Serial Stories மாற்றங்கள் தந்தவள் நீதானே மாற்றம் தந்தவள் நீதானே

மாற்றங்கள் தந்தவள் நீதானே – 1

டெய்ஸி மாறன்

எழுதும்

மாற்றங்கள் தந்தவள் நீதானே

அத்தியாயம்-1

அந்த ஏசி அறையின் குளிரையும் மீறி லேசாக வியர்க்கத்தொடங்கியது மோகனாவிற்கு. அதற்கு காரணம் விழா நாயகனாக வந்து அமர்ந்திருந்த தேவானந்தன்தான். இதற்கு முன் அவனை எங்கேயோ பார்த்திருக்கிறாள். மிகவும் பரிச்சயமான முகம்போல் தோன்றியது. ஆனால் எங்கே பார்த்தாள் என்று தான் ஞாபகம் வரவில்லை. அவனை பார்த்தவுடன் அடிக்கடி பார்த்து பழகியது போன்றதொரு உணர்வை தோன்றிக்கொண்டே இருந்தது.

இவளைப் போலவே அவனிடமும் அந்த பாதிப்பு இருந்திருக்க வேண்டும் அவன் பார்வையிலும் சிறு தடுமாற்றம். புருவ மத்தியில் ஒரு முடிச்சு! ஏறி இறங்கிய சுவாசம். அடிக்கடி அவள் மேல் படிந்து மீளும் கூர்மையான பார்வை. தேடுதலை அவனுடைய கண்களே அடையாளப்படுத்தியது. அடிக்கடி நிகழ்ந்த பார்வை மோதலும் அதை தொடர்ந்து இருவரும் இயல்பு நிலைக்கு வர முயற்சி எடுத்துக் கொண்டிருப்பதும் நிகழ்ந்துக்கொண்டே இருந்தது.




மோகனா பலமுறை இந்த மீட்டிங்காக வந்திருக்கிறாள். அப்போதெல்லாம் அவனை பார்த்ததே இல்லை. புதிய நபர்..பெரிய..பிசினஸ்மேன் வரப்போவதாக காலையில் அப்பா சொன்ன போது ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க நபராகத்தான் இருப்பார் என்று இவள் கணித்திருந்தாள். பெரிதாக ஒன்றும் ஐடியா இல்லாமலேயேதான் மீட்டிங்கிற்கு வந்திருந்தாள். ஆனால் அந்தக் கூட்டத்திலேயே இளமையான ஒரு நபரை காணவும் சற்று குழப்பம் மேலிடத்தான் செய்தது. முகத்தைப் பார்த்தவுடன் குழப்பம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. கண்டிப்பாக இவன் நமக்கு தெரிந்தவன் அறிமுகமானவன் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் எங்கே மீட் பண்ணினோம் எப்போ மீட் பண்ணினோம் என்பதுதான் கேள்விக்குறியாக இருந்தது.

இது மாதா மாதம் நடக்கும் மீட்டிங்தான். பிஸ்னஸ்மேன் பலரும் கூடுவார்கள். தங்களுடைய பிசினஸ் பற்றியும் லாப நஷ்டக் கணக்குகளை பற்றியும் கலந்து ஆலோசிப்பார்கள். பிசினஸை விரிவுபடுத்தும் தளமாக கூட இது இருந்தது. தங்களுக்கு தெரிந்த சில முகவர்கள் அவர்களின் முகவரிகளையும் இங்கே பகிர்ந்து கொள்வதும் உண்டு.

புது பிசினஸ் தொடங்கினாலும் இங்கே பேசி முடிவு எடுப்பார்கள். இது மற்றவர்களின் உதவிகளை கூறுவதோடு தானும் பயன் பெற வேண்டும் என்ற உள்நோக்கமாக கூட இருக்கலாம். பணத்தைத் தாண்டி மற்றவர்களின் அனுபவங்களும் அதன் மூலம் கிடைக்கும் ஆலோசனைகளும் பிசினஸை வலுப்படுத்த தேவையானதாகவே இருந்தது இங்கு வருபவர்களுக்கு.

அன்று கூடியிருந்த கூட்டத்தில் நாயகனே தேவானந்தன்தான். ஆரம்பிக்கப் போகும் புது பிசினஸை பற்றி மற்றவர்களோடு ஒரு அறிமுகத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் அவன் அங்கு வந்திருந்தான். சென்னைக்கு அவனுக்கு புதிய ஊர்  என்பதால் அவனை மற்ற பிசினஸ்மேன்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அந்த மீட்டிங் அரேஞ் பண்ணி இருந்தார் அப்பாவோட நண்பர் அண்ணாமலை. அதனால் வள வளவென்று பேச்சை தொடராமல் நேரடியாகவே அவனை அறிமுகப்படுத்தி வைத்து அவன் பிசினஸை பற்றி சொல்லுமாறு அண்ணாமலை அங்கிள்  அவனை அழைக்கவும் அவன் தொண்டையை கனைத்துக் கொண்டு பேசத் தொடங்கினான்.

அவன் பேசியது இவ்வளவுதான் அதாவது தான் ஆரம்பிக்கப்போகும் பிசினஸில் முன் அனுபவமுள்ள புது ஆட்களை வேலைக்குச்சேர்க்க போவதாகவும், அனுபவமில்லாத நபர்களை சேர்த்து அவர்களுக்கு தொழிலைப் பற்றி கற்றுக் கொடுத்து வருமானத்தை ஈட்டி அதன் பிறகு லாபத்தை அடைய தனக்கு விருப்பமில்லை என்றும், ஏற்கனவே அனுபவமுள்ள சிலரை அழைத்து அந்த வேலையைக் கொடுத்து விரைவாக வேலையை முடித்து விட வேண்டும். அவர்கள் எதிர்ப்பார்க்கும் சம்பளத்தை விட சற்று கூடுதலாகவே கொடுத்து  வேலையில் வைத்துக் கொள்ளப்போவதாகவும் கூறினான். அதற்கு தகுந்த தகுதியுடைய நபர்கள் இருந்தால் அவனுடைய நம்பருக்கு காண்டாக்ட் பண்ண வேண்டும் அப்படிப்பட்ட நபர்கள் வேலையை திறம்பட செய்பவர்களாகவும் தனக்கு நம்பிக்கைக்குரியவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியம் என்றான். கூட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்து…படிப்பு தகுதி என்னவென்று சரியாக சொன்னீர்கள் என்றால் நமக்கு தெரிந்த நபர்களிடம் விண்ணப்பிக்க சொல்லலாம் என்றார்.

“கண்டிப்பாக ‘எம்பிஏ’ முடித்திருக்க வேண்டும் வயது முப்பத்தைந்துக்குள் இருக்க வேண்டும். குறிப்பாக ஆண்களாக இருக்க வேண்டும். பெண்கள் இந்த வேலைக்கு சரி பட மாட்டார்கள் என்று கூறினான். பட்டென்று முகத்தை உயர்த்திய மோகனா அவனுடைய கருத்தை மறுக்கும் விதமாக அந்த கேள்வியை கேட்டாள்.




“ஏன் அப்படி சொல்ல வேண்டும் எல்லாத் துறைகளிலும் பெண்கள் சம அளவில் இருக்கிறார்கள். அவர்களால் சாதிக்க முடியாது என்று நினைக்கிறீர்களா?” என்று தன்னையும் மீறி கடுமையான குரலில் கேட்டாள்.

அவனும் அவளுடைய பேச்சை கருத்தில் கொண்டு அலட்சியப்படுத்தாமல் தன்னுடைய கருத்தை முன்வைத்தான். அவன் சொன்ன கருத்து மற்றவர்களுக்கு எப்படி தோன்றியதோ மோகனாவிற்கு சுத்தமாக அந்த கருத்தில் உடன்பாடில்லை. மாறாக அவன் மீது கோபத்தைதான் அதிகப்படுத்தியது.

“பெண்கள் எந்த விதத்தில் குறைந்தவர்கள்? அவர்களை ஏன் நீங்கள் வேலையில் அமர்த்த தயங்குகிறீர்கள் என்ற விளக்கம் எனக்கு வேண்டும் ” என்றாள் தெளிவாக.

“தயக்கமெல்லாம் ஒன்றுமில்லை பெண்களை எப்போதும் மதிக்கக்கூடியவன்தான். நானும் தாய் தமக்கை என்ற உறவுகளோடு வளர்ந்தவன்தான். அவர்களிடம் எப்போதும் எனக்கு அளவுக்கடந்த மரியாதையும் பிரியமும் உண்டு. அதுமட்டுமல்ல அவர்கள் இல்லாமல் ஒரு அணுவும் அசையாது என்பதும் எனக்கு தெரியும்…” என்று உயர்த்திக்கொண்டே போனவன் பெண்களிடம் எப்போதும் ஒரு பலகீனமிருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. அதன் யாராலும்  மாற்றவும் முடியாது, மறுக்கவும் முடியாது.” என்று முடித்தான்.

முதல் வரிசையில் அமர்ந்திருந்த ஒருவர் எழுந்து

“சார் குறிக்கீடுக்கு மன்னிக்கவும் உங்கள் அனுபவத்தை வைத்து பெண்களை எடை போடுகிறீர்களோ என்று எனக்கு தோன்றுகிறது.” என்றார் அவர் பேச்சை அமோதிப்பதுபோல் மற்றவர்களும் தலையசைக்க, சிறு கனைப்போடு பேசத்தொடங்கினான் தேவானந்தன்.

“இதோ…பாருங்கள் நாம் வந்த நோக்கம் இதுவல்ல அனாலும் விவாதம் என்று வந்துவிட்டால் அதை தெளிவு படுத்தாமல் கடந்துப்போவதில் எனக்கு உடன்பாடில்லை. அதனால் இதற்கான விளக்கத்தை நான் சொல்லியே தீர வேண்டும்.” என்றவனை அப்படி என்னத்தான் சொல்ல போகிறான் என்று பார்ப்போமே என அவன் பேசுவதை கூர்ந்து கவனிக்கலானாள்.




What’s your Reaction?
+1
15
+1
21
+1
0
+1
3
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!