Serial Stories உறவெனும் வானவில்

உறவெனும் வானவில் – 11

11

 

” என்னம்மா சொல்கிறீர்கள் “சக்திவேல் நம்பமுடியாமல் கேட்டான்.

” ஆமாம்பா வீடு பூராவும் தேடிட்டேன்.யவனாவை காணோம்”

சக்திவேல் உடனடியாக ஆபிசிலிருந்து கிளம்பி வந்தான்.அம்மாவும்,நிர்மலாவும் கையை பிசைந்தபடி நின்றிருந்தனர்.

“நல்லா பார்த்தீங்களா?” கேட்டபடி தன் பங்கிற்கு வீடு முழுவதும் பார்த்தான்.

சேர்மராஜும்,மாதவனும் ஊருக்குள் தேடுவதற்கு ஆட்களை அனுப்பினர்.

“வந்த நாள்ல இருந்து ஒரு மாதிரி பித்து புடிச்ச மாதிரித்தான் இருந்தா.சரி புது இடம் ,புது உறவு.விட்டுப் பிடிப்போம்னு நினைச்சேன் .இப்படி செய்வான்னு நினைக்கலையே!ஏன் சக்தி உங்களுக்குள்ள ஏதாவது பிரச்சனையா?சண்டை கிண்டை போட்டீங்களா?”

அம்மா கேட்க சக்திவேல் திணறினான்.பத்து நாட்களாக தான் அவளை நடத்திய விதம்.அது மிகத் தவறல்லாவா?தன்மானமுள்ள எந்த பெண் இப்படி ஒரு வாழ்க்கையை ஏற்றுக் கொள்வாள்.

“அவுங்களுக்கு பிள்ளையை பார்க்கிறதில் இஷ்டமில்லை” நிர்மலா மெல்ல சொல்ல ” நீ சும்மாயிரு” மாதவன் அதட்டினான்.

“புருசன்கிட்ட கோவிச்சுக்கிட்டு போகன்னு இந்தப் பொண்ணுக்கு போக்கிடம் கூட இல்லையே.எங்கே போச்சோ?எந்த முடிவெடுத்துச்சோ?” சண்முகசுந்தரி புலம்ப சக்திவேல் திடுக்கிட்டான்.

அந்தக் கணத்தில் அவனுக்கு சுற்றி இருள் சூழ்ந்தது போலிருந்தது. யவனா அவன் வாழ்க்கையில் இல்லாமல் போய்விடுவாளா?அவன் உடல் மெலிதாக நடுங்கத் துவங்கியது.

சேர்மராஜ் மகனை கூர்ந்து கவனித்தார்.”சக்தி…?”




“அ…அப்பா.தேடுவோம்பா.அம்மா சொல்வது போல் அவள் எங்கே போவாள்?போகவென்று அவளுக்கு இடம் கிடையாதே”

“அதனை உனக்கு சாதகமாக்கிக் கொண்டாயா?” நிதானமான சாதாரண குரல்தான்.ஆனால் ஈட்டி முனையாய் நெஞ்சை தாக்கி குருதி வடிய வைத்தது.

“இ…இல்லைப்பா.எங்களுக்குள்ள சின்ன மிஸ் அன்டர்ஸ்டான்டிங்.அவ்வளவுதான்.

நான் அவளை சமாதானப்படுத்தி விடுகிறேன்”

சேர்மராஜ் அவரது தாயின் காலம் வரை தாயை உள்ளங்கையில் வைத்து தாங்கியவர்.மனைவி வரவும் அவளை தனது மகாராணியாக்கி மகிழ்ந்தவர்.தன் மகள்களை தெய்வங்களாக கொண்டாடியவர்.மருமகள்களை வீட்டின் உயிர்நாடிகளாக போற்றியவர்.தனது இந்த பெண்களை போற்றும் குணத்தையே மகன்களுக்கும் போதித்திருந்தார்.

தாயையோ,மனைவியையோ அவர் முன் மகன்கள் ஒரு வார்த்தை சொல்லி விட முடியாது.வீட்டுப் பெண்களை திருப்தி செய்ய முடியாமல் நீ என்ன ஆண்பிள்ளை என பெற்ற பிள்ளைகளையே முகத்திற்கு நேராகவே கேட்பார்.இப்போது தடுமாறும் மகனின் முகத்திலிருந்தே எதையோ ஊகித்து கேட்டார்.

“ஆக…அவளை ஏதோ சொல்லியிருக்கிறாய்” சேர்மராஜின் பற்கள் அரைபட்ட சத்தம் எல்லோருக்கும் கேட்டது.

“அ…அப்பா…அ…அவள்…”

“என்னடா திக்குவாயா உனக்கு?”

சக்திவேலுக்கு சுரீரென்றது.இப்படி எத்தனை முறை அவளை நக்கல் செய்திருப்பான்? கை கட்டி தலை குனிந்து நின்றான்.

“டேய் அவளை என்ன சொன்னாயடா? சொல்லு ” சண்முகசுந்தரி மகனின் தோளில் அடித்தாள்.

“முதலில் அவளை தேடுவோம்.பிறகு பேசிக் கொள்ளலாம்” தண்டனையை ஏற்கத் தயாராக நின்றான் சக்திவேல்.

“அம்மா உள்ளே வரட்டுமா?” மாலை வேலைக்காக வர அனுமதி கேட்டு பின்வாசலில் நின்றாள் சுப்புலட்சுமி.வீட்டு பணிப்பெண்.

சக்திவேல் வேகமாக அவளை நோக்கி சென்றான்.”சுப்புலட்சுமி யவனாவை நீ எப்போது பார்த்தாய்?அவள் என்ன செய்து கொண்டிருந்தாள்?”

“வீடு பெருக்கனும்.வெளில இருங்கம்மான்னு சொன்னேன்.வீடா இது…சுடுகாடுன்னு கத்திட்டு எந்திரிச்சு போனாங்க ஐயா”

“என்னங்க இப்படி பேசியிருக்கா?” சண்முகசுந்தரி குறைபட சேர்மராஜ் அவளை கையுயர்த்தி அமைதிப்படுத்திவிட்டு “அப்போது அவுங்க என்ன செஞ்சிட்டு இருந்தாங்க?” என்றார்.

“என்னத்தங்க பெருசா…போனை நோண்டிக்கிட்டு இருந்தாக “

” இங்கே வந்த பத்து நாட்களாவே அவுங்க போனைத்தான் மாமா கையில் வச்சுட்டிருந்தாங்க”நிர்மலா சொன்னாள்.




“போனில் யார் கூட பேசிக் கொண்டிருந்தாள்? என்ன பேசினாள்?” முறைத்து பார்த்த தந்தையை கண்களால் பொறுமையென கெஞ்சியபடி கேட்டான் சக்திவேல்.

“அப்பா…சித்தின்னு பேசின மாதிரி இருந்தது”

“அவள் அப்பா,அம்மாவுடன் பேசியிருக்கிறாள்” மகனிடம் கண்டனமாய் சொன்னார் சேர்மராஜ்

“தெரியும்பா.உறுதி செய்து கொள்ளத்தான் கேட்டேன்.சுப்புலட்சுமி நீங்கள் சுத்தப்படுத்த வந்ததும் அவள் எங்கே போனாள்?”

“கவனிக்கலங்கய்யா.வழக்கமா அந்த பால்கனிலதான் போய் உட்கார்ந்துகிடுவாக.உள்ளே மூச்சு முட்டுற மாதிரி வெளிக்காத்தை இழுத்து இழுத்து சுவாசிப்பாக…”

இது சக்திவேலுக்கும் தெரியும்.அந்த வீட்டிற்குள் இருப்பதையே மூச்சு முட்டுவதாய் உணர்வாளோ என்னவோ,எந்நேரமும் பால்கனியில் நின்று கொண்டு,முகத்தை வெளிக்கு நீட்டி மூச்சிழுத்து சுவாசித்துக் கொண்டிருப்பாள்.ஒரு வேளை…

“மொட்டைமாடியில் பார்த்தீர்களா?” பரபரப்பாக கேட்டான்.

“சைடு டெரஸ் கட்டின பிறகு நாம் யாரும் மொட்டை மாடிக்கே போவதில்லையே அண்ணா” மாதவன் சொன்னபடி படிகளேறி ஓடிக் கொண்டிருந்த அண்ணன் பின் ஓடினான்.

யவனா மொட்டைமாடியில்தான் இருந்தாள்.அக்னி வெயிலில் தகிக்கும் தரையில் கருகிய மலர்ச் சரமாய் கீழே கிடந்தாள்.வெயில் மங்கி மாலை வர ஆரம்பித்து விட்டது.அப்போதும் இவர்களால் அந்த மொட்டைமாடி தரையில் கால் வைக்க முடியவில்லை.ஆனால் யவனா கொதிக்கும் வெயிலில் அங்கே இவ்வளவு நேரமாக…

சக்திவேல் பாய்ந்து அவளை அள்ளிக் கொண்டான்.உதவிக்கு வந்த தம்பியை புறக்கணித்து தானே அவளை கையேந்தி கீழே தூக்கி வந்து படுக்கையில் கிடத்தினான்.முகம் கறுத்து,கை கால்கள் வெம்பி சுருங்கி தொட்டால் உதிர்ந்து விடுவாள் போல் படுக்கையில் கிடந்த மருமகளைக் கண்டதும் ஆத்திரம் மிக மகன் பக்கம் திரும்பிய சேர்மராஜ் கஷ்டப்பட்டு வாயை மூடிக் கொண்டார்.

மனைவியின் நிலையைக் கண்ட சக்திவேலின் கண்கள் தானாகவே கண்ணீரை கொட்டிக் கொண்டிருந்தது.யவனாவின் உடல் நெருப்பிலிருந்து எழுந்து வந்தவளைப் போல் கொதித்துக் கொண்டிருந்தது. கண்கள் சொருகி நினைவற்ற மயக்க நிலையிலிருந்தாள்.

“அந்த ஏசியை போடுங்க” சேர்மராஜ் சொல்ல,தடுத்தாள் சண்முகசுந்தரி.

“வேண்டாங்க,உடனே அவ்வளவு குளிர் வேண்டாம்.முதல்ல பச்சைத் தண்ணீர் வைத்து துடைத்து எடுக்கறோம்.ஆம்பளைங்கெல்லாம் வெளியே இருங்க”

சண்முகசுந்தரியும்,நிர்மலாவும் சேர்ந்து யவனாவின் இறுக்கமான உடையை மாற்றி உடல் முழுவதும் துடைத்து எடுத்து இலகுவான காட்டன் நைட்டியை மாற்றி விட்டனர்.மிதமான குளிரில் ஏசியை வைத்து அவளது உடல் வெப்பத்தை தணிக்க முயன்றனர்.

சக்திவேல் வாங்கி வந்திருந்த இளநீரை வாய் வழியே புகட்டினான்.உடலின் வெப்ப சூடு குறைய ஆரம்பித்த போதே காய்ச்சல் சூடு வர ஆரம்பித்தது.யவனாவின் உடல் மீண்டும் கொதிக்க தொடங்கியது.

“அப்பா நம்ம டாக்டரை வரச் சொல்லிடலாம்பா” சக்திவேல் சொல்ல சேர்மராஜ் டாக்டரை அழைத்தார்.

“இவர்களை என்ன செய்தீர்கள்?”

அவர்கள் பேமிலி டாக்டர்தான்.ஆனாலும் அரை உயிராய் கிடந்த பெண்ணைக் கண்டதும் இவர்களை கேள்வி கேட்க தயங்கவில்லை அவர்.

“நாங்க ஒன்றும் செய்யலை” முந்திய தம்பியை தடுத்து “எங்களுக்குள் சிறு சண்டை அங்கிள்.கோபித்துக் கொண்டு மொட்டைமாடியில் போய் படுத்துக் கொண்டாள்.நாங்கள் கவனிக்கவில்லை.அதுதான்…” உண்மையை சொன்னான் சக்திவேல்.




“இத்தனை பேர் இருக்கும் வீட்டில் இந்தப் பெண் மேல் அந்த அளவு கவனமின்மையா?இது சரியில்லை அண்ணா” சேர்மராஜிடம் கண்டித்தபடி சிகிச்சையை ஆரம்பித்தார் டாக்டர்.

“சாப்பிட்டு எத்தனை நாட்களாயிற்று?” கண் இமைகளை பிரித்து பார்த்து அவர் கேட்ட கேள்விக்கு யாரிடமும் பதிலில்லை.

ட்ரிப்ஸ் போட்டு ஊசி போட்டு அருகேயே அமர்ந்து நாடித்துடிப்பை பரிசோதித்தபடி இருந்தார்.இரண்டு மணி நேரங்களுக்கு பிறகு யவனாவின் உடல்நிலை நார்மலுக்கு திரும்பியது.

“சரியான சாப்பாடில்லை.தூக்கம் இல்லை.அத்தோடு ஏதோ மன அதிர்ச்சி வேறு என்று நினைக்கிறேன்.கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.” என்று விட்டுப் போனார்.

“உன் மனைவி,நீதான் கவனித்துக் கொள்ள வேண்டும்” சேர்மராஜ் மகனுக்கு கட்டளையிட்டு மற்றவர்களோடு வெளியேறினார்.சக்திவேலுக்கு இரவு உணவு அறைக்கே வந்தது.

வெகுநேரம் கட்டிலருகே கிடந்த பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து யவனாவைப் பார்த்தபடியே இருந்தவன் தன்னை மறந்து கண்கள் சொருக,எழுந்து அவளருகே கட்டிலில் படுத்தான்.

“இல்லை…வேண்டாம்…எனக்கு பிடிக்கலை…இந்த வாழ்க்கை எனக்கு வேண்டாம்…” மெல்லிய புலம்பல் கேட்க உறக்கம் கலைந்து திரும்பிப் பார்த்தான்.

யவனாதான் தூக்க கலக்கத்தில் புலம்பிக் கொண்டிருந்தாள்.

“நான் என்ன பாவம் செய்தேன்?எனக்கு ஏன் இந்த தண்டனை?ஐயோ சித்தி..நான் நல்லதுதானே நினைத்தேன்.இப்படி பொய் சொல்லி ஏமாத்திட்டீங்களே…”

சக்திவேல் அவள் தோள் தொட்டான்.”சீ தொடாதே” அவன் கையை தள்ள அதிர்ந்து நகர்ந்தான்.

“எனக்கு அருவெறுப்பா இருக்கு…” சொன்னபடி விம்மத் தொடங்கினாள்.

அவன் தள்ளியிருந்து தொடர்பற்ற அவள் புலம்பல்களை கேட்டபடி இருந்தான்.ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் அவள் தலையை மெல்ல வருடத் துவங்கினான்.அதற்கு யவனா பேசாமல் இருக்க,தொடர்ந்து அவளது நெற்றி,புருவம் என நீவி விட ஆரம்பித்தான்.

காதுக்குள் மெல்லிய குரலில்”யவா உனக்கு ஒன்றுமில்லை.இங்கே எல்லாம் சரியாகி விட்டது.உனக்கு பிடிக்காத எதையும் நீ செய்யத் தேவையில்லை.நீ எப்போதும் உன் மனம் போல் சுதந்திரமாக இருக்கலாம்” மீண்டும் மீண்டும் சொன்னான்.

யவனா மெல்ல மெல்ல அமைதியாகி ஆழ்ந்த உறக்கத்திற்குள் செல்லத் துவங்கினாள்.




What’s your Reaction?
+1
35
+1
28
+1
2
+1
1
+1
0
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!