதேவன் இவளைத்தான் முறைத்துக் கொண்டிருந்தார்

இக்கட்டான அந்த சூழ்நிலையை சமாளிக்க முடியாமல் அவள் திணறிக் கொண்டிருந்தபோது அறைக் கதவு திறந்து “அம்மாவிடம் போ” என்றபடி குழந்தையை இறக்கி விட்டான் ஹரிஹரன்.

 குழந்தை “அம்மா” என்ற கத்தலுடன் இவளிடம் ஓடி வந்தது. தன்னை நோக்கி வந்த குழந்தையை ஆவலுடன் அள்ளி மடியில் இருத்திக் கொண்டு இயல்பாக அவன் கன்னத்தில் முத்தமிட்டாள் ஜீவிதா.

 எதிரில் இருந்தவர்கள் விளக்கெண்ணெய் குடித்தது போன்ற முகபாவம் காட்ட “யார் குழந்தை இது?” நடராஜன் அப்பா கேட்டார்.

நடராஜ் “அப்பா கொஞ்சம் பொறுமையாக இருங்கள் நம் வீட்டிற்கு போனதும் எல்லா விவரங்களும் சொல்கிறேன்” என்றான்.

” என்னடா விவரம் சொல்வாய்? இவ்வளவு உயரத்திற்கு பிள்ளையை வைத்திருக்கும் பெண்ணையா உனக்கு கல்யாணம் பண்ண சொன்னாய்?”

” இல்லையப்பா கொஞ்சம் பொறுங்களேன்.நான்தான் விவரம் சொல்கிறேன் என்கிறேனே”

” முடியாதுடா எனக்கு இப்பவே தெரியணும்.சொல்லு என்ன விஷயம்?”





 ஹரிஹரன் வேகமாக அவரை அணுகினான் “ரிலாக்ஸ் சார். உங்களுக்கு என்ன விவரங்கள் வேண்டும்? கேளுங்கள் நானே சொல்கிறேன்” தோழமையுடன் அவர் தோள்களில் கை போட்டுக் கொண்டான்.

” வாங்க நாம் அப்படியே கொஞ்சம் வெளிய நடந்துட்டு வருவோம்”

வீட்டை விட்டு வெளியேறும் இருவரையும் இயலாமையுடன் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் ஜீவிதா.

“குழந்தை சரி. பிள்ளையோட அப்பாவும் இங்கேயே ஒரே ரூமிற்குள்ளேயே இருந்தால்… அதை எப்படிடா எங்களால் ஏற்றுக் கொள்ள முடியும்?” நடராஜனின் தாய் குரலை உயர்த்தி பேசினாள்.

 நடராஜ் ஜீவிதாவை கூர்ந்தான். “இதைப்பற்றி ஒரு நல்ல முடிவு எடுக்காமல் நம் திருமணம் நடப்பது மிகவும் கஷ்டம் ஜீவிதா” இதென அவன் சுட்டிக்காட்டியது அவள் மடியில் இருந்த குழந்தையை .

ஜீவிதா அனிச்சையாக குழந்தையை இறுக்க அணைத்துக் கொண்டாள்.

” அப்போ நம் திருமணம் வேண்டாம் நடராஜ். நீங்கள் கிளம்பலாம்” 

காயம் பட்ட தாயும் மகனும் வெளியேறினர்.அடுத்த பத்து நிமிடத்தில் வீட்டிற்குள் நுழைந்த ஹரிஹரனின் முகத்தில் போரில் வெற்றி பெற்றவனின் முகபாவம்.”என்ன சொன்னீர்கள்?” எரிந்து விழுந்தாள் ஜீவிதா.

” உண்மையைச் சொன்னேன்” என்றான் அமர்த்தலாக. 

 “சை” என்ற ஒற்றை இகழ் சொல்லுடன் அறைக்குள் புகுந்து  கொண்டாள்.

இந்த ஆண்கள் ஏன் இப்படி இருக்கின்றனர்… சுயநலமிகளாக… மனதிற்குள் குமுறினாள். அவள் வரையில் சந்தித்த ஆண்கள் எல்லோருமே அப்படித்தான் இருப்பதாக அவளுக்கு தோன்றியது.

“அவசர வேலையாக எங்கள் ஊருக்கு போக வேண்டியிருந்தது. உன்னிடம் சொல்லிவிட்டு போகத் தான் இங்கே வரச் சொன்னேன்” காலேஜ் கேன்டினில் ஆளுக்கு ஒரு காபியை பேப்பர் கப்பில் குடித்தபடி பேசிக் கொண்டிருந்தனர் ஜீவிதாவும் அவனும்.

முகம் வாடி இருந்தவனை பார்த்தபடி “இன்னமும் உங்கள் வீட்டு பிரச்சனை முடியவில்லையா?”ஆதரவாக கேட்டாள்.

” ப்ச்.சொத்துப் பிரச்சனை சீக்கிரத்தில் முடியாது” அவன் குரலில் கவலை அப்பிக் கிடந்தது.

“உனக்கு இன்னமும் இரண்டு வருட படிப்பு இருக்கிறது ஜீவிதா. என் படிப்பு முடிந்தது.கேம்பஸில் செலக்ட் ஆகியிருக்கிறேன்.எங்கள் குடும்ப தொழிலில் கொஞ்சம் பிரச்சனைகள் .ஒரு வருடமேனும் வெளியே வேலை பார்ப்பேனென்று நினைக்கிறேன். நீ உன் படிப்பை முடித்துவிட்டு தகுந்த வேலையில் சேர்ந்து விடு.நாம் போனில் டச்சில் இருக்கலாம்” ஜீவிதா தலையை அசைத்தாள்.

போனில் பேசலாம் என்று சொல்லி விட்டானே தவிர அப்படி அடிக்கடி அவளிடம் பேசுவதில்லை. ஜீவிதாவே ஒன்றிரண்டு ஃபார்வேர்ட் மெசேஜ்கள் அனுப்புவாள். தாண்டி அவளாக போன் செய்யும்போதும் மிக அவசர வேலை என்று இரண்டு மூன்று நிமிட சாதாரண பேச்சுக்களில் முடித்துக் கொள்வான். அந்த பேச்சுக்கள் பெரும்பாலும் அவளது படிப்பை பற்றியதாக, அடுத்தடுத்த செயல்பாடுகளுக்கான அறிவுரைகளாகவே இருக்கும்.

“சீக்கிரமே எல்லாம் நல்லபடியாக நடக்கும் பாருங்களேன்” நல்ல வார்த்தை சொல்லி இறுதி நாளன்று அவனை அனுப்பி வைத்தாள்.

அவ்வளவுதான்.அன்றுதான் அவளது மனங்கவர்ந்தவனாக அவனை பார்த்த கடைசி நாள்.படிப்பை முடித்து வீட்டிற்கு வந்த பிறகு வேலையில் சேர்வதற்கான அவகாசம் மீந்திருந்த நாட்களில், ஒரு முறையேனும் அவனை நேரில் சந்தித்து பேசி விட வேண்டும் என்று தவித்திருந்தாள் ஜீவிதா. 

அதற்கு இடையூறாக வந்து நின்றாள் ஸ்வேதா. அவளது அக்கா.





 

What’s your Reaction?
+1
46
+1
45
+1
2
+1
1
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!