Serial Stories எங்கே நானென்று தேடட்டும் என்னை

எங்கே நானென்று தேடட்டும் என்னை – 17

தேடல் 17.

 மாளிகையே பொலிவிழந்து இருந்தது. செல்வியக்கா  அவர் அறையில் படுத்திருந்தார். ஸ்ரீரஞ்சனி எதிலுமே சுரத்தின்றியிருக்க நிஷா மட்டும் “அம்மா எங்கேப்பா? “என்று நச்சிக் கொண்டிருந்தாள் சத்ய தேவ் ஏதேதோ சொல்லி சமாதானம் செய்தபடியே பள்ளிக்கு அனுப்ப தயார் செய்து கொண்டிருந்தான்.

விஷ்ணு யாரிடமோ போனில் தீவிரமாகப் பேசி முடித்துத் திரும்ப ரஞ்சனியின் விழிகள் மகனை ஆவலோடு ஏறிட்டன.

     மகனின் இருளடைந்த முகமே நிதர்சனத்தை சொல்ல முகம் கலக்கத்தைத் தத்தெடுத்தது.

“முழுசா மூணு நாளாகிடுச்சேப்பா! பயமாயிருக்கு விஷ்ணு.  காலம் கெட்டுக் கிடக்கு. செல்விக்கும் மயக்க மருந்தைக்குடுத்து யார்தான் இந்த வேலையை செய்திருக்க முடியும். “

மூன்றுநாள் தாடி படர்ந்துகிடந்த தாடையைத் தடவிக் கொண்டான் விஷ்ணு. மதுமதியை அட்மிட் செய்த பின்பு செல்வியக்கா அங்கேயேயிருக்க இரவு இரண்டு மணி வரையும் மருத்துவமனை வளாகத்திலேயே  காரிலமர்ந்து கணிணியில் வேலையை பார்த்தவன் ஒருமுறை மதுவைப் பார்த்துவிட்டுத்தான் கிளம்பினான். பெண்களிருவருமே உறக்கத்திலிருக்க காலையிலிருந்து ட்ரைவிங் செய்து வந்ததும் வந்து வராததுமாய் மதுவின் நிலைமையும் எல்லாமாய் அவனுக்கு களைப்பை கடத்தியிருந்தது. சற்றுநேரம் தூங்கினால் தேவலை என்று நினைத்தவன் ட்யூட்டி நர்சிடமும் ஏதும் தேவைப்படுமா என்று விசாரித்துவிட்டே வீடு வந்து சேர்ந்தான்.




காலை ஆறுமணிக்கு போன்  எழுப்ப இமை பிரிக்க முடியாமல் வந்த அழைப்பை ஏற்றவனுக்கு கிடைத்த செய்தியில் தூக்கம் பறந்தே போய்விட்டது. பரபரவென அவசரஅவசரமாய் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு ஹாஸ்பிடல் வந்தவனை செல்வியக்காவின் மயக்க நிலையும் காலியாகக் கிடந்த படுக்கையுமே வரவேற்றது. மதுமதியைக் காணோம். இரண்டு மணிக்கு மேல்தான் கடத்தல் நடந்திருக்க வேண்டும். செல்வி விழித்துவிடக் கூடாதென்பதற்காக அவருக்கும் ட்யூட்டி நர்சுக்கும் மயக்கமருந்து தரப்பட்டிருந்தது.

விஷ்ணு தன் டிடெக்டிவ் நண்பன் அரவிந்தனையும் காவல்துறை அதிகாரியான நண்பன் சரவணக்குமாரையும் அழைத்தான். மருத்துவமனை நிர்வாகம் வேறு பேர்கெட்டுவிடுமோ என்று அடக்கி வாசிக்கவே விரும்பியது. எழுத்தில் புகார் தராமல் அன்அஃபிஷியலாகவே செயல்பட்டார் சரவணக் குமார். வீரேந்தரபூபதியும் தன்னால் ஆனதை செய்ய களத்திலிறங்கியும்  மதுமதி கடத்தப்பட்டு மூன்று நாட்கள் முடிந்து விட்டன.

      “இதென்ன வீடா? ஏதாவதுமா? மகராசியை யாரும் கடத்துறக்கு அவ என்ன மகாராணியா? இல்லை கோடிசுவரியா? அவளே ஒரு பஞ்சப் பரதேசி. இவள் தானாவே யாருடனாவது ஓடிப்போயிட்டாளோ என்னவோ? இதுக்குப் போயி வீடே என்னவோ எளவு வீடுமாதிரியில்லா இருக்கு. ஏ…!ரஞ்சனி! எழுந்து வேலையப்பாரு! “

“அம்மா! முதல்லே அத்தை கொடுத்த நகையெல்லாமிருக்கான்னு செக் பண்ணச் சொல்லும்மா அதோடு கம்பி நீட்டியிருக்கப்போறா? “”

“ஆமாம்டீ! நீ சொல்றதும் வாஸ்தவம் தான். அவ ரூமைச் செக் பண்ணனும். ஒரு தராதரம் வேணாம்? நாயைக்குளிப்பாட்டி நடுவீட்டுல வச்சாலும் அது எதையோ திங்கப் போகுமாம். அதுபோலத்தான்! இப்போ …..”

“இங்க பாருங்க இத்தோட நிறுத்திக்குங்க. இன்னும் ஒருவார்த்தை மதுவைப்பத்தி சொன்னா நான் மனுஷியாவே இருக்க மாட்டேன். “

ரஞ்சனி வெடித்தாள்.

“தராதரம் பத்தி நீங்க பேசுறீங்களா… அ….த்த்த்தை”

விஷ்ணு நெருப்பைக் கக்கினான்.

“வீரா! இதெல்லாம் சரியில்லே சொல்லி வை உன் பொண்டாட்டி பிள்ளைகிட்டே! எவளோ ஒருத்திக்காக என்னையே பேசுவாளா உன் பொண்டாட்டி!

அந்தக் குடும்பராசியே இதுதான் போல! ஒருத்தன் கைல புள்ளையோட நிக்கான்.பொண்டாட்டியை வாரிக் கொடுத்துட்டு…. இன்னொருத்தனுக்கு அந்த வீட்டுப் பொண்ணை  பேசுனதுமே ஓடியே போயிட்டா …நல்ல ராசி! இதுல நான் பேசக்கூடாதாம்ல.”

” உறவுமுறைக்கும் வயசுக்கும் மதிப்பு குடுத்து நீங்க பண்ற அராஜகத்தை சகிச்சிட்டுருக்கேன்.என் பிள்ளைகளைப் பற்றி இனியோர் பேச்சு  வந்ததுன்னா …மரியாதை போயிடும்.”

ரஞ்சனியின் சீறலில் லாவண்யாவுக்கே அச்சம் வர அவள் தாயின் கைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள்.

“அம்மா! ப்ளீஸ்! அமைதியாயிருங்க! மது கிடைச்சிடுவா. நான் நிறைய விதங்களில் முயற்சி பண்ணிட்டிருக்கேன். “

சத்யதேவ் நிஷாவை பள்ளியில் விட்டு வருவதற்காகப் போயிருந்தான். வெளியில் காட்டிக் கொள்ளவில்லையே தவிர உள்ளுக்குள்ளே உடைந்துதான் போயிருந்தான். கடத்துகிற அவள் மீது யாருக்கு வன்மம்?

அவளே வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்துவிட்டு நிற்பவள். அவளைக் கடத்தி…..

ஆக இது பணத்துக்கான கடத்தல் இல்லை.  பணம்தான் காரணமெனில் இந்நேரம் பணம் கேட்டு கால் வந்திருக்கனுமே!

அப்போ இதன் மோட்டிவ் தான் என்ன? மது இங்கேயிருப்பதில் யாருக்கு ப்ரச்னை?

அண்ணனும் தம்பியும் இதையேதான் கலந்து பேச விஷ்ணுவுக்கென்னவோ அத்தையின் மீது சந்தேக நிழல் விழுந்தது.




       செல்வியக்காவுக்கு இப்போது பரவாயில்லை. அளவுக்கு மீறிய மருந்தின் பிரயோகம் அதனால் வந்த பாதிப்பிலிருந்து நான்கைந்து நாள் ஓய்விலிருந்ததில் மீண்டு விட்டார். மதுவை நழுவ விட்டுவிட்டோமே என்பதில் குற்றவுணர்வும் கவலையும் அதிகமிருந்தது. அவருக்கு. அதிலும் தன் அன்புக்குரிய எஜமானியின் தேர்வாக மருமகள் என அங்கிகாரம் பெற்ற சிறு பெண்ணின் மீது பாசம் அதிகமிருந்தது செல்விக்கு. செல்வி ரஞ்சனிக்கு கல்யாணமான கையோடு அவருடனேயே இங்கு வந்தவர். அவர் குடும்பமே ரஞ்சனி பிறந்த வீட்டுக்கு தலைமுறை தலைமுறையாக வேலைசெய்யும் குடும்பம். அதிலும் செல்விக்குத் திருமணமாகி மறு வருடமே கணவன் விஷக்காய்ச்சலில் இறந்து போக கணவனின் குடும்பம் இவரை வெளியேற்றிவிடட்டது. பிறந்த வீடு வந்தவரை ரஞ்சனி தனக்கு உதவியாக தன்னருகிலேயே வைத்துக் கொண்டார். வேலைக்கார எஜமான விசுவாசத்தை மீறி ஒத்தவயது நட்புறவை பலப்பட வைத்திருந்தது. திருமணமாகி ரஞ்சனி புகுந்தவீடு வந்ததுமே எடுபிடியாக வேலையை துவங்கியவர் விரைவிலேயே வீட்டின் அனைத்துக் காரியங்களிலுமே சுவாதினமாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு விட்டார். ரஞ்சனிக்கு அவர் அறியாமலே சிறு கோட்டையைப் போலவே அமைந்தும் விட்டார். குழந்தைகள் பிறந்தபின்பு மற்றவர்கள் அழைப்பதுபோல அவர்களுக்கு செல்வி செல்விஅக்காவாகிப்போனார். தன்னலமற்ற அன்பை வழங்கியதில் குழந்தைகளும் நெருக்கமாக உணர்ந்தனர்.

      விஷ்ணுவுக்குத் தூக்கம் வரவில்லை மனதில் அவனுடைய தேனம்மாவின் நினைவு..!முன் பக்க கிருஷ்ண மண்டபம் அருகே போய் படிக்கட்டில் அமர்ந்தான்.

மனதின் ஊமைராகம் அந்த வேய்ங்குழலோனுக்குக் கேட்டதோ என்னவோ …

        மெல்ல எழுந்து பின்புறத் தோட்டத்தில் நடைபயிலத் துவங்கினான். ‘தேனு! படுத்துறேடீ! இப்படி என்னை தவிக்க விடுவேன்னு நினைக்கவேயில்லையடீ! என்னால எதிலுமே கவனம் வைக்க முடியலை! எங்கேயிருக்கேடி…என் குரல் கேட்குதா? …என் வருத்தம் உன் மனசைத் தொடுதா? ….என் காதல் புரியுதா ….?தேனு! செத்துப் போயிடலாம்னு தோணுதடி! ‘………நீ எங்கிருந்தாலும் சரி தேடிக் கண்டு பிடிப்பேன். எனக்குள்ளே சிறை வைப்பேன்.

என்னகஷ்டப் படறியோ? எந்த நிலையிலிருக்கியோன்னு கவலையாயிருக்கு. உன்னை இப்படியாக்கினவனை விடவே மாட்டேன் கண்ணம்மா! ‘

விஷ்ணுவின் போன் வைப்ரேஷனில் குலுங்கியது. அதிர்ந்து அதிர்ந்து தன்னிருப்பைக் காட்ட அதை எடுத்துப்பார்த்தான்.

அரவிந்தன் தான் சில போட்டோக்களோடு செய்தியனுப்பியிருந்தார். மதுமதி ஏதோ ஒரு வீட்டு வாசலில் ஜீவனற்ற சிரிப்போடு நின்றிருந்தாள். பின்னால் தெரிந்த விளம்பர போர்டு ஒன்றில் ஜாங்கிரி பிழிந்தாற் போன்ற வட்டெழுத்துக்கள் தெரிந்தன.

ஜூம் பண்ணிப்பார்க்க மிகவும் மெலிந்திருப்பது தெரிந்தது. “மதுமதி ஸேஃப்”

அந்த ஒற்றை வார்த்தை மிகப் பெரிய அமைதியைத் தந்தது.

தொடர்ந்து வந்த செய்திகளில் அவள் பத்திரமாக இருப்பதும் சரவணகுமார் அவளைக் கடத்தியவர்களைப் பின் தொடர்வதுமான செய்திகள் நிம்மதியைத் தர அங்கேயே இருந்த நீச்சல்குளத்தின் நிழற்குடை கீழே சிறுமேடையில் உடலைக் கிடத்தினான். காய்ச்சலடித்து ஓய்ந்தாற் போன்றதொரு அயர்ச்சி அழுத்தியது உடலை. அதற்கு நேர்மாறாக உள்ளம் புத்துணர்ச்சியோடு கும்மாளமிட்டது. இனியொரு பயமில்லை. காலையிலேயே அரவிந்தனிடம் பேசிவிட்டு கிளம்பிப் போய் அவளை அழைத்து வந்துவிடவேணும். என் கைச்சிறைக்குள் வைத்துக் கொண்டுவிட வேண்டும். என் ஆயுள் முழுதுமே அவள் வேண்டும். கண்ணீர் அனிச்சையாக வழிந்தது. போனிலிருந்த போட்டோவில் அவள் சிரித்துக் கொண்டிருந்தாள்.




அடுத்தடுத்து வந்த போட்டோக்களைப்பார்த்துக் கொண்டே வந்தவன்

விஷ்ணு கூர்மையாகப் பார்த்தான்! ஹேய்! யாரிது? மதுவின் அருகாக ஒரு மனிதரின் முகம் போகஸ்ஸாய் விழுந்திருந்தது.

சிலநிமிடங்கள் யோசித்தவன் மேலும் சில விவரங்களைக் கேட்டு அரவிந்தனுக்கு செய்தியை அனுப்பினான்.

மதுமதி விஷயத்தில் முன்னர் நடந்தது போல எதுவும் சொதப்பலாகி  விடக்கூடாதென அரவிந்தனே நேர்முகமாகத்தானே இறங்கி விட்டிருந்தார் களத்தில்.

சிசிடிவி புட்டேஜ் வைத்து கணித்தும் சரவணகுமாரின் உதவியோடும் இருவருமாய் நூல்பிடித்து நெருங்கி விட்டிருந்தனர்.

பொட்பொட்டென்று விழுந்த மழைத்துளிக் காரணமாக அறைக்குள் முடங்கியவனை நித்திராதேவி அணைத்துக் கொண்டாள் வசமாக.! சில இரவுகளுக்குப்பின்னால் ஆழ்ந்த உறக்கத்துக்குப் போனான் அந்தக் காதலன்.

மதுமதிக்கு குப்பென்று வேர்த்தது. எழுந்து உட்கார்ந்தாள். ச்சே! ….என்னஇது.  அவளுடைய வினுவின் குரல் கேட்டதே!

வினுவின் கலக்கம் தோய்ந்த குரல் …அய்யோ…. வினு! என்னை மறந்திடுங்க! மறந்திடனும். உங்களுக்கு நான் வேண்டாம். உங்க வாழ்க்கையிலே நான் வேண்டாம். நீங்க நிம்மதியா சந்தோஷமா உங்கக் குடும்பத்தோடு சேர்ந்திருக்கனும்.!

ஏதேதோ எண்ணியபடியே உறக்கம் தொலைத்து  படுக்கையில் உழன்றவளை நந்தினியின் தீனக்குரல் கலைத்தது.

“அக்கா வலிக்குதுக்கா “

“என்னடாம்மா “

“வயித்தை ரொம்பவே வலிக்குதுக்கா “

அவளை நன்றாகப் பார்த்தவளுக்கு புரிந்து போனது. விடியற்காலை நேரத்தில் அந்த மொட்டு பூவாகி விட்டது . உற்சாகக் குரலோடு

” நந்தும்மா! ஒன்னுமில்லை பயப்படாதே! “

அந்த உஷத்வேளை சந்தோஷத்தோடு அந்த வீட்டு வாசலைத் தேடி வந்து தட்டியது.

(தேடல் தொடரும்)




What’s your Reaction?
+1
12
+1
8
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!